வானதிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?

2926

‘உங்களுக்கு இதனால் பிரச்சனைகள்தான் ஏற்படுமே ஒழிய எந்த பலனும் இருக்காது.’ இதை நான் சொன்னதும் மறுமுனையிலிருந்து எந்த தயக்கமும் இல்லாமல் பதில் வந்தது. ‘அதனால் ஒன்றும் கவலை இல்லை தம்பி. சரியாக பதினொன்று மணிக்கு நான் அரங்கில் இருப்பேன்.’

இதைக் கூறியவர் திருமதி வானதி ஸ்ரீனிவாசன்.

பாலினப்பன்மையர் என்பது மிகவும் கவனம் பெறாத விஷயம்.  நமக்கு தெரிந்த ஆண் பெண் அலி எனும் பாலினங்கள் தவிர பல்வேறு வகையான பாலினச் சிறுபான்மையினர் உண்டு. அவர்கள் குறித்து சமுதாயத்தில் விழிப்புணர்வு இல்லாததால் அவர்களில் பலர் படும் வேதனையும் அல்லல்களும் மிகவ்ம் கொடுமையானவை.  எனவே அவர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மதுரையைச் சார்ந்த கோபி சங்கர் என்பவர் எழுதிய நூல் ஒன்றை ஹிந்து ஆன்மிக கண்காட்சியின் போது தமிழ்ஹிந்து.காம் அரங்கில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அதற்கு தலைமையேற்று நூலை வெளியிடுவதற்கு பலரிடமும் தயக்கம் இருந்தது. அது புரிந்து கொள்ளத் தக்கதே. இந்நிலையில்தான் வானதி ஸ்ரீனிவாசன் அந்நூலை வெளியிட சம்மதித்தார்கள்.

அப்போது அது ஒரு புயலை உருவாக்கியது.  இந்த நூலை பாஜக தலைவர் ஒருவர் வெளியிடுவதா? பொதுவாக பாஜக என்றாலே அவர்கள் பாலினப் பன்மையினருக்கு எதிரானவர்கள் என்று ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்நிலையில் இப்படி ஒரு நூலை வெளியிடுவதன் மூலம் வானதி அவர்கள் அந்த பிம்பத்தை உடைத்து அனைத்து பன்மை மக்களையும் ஏற்றுக்கொள்ளும் பாஜகவின் உண்மை முகத்தைக் காட்டியிருந்தார்.

இதைக் குறித்து அவர் கூறிய கருத்து ‘எல்லா தரப்புகள் குறித்தும் அறிவது அவசியம். அதிலும் குறிப்பாக விழிப்புணர்வு அதிகம் இல்லாத சமூகத்தில் அறியப்படாத தளங்களில் வாழும் மக்களை தெரிந்து கொள்ள இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது எனக்கு உதவுகிறது.’

இவர் ஒரு சராசரி அரசியல்வாதியோ அல்லது அரசியலை அதிகாரத்துக்காக பயன்படுத்தும் ஒரு அதிசாமர்த்திய அரசியல்வாதியோ அல்ல என்பதை உணர முடிந்தது. இவர் நல்லதொரு அரசியல்வாதி. வித்தியாசமானவர்.

அதைத் தொடர்ந்து வேறு சில விஷயங்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ள முடிந்தது.

2017 இல் குளங்களைத் தூர் வாரும் பணியில் ஒரு யாத்திரையாக ஈடுபட்டார் வானதி ஸ்ரீனிவாசன். வெறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி ஒன்றை நடத்துவது எளிது. அதை ஒரு தொடர் யாத்திரையாக நடத்துவது இன்னும் கடினமான ஒன்று. அதைவிட கடினம் தூர்வாரும் வேலையையும் செய்து காட்டி அந்த யாத்திரையை நடத்துவது.  வானதி மூன்றாவது விதமாகவே அந்த யாத்திரையை நடத்தினார். அவரும் அவருடன் சென்ற தன்னார்வ தொண்டர்களும் குளமிறங்கினார். தூர் வாரினார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டு சுற்றுப்புற சூழலியலில் நீர் காக்கும் முயற்சியில் அவர் செய்த இந்த பணியில் அரசியலுக்கு எவ்விதத்திலும் துளியளவும் தொடர்பில்லாத ‘சிறுதுளி’ போன்ற சூழலியல் தொண்டு நிறுவனங்களும் பங்கேற்றன. இந்த ஒருங்கிணைப்பை வானதி ஸ்ரீனிவாசனால் சாத்தியப்படுத்த முடிந்தது. அதற்கு முக்கிய காரணம் அவரால் இன்றைக்கு பொதுவாக அரசியல் என எதை கருதுகிறோமோ அந்த எதிர்மறை பார்வையிலிருந்து மாறுபட்டு சிந்திக்க முடிந்தது என்பதால்.

