மோடியும் நேருவும் அறிவியலும்

பண்டித ஜவஹர்லால் நேரு இந்தியாவில் ஒரு சொற்றொடரை பிரபலப்படுத்தியிருந்தார். ‘அறிவியல் மனப்பான்மை’ scientific temper என்பதுதான் அது. அது நேருவே உருவாக்கிய சொற்றொடர் என்று நேரு பாரம்பரிய விசுவாசிகள் சொன்னாலும் அச்சொற்றொடரை உருவாக்கியவர் பெர்ரண்ட் ரஸ்ஸல் என்கிற மேற்கத்திய தத்துவவியலாளர். பெர்ரண்ட் ரஸ்ஸல் கணித மேதையும் கூட. அவர் எழுதிய ‘நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல’ என்கிற நூல் பிரபலமானது.  ஐரோப்பிய சிந்தனைமரபில் மதத்துக்கும் அறிவியலுக்கு இருக்கும் சிந்தனை மோதலை அடிப்படையாகக் கொண்டு அவர் அச்சொற்றொடரை உருவாக்கியிருந்தார்.

எமர்ஜென்ஸியின் போது இந்திரா காந்தி இந்த சொற்றொடரை இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தில் நுழைத்தார். அதன் பிறகு அது நேருவிய இடதுசாரிகளாலும் மார்க்ஸிஸ்ட்களாலும் நம் உள்ளூர் பகுத்தறிவு கோஷ்டிகளாலும் இந்துமதத்தை தாக்க மட்டுமே அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.  இந்த ‘அறிவியல் மனப்பான்மையை’ பரப்ப இந்திய அரசு நடத்திய கண்காட்சிகளில் வெளிப்படையாக மார்க்சிய பிரச்சாரம் செய்யப்பட்டது. இதனாலெல்லாம் ஒட்டுமொத்த விளைவு என்னவென்றால் பொதுவாக மக்களுக்கு அறிவியலிலிருந்து ஒரு விலகல் உருவானது. 

இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த அறிவியலாளர்களும் சரி தொழில்நுட்பவாதிகளும் சரி இந்திய பண்பாட்டில் வேரூன்றியவர்கள். இந்திய பண்பாடு தன்னளவிலேயே அறிவியல் தன்மை கொண்டது. துரதிர்ஷ்டவசமாக நேருவியவாதிகள் அறிவியலை தங்கள் மார்க்ஸிஸ்ட் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியதால் இந்தியாவின் அறிவியல் கல்வியின் தரம் அடிவாங்கியது. மக்களிடமிருந்து அன்னியப்பட்டது.  சிறிதே சிந்தித்து பாருங்கள். ஐரோப்பிய இயற்பியலாளனை எடுத்துக் கொள்ளுங்கள். அவனுக்கு ஓரளவுக்கேனும் டெமாக்ரிட்டஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் ஆகியோர் குறித்த ஒரு அடிப்படை அறிவு இருக்கும். ஐன்ஸ்டைன், ஹெய்ஸன்பர்க் ஆகிய இயற்பியல் மேதைகளை எடுத்துக் கொண்டால் அவர்கள் மேற்கத்திய மரபின் தத்துவ சிந்தனை மரபுகளைக் கரைத்துக் குடித்தவர்கள் என்றே சொல்லலாம். ஐரோப்பிய மரபின் அத்வைத  சிந்தனையாளரென கருதப்படும் ஸ்பினோஸா ஐன்ஸ்டைனின் ஆதர்ச தத்துவஞானி. ஐன்ஸ்டைனின் சில முக்கியமான நிலைபாடுகளில் ஸ்பினோஸாவின் தாக்கம் உண்டு. 

ஜெகதீஷ் சந்திர போஸ் முதல் அண்மையில் மறைந்த ஜியார்ஜ் சுதர்சன் வரை வேதாந்திகள்தான்.  ஆசியாவிலேயே முதல் நோபல் பரிசு வாங்கிய விஞ்ஞானி சி.வி.ராமன், நேருவின் அறிவியல் குறித்த அணுகுமுறையை வெறுத்தார். சோவியத் சர்வாதிகாரி ஸ்டாலின் பாணியில் நேரு தனியார் ஆராய்ச்சிக்கு அனுமதி அளிக்காமல் அனைத்து அறிவியல் ஆராய்ச்சியும் அரசு அமைப்புகள் மூலமே செய்யும் படியாக மாற்றினார். சி.வி.ராமன் கடும் கோபமடைந்தார். இதனால் அறிவியல் வளராது. அறிவியல் ஆராய்ச்சி அரசையும் அரசியல்வாதிகளின் அனுமதியையும் சார்ந்து இருக்கும். இது நல்லதல்ல என்பது அவர் கருத்து. ஒருமுறை அவர் நேருவின் சிலை ஒன்றை தூக்கி கடும் கோபத்துடன் வீசி எறிந்தார். 

