2021 சட்டசபைத்தேர்தல்..! மீண்டும் தோற்றது தேர்தல்கமிஷன்

ஜனநாயக நாட்டின் நிர்வாக நடைமுறையில், மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுவது தேர்தல்கள் மட்டுமே. அது லோக்சபா அல்லது சட்டசபை அல்லது உள்ளாட்சித் தேர்தல்கள் எதுவாக இருந்தாலும், தேர்தல்களின் வெற்றியே, ஜனநாயகத்தின் உச்சம் என்று அறியப்படுகிறது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், எந்த ஒரு தேர்தல் என்றாலும், பரபரப்பும், திரில்லிங் அனுபவத்துக்கும் பஞ்சம் இருக்காது என்பதே உண்மை. தேசத்தின் முதல் தேர்தல் தொடங்கி, ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்த, தமிழகத்தின் சட்டசபைத் தேர்தல் வரை, வாக்காளர்களுக்கு மட்டுமல்ல, அரசியல் கட்சிகளுக்கும் ஒரு பெரிய திரில்லிங் அனுபவமாகத்தான் இருக்கும்.

தேர்தல் ஜனநாயகத்தில், நீதி, நியாயம், தர்மம் என்பதெல்லாம் 2009ம் ஆண்டுடன் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. அதற்கு முந்தைய தேர்தல்கள் வரை ஓட்டுக்கு 10 அல்லது 20 ரூபாய், அதிகபட்சமாக 50 ரூபாய் என்று வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது, நிதர்சனமான உண்மை.

ஆனால், 2009ம் ஆண்டு நடந்த திருமங்கலம் இடைத் தேர்தலில், திமுகவின் லதா அதியமானை வெற்றிபெறச் செய்வதற்காக, ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரை செலவிடப்பட்டது. இதுதான், திருமங்கலம் பார்முலா என்று தேசிய அளவில், தமிழகத்துக்கு அசிங்கமான அடையாளத்தை ஏற்படுத்தியது.
தொட்டு தொடர்ந்த தரித்திரம்

திருமங்கலத்தைத் தொடர்ந்து, 2010ல் பென்னாகரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், திமுக தனித்துக் களம் கண்டது. வேட்பாளர் இன்பசேகரன் 77 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்றார். இதற்காக, அப்போதைய முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவின் கேபினட் என்று ஒட்டு மொத்த பட்டாளமும் பென்னாகரத்தில் தங்கியது. திருமங்கலம் பார்முலா ஏற்படுத்திய தாக்கத்தை, பென்னாகரவாசிகள் பெரிய அளவி்ல் எதிர்பார்த்தனர். இதனால், அங்கேயும் பணம் விளையாடியது. பணம் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்கும் வகையில், முதல்வர் கருணாநிதியின் வேனையே பறக்கும் படையினர் சோதனையிட்டனர். ஆனால், ஆம்புலன்சில் பணம் கொண்டு செல்லப்பட்டு, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தனிக்கதை. இதுதான், தமிழக அரசியலில், தேர்தல் நடைமுறையில் புற்றுநோயின் தொடக்கம் எனலாம்.

2011ல் திணறிய திமுக, தடுமாறிய அதிமுக…

இதன் பின்னர், 2011 சட்டசபைத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்று திமுக பெரும் முயற்சியுடன் களம் இறங்கியது. ஆனால், 2006 முதல் திமுகவினர் நடத்திய நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, சொத்து அபகரிப்பு, மின்வெட்டு உட்பட பல பிரச்னைகளும் திமுகவுக்கு, தமிழக வாக்காளர்கள் இடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த அதிருப்தியை சரிகட்டுவதற்கு, வாக்குகளுக்கான பண மதிப்பை உயர்த்த வேண்டிய நெருக்கடிக்கு திமுக ஆளானது. ஆனால், இடைத்தேர்தலில் அள்ளிக் கொட்டியதுபோல், ஓட்டுக்கு ஆயிரம், 2 ஆயிரம் என்று கொடுக்க முடியவில்லை. மினிமம் கேரண்டியாக ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் வழங்கியது. ஆனால், “எங்களால் அவ்வளவு தர முடியாதுங்க. 250 ரூபாய் தர்றோம்” என்று டீல் பேசிய அதிமுக, ஓட்டுகளை அள்ளி, அபார வெற்றிபெற்றது.