இதே போல 2018 இல் வானதி ஸ்ரீனிவாசன் ‘நிவேதிதா ரத யாத்திரை’ ஒன்றை நிகழ்த்தினார். சகோதரி நிவேதிதை மகாகவி பாரதியால் தன் குருவாக வணங்கப்பட்டவர்.  பாரதியாருக்கு பெண் விடுதலையின் அவசியத்தை போதித்தவர், உணர்த்தியவர்.  பாரதியாரின் எழுச்சியும் இனிமையும் கொண்ட கவிதைகள் மூலமாக பெண்விடுதலை பெண்கல்வி ஆகியவற்றின் அவசியத்தை தமிழ்நாடு உணர்ந்தது. பெண்கல்வியை பெருமளவில் கொண்டு செல்ல களத்தில் பாடுபட்டவர் நிவேதிதை.

அவரது 150 ஆவது பிறந்த தினம் தமிழ்நாட்டில் பெரும் கவனம் பெறாத நிலையில் கடந்து சென்றிருந்தால் அது தமிழ்நாட்டுக்கே வரலாற்று அவமானம்.  அந்த அவமானம் நேராத விதத்தில் நிவேதிதை ரத யாத்திரை தமிழ்நாடெங்கும் நடைபெற்றது. பள்ளிகள் கல்லூரிகள் குறிப்பாக பெண்கள் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்த ரதம் சென்றது. விவேகானந்தர், நிவேதிதை, பாரதி ஆகியோர் கருத்துகள் மாணவிகளை சென்றடைந்தன. இந்நிகழ்ச்சியையும் கட்சி அரசியலுக்கு வெளியே நின்று ஒரு பெண்ணாக ஒரு பெருமை மிகு இந்திய  பெண்ணாக, தமிழக பெண்ணாக நடத்தியிருந்தார் வானதி ஸ்ரீனிவாசன். இதில் அவர் தன்னை முன்னிறுத்தவே இல்லை. மீண்டும் ஒரு அரசியல்வாதியிடம் காணக்கிடைக்காத நல்ல குணம் இது.

ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து அரசு பள்ளியில் பயின்று கல்வி கற்கும் காலத்தில் முதன்மை மதிப்பெண்களையும் விளையாட்டு அணிகளின் தலைமை பொறுப்புகளையும் ஏற்று வளர்ந்தவர் வானதி.  பின்னர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்கிற மாணவர் அணியில் இணைந்தார். வழக்கறிஞராக பணி புரிந்தவாறு அரசியல் தலைவராகவும் பரிணமித்தார். நல்லதொரு குடும்பத்தின் இல்லத்தரசியாகவும் விளங்குகிறார். அவரது கணவர் ஸ்ரீனிவாசன் அவர்களும் இதே இயக்க குடும்பத்தைச் சார்ந்தவர்தாம். மனைவியின் வெற்றியில் பெரும் மகிழ்ச்சியுடன் அவர் கொடுக்கும் ஊக்குவிப்பே வானதி ஸ்ரீனிவாசன் அவர்களின் வெற்றிக்கு அடிப்படையாக விளங்குகிறது.

இப்படி தன்னைத்தானே செதுக்கி அரசியல்-சமூக வாழ்வில் முன்னிற்கும் வானதி ஸ்ரீனிவாசன் அனைத்து தரப்பு  கருத்துகளுக்கும் செவிமடுப்பவர்.  விவாதங்களில் குரல் உயர்த்தி பேசாதவர். கருத்துகளை மட்டுமே முன்வைப்பவர். எத்திசையிலிருந்தும் நல்ல கருத்துகள் நம்மை வந்தடைய வேண்டும் என்கிறது வேதம். எக்கட்சியினர் கூறினாலும் சரியான விஷயங்களை நாம் ஏற்க வேண்டும் என அந்த வேத அறிவுரையை வலியுறுத்துபவர் வானதி ஸ்ரீனிவாசன்.