இந்தியாவின் சோஷலிச அணுகுமுறையால் இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப தரம் மிகவும் வீழ்ச்சி அடைந்தது. மோதி அரசு இதை மாற்ற பகீரத முயற்சி செய்கிறது. அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் அடைந்திருக்கிறது. ஒரு நாடு தன் தொழில்நுட்ப வளர்ச்சியில் தன்னிறைவு பெற வேண்டுமென்றால் அங்கு புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து நடக்க வேண்டும். அந்த கண்டுபிடிப்புகள் மக்களுக்கு தகுந்த தொழில்நுட்பங்களாக மாற்றப்பட்டு அவை சந்தையில் இறக்கி வணிகப்படுத்தப் படவேண்டும்.  இதற்கு சர்வதேச அளவில் ஒரு தரக்குறியீட்டு எண் இருக்கிறது. அதற்கு பெயர் சர்வதேச புத்தாக்க தரவரிசை –  Global Innovation Index. இதன் அடிப்படையில் உலகநாடுகள் வரிசைப்படுத்தப் பட்ட போது 2011 இல் இந்தியா 62 ஆம் இடத்தில் இருந்தது. மன்மோகன் அரசின் காலகட்டத்தில் தொடர் வீழ்ச்சியில் விளைவு – 2014-15 இல் 81 ஆம் இடத்தைஅடைந்தது. பின்னர் மோதி அரசின் பல நடவடிக்கைகளின் விளைவாக 2016 இல் அது 66 ஆக மாறியது. 2017 இல் தரவரிசையில் அது 60 ஆனது. 2018 இல் இந்தியா 57 ஆம் இடத்தை வநதடைந்தது. 

மன்மோகன் சிங் ஆட்சியில் 62 இல் தொடங்கி 81 ஆம் இடத்துகு வீழ்ந்த இந்திய புத்தாக்க தரம் மோடி ஆட்சியில் 81 இல் இருந்து 57 க்கு சென்றது.  2020 இல் புத்தாக்க தர வரிசையில் முதன் முதலாக உலகின் முதல் ஐம்பது நாடுகளுக்குள் இந்தியா வந்திருக்கிறது. இன்று அது 48 ஆவது இடத்தில் உள்ளது. இவையெல்லாம் ஏதோ தன்னால் நிகழ்ந்துவிடவில்லை.  குறிப்பாக அறிவியல் தொழில்நுட்ப கல்வியில் மாணவர்களுக்கு அடல் பரிசோதனை கூடங்கள் மோடி அரசால் உருவாக்கப்பட்டுள்ளன.  இங்கு மாணவர்கள் புத்தாக்க சுதந்திரத்துடன் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். நாளைய உலகின் முன்னணி தொழில்நுட்பங்களான முப்பரிமாண ப்ரிண்டிங், ரோபாடிக்ஸ், மின்னணு தொழில்நுட்பம் ஆகியவற்றை இந்த பரிசோதனை கூடங்களில் நம் பள்ளி மாணவர்கள் கையாளப்பழகுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் இந்த அடல் பரிசோதனை சாலைகள் 395 ஏற்கனவே  அமைக்கப்பட்டுள்ளன. இவை 70 சதவிகிதம் அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாட்டுக்கு 223 பரிசோதனை சாலைகள் கிடைக்கவிருக்கின்றன. 

யாருக்கு? 

