ஸ்ரீ ராமனின் புதல்வன் குசனால் இராமஜென்ம ஸ்தானத்தில் முதன் முதலில் ஆலயம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் பௌத்தர்கள் எழுச்சிபெற்ற காலத்தில் ஹிந்து ஆலயங்கள் அநேகம் சிதைக்கப்பட்டன. அப்படி அழிக்கப்பட்ட ஆலயங்களுள் அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம ஆலயமும் ஒன்று.
கலியுகம் 3002ல் அவந்தி மன்னன் விக்ரமாதித்தன் இறையருளால் அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம ஸ்தானத்தில் பிரம்மாண்டமாக 600 ஏக்கரில் ஆலயம் அமைத்தான். மிகவும் புகழ்பெற்று சிறப்புடன் விளங்கி வந்தது ஆலயம் 16ம் நூற்றாண்டின் துவக்கத்தில் யோகி ஷியாமானந்தா பாபா என்ற மகானால் நிர்வகிக்கப்பட்டு
வந்தது. இவரது நிர்வாகத்தில் ராமர் ஆலயம் இருந்த காலத்தில் தான் 1528ல் பாபர் என்னும் முகலாய ஆக்கரமிப்பாளன் படையெடுப்பில் ஸ்ரீ ராமஜென்ம பூமியில் உள்ள பிரம்மாண்டமான ஆலயம் இடிக்கப் பட்டது. ஷியாமானந்த பாபாவிடம் சிஷ்யனாக இருந்த அப்பாஸ் மூஸா ஜலால் ஷா, ஆகியோரின் வஞ்சகத்தால் பாபரின் படைத்தளபதி மீர்பாகி என்பவன் துணைகொண்டு ராமஜென்ம பூமியில் கோவில் இடிக்கப்பட்டு அங்கே ஒரு மசூதி எழுப்பப்பட்டது.
மசூதியை ஏற்றுக்கொள்ளாத மக்களும் மன்னர்களும் தொடர்ந்து போராடினர் ஹிந்துக்களின் கை ஓங்கும்போது ஆலயம் எழுப்பப்படுவதும், இஸ்லாமிய ஆதிக்கம் மிகும்போது ஆலயம் இடிக்கப்பட்டு மசூதியெழுவதும் தொடர்கதையானது.
பாபர் காலம் தொட்டு ஔரங்கசீப் காலம் வரை இராமர் கோவிலை மீட்பதற்காக 74 முறை பெரும் போர்கள் நடைபெற்றது. இலட்சக்கணக்கான பக்தர்கள் பலியாகியுள்ளனர். ஆங்கிலேயர் காலத்தில் இரண்டு முறை மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. ராஜா கேமதாசிங், அயோத்தி பண்டிதர் கோவிந்தன் பாண்டே, மஹாராணி ஜெயராணி என்ற பெண் அரசி , தமிழகத்தை சேர்ந்த பலராமாச்சாரி, பாபா வைஷ்ணவதாஸ் (குரு கோவிந்தசிம்மன் உதவியோடு) ஆகியோர் ராமஜென்ம பூமியை மீட்க மிகப்பெரிய ஆயுதப்போராட்டம் நடத்தினர். ஹிந்துக்கள் எப்போதும் அடிமைத்தனத்தையும் ஆக்கிரமிப்பையும் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்பதையே நடந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.
ஆங்கிலேயர் காலத்தில் 1857ல் ஆலயத்தை மீண்டும் அமைக்க போராட்டம் நடந்தது. பைசாபாத்தை சேர்ந்த பாபா ராம்சந்த் தாஸ் , அமீரலி ஆகியோர் தலைமையில் ஒப்பந்தம் உருவாகி ராமஜென்ம பூமி ஹிந்துக்களுக்குரியது என்று ஹிந்துக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையை விரும்பாத ஆங்கிலேயர்கள், மேற்படி இருவரையும் அயோத்தியருகே குபேந்திரா என்ற இடத்தில் தூக்கிலிட்டு கொன்றனர். ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது.
ஆங்கிலேயர்களால் ஆலயம் மூடப்பட்டு வழிபாடு மறுக்கப்பட்டதால், 1863ல் ஆலயத்தை திறந்து வழிபாடு நடத்த பைசாபாத் துணை ஆணையரிடம் ராம பக்தர்கள் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் அதை ஆங்கிலேயர்கள் நிராகரித்தனர்.