2016ல் என்ன நிலைமை?

தேர்தல் என்றாலே துட்டுதான் என்றாகிவிட்ட நிலையில், 2016 தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க அதிமுகவும், ஆட்சியைப் பிடிக்கும் ஆசையில் திமுகவும் பணத்தை அள்ளியிறைத்தன. இதில், தங்களுக்கு உறுதியாக ஓட்டுப்போடும் வாக்காளர்களை அடையாளம் கண்டு, 2 கட்சிகளும் பணமழை பொழிந்தன. ஆனால், அதிர்ஷ்டம் என்னவோ, அதிமுக பக்கம் நின்றதால், திமுகவின் செலவுகள் வீணாகிவிட்டது. ஆனால், பெரும் பண மூட்டையுடன் காத்திருந்த திமுக, 2019 லோக்சபா தேர்தலில் கணிசமான அளவு செலவு செய்து, 38 எம்பிக்களை அறுவடை செய்தது. இந்தத் தேர்தலில், திமுகவின் கணக்கு வேறுமாதிரியாக இருந்தது, யாரும் கவனிக்காத ஒரு விஷயம்.

2019ல் திமுக ஏமாந்த கணக்கு இதுதான்

மத்தியில் 2014ல் ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு பல அதிரடியான நடவடிக்கைகளை மேற் கொண்டது. குறிப்பாக, 2016ல் பண மதிப்பிழப்பு, 2017 ஜூலையில் ஜிஎஸ்டி என்று அதிரடியான திட்டங்களைக் கொண்டு வந்தது. அத்துடன், ஊழல் பணத்தை மீட்டு, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாக மோடி கூறியதாக கூறி, தமிழகத்தில் உள்ள கட்சிகள் மோடி வெறுப்பை கட்டமைத்தனர்.

“வெளிநாடுகளில், நமது ஊழல்வாதிகள் பதுக்கிய பணத்தை மீட்டால், ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும், தலா 15 லட்சம் ரூபாய் செலுத்தலாம். அந்தளவுக்கு பணத்தை பதுக்கியுள்ளனர். அவற்றை படிப்படியாக மீட்க வேண்டும்” என்ற மோடியின் பேச்சைத் திரித்து, 15 லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கில் மோடி செலுத்துவதாக கூறி, ஏமாற்றிவிட்டார் என்று பிரச்சாரம் செய்தனர்.

விளைச்சல், அறுவடை எல்லாம் வீணாச்சு..

தமிழர்களுக்கு இந்தியும் தெரியாது, அதை கற்றுக் கொள்ளவும் முடியாத சூழலில், திமுக, காங்., கூட்டணியின் பிரச்சாரம் அப்படியே எடுபட்டது. முன்னதாக, தேசிய அளவில் பாஜவுக்கு எதிராக ஒரு மாபெரும் கூட்டணியை திமுக முன்னெடுத்தது. திரிணாமுல், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என்று இருக்கும் அத்தனை கட்சிகளையும் திரட்டியது. இந்தத் தேர்தலில், எதிர்கட்சிகள் வெற்றிபெற்றால், அதிகப்படியான எம்பிகளை வைத்துள்ள திமுக, மத்திய அரசில் மிகப்பெரிய களமாடும் எண்ணத்துடன் இருந்தது. ஆனால், 2019 தேர்தலில் பாஜ பெற்ற மிகப்பெரிய வெற்றிக்கு முன்னாள், திமுகவின் திட்டம் தவிடுபொடியானது. எம்பிக்களை அமோகமாக அறுவடை செய்தும், அத்தனையும் சோடையானது.

2021 சவால்?

இந்நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் அமைந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்று கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார். அதேநேரத்தில், முன்னர் எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில், இந்தத் தேர்தலில் மத்திய அரசின் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றை களம் இறக்கப்போவதாக தெரிவித்தார். காரணம், நாட்டிலேயே மிகவும் மோசமான தேர்தல் ஜனநாயகத்தை கொண்டுள்ள மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் முதலிடத்தில் இருந்ததுதான்.

