வானதியின் வெற்றியும் கமலின் தோல்வியும் – வலைதளங்களில் சூடு பறக்கும் விவாதங்கள்

216

சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையிலும், பிரபலங்களின் வெற்றி தோல்விகள் குறித்து விவாதங்களும், அலசல்களும், குற்றச்சாட்டுகளும் வலைதளங்களில் உலா வந்து கொண்டே இருக்கிறது. நடிகர் கமலஹாசனின் தோல்விகுறித்து அலசல்களுக்கும் குறைவில்லை. ‘குவாரா’ தளத்தில் கமலுக்கு ஏன் தோல்வி ஏற்பட்டது என்பது குறித்த கேள்விக்கு திரு.ஸ்ரீராம துர்கேஸ் என்பவர் எழுதிய பதில் சற்று ஆழமானது. அதை நியூஸ்குரு வாசகர்களுக்காக தமிழில் வெளியிடுகிறோம்.

கேள்வி: 2021 தமிழக சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் ஏன் வெற்றி பெறவில்லை?

பதில்: நான் பொதுவாக அரசியல் பதில்களை எழுதுவதைத் தவிர்க்கிறேன். ஆனால் இந்த கேள்விக்கு, நான் ஒரு பொதுவான பார்வையாளராக பதிலளிக்கிறேன்.

முதலாவதாக, ஓட்டு எண்ணிக்கையின் போது காலையிலிருந்து பின்தங்கியிருந்து, பின்னர் இறுதி சுற்றுக்களில் முன்னேறி கமலஹாசனை தோற்கடித்த திருமதி. வானதி சீனிவாசனுக்கு வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, திருமதி.வானதி சீனிவாசன் இந்த தேர்தலில் எளிதாக வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்பினேன். ஒருவேளை கமலஹாசன் வெற்றி பெற்றிருந்தால் ஜனநாயகம் கேலிக்குறியதாகியிருக்கும்.

அதற்கு பல காரணங்கள் உள்ளன.

ஏன் திருமதி வானதி?

1.திருமதி வானதிசீனிவாசன் தனது கல்லூரி நாட்களிலிருந்து மாணவர்கள் அமைப்பான ஏபிவிபியில் துவங்கி, பல்வேறு நிலைகளை கடந்து தற்போது பாஜகவின் தேசிய மகளிரணி தலைவியாகியுள்ளார். சாதாரண தொண்டராக பணியாற்றத் தொடங்கி கட்சியின் மாநில செயலாளராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார்.

2.பல சுதந்திர போராட்டத்தியாகிகளுக்கு பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை கோர்ட்டில் வாதாடி அவர் பெற்று தந்திரக்கிறார்.

3.பெண்களின் முன்னேற்றத்திற்காக அவர் ‘சக்தி அறக்கட்டளை‘யை துவங்கினார் மேலும் ஆசிய விளையாட்டு பதக்கம் வென்றும் பாலின சர்ச்சை கிளப்பி பதக்கத்தை பறிக்கப்பட்டு தவித்த வீராங்கனை சாந்தி சவுந்தராஜனுக்காக ‘ஜஸ்டிஸ் ஃபார் சாந்தி‘ என்ற இயக்கத்தை நடத்தினார்.

4.கோவை மக்கள் சேவை மையம் ,திருமதி. வானதிசீனிவாசன் அவர்களால் துவங்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனமாகும், இது கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களின் நலனில் கவனம் செலுத்துகிறது.

5.கோயம்புத்தூரின் தொழில்துறை மேம்பாட்டிற்காக பணியாற்ற தொழில்முனைவோர், தொழில்முறை இளைஞர்கள் மற்றும் அறிஞர்களை ஒன்றிணைக்க “புதிய இந்தியா” என்ற அமைப்பை உருவாக்கினார்.

6.முதல் ஊரடங்கு காலத்தில் அவர் “மோடி கிட்சன் ” (அம்மா உணவகம் போன்று) அமைத்து, பிற மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உணவு வழங்கினார்.

இப்போது உலகநாயகனைப் பற்றி பேசலாம்…

1.தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றமாக மாற்றிய முதல் தமிழ் நடிகர் கமல். அப்போது அது முற்றிலும் புதியது.

2.எச்.ஐ.வி / எய்ட்ஸ், குழந்தைகளுக்கான புற்றுநோய் நிவாரண நிதி போன்ற பல்வேறு சுகாதார தொடர்பான திட்டங்களுக்கான பிராண்ட் தூதர் மற்றும் நிதி திரட்டுபவராக இருந்தார்.

