வீணாய்போன கல்வியாண்டு மாற்றத்தை எதிர்பாக்கும் மாணவர்கள்…

51

கொரோனா என்ற 21ம் நுாற்றாண்டின் அதிபயங்கர வைரஸ், இன்றைய தலைமுறையினர் வாழ்க்கையில் பல புதிய மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது என்பதே உண்மை. கல்வி, வேலை, சுகாதாரம், பொருளாதாரம், அரசு நிர்வாகம் என்று ஒரு நாட்டின் அத்தனை அமைப்பின் மீதும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தி, அதை சிதைத்த கொடூர சாதனையை கொரோனா வைரஸ் புரிந்துள்ளது.

இதில், கல்வியைத் தவிர மற்ற துறைகள் அனைத்தும் கொரோனாவுக்க எதிராக மீண்டு வந்து, நாட்டையும், மக்களையும் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. தொழிற்துறை மீட்சி மட்டுமே பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் தக்க வைக்க முடியும் என்ற சூழலில், தொழிற்துறை, அரசு நிர்வாகம், வங்கியியல் ஆகியவை ஒரே புள்ளியை நோக்கி பயணிக்கத் தொடங்கி, ஓரளவு தாக்குப்பிடித்துவிட்டன.

கொரோனாவின் தாக்குதலில் மீளமுடியாத சிக்கலில் மூழ்கிய ஒரே ஒருவிஷயம் குழந்தைகளின் கல்விதான். 2019 –20ம் ஆண்டின் இறுதியில் மூடப்பட்ட பள்ளிகள், 2020 –21ம் கல்வியாண்டில் திறக்கப்படவே இல்லை. ஆனால், இந்தக் கல்வியாண்டுக்காக அச்சடித்த புத்தகங்களை, மாணவர்களுக்கு வினியோகிப்பது, தன் கடமை என்று நினைத்த தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை உட்பட நாட்டின் பல மாநிலங்களின் கல்வித்துறைகள், புத்தகங்களை மாணவர்கள் தலையில் கட்டிவிட்டன.

ஆனால், பாடங்களை? அதனால் என்ன, தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் நடத்தலாம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி உட்பட பல தனியார் சேனல்கள் வழியாக பாடம் நடத்தப்படும் என்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. ஆனால், இது எந்தளவுக்கு சாத்தியம் என்பதை யாரும் புரிந்து கொள்ளவே இல்லை, என்பது வருத்தமான விஷயம். காரணம் இல்லாமல் இல்லை. ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் இருந்தால், இந்த 30 மாணவர்களும் முதல் ரேங்க் எடுப்பது இல்லை. கிரேடு வழங்கினாலும், எல்லோரும் ஏ அல்லது ஏ பிளஸ் கிரேடு எடுப்பதில்லை. பி, சி என்று பயணித்து டி வரை செல்லும் மாணவர்களும் உள்ளனர். இப்படிப்பட்ட மாணவர்களைக் கொண்ட நம் சமூகத்தில், ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சி கல்வி எந்தளவுக்கு, கற்கும் அறிவை வளப்படுத்தி வைக்கும் என்பதை கல்வியாளர்கள் யோசிக்கவே இல்லை.

அதாவது ஒரு மாணவருக்கு ஒரு பாடத்தை ஒரு முறை நடத்தினால் புரியும். அதேபோல், ஒரு சில மாணவர்களுக்கு பாடத்தை 2 முறை நடத்தினால் புரியும். இவர்களுக்கு எல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், வகுப்பறையில் ஒரு பாடத்தை எத்தனை முறை நடத்தினாலும், அதில் கேள்வி கேட்டால், பதில் எழுத முடியாத மாணவ, மாணவிகளும் உள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்க, மாணவர்களுக்கான கற்பித்தலும், அவர்களது கற்றல் திறனும், இந்தக் கல்வியாண்டில் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்.

சமீபத்தில் சமூக வலைத்தளம் ஒன்றில் பரவிய வீடியோ, இந்தக் கல்வியாண்டின் அவலத்தை சொல்லாமல் சொல்லிவிட்டது. ‘‘கல்வியாண்டுக்காக அரசு கொடுத்த பாடப் புத்தகங்களில் உள்ள பாடங்களை, தங்கள் மகனால் படிக்க முடியவில்லை. கல்வி அறிவு இல்லாத பெற்றோர்கள், தமிழ், ஆங்கிலத்தை எப்படி புரிந்து கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியும். கரோனா இல்லாத பகுதிகளில் பள்ளிகளைத் திறக்க ஏன் தயக்கம்? பாடம் கற்றுக் கொடுக்காவிட்டால், இந்தப் பாடப் புத்தகங்களை ஏன் கொடுக்குறீர்கள்?’’ என்று ஏழைத்தாயின் ஆவேசக் குரல், தமிழகத்தின் ஒவ்வொரு பெற்றோரின் குரலாக ஒலித்தது என்பதே உண்மையாகும்.

