யார் மனசில் யாரு..?!

42

தேர்தல் என வந்து விட்டாலே ‘யார் மனசில் யாரு‘ இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாத நிலையால் அரசியல் கட்சியினர் குழம்பி போய்விடுவார்கள். ஊடகங்களும் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்புகளை தேர்தல் வரை புகுத்திக் கொண்டிருப்பார்கள். ஆனாலும் பெரும்பாலான பொதுமக்கள் தேர்தலுக்கு முன்பே ஒரு முடிவெடுத்திருப்பார்கள். வரும் ஏப்ரல் 6 அன்று நடைபெற இருக்கும், தமிழக சட்டமன்ற தேர்தலில், மொத்தம் 6.29 கோடி பேர் வாக்களிக்க உரிமை பெற்றுள்ளனர். அதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சத்து 95 ஆயிரத்து 440 பேர்,
பெண்கள் 3 கோடியே 19 லட்சத்து 40 ஆயிரத்து 880 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 7,192 பேர்.

பெரும்பான்மையாக உள்ள மக்கள் பெரும்பாலும் தங்கள் நலன், தங்கள் சமுதாய நலன், தன் வழிப்பாட்டு உரிமை போன்றவற்றை சார்ந்து இருக்காமல் கண்ணை மூடிக்கொண்டு ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு வாக்களிப்பது என்ற மனநிலையில் தான் இருக்கிறார்கள். வீதியெங்கும் திறந்து வைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளால் தங்கள் குடும்பம் நாசமாவது குறித்தோ, தங்கள் கோயில் நிலங்களை கொள்ளையடிப்பது குறித்தோ, தங்கள் இனப்பெண்களை கேவலமாக பேசுவது குறித்தோ, தங்கள் தெய்வங்களை நிந்தனை செய்பவர்கள் குறித்தோ கவலைப்படுவதில்லை. ஏன் ஜாதிமோதலை உருவாக்கும், உயர்ஜாதி பெண்களை காதலித்து திருமணம் செய்பவர்களுக்கு பணமுடிப்பு அளிக்கப்படும் என்று தைரியமாக தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் அரசியல் கட்சிகள் குறித்து பாதிக்கப்படும் சமுதாய மக்களே கவலைப்படுவதில்லை.

இன்னும் பலர் வாக்கிற்கு பணம் வாங்கிக் கொண்டு தங்கள் 5 ஆண்டுகளை அடிமைசாசனமாக எழுதிக் கொடுத்து விடுகின்றனர். கொடுத்த பணத்தைவிட பல நூறு மடங்கு அவர்களும் கொள்ளையடித்துச்செல்கின்றனர்.

ஆனால் சிறுபான்மையினர், தங்கள் மதத்தின் அடிப்படையிலேயே வாக்களிக்கின்றனர். தங்களை தாஜா செய்யும் அரசியல் கட்சியினருக்கே அவர்களது வாக்குகள் சிந்தாமல் சிதறமால் கிடைக்கிறது. இதனால் மறந்தும் கூட சிறுபான்மையின மக்களின் வழிபாட்டு முறையையோ, பெண்களையோ இந்த கட்சிகள் விமர்சித்துவிடமாட்டார்கள்.

தமிழகத்தில் கன்னியாகுமரி, வேலூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கோவை, சென்னை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சிறுபான்மையினரின் எண்ணிக்கை கணிசமான அளவு உள்ளது. தமிழகத்தில் இஸ்லாமியர்கள் ஆறு சதவீதமும் கிருஸ்தவர்கள் 7 சதவீதமும் இருப்பதாக கூறப்படுகிறது.

சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதில் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் போட்டியே நிலவி வருகிறது. அதற்காக பெரும்பான்மை மக்களை விமர்சிக்கவும் தயங்குவதில்லை.
19 மே 2019 அன்று, அரவக்குறிச்சியில் நடந்த இடைத்தேர்தலில், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன், தன் கட்சியின் வேட்பாளர் மோகன் ராஜை ஆதரித்து, வாக்கு சேகரிக்கும் போது, இஸ்லாமியர்களை திருப்திப் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி, ஒரு இந்து‘, எனபேசினார்.