3.வருமானவரித்துறையினரால் கவுரவிக்கப்பட்ட ஒரே நடிகர். ஒரு சிறந்த முன்னுதாரண குடிமகனாக அவர் தனது வருமான வரிகளை முறையாக செலுத்தி வருகிறார்.

பின் ஏன் இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற முடியவில்லை?

  1. புகழ்பெற்ற நடிகர் கமலஹாசன், நடிப்பின் உச்சத்தில் இருந்த போது, அரசியல் குறித்தோ, மக்கள் குறித்தோ கவலைப்பட்டதில்லை. இரு பெரிய தலைவர்கள் உயிரோடு இருந்தவரை, அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு, நமக்கு புரிகிறதோ இல்லையோ, தனதுவார்த்தை ஜாலங்களால் மறுத்தே வந்திருக்கிறார். இரு பெரிய தலைவர்கள் உயிரிழந்த பின்னர் ட்வீட்டர் அரசியல்வாதியாக மாறினார்.

2.மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கைகள் பற்றி இதுவரை யாருக்கும் தெரியாது. இது ஒரு அரசியல் சினிமா போன்ற கட்சியாகும். (விஜய்யின் சர்க்கார் என்று கூறுங்கள் ), அவரது கட்சியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களும், பிரபல சமூக ஆர்வலர்களும் ஒரே இரவில் எம்எல்ஏ ஆகும் கனவோடு வந்தவர்கள். அவரின் அரசியல் கட்சியும் சினிமா போன்றே நடத்தப்படுகிறது.

  1. முதல் சட்டசபைத் தேர்தலிலேயே ஒரு அரசியல் கட்சி, போட்டியிட வேட்பாளர்கள் இல்லாமல் மற்ற கட்சிகளுக்கு தொகுதிகளை பகிர்ந்தளித்தது தமிழக அரசியலில் இது முதல முறை எனலாம்.
  2. தேர்தல் நேரத்தை தவிர மற்ற நாட்களில் கமல் நேரடியாக எந்த பணியையும் கோவையில் செய்திருக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட திரு.மகேந்திரன் உருவாக்கி வைத்திருந்த ஓட்டு வங்கியை உருவாக்கி வைத்திருந்தார். மகேந்திரனின் 3 ஆண்டு உழைப்பை திரு. கமல் பறித்து சுலபமாக வெற்றியடைய முயன்றார்.

5.திருமதி வானதி அங்கு வசிக்கும் அந்த மண்ணின் மகள், கடந்த 30 வருடங்களாக கோயம்புத்தூர் மக்களின் நலனுக்காக உழைத்து வருகிறார். திடீரென ஒரு வெளியூர் நபர் வந்து அந்த கடின உழைப்பை, சினிமா மற்றும் பிக்பாஸ் வெளிச்சத்தில் திருட முயலுவது நியாயமற்றது.

நமக்கு பிடிக்காத வலதுசாரி சிந்தனையாளர் வெற்றி பெறக்கூடாது என்று நினைத்து பிக்பாஸ் பொருட்டு, அடிப்படை பணியாற்றாத ஒருவரை அனுமதிப்பது பொதுசேவைக்கு உகந்தது அல்ல. .

இந்தியன் 2 தனது கடைசி படமாக இருக்கும் என்று அவர் கூறினார், ஆனால் ஏற்கனவே 2023 ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை அவரது கால்ஷீட் இல்லை. அரசியல் என்பது பொழுதுபோக்குக்கான இடமில்லை இது ஐந்து ஆண்டுகள் ஒருவரின் கைகளில் வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொறுப்பு. திரு கமல் ஹாசன் , சினிமாவில் மிகப்பெரிய வெற்றியாளராக இருந்தாலும், அரசியலில் இன்னும் கற்கவேண்டியுள்ளது.

தற்போது அவர் பெற்ற அனுபவத்திலிருந்து, அடிமட்ட அரசியல் வேலையை கற்றுக் கொண்டு, மீண்டும் அரசியல் களத்திற்கு வரட்டும். அவர் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தலைவராக மாறுவதற்கு நீண்ட பயணம் செய்யவேண்டும்.

திரு.ஸ்ரீராம துர்கேஸ்

+5

1 COMMENT

  1. ரஜினி ஒதுங்கியதும் தனக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தார். ஆனால் திராவிடக் கட்சிகளால் மூளை மழுங்கடிக்கப் பட்ட வாக்காளர்கள் அதை உறுதி செய்யவில்லை.

    +2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here