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை, அந்த வீடியோ உணர்த்தியது. நீங்கள் என்னதான் ஆன்லைன் வழியாக பாடம் நடத்தினாலும், அது ஊட்டி கொடைக்கானலை போட்டோவில் பார்த்து, ரசித்த கதையைப்போலத்தான் இருக்கும். வகுப்பறைப் பாடம் என்பது, அந்தந்த இடங்களுக்கே சென்று பிரமிப்பது போன்றதாகும். ஆனால், கொரோனா, நமது குழந்தைச் செல்வங்களுக்கு இந்த ஆண்டில் இப்படியொரு பிரமாண்டத்தை கிடைக்காமல் தடுத்துவிட்டது என்பதே உண்மை. இதனால், ஒன்று முதல் 5ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் வாசிக்கும் திறன் அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது. எந்த இடத்தில் துணைக்கால் போட்டு வாசிப்பது, எந்த இடத்தில் இரட்டை, ஒற்றை சுழிகள் தோன்றினால், எப்படி வாசிப்பது என்பதை கிட்டத்தட்ட மறந்தே போனார்கள். இந்தக் குழந்தைகளின் சிந்தைகளில் நிறைந்திருப்பது கார்ட்டூன் சேனல்களின் திணிப்பு மட்டுமே.

அதேநேரத்தில், தொடர்ந்து ஒரு கல்வியாண்டு வீணானது மட்டுமின்றி, மாணவ, மாணவிகள் ஒருவிதான மன உளைச்சளில் சிக்கித் தவிக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட சதவீத மாணவ, மாணவிகள் எப்போதுதான் கொரோனா ஒழியும், எப்போதுதான் பள்ளிகள் திறப்பார்கள் என்று பெற்றோர்களை நச்சரிக்கத் தொடங்கிவிட்டனர். அதாவது, என்னதான் வீட்டில் இருந்தாலும், வாரத்தின் 5 நாட்கள் பள்ளிக்குச் சென்று, சனி, ஞாயிறுகளில் அனுபவித்த விடுமுறையின் மகிழ்ச்சியை, இந்தக் கொரோனா கெடுத்து, மாணவர்களின் பள்ளிப் பருவ மகிழ்ச்சியை சிதைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
தொடர் விடுமுறையும், கட்டுப்பாடுகளும் மாணவர்களுக்கு ஒருவிதமான மன அழுத்தத்தையும், கல்வியாண்டு பாடங்கள் இல்லாமல் சென்றதில், கற்றலில் தடுமாற்றத்தையும் விதைத்துவிட்டது என்கின்றனர் ஆசிரியர்கள். அப்படியானால், ஆசிரியர்கள் மீது குற்றமா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பாடம் தொடங்கிய சில நாட்களில் ஆங்காங்கே கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த செய்திகள் வெளியானது. இதனால், பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது. இது காலத்தின் குற்றமேயன்றி, மாணவர்களின் குற்றமல்ல.
அதேநேரத்தில், இந்த கொரோனா சிகிச்சை காலத்தில், தாங்கள் ஆன்லைன் வழியாக பாடம் நடத்தி, மாணவர்களின் கல்வித்திறன் குறையாமல் பாதுகாத்துக் கொண்டிருந்ததாக, பல பள்ளிகள் மார்தட்டிக் கொண்டன. ஆனால், இதில் சீக்ரெட் என்னவென்றால், ஆன்லைன் வழியாக பாடம் படித்த அத்தனை குழந்தைகளுக்கும், குறிப்பாக ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு பதில், அவர்களது பெற்றோர்களே 80  முதல் 90 சதவீதம் பாடங்களை படித்து, நோட்ஸ் எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தனர்.

‘‘வகுப்பில் பாடம் நடத்தினாலே, நாளு நாளைக்கு புரியாமல் நம்மளை படுத்துவாங்க. இப்போ, ஆன்லைன்ல நடத்துறாங்களே? எப்படித்தான் குழந்தைகளுக்கு பாடங்கள் புரியும்?’’ என்று அங்கலாய்த்த பெற்றோர்கள் லட்சக் கணக்கானோர். இன்னும் லட்சக் கணக்கான பெற்றோர், ‘‘சரி, ஒருவருஷம் வீணாச்சுனு நினைச்சுக்க வேண்டியதுதான்’’ என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். அதேநேரத்தில், இந்தக் கல்வியாண்டில் ஒன்று முதல் 10ம் வகுப்பு மாணவர்கள், ஆல் பாஸ் என்று அரசு அறிவித்துவிட்டது. அடுத்தக் கல்வியாண்டுக்கு மாணவர்கள், தங்களைத் தயார் படுத்திக் கொண்டிருக்கிறனர்.

அதாவது, ஒரு சங்கிலித் தொடரில், நடுவில் உள்ள பகுதியை துண்டித்துவிட்டு, அடுத்தடுத்த பகுதிகளை வெட்டி இணைப்பதுபோன்ற நிலைதான், அடுத்த ஆண்டின் பாடத்திட்டங்களுக்கு ஏற்பட்டுவிட்டது.
ஆனால், அடுத்தி ஆண்டிலாவாது தங்களக்கு முழுமையான பாடத்திட்டம் கிடைக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு குழந்தையின் ஏக்கமாக உள்ளது. காரணம், ஆன்லைன் கல்வி ஒரு ஏகலைவனை மட்டுமே உருவாக்கும். ஆனால், நேரடியான வகுப்பறைக் கல்வியோ ஒரு அர்ஜூனன், ஒரு கர்ணன், ஒரு அஸ்வத்தாமன் உட்பட எண்ணற்ற வீரர்களை உருவாக்கும். அதனால், வகுப்பறை கல்வியின் வாசல்தேடி, ஏக்கத்துடன் குழந்தைகளுடன் காத்திருக்கும் பெற்றோர்களில், உங்களைப் போல், நானும் ஒருவனே.

+3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here