பாஜக பரம்பரை ஆட்சி கட்சி அல்ல.  அங்கு உருவாகிய பெண் தலைவர்கள் தங்களை கடின உழைப்பின் மூலமாகவும் திறமை மூலமாகவும் நிலைநிறுத்தியவர்கள். தங்கள் பெயருக்கு பின்னால் ஒரு காந்தியையோ கருணாநிதியையோ போட்டு அதையே தங்கள் அரசியல் செல்வாக்காக மாற்றியவர்கள் அல்ல. மாறாக தங்களையும் கட்சியின் சித்தாந்தங்களையும் மட்டுமே நம்பி சிகரத்தைத் தொட்டவர்கள்.

இதன் மிக சிறந்த உதாரணமாக அண்மை காலத்தில் சுஷ்மா சுவராஜ் அவர்களை சொல்ல முடியும். வெளியுறவு இலாகாவில் அன்னிய நாடுகளில் வாழும் இந்தியர் அனைவருக்கும் அவர்  தாயாகவே இருந்தார். அதுவரை ஆண்ட காங்கிரஸ் அரசுகள் அன்னிய நாடுகளில் வாழும் இந்தியர்களிடம் மாற்றாந்தாய் மனோபாவத்துடன் இருந்த போது சுஷ்மா சுவராஜ் மற்றொரு தாயாக அவர்களை ஆதரவுடன் அரவணைத்து செயல்பட்டார். தமிழ்நாட்டின் சுஷ்மா சுவராஜ்ஜாக ஒளிரக் கூடிய தகுதியும், திறமையும் கொண்டவர் வானதி ஸ்ரீனிவாசன். தமிழ்நாட்டு பெண்மையின் சிறப்பை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லும் வல்லமை வானதி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு உண்டு.

ஆனால் நம் அரசியலின் துரதிர்ஷ்டம்.

இன்று அவரை எதிர்த்து போட்டியிடுவது யார் என்று பாருங்கள்?

வெங்கட் சாமிநாதன் மிகச் சிறந்த மிகக் கூர்மையான கலை விமர்சகர். ஒரு முறை மிகவும் கேவலமான ஒரு கவிதைத் தொகுப்பைக் குறித்து விமர்சிக்கும் போது அவர் இப்படி சொன்னாராம், ‘ஒரு வயதுக்கு பிறகு யாரென்றாலும் பிரதமர் பதவிக்கு ஆசைப்படலாம் அல்லது குடியரசு தலைவர் ஆகலாம் என்பது போல இன்றைக்கு யாரென்றாலும் கவிதை எழுதலாம்.’

திரு. கமலஹாசன் வானதி ஸ்ரீனிவாசனை எதிர்த்து போட்டியிடுவதென்பது அப்படிப்பட்ட ஒன்றுதான்.

கமலஹாசன் ஒரு நடிகர் என்பதால் அவர் தகுதியற்றவர் ஆகிவிட மாட்டார். ஆனால் அவர் நடித்த படங்களை பாருங்கள்.

தன் வாழ்நாட்களில் பெண்களை ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் வலிமையற்றவர்களாகவும் சித்தரிக்கும் எண்ணற்ற படங்களில் நடித்தவர் கமலஹாசன். ஐஐடியில் கணிப்பொறியியல் படித்த பெண்ணைக் காட்டினால் கூட அந்த பெண் கதாநாயகனாக நடிக்கும் கமலஹாசனிடம் காம வயப்பட்டு பின்னால் அலைவது போல காட்டுவது அவரது திரைப்படங்களின் பாணி. பெண்ணுரிமை பேசும் மருத்துவர் ஆண்-பெண் தம்பதியினரை பிரிப்பதில் அலாதி ஆனந்தம் காணுவது போல மற்றொரு திரைப்படம். கமலஹாசனின் மற்றொரு திரைப்படத்தில் மிகவும் மோசமாக ஒரு பெண்ணைத் துரத்தி துரத்தி கிண்டல் செய்வதை ஹீரோத்தனமாக காட்டியிருப்பார். அந்த பெண்-கிண்டல் பாடல் மிகவும் பிரபலமானது. அதே காலகட்டத்தில் தான் பெண் கிண்டல் செய்யும் ரவுடிகளால் சரிகா ஷா என்னும் மாணவி சென்னையில் மரணமடைந்தார்.

