வருமான வரி இல்லாத இந்தியா சாத்தியமா?

மத்திய அரசின் 2021 –22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலாவதற்கு, சில நாட்களுக்கு முன்னர், பாஜ மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைக் கூறினார். ‘வருமான வரிக் கணக்குகள், அதற்கான படிவங்கள் தாக்கல் செய்வதற்கான அவசியம் இனி இருக்காது. எனவே, வருமான வரிக் கணக்குகள் தாக்கல் இல்லாத பட்ஜெட்டாக இருந்தால் சிறப்பாக இருக்கும்” என்றார்.

பலருக்கும் ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால், நாட்டின் பிரதான வரி ஆதாரங்களில் ஒன்றாக வருமான வரி உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், வருமான வரியையே நீக்கிட வேண்டும் என்று சொல்வது சாத்தியமா என்று பலரும் யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.

ஆனால், இதில் உள்ள ஒரு சூட்சுமத்தை பலரும் கவனிக்கவில்லை. மத்திய அரசுக்கு நேரடி வரி வருமானம் என்றால் அது வருமானவரி மட்டுமே. மறைமுக வரி வருமானம் ஜிஎஸ்டி என்று சில வரிகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த நேரடி வரி வருமானத்தின் அளவு இப்போதும் அவ்வளவாக சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை.

ஆனால், மறைமுக வரி வருமானத்தின் அளவு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ஜிஎஸ்டி வருமானம் கடந்த ஜனவரியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், மறைமுக வரி வருமானத்தின் அளவு, அரசுக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான்.

எல்லாம் வெளிப்படைத்தன்மை

ஜிஎஸ்டி நடைமுறையில் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து இ – இன்வாய்ஸ் என்ற நடைமுறை அமலுக்கு வருகிறது. ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு இ – இன்வாய்ஸ் அறிமுகமாகிறது. இந்த இ – இன்வாய்ஸ் நடைமுறைக்கு வந்தால், சம்பந்தப்பட்ட வியாபாரி இ வேபில் தயாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜிஎஸ்டிஆர் 1, ஜிஎஸ்டிஆர் 3பி படிவங்கள் தாக்கல் செய்வதும் எளிதாகிவிடும். அதேநேரத்தில், அந்த வியாபாரி செய்யும் வியாபாரம் ஒவ்வொரு மாதம், ஆண்டுதோறும் எவ்வளவு என்பது அரசின் கணக்குக்கு வந்துவிடும்.

ஜிஎஸ்டி எண்ணுடன் பான், ஆதார் இணைக்கப்பட்டுள்ளதால், அந்த வியாபாரிக்கான ஆண்டு வருமானம் (வியாபாரம் தவிர) எவ்வளவு என்பது தெரிந்துவிடும். இதனால், இப்போது ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் பதிவு செய்து கொண்டுள்ள வியாபாரிகள், ஒளிவு மறைவு இல்லாமல் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்திவிடுவார்கள்.

இதில், மறைமுக வரியான ஜிஎஸ்டி வரியுடன், அவர்கள் வருமானம் தொடர்பான வரியும் தாக்கலாகிவிடும். எனவே, ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவு செய்து கொண்டுள்ள வியபாரி ஒருவர் தனித்தனியாக 2 விதமான கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டிய சூழல், எதிர்வரும் காலத்தில் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.
காரணம், இப்போது ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு அதிகமாக வர்த்தகம் செய்யும் வியாபாரிகளுக்கான இந்த இ – இன்வாய்ஸ், எதிர்வரும் ஆண்டுகளில் அனைத்து வியாபாரிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுவிடும் என்கின்றனர் ஜிஎஸ்டி அதிகாரிகள்.

மாதச் சம்பளதாரர்களுக்கு…

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில், வருமான வரி செலுத்தும் வட்டத்துக்குள் வரும் நபர்களுக்கு, மாதம் தோறும் அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அரசுக்கு டிடிஎஸ் முறையில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில், இப்போது ஆண்டுக்கு ஆறரை கோடி பேர் வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்கின்றனர். இவர்களில் ரீபண்ட் பெறும் தகுதி கொண்டவர்களுக்கு, வருமான வரித்துறை பணத்தை திரும்பச் செலுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த வகையில் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டவர்களில், கணக்குகளை சரியாக தாக்கல் செய்த ஒரு கோடியே 87 லட்சம் கணக்குகளுக்கு வருமான வரித்துறை ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 15 கோடி ரூபாயை திரும்பச் செலுத்தியுள்ளது.

இதில், ஒரு கோடியே 84 லட்சம் கணக்குகள் தனிநபர் தாக்கல் செய்தவர். இவற்றில் 67 ஆயிரத்து 334 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. கார்ப்பரேட்களில் 2 லட்சத்து 14 ஆயிரம் கணக்குகளில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய் திரும்பச் செலுத்தப்பட்டுள்ளது.

வருமான வரி இல்லாமை சாத்தியமா?

இப்போது ஜிஎஸ்டியில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தம், மிக முக்கியமாக அடுத்த 5 ஆண்டுகளில் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது, ஜிஎஸ்டியுடன் இணைந்த வரியை கோடிக் கணக்கான வியாபாரிகள் செலுத்திக் கொண்டிருப்பார்கள். மாதச் சம்பளதாரர்கள் தங்கள் சம்பளத்தின் மீதான டிடிஎஸ் பிடித்தங்களில், ரீ பண்ட் பெறுவதற்கான படிவங்களை மட்டுமே தாக்கல் செய்யும் நிலை வரலாம். இவை சரியாக செயல்பட குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தேவை என்ற நிலையில், இதற்கு பிந்தைய ஆண்டுகளில் வருமான வரிப்படிவங்கள் தேவைப்படாத இந்தியா உருவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here