ரேடியோ கண்டுப்பிடிப்பில் ஜெகதீஸ்சந்திரபோஸின் பங்கு!

ரேடியோ கடந்து வந்த பாதை :

ரேடியோவின் தொழில்நுட்ப வளர்ச்சியில்  தந்தி (Telegram) மற்றும் தொலைபேசியின் (Telephone) கண்டுபிடிப்புகள் மிகவும் பெரும் பங்காற்றி இருக்கிறது. மூன்று தொழில்நுட்பங்களும் நெருங்கிய தொடர்புடையவை, ரேடியோவின் முதல் பரிணாம வளர்ச்சி “வயர்லெஸ் தந்தி” தொடங்கியதிலிருந்து ஆரம்பிக்கிறது.

ரேடியோ என்ற சொல்லானது நாம் கேட்கும் மின்னணு சாதனத்தையோ அல்லது அதில் இயங்கும் பாடல்கள் அல்லது செய்திகள் மற்றும் பொதுவாக ஒலியை குறிக்கின்றது . எவ்வாறாயினும், இவை அனைத்தும் வானொலி அலைகள்-மின்காந்த அலைகளின் கண்டுபிடிப்புடன் தொடங்கியது, அவை இசை, பேச்சு, படங்கள் மற்றும் பிற தரவுகளை கண்ணுக்குத் தெரியாமல் காற்று வழியாக அனுப்பும் திறன் கொண்டவை.

மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி பல சாதனங்கள் செயல்படுகின்றன. அவற்றுள் சில ரேடியோக்கள், மைக்ரோவேவ், கம்பியில்லா தொலைபேசிகள் (Wireless phones) , ரிமோட் கண்ட்ரோல் பொம்மைகள், தொலைக்காட்சிகள்.

உலக வானொலி தினம் :

2010ல் நடந்த யுனெஸ்கோ பொதுக்கூட்டத்தில், உலக வானொலி தினத்தை அறிவிக்க வேண்டும் என ஸ்பெயின் ரேடியோ அகாடமி வலியுறுத்தியது. இதன்படி ஆண்டுதோறும் பிப்., 13 உலக வானொலி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

ரேடியோஅறிவியலின்தந்தை (Father of Radio Science) ஒருஇந்தியர்:

ரேடியோவை கண்டுபிடித்தவர் யார் கேட்டால் என்றதும் நம் நினைவுக்கு வருவது வெளிநாட்டவர் பெயர் ஒன்றுதான். ஆனால் நம்மில் பலரும் அறியாதது இதன் கண்டுபிடிப்புக்கு முதல் விதையை விதைத்தவர், இந்தியாவின் மேற்கு வங்கத்தில் பிறந்த ஜெகதீஷ் சந்திரபோஸ் (J.C Bose) என்பவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

நியூயார்க்கை தளமாகக் கொண்ட சர்வதேச அமைப்பான இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்ஸ் (IEEE) , ரேடியோ தொழில்நுட்பத்தின் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை முதலில் போஸ் விளக்கினார் என்பதால் அவரை ‘ரேடியோ அறிவியலின் தந்தை (Father of Radio science) ’ என்று அழைத்தனர்.

மறுக்கப்பட்டஅல்லதுமறைக்கப்பட்டஇந்தியரின்கண்டுபிடிப்பு :

ரேடியோ தொழில்நுட்ப ஆராய்ச்சியின் முன்னோடிகளில் போஸ் ஒருவராக இருந்தார், ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி வயர்லெஸ் தகவல் தொடர்புகளை முதன்முறையாக நிரூபித்தார்.

1897 ஆம் ஆண்டில் வானொலி தகவல் தொடர்பு முறையை முதன்முதலில் உருவாக்கியவர் என்று அறியப்படுகின்ற மார்க்கோனிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே போஸ் இதை செய்திருந்தார்.