இப்படிப்பட்ட படங்கள் மூலமாக நாட்டை சீரழித்த பெண் வெறுப்பும் ஹாலிவுட் ‘தழுவல்’களும் கொண்ட copy-cat மலிவான நடிகர் கமலஹாசன். கேட்டால் அது தொழில் என்று சொல்லுவார். தன் சொந்த துறையிலேயே பணத்துக்காக மதிப்பீடுகளை சமரசம் செய்து கொள்ள தயங்காத ஒரு நடிகர் அரசியலில் என்ன செய்வார்?

ஒரு வேளை அவர் திமுகவின் B-team ஆக செயல்பட கூடும்.

அத்துடன் தொடர்ந்து ஹிந்து மத புராணங்களையும் இந்து வாழ்க்கைமுறையையும் கிண்டல் அடிப்பதில் ஒரு வக்கிர மகிழ்ச்சி கொண்டவர் கமலஹாசன். மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை நம்பிக்கை. அதை கிண்டலும் கேலியும் செய்பவர் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் இந்து மத நம்பிக்கை கொண்டவரின் வாழ்க்கையை விட மதிக்கத் தகுந்த வாழ்க்கை வாழ்ந்தால் அப்படி கிண்டல் செய்வதில் ஓரளவாவது (ஓரளவுதான்) ஒரு அர்த்தம் இருக்க முடியும். கமல ஹாசனை என்பவரை பொறுத்தவரையில் … இதை இதற்கு மேல் சொல்ல வேண்டியதில்லை என கருதுகிறேன்.

தன் தொழில்முறை வாழ்க்கையிலும் தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எவ்விதத்திலும் பிறருக்கு ஒரு ஆதர்ச நாயகராக முடியாதவர் கமலஹாசன்.

எந்த பெண்ணைப் பெற்ற பெற்றோரும் தன் மகள் வானதி ஸ்ரீனிவாசனை  போல சாதனையாளராக வேண்டும் என விரும்புவர். எந்த பையனைப் பெற்ற பெற்றோராவது தன் மகனின் வாழ்க்கை கமலஹாசனின் வாழ்க்கை போல ஆக வேண்டுமென விரும்ப முடியுமா?

எனவேதான் கமலஹாசன் திமுகவின் பி-டீம் என சொல்ல வேண்டியுள்ளது.

இன்று கோவை மக்கள் முன்னால் இருக்கும் மிக பெரிய வாய்ப்பு வானதி ஸ்ரீனிவாசன். அவரது வெற்றி தமிழ்நாட்டு பெண்மைக்கான வெற்றி. வானதி ஸ்ரீனிவாசனின் வெற்றி பரம்பரை அரசியலுக்கும், ஆபாச சினிமா அரசியலுக்கும், தனிவாழ்க்கை சீர்கேட்டுக்கும் கொடுக்கப்படும் மரண அடியான தோல்வி. 

நாம் எப்படிப்பட்டவரை தேர்ந்தெடுத்தோம் என்பதைக் கொண்டு நம் அடுத்த தலைமுறையினர் நம்மை எடைபோடுவார்கள். அப்போது வானதிக்காக வாக்களித்தேன் என்று சொல்வது நம் மீது நம் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு நன்றியை அளிக்கும்.

உண்மையில் இங்கு சோனியா காந்தி அவர்களுக்கும் ஸ்டாலின் அவர்களுக்கும் செய்யும் விஷயத்தையே நாம் செய்ய வேண்டும். அவர்கள் அவர்களின் சந்ததிகளின் நன்மைக்காக அரசியல் செய்கிறார்கள். ராவுல் வின்ஸி என்கிற ராகுல் காந்திக்காக, கருணாநிதி ஸ்டாலினுக்காக, ஸ்டாலின் உதயநிதிக்காக.

நாமும் நம் தேசத்தின் ஒட்டுமொத்த சந்ததிகளுக்காக வாக்களிப்போம். அவர்கள் வாழ்வின் வளத்துக்காக நாம் வாக்களிப்போம். எனவே பாஜகவுக்காக. கோவையில் வானதி ஸ்ரீனிவாசனுக்கு.

+15

3 COMMENTS

  1. Yes 100 percent right people must understand reality and Vote Vanati Srinivasan who can work for people other will not come and visit once they win.Modi wish is everyone has to stay and work in constituencies

    0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here