வேல் யாத்திரை சென்ற பாஜக தலைவர் எல். முருகன் உட்பட 500கும் மேற்பட்ட பாஜகவினர் கைது.

முருகன்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து, முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் உள்ள நகரங்கள் வழியாக பா.ஜ.க. சார்பில் வெற்றிவேல் யாத்திரை அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.

இருப்பினும் தடையை மீறி யாத்திரை செல்ல உள்ளதாக தெரிவித்த தமிழக பாஜக தலைவர், யாத்திரைக்கு கடவுள் முருகன் அனுமதி வழங்கியதாகக் கூறினார். சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தில் பின்னணியில் இருப்பது மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.

பின்னர் சென்னை கோயம்பேட்டில் இருந்து பிரச்சார வேனில் எல்.முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் திருத்தணி புறப்பட்டுச் சென்றனர். கோயம்பேடு பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வழியில், திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில், பாஜகவினர் வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார், எல்.முருகன் வாகனம் மட்டும் செல்ல அனுமதித்தனர். சுமார் 300 போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு நிலவியது.

இதனிடையே, வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரி பாஜகவினர் சென்னை ரெட்டேரி சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பெரம்பூர், கோயம்பேடு, செங்குன்றம், மாதவரம் செல்லும் ஆகிய 4 வழிகளிலும் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திருத்தணிக்கு வேலுடன் சென்ற எல்.முருகன், அங்கு முருகன் கோவிலில் வழிபட்டு தமது யாத்திரையை தொடங்கினார். இந்த நிகழ்வில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

திருத்தணியில் அசம்பாவிதங்களை தவிர்க்க டிஐஜி சாமுண்டீஸ்வரி மற்றும் ஐ.ஜி.நாகராஜன் தலைமையில் திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

எல்.முருகன் வாகனம் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கிவிட்டதோ என குழப்பம் எழுந்தது. ஆனால் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அதேசமயம் திருத்தணிக்கு வழிபடச் செல்வதாகக் கூறியதால் எல்.முருகனுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். திருத்தணி மட்டுமல்ல அறுபடை வீடுகளுக்கும் வழிபாடு நடத்த தடையில்லை என்றும், ஆனால் வேல் யாத்திரை என்ற பெயரில் பேரணியாகவோ கூட்டமாகவோ செல்ல அனுமதிக்கப்படாது என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here