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு.  அறிவியல் மனப்பான்மை என பேச்சில் அழகாக முழங்கிவிட்டு செயலில் சோஷலிசம் என்கிற பெயரில் அவலமான அரசு பள்ளிகளை நடத்தாமல் புத்தாக்க்கத்துக்கான கல்வியை பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களும் பெறும் விதமாக அறிவியலையும் தொழில்நுட்ப கல்வியையும் அடிப்படையாக பள்ளிகளுக்கே கொண்டு சென்று சேர்த்திருக்கிறது மோடியின் அரசு. ரோபாடிக்ஸ். செயற்கை நுண்ணறிவு  (artificial intelligence)  ஆகிய வருங்காலத்தில் மிகவும் முக்கியத்துவம் கொண்ட துறைகளில் மாணவர்களுக்கு செயல்முறை அறிவும் அவர்களே பரிசோதனை செய்து கொள்ளும் வசதிகளும் இங்கு வழங்கப்படுகின்றன. 

இதை போல மோடி அரசின் கடுமையான முயற்சிகளின் விளைவுதான் GII போல சர்வதேச  தரமதிப்பீட்டில் இந்தியா பெறும்  முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது.மோதி அரசின் முதல் ஐந்து ஆண்டுகளில் இந்தியா பல முக்கிய அறிவியல் சாதனைகளை நிறைவேற்றியது. .செவ்வாய் கிரகத்துக்கான விண்வெளி கலனை அனுப்புவதில் இந்திய விண்வெளி மையம் உலக சாதனை படைத்தது. ஒரே ராக்கெட் மூலம் 104 செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டன. அறிவியல் ஆராய்ச்சிதாள்களில் வெளியேட்டு எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு 14 சதவிகிதமாக வளர்ந்திருக்கிறது.  இதில் சர்வதேச சராசரி 4% என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக மோடி அரசு, பாஜக என்றாலே உடனே அவர்களின் விஞ்ஞான பார்வையை பசு மாடு, பஞ்சகவ்யம் ஆகியவற்றுடன் இணைப்பதும், கோ மூத்திரம் குடிப்பதுதான் அவர்களின் அறிவியல் என்று சொல்வதும் பொது ஊடகங்களில் ஒரு சொல்லப்படாத வெறுப்பு விதி. 

பசு தொடர்பான ஆராய்ச்சிகள் என்பது மோடி அரசின் மிக விரிவான அறிவியல் செயல் திட்டங்களில் ஒன்றாக இருந்தாலும் ஒட்டு மொத்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மோதி அரசின் பங்களிப்பு என்பது அசாத்திய வேகத்துடன் பல துறைகளில் முன்னேறி செல்கிறது.  உதாரணமாக கோவிட் -19 பெரும் தொற்றின் போது இந்து மகாசபை (இதற்கும் வீர சாவர்க்கரின் இந்து மகாசபைக்கும் தொடர்பில்லை) என்கிற அமைப்பு கோவிட் எதிர்ப்புக்கு கோமூத்திரம் நல்லது என ஒரு முகாமை நடத்தியது. உடனே ஊடகங்கள் இது ஏதோ மோடியே செய்தது போல ஒரு பிம்பத்தை உருவாக்கின. 

ஆனால் மோடி அரசு செய்தது என்ன? முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமாக மோடி செயல்பட்டார். ஒரு நாட்டின் தலைவர் எப்படி அறிவியல் தொழில்நுட்பத்தை தேசம் எதிர்நோக்கும் பேரிடரின் போது பயன்படுத்த வேண்டும் என்பதற்கான சர்வதேச முன்னுதாரணமாக மோடி விளங்குகிறார். வீட்டில் அடங்கியிருத்தல் தொடங்கி, அவ்வப்போது மக்களுக்கு கூட்டு உள்ள ஊக்கம் தரும் செயல்பாடுகள் என்பதுடன் நோய் தடுப்பு மருந்துகளை நம் நாட்டிலேயே தயாரிக்கும் விதத்தில் ஆராய்ச்சி உள் கட்டமைப்புகளை முடுக்கி விடுதல் என மோதி மேற்கொண்ட நடவடிக்கைகள் அபரிமிதமானவை. 

