வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடையும், ஜனநாயகத்தின் மீதான கேள்விக்குறியும்!

18

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் மட்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹரியானா மாநிலத்தில் சிலரது ஆதரவு இந்த போராட்டத்திற்கு உள்ளது. ஆனால் நாட்டின் மற்ற மாநில விவசாயிகள், வேளாண் சட்டங்கள் தங்களுக்கு நன்மைத் தரக்கூடியது என்று வரவேற்றுள்ள நிலையில், ‘சட்டங்களுக்கு ஆதரவாக எந்த விவசாய அமைப்பும் மனு தாக்கல் செய்யவில்லையே?’ என்று ஆச்சரியமான கேள்வி ஒன்றை எழுப்பிய உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், இந்த சட்டங்களை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்த குழுவை ஏற்கமாட்டோம் என்று அதிரடியாக போராட்டக்குழுவினர் அறிவித்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஊதாசீனப்படுத்தியதோடு, போராட்டத்தையும் தொடர்கின்றனர். குழுவின் உறுப்பினர் ஒருவர் விலகிவிட்ட நிலையில், போராட்டக்குழுவினர் நடத்தும் டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க டில்லி காவல்துறையினர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டபோது, அதில் நீங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறி உச்சநீதிமன்றம் பின்வாங்கிவிட்டது.

ஜனநாயக முறையில் தேர்தலில் வெற்றிபெற்று பெரும்பான்மை பெற்றுள்ள ஒரு அரசாங்கம், பெரும்பான்மை ஆதரவோடு சட்டங்களை கொண்டு வரும்போது, ஒரு சிறு குழுவினர் போராட்டம் நடத்துகின்றனர் என்பதற்காக சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் தோற்றது பாராளுமன்றமும் நீதியும் அரசாங்கமும் விவசாயிகளும் தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.


 அப்படி என்றால் யார் தான் வென்றது?

மிரட்டலும் வன்முறையும் தான் வென்றது. எந்த ஒரு காரியத்தை சாதிக்கவும் டெல்லியில் திரண்டது போன்ற ஒரு கூட்டமே போதும் என்பது போல் ஆகிவிட்டது. ஊடகங்களின் கருத்து சுதந்திரம் உண்மையை மறைத்து பொய்யை பூசி மொழுகியதால் ஏற்பட்ட பொது சேதங்கள் யாவும் பொது மக்கள் பார்வைக்கு செல்லாமலே இருந்துவிட்டது. இதில் சுமார் பஞ்சாப்பின் 1500 மொபைல் டவர்களும் அடங்கும். ஒரு சாதாரண குடிமகனால் சகஜமாக வெளியில் செல்ல முடியாத நிலை. ஆனால் இதை எல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அரசாங்கத்தை ஒற்றை வார்த்தையால் குற்றம் சாட்டிய உச்ச நீதிமன்றத்தின் செயல் வேதனைக்குரியது.

தவறுகளை பயப்படாமல் செய்து சட்டத்தில் இருக்கும் ஓட்டை வழியாக வெளியில் வந்துவிடலாம் என்ற தவறான நம்பிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலமாக பொது சேதங்கள் கவனத்தில் கொள்ளப்படாது என்ற மாயையும் உருவாகிறது.

 சட்டங்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என்று நிரூபிக்கப்படும் வரையில் உச்சநீதிமன்றம் தலையிடாமல் இருந்திருப்பதே சரி என்கின்றனர் வல்லுனர்கள்.

இந்த டெல்லி போராட்டத்துக்கு பின்னால் இருப்பது யார்? இந்த வேளாண் சட்டத்தை ரத்து செய்யுங்கள் என 40 விவசாய சங்கங்கள் கூறின. இதில் 32 பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவை. சட்டத்தின் பலனை உணர்ந்த மீதமுள்ள 8 சங்கங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டனர்.

பணக்கார விவசாயிகள், ஏழை விவசாயிகளின் தோளில் துப்பாக்கியை தாங்கி தான் போராட்டம் நடத்துகின்றனர் என்பதை பலர் புரிந்துக்கொண்டு பின்வாங்கினர். இந்த சட்டங்கள் அவர்கள் விளைநிலத்தை  செழிக்க வைக்கும் என உணர்ந்தனர்.

இந்த சட்டத்தினால், சிறு விவசாயிகள் அரசாங்கத்திடம் உதவி கேட்டு வணிக வியாபாரத்தில் நல்லுறவை வளர்த்துக்கொள்ள முடியும். அடிப்படை பொருளுக்கு மதிப்பை நிர்ணயம் செய்வதற்கும் சில்லறை விற்பனையாளர்கள் – நிறுவனங்களிடம் பேரம் பேசும் உரிமையை வழங்குவதற்கும் அரசாங்கத்திடம் அவர்கள் உதவியை கேட்டு பெற முடியும்.

சிறு மற்றும் குறு விவசாயிகளான 86 சதவீத விவசாயிகள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க இதுவரை எந்த அரசாங்கமும் முன் வந்ததில்லை. முதன்முதலாக மத்திய அரசு , அந்த விவசாயிகளின் நலனுக்காக சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

உற்பத்தித்திறனை பெருக்குவதும், குத்தகை நிலங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதும் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் விவசாயிகளுக்கு கைக்கொடுப்பதுமே இதற்கு சரியான தீர்வாகும். எதிர்காலத்தில் அரசாங்கங்கள் பொது கொள்முதலை விரிவுப்படுத்துவதோடு கடன் தள்ளுபடி, மானியத்தை நிர்வகித்தலின் மூலமாக விவசாயிகளின் தேவையற்ற மன அழுத்தத்தை குறைத்து ஆதரவுக்கரம் நீட்ட முடியும் என நம்புகிறது.

ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக நகரவாசிகளும், வேளாண் விளைபொருட்களின் நுகர்வோரும் கிராம வாசிகள் உட்பட யாருமே அனுதாபம் காட்டப்போவதில்லை. கொரோனா தாக்குதலை கடந்து மீண்டிருக்கும் பொருளாதாரத்தை பற்றிய கவலை சுயமாக முடிவெடுக்கும் தலைவர்களுக்கு எப்போதும் இருப்பதில்லை.

ஜனநாயகத்தை காப்பாற்றுவதில் நீதித்துறைக்கும் முக்கிய பங்கு உள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here