ஆலயத்தில் வழிபாடு உரிமைகோரி முதன் முதலாக 1885ம் ஆண்டு ஜனவரி 19 அன்று பைசாபாத் நீதிமன்றத்தில் ஸ்வாமி ரகுவதர்மதாஸ் என்பவரால் வழக்கு தொடர்ந்தார்.
ஹிந்துக்கள் மீது கொண்ட காழ்புணர்ச்சி காரணமாக ஆங்கிலேயர்கள் , மனுவை தள்ளுபடிசெய்ததோடு அதை மசூதி என்றும் தெரிவித்தார்கள். வழிபாடு இல்லாமல் தொழுகையும் இல்லாமல் பூட்டியபடியே மசூதி என்று சொல்லப்பட்ட ராமர் கோவில் 1934 வரை இருந்தது.
பொறுமை இழந்த ஹிந்துக்கள் 1934ல் பாழடைந்த மசூதி போன்ற தோற்றமுடைய கோவிலை இடித்து தரைமட்டமாக்கினார் அதே இடத்தில் ஆலயம் எழுப்ப முயற்சிசெய்தபோது, அது சமயம் பைசாபாத் கலெக்டராக இருந்த ஆங்கிலேயன் ஜெ.பி. நிக்கல்சன் என்பவன் ஹிந்துக்களை, ராம பக்தர்களை அதிகார பலாத்காரத்தால் ஒடுக்கி, ஹிந்துக்களில் தண்டவரி வசூல் செய்து ஜென்ம பூமியில் 1937ல் மசூதி போன்ற கட்டிடத்தை கட்டினான். (இந்த கட்டிடம் தான் 1992ல் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது) ஹிந்துக்களிடம் தண்டம் வசூலித்து கட்டிய மசூதியாகையால் முஸ்லீம்கள் யாரும் தொழுகை செய்யவில்லை. ஆங்கிலேயே வற்புறுத்தலால் ஒரு சில நாட்கள் தொழுகை நடந்தாக கூறப்படுகிறது. பின்பு தொழுகை நடக்கவில்லை .
1947ல் நாடு சுதந்திரமடைந்து சோமநாதபுரம் ஆலயம் போல் ராமஜென்மபூமியிலும் ஆலயம் அமையும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள் அதே ஆண்டு ஜென்மஸ்தானத்திலுள்ள ஜெ.பி.நிக்கல்சன் கட்டிய கட்டிடத்தில் ராமபக்தர்கள் ஸ்ரீ ராமன் விக்ரஹத்தை வைத்து வழிபட ஆரம்பித்தனர் தொடர்ந்து அகண்ட நாம ஜெபம் நடைபெற்றது (இன்றுவரை அது தொடர்கிறது).
நேரு தலைமையிலான காங்கிரஸ் இடைக்கால அரசாங்கம் பைசாபாத் கலெக்டராக இருந்த கே.கே.நாயர் என்பவரிடம் , ராமவிக்ரஹத்தை ஆலயத்திலிருந்து அப்புறப்படுத்த உத்தரவிட்டது. ஆனால் கே.கே. நாயர் மறுத்துவிடவே, அப்போதைய உ.பி.மாநில முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியின் கோவிந்த வல்லப பந்த், ராமர் கோவிலை மூடி சீல் வைத்தார். ஹிந்துகளுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டது. ஹிந்துக்கள் பல்வேறு வகையில் அரசுக்கு கோரிக்கை வைத்தும் ஆலயம் வழிபாட்டுக்கு திறந்துவிடப் படவில்லை.
இதைத்தொடர்ந்து 5.1.1950 அன்று ஆலயத்தை ஹிந்துக்களுக்கு வழிபாட்டுக்கு திறந்துவிடக்கோரியும், ஹிந்துக்களிடம் ஒப்படைக்க கோரியும் மஹாந்த் ராமச்சந்திரதாஸ் வழக்கு தொடர்ந்தார். ஆனால் சுதந்திர பாரதத்திலும் ராமனுக்கு நீதி வழங்கப்படவில்லை. பாரதம் விடுதலையடைந்தும் குழந்தை ராமன் சிறையில் வாடினார்.
ஸ்ரீ ராமஜென்ம பூமியை மீட்க சட்ட போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது.