போஸ் காப்புரிமைக்கு எதிரானவர், ஏனென்றால் அனைவருக்கும் அறிவு பயன்பட வேண்டும் என்றும் காப்புரிமையால் கட்டுப்படுத்தப்படக்கூடாது என்றும் அவர் நம்பினார். இதன் விளைவாக, அவருக்கு விரிவான விஞ்ஞானத்தின் புலமை இருந்தபோதிலும், அவர் மேற்கு உலகத்தினராலும்  மற்றும் ஏனைய பலராலும் கிட்டத்தட்ட “மறக்கப்பட்டார் அல்லது மறைக்கப்பட்டார்” என்றே சொல்லலாம்.  ஆயினும்தன்னுடைய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் பற்றி தனது பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அவர் தனது கண்டுபிடிப்பின் முதல் செய்முறையை 1894 நவம்பர் மாதம் கொல்கத்தாவில் அப்போதைய வங்காள ஆளுநர் சர் வில்லியம் மெக்கன்சி முன்னிலையில் செய்து காட்டினார். ஆனால் அதற்கான காப்புரிமையை  பெறாததால் அந்த ஆய்வை தொடரமுடியவில்லை. இந்த செய்தியை இங்கிலாந்திலிருந்து வெளிவரும் ‘டெய்லி குரோனிக்கல்’ என்ற ஆங்கில நாளிதழில் 1896ல் செய்தியாக வெளியிட்டது

வானொலியின் உண்மையான கண்டுபிடிப்பாளர் யார் என்று அவரது மருமகனிடம் கேட்டபோது, போஸ், “இது கண்டுபிடிப்பாளர் அல்ல, ஆனால் கண்டுபிடிப்பு முக்கியமானது” என்று கூறினார்.

ஆசிரியர் சுப்ரதா தாஸ்குப்தா, போஸ் குறித்த தனது சுயசரிதை புத்தகத்தில், டிசம்பர் 1895 இல் தி எலக்ட்ரீஷியனில் இயற்பியலாளரின் மூன்று கட்டுரைகள் ஒரு இந்தியர் வெளியிட்ட முதல் அறிவியல் ஆவணங்கள் என்று எழுதினார். டிசம்பர் 1895 – ல் வானொலிக்கான அலை வடிவத்தை கண்டுபிடித்தார். இதே மாதத்தில் இவரது இரண்டாம் ஆய்வறிக்கை, லண்டன் ஆய்வு நூல் ஒன்றில் 36 – ம் பகுதியில் வெளியானது.

1897, மார்கோனி இந்தியா வந்தார். அவர், வானொலி பற்றி ஆய்வு ஒன்றினை கொல்கத்தாவில் சமர்பித்தார். இதற்கு ஒரு ஆண்டு முன் ஜெகதீஷ் லண்டனில் மார்கோனியை சந்தித்தார். அப்போது, இருவரும் தங்களது ஆய்வுகளை பற்றி பரிமாரிகொண்டனர். (இருவரும் ஒரே காலகட்டத்தில் வானொலிக்கான ஆய்வுகளில் ஈடுப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது).

இதன் பின்னர் 1901 ம் ஆண்டு மார்க்கோனி என்பவர் இந்த தொழில்நுட்பத்தை மேலும் மெருகேற்றி நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலி சமிக்ஞையை அனுப்பும் முறையை நிகழ்த்திக் காட்டினார் என்பதால் இதன் புகழ் அவருக்கு சென்றது. 1909ஆம் ஆண்டு வயர்லெஸ் தந்தி காண நோபல் பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது.

1901 ஆம் ஆண்டில், மின்சார முன்னோடி நிகோலா டெஸ்லா 1893 ஆம் ஆண்டிலேயே வேலை செய்யும் வயர்லெஸ் தந்தியை உருவாக்கியதாக வழக்கு தொடர்ந்தார். 1943 ஆம் ஆண்டில், அமெரிக்க உச்ச நீதிமன்றம் மார்கோனியின் 1907 அமெரிக்க பதிப்பை அவரது 7777 பிரிட்டிஷ் காப்புரிமையின் யு.எஸ். காப்புரிமை எண் 763,772 T டெஸ்லா மற்றும் பிறரால் உருவாக்கப்பட்ட ரேடியோ-ட்யூனிங் சாதனங்களால் அது முறியடிக்கப்பட்டதாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு உண்மையில் யார் வானொலியைக் கண்டுபிடித்தனர் என்ற தொடர்ச்சியான மற்றும் தீர்மானிக்கப்படாத வாதத்திற்கு வழிவகுத்தது.

வானொலி கண்டுபிடிப்பில் ஒருவர் பெயர் மட்டுமே பதிவான  வரலாற்றில் இதன் கண்டுபிடிப்பின் பாதையில் பலரின் பங்கு இருப்பதை நாம் தெளிவாக அறியலாம். குறிப்பாக இந்தியரான ஜே சி போஸ் அவர்களின் வயர்லெஸ் தகவல் பரிமாற்றம் கண்டுபிடிப்பின் விதை மகத்தானது என்பதை யாரும் புறக்கணித்துவிட முடியாது.