பாஜக போன்ற அரசியல் கட்சிகளை கண்மூடித்தனமாக இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பது நடந்து வருகிறது. அரவக்குறிச்சி தொகுதியின், பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் தேர்தல் நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய பெண்கள் வந்ததால், ‘பள்ளப்பட்டி நகர ஜமாஅத்துல் உலமா‘ கண்டனம் தெரிவித்து இருந்தது.

பாஜகவினர் தங்கள் கொடியுடன், இஸ்லாமியர்கள் மத்தியில், வாக்கு சேகரிக்க சென்ற போது, பள்ளி வாசல் இருக்கும் இடத்திற்கு, பாஜகவினர் வரக் கூடாது, என இஸ்லாமியர்கள் போராடியது, நாம் அனைவரும் அறிந்ததே.

இஸ்லாமிய பெண்கள் பர்தா அணியாமலும், அரசியல் பொதுக் கூட்டங்களுக்கு, வீடு வீடாக சென்று, வாக்கு சேகரிப்பதை, முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுமாறும், இஸ்லாமிய பெண்களுக்கு, அறிவுறுத்தி இருந்தது.
எனினும், மற்ற கட்சியின் கூட்டங்களுக்கு செல்லும், இஸ்லாமிய பெண்களை, இது வரை எந்த உலமா சபையும், எதுவும் கண்டித்ததாக, நமது கண்களுக்கு புலப்படவில்லை.

இந்துக்களை அரசியல் கட்சியினர் பார்க்கும் பார்வைக்கும், மற்ற மதத்தினரை பார்க்கும் பார்வைக்கும் மிகப்பெரிய வித்யாசம் உள்ளது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற பெயர் வைத்துள்ள திமுக கூட்டணியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சி, கிருஸ்தவ ஜனநாயக கட்சி, முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் உள்ளன. இவை பாஜக என்ற மதவாத கட்சியை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என்கின்றன. பாஜகவில் அனைத்து மதத்தினரும் உள்ள நிலையில், மேற்படி கட்சியில் மற்ற மதத்தினர் ஒருவர் கூட இல்லை என்பதும், தங்கள் மதத்தின் ‘நலனுக்காக’ மட்டும் கட்சி நடத்துபவர்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் மதச்சார்பற்ற கூட்டணியாம்.

ஹைதராபாத்தை சேர்ந்த ஓவைசி, தமிழக தேர்தலில் போட்டியிடுகிறார் என்றால், அதற்கு முக்கிய காரணம், அவர் சார்ந்து உள்ள மதமே.
சட்டமன்ற தேர்தலில், நடிகர் ரஜினிகாந்த் போட்டியிடுவதாக கூறிய போது, அவரை கன்னடர், மராத்தியர் எனக் கூறிய அரசியல் கட்சிகள், முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்களை மலையாளி எனக் கூறிய கட்சிகள், முதல்வராக இருந்த ஜெயலலிதாவை கன்னடர் எனக் கூறிய கட்சிகள் எதுவும், ஓவைசியை வெளி மாநிலத்தவர் என கூறவில்லை. அதற்கு முக்கிய காரணம், அவர் சார்ந்து இருக்கும் மதம்.
தமிழகத்தில் அவரோடு கூட்டணி வைத்து போட்டியிட முயல்வது, அவருடைய செல்வாக்கால். அவருக்கு கிடைத்த வாக்குகள், மதப் பற்று மிக்க இஸ்லாமியர்கள் ஓட்டு, என்பது நமக்கு கண் கூடாக தெரிகின்றது.

ஆனால் சமீப காலங்களில் அரசியல் களம் மாறிவருகிறது. தமிழக இந்துக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி, இந்து விரோத கட்சிகளை காவடி தூக்க வைத்திருக்கிறது. நாத்திகம் பேசிய வாய்கள் தற்போது வெற்றி வேல், வீரவேல் முழக்கம் போட வேண்டிய சூழ்நிலைக்கு வந்துள்ளனர். இந்த ஒற்றுமை வரும் தேர்தலில் எதிரொலித்தால் மட்டுமே தமிழகத்தில் பெரும்பான்மை மக்களின் நலன் காக்கப்படும். உண்மையான மதச்சார்பின்மை வரும்.

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here