1984ல் வெகுண்டெழுந்த துறவியர்கள், ராமஜென்ம பூமி மீட்புக்குழு அமைத்தனர். விஸ்வ ஹிந்து பரிஷத் இதில் முக்கியபங்கு வகித்தது. திரு.அசோக் சிங்கால் அவர்கள் பெரும் முயற்சியால் துறவியர் சங்கம் அமைக்கப்பட்டது. ஆலயம் திறக்கப்படவேண்டும் என்ற தொடர் போராட்டமும், அகண்ட நாம ஜெபமும் நடைபெற்றது. மக்களின் எழுச்சியையும் ஹிந்துக்களின் கோபத்தையும் கண்ட ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு 4.2.1986 ல் ஆலயத்தை திறந்து வழிபட அனுமதியளித்தது. ஹிந்துக்கள் பல நூறு ஆண்டுகளாக நேரடியாகவும், சட்டரீதியாகவும் ராமர் ஜென்மபூமியை மீட்க போராடி வந்த நிலையில் 1961ல் தான் முஸ்லீம்கள் சார்பாக உரிமைகோரி வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தங்கள் தரப்பில் அவர்களால் யாதொரு ஆவணங்களையும் சமர்ப்பிக்க முடியவில்லை
1528 முதல் அந்த இடத்தில் மசூதி இருந்ததென்ற வாதத்தை தவிர அவர்களால் எந்த ஒரு ஆவணத்தையும் சமர்பிக்க இயலவில்லை. 1986ல் ஆலயம் திறக்கப்பட்டபின் பாபர் மஸ்ஜித் ஆக்சன் கமிட்டியும், சன்னி வக்போர்டும் ஜென்மபூமி தங்களுக்கே என்று வழக்கு தொடர்ந்தனர். இதன் பின்னணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்ததை நாடறியும்.
25.1.1986 அன்று ஹிந்துக்களுக்கு வழிபாட்டுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை உச்சநீதிமன்றம் அளித்தது.
மகன்த் ராமச்சந்திரதாஸ் அவர்களால் தொடரப்பட்ட டைட்டில் சூட்டில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. 1989ல் அயோத்தியை சார்ந்த வழக்கறிஞர் உமேஷ் சந்திர பாண்டே, ஆலய வழிபாட்டு உரிமைகளுக்கு விதிக்கப்பட்ட தடைகளை அகற்றக்கோரி வழக்கு தொடர்ந்தார்.
இதற்கிடையே ராமஜென்ம பூமி மீட்பு குழுவின் துறவியர்கள் அரசு அனுமதித்தாலும், அனுமதிக்காவிட்டாலும் ஸ்ரீராம ஜென்மபூமியில் ஆலய புணருத்தானம் நடைபெறும் என்று அறிவித்தனர்.
1989ல் நாடு முழுவதும் ராமசிலா பூஜை செய்யும் ஏற்பாடு செய்தனர். விஸ்வஹிந்து பரிஷத் முயற்சியால் நாடு முழுவதும் புனித செங்கல் வீடுகளில் பூஜிக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங்கின் மனைவி சீதாதேவியும், கேரள கம்யூனிஸ்ட் தலைவர் இ.எம்.எஸ் நம்பூதிரியின் சகோதர்களும் செங்கல்களை பூஜித்து அனுப்பியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
1989 செப்டம்பரில் சிலாபூஜை செய்யப்பட்டு ஜென்மபூமியின் அஸ்திவார பூமி பூஜை போடப்பட்டது. பீகாரை சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த ராமபக்தர் ராமேஸ்வர சௌகான் முதல் செங்கலை வைத்து அடிக்கல்நாட்டினார்.
ஹிந்துக்களின் எழுச்சியை கண்ட அரசும் அலகாபாத் நீதிமன்றமும் 1989ல் ‘ஸ்டேட்டஸ்கோ ‘ உத்தரவு பிறப்பித்தது. அதாவது புதிய கட்டுமானம் ஏதும் நடக்கக்கூடாது என்பதாகும்.
1990-ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி ‘கரசேவை‘ செய்ய ராமஜென்மபூமி மீட்பு குழு அறைகூவல் விட்டது. நாடு முழுக்கவிருந்து லட்சக்கணக்கான ராமபக்தர்கள் , கரசேவகர்கள் அயோத்தி நோக்கி அணி திரண்டனர். மத்திய காங்கிரஸ் ஆதரவு வி.பி.சிங் அரசும், உ.பி யில் முலாயம் சிங் ஆட்சியும் நடைபெற்றது. கரசேவகர்கள் தடுக்கப்பட்டனர் அடிக்கப்பட்டார்கள், சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதில் 500 கும் மேற்பட்ட கரசேவகர்கள் பலியாகினர். சரயு நதியே ரத்த ஆறு போல் ஓடியது. உத்திரபிரதேசத்தில் ரத்தவேட்டையாடிய முலாயம்சிங் அடுத்த தேர்தலில் படுதோல்வியடைந்தார். கல்யாண்சிங் தலைமையில் பாஜக ஆட்சியை பிடித்தது.