கடந்த கால பணப்பட்டுவாடாவை நினைவில் கொண்ட தேர்தல் கமிஷன், இந்தத் தேர்தலில் எப்படியாவது, பணநாயகற்ற ஜனநாயகத்தை உருவாக்கி, நிலை நிறுத்த வேண்டும் என்று முனைப்புடன் இருந்தது. ‘கள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா?’ என்ற போட்டிதான். ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன்னர், தமிழகத்தின் அரசியல் கட்சிகள் சுதாரித்துவிட்டது தனிக்கதை.

பட்டுவாடா ஜரூர்…
தமிழகத்தின் நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் ஆளும்கட்சி, எதிர்கட்சி தொகுதிகளில் ஒரு ஓட்டுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் வீதம் வினியோகம் செய்யப்பட்டது. வெற்றி உறுதி என்று வேட்பாளர்கள் முடிவு செய்த இடங்களில் மட்டும் ஓட்டுக்கு 500 ரூபாய் வீதம் வினியோகம் செய்யப்பட்டது. போடி, கரூர், திருச்செந்துார், சென்னை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் எல்லாம் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. இதெல்லாம், தேர்தல் கமிஷனுக்கு தெரி்யாமல் நடந்தவிஷயமா?

கூட்டணி வைத்த கட்சிகள்…

அரசியல், தேர்தல் களத்தில் எதிர்எதிர் அணிகளில் நின்ற அரசியல் கட்சி்யினர், இந்தப் பணப் பட்டுவாடா விஷயத்தில் ஓரணியில் .நின்றனர். என் எல்லைக்குள் நீ வராதே, உன் எல்லைக்குள் நான் வரமாட்டேன் என்று பரஸ்பர டீலிங் போட்டுக் கொண்டு, போலீசார் மற்றும் பறக்கும் படையினருக்கு தண்ணி காண்பித்துக் கொண்டு, பட்டுவாடாவை பக்காவாக நடத்திக் கொண்டிருந்தனர். இதனால், சென்னை திருவள்ளூர் தொடங்கி, கன்னியாகுமரி மாவட்டம் வரையில் உள்ள 234 தொகுதிகளிலும், தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு தெரிந்தும், தெரியாமலும் பணப்பட்டுவாடாவை அரசியல் கட்சியினர் முடித்திருந்தனர்.

அள்ளியது பறக்கும்படை

ஆனாலும், ஒவ்வொரு தொகுதியிலும் கண்கொத்தி பாம்பாக காத்திருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும், வருமான வரித்துறையினரும் தங்களுக்குக் கிடைத்தத் தகவல் அடிப்படையில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மட்டும் 460 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கம், தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. ஆனால், அள்ளியத் தொகை என்பது, அரசியல் வாதிகள் ஓட்டுக்கு அள்ளிய வீசிய தொகையில், கிள்ளி எறிந்த தொகையில், 10ல் ஒருபங்கு இருக்குமா? என்பது சந்தேகம்தான்.

தோற்றுப்போன வாக்காளர்கள்…

ஜனநாயகத்தின் வெற்றி என்பது, நேர்மையான தேர்தல் நடைமுறையில்தான் உள்ளது. நேர்மையான தேர்தல் என்பது, தன் ஜனநாயக ஓட்டுரிமையை காசுக்கு விற்பனை செய்யாத வாக்காளர்கள் கையில்தான் உள்ளது. ஆனால், நமக்குக் கிடைத்த தகவல்படி, இந்தத் தேர்தலில் 70 சதவீத வாக்காளர்களுக்கு மிகப் பெரிய அளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு, ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு, பண நாயகம் முடிசூட்டிக் கொண்டுள்ளது. இவ்வளவு பணத்தை இறைத்து ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியும், மக்களுக்கு நன்மை செய்யும் என்று நம்பினால், நீங்களும் நானும் இந்த ஜனநாயகத்தின் கோமாளிகளே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here