சீனா போன்ற சர்வாதிகார நாடு ஒரு பேரிடரை, அதுவும் தன்னாட்டிலேயே உருவான (அல்லது உருவாக்கப்பட்ட?) ஒரு பேரிடரை, கட்டுக்குள் கொண்டு வருவது ஒரு பெரிய விசயமல்ல. ஆனால் இந்தியா போல ஜனநாயக நாட்டில் இப்பேரிடரைக் கட்டுக்குள் கொண்டு வருவதென்பது அதுவும் கணிக்கப்பட்ட மிகப் பெரும் எண்ணிக்கை மரணங்கள் ஏதுமில்லாமல் அதை கட்டுக்குள் கொண்டு வருவதென்பது அத்தனை எளிதானதல்ல. அடுத்த கட்டத்தில் நோய் தடுப்புக்கு பிறநாடுகளிடம் கையேந்தாமல் உள்நாட்டு கட்டுமானத்துடன் மருந்துகளை உருவாக்கி அவற்றை தேவைப்படும் நாடுகளுக்கும் சமய சஞ்சீவினியாக கொடுத்துதவும் சர்வதேச நல் வல்லரசாக பாரதம் இன்று நிமிர்ந்து நிற்பதில் நரேந்திர மோதியின் அறிவியல் சார்ந்த நடவடிக்கைகள் உலக வரலாற்றில் அறிவியல் சார்ந்த அரசாட்சிக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக என்றென்றும் நிற்கும். 

தனியார் தொழில்துறை என்றாலே அதை ஏதோ கெட்டவார்த்தையாகவும் தீண்டத்தகாதது போலவும் பார்க்க அறுபதாண்டுகளுக்கும் மேலான நேருவிய பரம்பரை ஆட்சி நமக்கு சொல்லி தந்துள்ளது. உண்மையில் நேருவிய சோஷலிஸம் என்பதே மோசடி முதலாளித்துவத்தை வளர்க்கும் தீய களை வயல். இன்று இந்திய பொருளாதாரம் இந்த மோசடி சோஷியலிசத்திலிருந்து வெளியே வருகிறது. ஆராய்ச்சி துறையில் தனியார் தொழில் நிறுவனங்களின் பங்கை நரேந்திர மோடி அரசு வலியுறுத்தி வருகிறது. இது ஏற்கனவே டாக்டர் அப்துல் கலாம் அவரது ‘இந்தியா 2020’ நூலில் வலியுறுத்தி இருந்த விடயம்தான். அதை பெரிய அளவில் செயல்படுத்தியுள்ளது மோடி அரசுதான். யோசித்து பாருங்கள். மேற்கத்திய நாடுகளில் போர் தொழில்நுட்பங்களே அங்கு பல spin-off தொழில்நுட்பங்கள் உருவாக காரணமாக இருந்திருக்கின்றன. 

மோடி அரசு இந்தியாவின் ஒரு பெரிய பலவீனம் என கருத தக்க விசயத்தை அதன் பலமாக மாற்றி வருகிறார்.  நாம் நவீன ஆயுதங்களை பெரிய அளவில் இறக்கு மதி செய்கிறோம். மேற்கத்திய ஆயுத வியாபாரத்தின் பெரும் இறக்குமதி சந்தை இந்தியா.  நாம் ஒரு முதன்மை ஆயுத சந்தை என்கிற பலவீனத்தையே பலமாக மாற்றி மேற்கத்திய ஆயுத உற்பத்தியாளர்களை இந்தியாவில் தம் உற்பத்தி மையங்களை நிறுவுவதை ஒரு நிபந்தனையாக மாற்றி வருகிறார் மோடி.  

இது நம் உள்நாட்டிலேயே தொழில் நுட்ப பொறியியலாளர்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் தொழில் சந்தையை ஏற்படுத்தும். ஐஐடி படித்தால் அல்லது எந்த தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றாலும் வெளிநாட்டில்தான் தகுந்த வேலை வாய்ப்பு என்கிற சூழலை மாற்றும். மேலும் இந்தியாவுக்கு பல spin-off தொழில்நுட்பங்களை பெற்றுத்தரும்.இந்த 2020-21 பட்ஜெட்டில் மோதி அரசு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ 6,302 கோடி நிதி ஒதுக்கீட்டை அறிவியல் தொழில்வளர்ச்சி துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. அத்துடன் ரூ 2,787  கோடியை பயோடெக்னாலஜிக்கு  ஒதுக்கீடு செய்துள்ளது. இன்றைய தேசிய அறிவியல் தினத்தில் அதற்கு காரணரான சந்திரசேகர வேங்கட ராமனின்  மனதிற்கு மகிழ்ச்சியை ஊட்டும் திசையில் இந்தியா அறிவியல் பாதையில் செல்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here