1950ல் தொடுக்கப்பட்ட வழக்கு 1992 வரை தீர்ப்பு சொல்லப்படவில்லை. சுவாமி ராமச்சந்திரதாஸ் அவரது வயது முதிர்வின் காரணமாக பொறுமையிழந்தார்.
அலகாபாத் உயர் நீதிமன்றம் 1992 டிசம்பர் 6 ல் வழக்கில் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது. ஆகவே துறவியர் ஒரு முடிவு செய்தனர் டிசம்பர் 6 அன்று கரசேவகர்கள் அயோத்தியில் கூடுவது. அமைதியாக பஜனை செய்வது என்று முடிவாகியதால் நாடுமுழுவதுமாக கரசேவகர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் அயோத்தியில் கூடினார்கள்.
வழக்கம் போல் அலஹாபாத் நீதிமன்றம் தீர்ப்பு தராமல் ஒத்திவைத்து கரசேவைக்கு அயோத்தியில் குவிந்த ராமபக்தர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. ஹிந்துக்கள் வஞ்சிக்கப்படுவதாக உணர்ந்த கரசேவகர்களில் ஒரு பகுதியினர் பொறுமையிழந்து வேகத்தில் பாழடைந்த மசூதி போல் தோற்றமளித்த ராமர் விக்ரஹம் இருந்து வழிபாடு நடந்து வந்த, ஜே.பி.நிக்கல்சனால் கட்டப்பட்ட கட்டிடத்தை கைகளாலேயே இடித்து தரைமட்டமாக்கினார் .
1992 டிசம்பர் 6 மதியம் 12.15 மணிக்கு ஆலயம் இடிக்கப்பட்டது. டிசம்பர் 7ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு அதே இடத்தில் ராமபிரான் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பேஜாவர் மட சுவாமி விஸ்வேஸ்வர தீர்த்தர் அவர்கள் பிரதிஷ்டை செய்துவைத்தார்கள்.
பி.வி நரசிம்மராவ் தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசு உ.பி. பாஜக அரசை கலைத்தது. வழக்கு முடிவுக்கு வந்தபாடில்லை 1992 ல் இல்லாத மசூதி இடிக்கப்பட்டதாக பொய்யான தகவலை பரப்பி அதன் பேரில் ஹிந்து தலைவர்கள், பாஜக தலைவர்கள் மீது காங்கிரஸ் அரசு வழக்கு தொடர்ந்தது. 2002ம் ஆண்டு இந்த வழக்கு மத்திய புலனாய்வு துறை விசாரித்தது.
2009 ல் வழக்கில் தீர்ப்புவருமென்று எதிர்பார்க்கப்பட்டது. வரவில்லை.
மீண்டும் ஹிந்து எழுச்சி பெற்றது. தொடர்போராட்டங்கள் வழக்குகள் நடைபெற்றன. காஞ்சி மடாதிபதி பூஜ்ஜிய ஜெயேந்திர ஸ்வாமிகள் முஸ்லீம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
2010 செப்டம்பர் மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றம் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ஒரு தீர்ப்பை அளித்தது. நீதியரசர்கள் எஸ்.வி கான், சுதிர் அகர்வால் , டி,வி ஷர்மா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை அளித்தது. அதன் படி பிரச்சனைக்குரிய 2.77 ஏக்கர் இடம் அதாவது தற்போது ஆலயம் அமைந்துள்ள இடம் வழக்கில் தொடபுடைய 3 அமைப்பினருக்கும் சொந்தம் என்று 2.77 ஏக்கர் இடத்தை மூன்று பங்காக வைத்து ஒருபங்கு ராம் லாலாவிற்கும்( ஹிந்து சம்பிரதாய முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட விகிரஹம் உயிருள்ளதாக கருதப்படும் லீகல் என்ட்ரி) இரண்டாவது பங்கு நிர்மோஹி அகாரா என்ற ஹிந்து அமைப்பிற்கும் மூன்றாவது பங்கு சன்னி வக்போர்டுக்கும் என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை ஹிந்து அமைப்புகள் ஏற்று கொள்ள வில்லை. ராம ஜென்ம பூமி முழுவதும் ஸ்ரீ ராமனுக்கே.. நீதிமான் ராமனுக்கு நீதிமன்றம் தேவை இல்லை. ராம ஜென்ம பூமியில் ராமனுக்கு அதே இடத்தில ஆலயம் அமைப்போம். இது ஹிந்துக்களின் தன்மானம் மற்றும் தேசத்தின் தன்மானம் என்ற முழக்கம் ஹிந்துக்களிடம் எழுந்தது.