இந்தியாவில் வானொலி சேவை :

1923 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் வானொலி ஒலிபரப்பு ஒரு தனியார் முயற்சியாக பம்பாய், கல்கத்தா மற்றும் மெட்ராஸ் (இப்போது சென்னை) ஆகிய இடங்களில் மூன்று வானொலி கிளப்புகள் நிறுவப்பட்டது.. ரேடியோ கிளப் இந்தியாவில் முதல் வானொலி நிகழ்ச்சியை ஜூன் 1923 இல் ஒளிபரப்பியது. தினசரி 2 முதல் 3 மணிநேர ஒளிபரப்பு முக்கியமாக இசை மற்றும் பேச்சுக்களைக் கொண்டிருந்தது.

அகில இந்திய வானொலி (ஏ.ஐ.ஆர்) 1936 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, 1956 முதல் அதிகாரப்பூர்வமாக ‘ஆகாஷ்வானி’ என்று அழைக்கப்படுகிறது, இது இந்தியாவின் தேசிய பொது வானொலி ஒலிபரப்பு ஆகும். அகில இந்திய வானொலி உலகின் மிகப்பெரிய வானொலி வலையமைப்பாகும், மேலும் மொழிகளின் ஒலிபரப்பு மற்றும் அது சேவை செய்யும் சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய ஒலிபரப்பு நிறுவனங்களில் ஒன்றாகும்.

இரண்டாம் உலகப் போர் வெடித்தவுடன் வானொலி ஒலிபரப்பு கணிசமான முக்கியத்துவத்தைப் பெற்றது. 1939 வாக்கில், முழு நாடும் ஒரு குறுகிய அலை சேவையால் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இந்த காலகட்டத்தில், செய்தி மற்றும் அரசியல் வர்ணனைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மற்றும் வடகிழக்கு மற்றும் வடமேற்கு எல்லைகளில் மக்களுக்கு சிறப்பு ஒலிபரப்புகள் செய்யப்பட்டன.

டிசம்பர் 2018 நிலவரப்படி, இந்தியா முழுவதும் 101 க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் நகரங்களில் 369 க்கும் மேற்பட்ட செயல்பாட்டு தனியார் வானொலி நிலையங்கள் உள்ளன. இந்திய அரசுக்கு சொந்தமான அகில இந்திய வானொலியில் சுமார் 450 எஃப்எம் நிலையங்கள் உள்ளன, இதில் 39% பரப்பளவும், இந்தியாவின் 52% மக்களும் உள்ளனர்.

இன்று அனைவராலும் பெரிதும் உபயோகப்படுத்தக் கூடிய கம்பியில்லா இணைய தள வசதியானது ஒரு காலத்தில் wifi தொழில்நுட்பம் அதாவது கம்பியில்லா தகவல் பரிமாற்றம் என்ற ஒற்றை கண்டுபிடிப்பை ஒட்டியே வளர்ந்துள்ளது. அலைபேசியில் பயன்படுத்தப்படும் 2ஜி, 3ஜி, 4ஜி அனைத்தும் இதன் அடிப்படையில் அமைந்தது தான். நாம் பயன்படுத்தும் மொபைல்களும் மற்றும் ப்ளூடூத் கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமிட்டது இந்த கம்பியில்லா தகவல் பரிமாற்றம் என்று சொல்லக்கூடிய வயர்லஸ் தொழில்நுட்பம்.

அசாதாரண தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி நேரத்தையும் தூரத்தையும் வியத்தகு முறையில் குறைத்துவிட்டது. புதிய முன்னேற்றங்கள் நம் தேசத்தை உலகளாவிய மையமாக மாற்றியுள்ளன. எலக்ட்ரானிக் ஊடகங்கள் தகவல்தொடர்பு மற்றும் தகவல்களையும் அறிவையும் பகிர்ந்து கொள்ளவும், சேமிக்கவும் மற்றும் பெறவும் நமது திறனை மாற்றியுள்ளன. பரவலாகக் கிடைக்கும் ஊடக சேவைகள், நாம் வாழும் மற்றும் பணிபுரியும் வழிகளை மாற்றி, நமது கருத்துகளையும் நம்பிக்கைகளையும் மாற்றியமைக்கின்றன. இப்படி இருக்கின்ற சூழ்நிலையில் இன்றளவும் சாதாரண ஒரு கடைக்கோடி இந்தியன் முதல் பெரும்பாலானவராலும் பயன்படுத்தும் மற்றும் நம் வாழ்வில் ஒரு அங்கமாக மாறி இருக்கக்கூடிய சாதனமாக வானொலி உள்ளது என்றால் அது மிகையல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here