ஆகவே, அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கம் போல் நீதி மன்ற விசாரணை இழுத்தடிக்கப்பட்டது. சுப்ரமணிய சுவாமி போன்றோர் மேல் முறையீட்டு மனு செய்தனர். 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 29 அன்று உச்ச நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்கள் புதிய அமரவு நீதிபதிகள் விசாரிக்க உத்தரவிட்டார். 2019 மார்ச் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் மத்யஸ்த குழு அமைக்கப்பட்டு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சியும் நடந்தது. இந்த குழுவில் நீதியரசர் இப்ராஹிம் ஹலிபுல்லா மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பான்டே ஆன்மீக யோகா குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் இருந்தனர். இந்த குழு பலமுறை கூடி விவாதித்தும் உடன்பாடு எட்டவில்லை.
ஆகவே 2019 ஆகஸ்ட் 06 ஆம் தேதி முதல் தினசரி விசாரணை நடைபெற்று, 2019 அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் விசாரணை முடிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. அரசியல் சாசன அமர்வில் மாண்புமிகு நீதி அரசர்கள் சரத் அரவிந்த் பாப்டே, கு.அப்துல் நாசீர், அசோக் பூஷன், உதய் லலித், ரமணா, மற்றும் பக்கீர் முஹமது இப்ராஹிம் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். மனுதாரர் தரப்பில் ஹிந்துத்துக்கள் தரப்பில் சொல்லின் செல்வன் ஆஞ்சநேயன் அருளோடு மூத்த வழக்கறிஞர் திரு. மோகன் பராசரன் அவர்கள் தனது 92 வயதிலும் இளமை வேகத்தோடும் குழு வழக்கறிஞர்களோடு வரலாற்று சிறப்பு மிக்க வாதம் நடத்தினார்கள். இந்த நீண்ட கால வழக்கில் இவரின் வாதம் ஒரு திருப்புமுனை என்றே சொல்லலாம். பல ஆவணங்கள், வரலாற்று சான்றுகள், தொல்லியல் துறை, ஆய்வு சான்றுகள் ஆகியவற்றுடன் திரு. மோகன் பராசரன் அவர்களின் வாத திறமையால் 9.10.2019 அன்று ஸ்ரீ ராம ஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தொல்லியல் அறிஞர் திரு.கே.கே. முகமதுவின் ஆய்வுகள் இந்த வாதத்திற்கு பெரும் உதவி புரிந்தது.
ஆம், அயோத்தி ஜென்ம பூமியில் இந்து ஆலயம் இருந்ததும், அது இடிக்க பட்டதும், மீண்டும் கட்டப் பட்டதும், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க பட்டது. ஆகவே அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு பிரச்னைக்குரிய 2.77 ஏக்கர் இடம் ராமனுக்கே சொந்தம் என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது.ஹிந்து சமுதாயத்தின் ஒருங்கிணைந்த சட்ட போராட்டம் இறுதியில் வென்றது. தற்போதைய பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு அயோத்தியில் ராமனுக்கு ஆலயம் அமைக்க ஒரு தனி அமைப்பு அமைக்க உதவியது.
ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற அமைப்பின் மூலமாக 2.77 ஏக்கர் இடத்திலும் அதைச்சுற்றியுள்ள ட்ரஸ்ட்டுக்கு சொந்தமான 70 ஏக்கர் நிலத்திலும் சேர்த்து பிரம்மாண்டமான ராமர் ஆலயம் அமைக்க 2020ம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி சுப போக சுப வேளையில் பாரதபிரதமர் மோடி அவர்களால் ஆலய நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ராமன் அருளால் இனிதே நடைபெற்றது.ஆலயம் நிர்மாணப் பணிகள் பொது மக்களின் பங்களிப்போடு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அயோத்தியில் அமையவுள்ள மகோன்னதமான ராமர் ஆலயத்தை நமது கண்களால் காணும் பாக்கியம் நமக்கு கிடைத்திருப்பது நாம் செய்த புண்ணியமே
‘முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதம்
ராம நாமம்‘
என்ற கவிச்சக்கரவர்த்தி கம்பனின் வாக்கு பொய்க்குமோ?