“அரசு வியாபாரம் செய்தால் மக்கள் பிச்சைக்காரர்களாக இருப்பார்கள்-மகாத்மா காந்தி”. நாடு சுதந்திரம் பெற்றப்பின்னர், பிரதமராக தேர்வு செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு, முதலாளித்துவ கொள்கையையும், கம்யூனிச கொள்கையையும் சேர்த்து பிசைத்து ஒரு மாதிரியான பொருளாதார முறையை அமல்படுத்தினார். பெரும் வளங்களையும், உழைப்பையும் கொண்ட இந்தியா பல ஆண்டுகளுக்கு முன்பே பொருளாதார வல்லரசாகியிருக்க வேண்டும். ஆனால், நேருவின் இந்த அவியல் பொருளாதாரத்தால் நேற்று வளரும் நாடு… இன்று வளரும் நாடு… நாளை வளரும் நாடு என்ற நிலையிலேயே இந்தியா நீடித்து வந்தது.
தனியாரால் நன்கு முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லப்பட்ட பல தொழில் நிறுவனங்களை மத்திய அரசுகளும், மாநில அரசுகளும் போட்டிபோட்டுக் கொண்டு கையகப்படுத்தின. தமிழகத்தில் பல தனியார்கள் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்த பேருந்து போக்குவரத்தை கருணாநிதி கையகப்படுத்தினார். அதேபோல வெற்றிகரமாக விமான சர்வீஸ் நடத்திக் கொண்டிருந்த டாடாவிடமிருந்து ஏர்இந்தியாவை நேரு கையகப்படுத்தினார். தனியாரிடமிருந்து கையகப்படுத்திய போது லாபத்தில் இயங்கிய நிறுவனங்கள், அரசுடைமையாக்கப்பட்டபோது சரிவை நோக்கி பயணிக்கத் தொடங்கின.
எல்லாவற்றிலும் ஊழல், லஞ்சம், கம்யூனிச தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப்போராட்டங்கள் போன்றவை இந்த தொழில்களை நஷ்டத்தில் ஆழ்த்தின. தனியார் வசம் சிறப்பாக இயங்கிய பேருந்துகள், தற்போது தமிழக அரசிடம் நஷ்டத்தில் இயங்குவதை பார்க்க முடியும்.
இதைப்போலவே, லாபத்தில் இயங்கிய ஏர்இந்தியா நிறுவனம், நஷ்டத்தில் இயங்கத்தொடங்கியது. நூறு கோடியில் துவங்கிய இந்த நஷ்டம் தற்போது வளர்ந்து 75,000 கோடி ரூபாயை தாண்டி 1,00,000 கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய அரசு ஏர்இந்தியாவை காப்பாற்ற இதுவரை 1,10,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளது. இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் இந்த தொகை பல கோடி மக்களுக்கு அடிப்படை வசதிகளையும், மருத்துவ வசதிகளையும் செய்து கொடுக்ககூடியது.
ஆனால் ஏர்இந்தியா ஊழியர்களோ, தங்கள் நலனை மட்டுமே பெரிதாக கருதினார்களே தவிர, நிறுவனத்தை லாபகரமாக நடத்திட உழைக்கத்தயாராக இல்லை. இது அந்நிறுவனத்தின் உயரதிகாரி முதல் சாதாரண ஊழியர்கள் வரை பொருந்தும்.
தற்போது இந்திய அரசு ஒரு துணிச்சலான முடிவெடுத்துள்ளது. ஏர்இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்குவது என்று திட்டமிட்டது. அதற்கான ஏலத்தில் அரசு விதித்த அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றி டாடா நிறுவனம் மீண்டும் ஏர் இந்தியாவை பெற்றுள்ளது. இப்போதுள்ள நஷ்டத்தை எப்படி சரி செய்வார்கள், ஏற்கனவே உள்ள ஊழியர்களிடம் அவர்கள் உழைப்பை எதிர்பார்க்க முடியுமா என்ற பல கேள்விகள் எழுந்தாலும், தொழிலில் நியாயத்தையும், தர்மத்தையும் கடைப்பிடிக்கும் நிறுவனம் ஏர்இந்தியாவை வளர்ச்சி பாதையில் மேல் நோக்கி பறக்க வைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அத்தோடு ஏர்இந்தியாவின் பழைய ஊழியர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்பிவிடக்கூடாது உள்ளிட்ட தொழிலாளர் நலனுக்கும் இந்த ஒப்பந்தத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கம்போல இதற்கும் சில அரசியல்கள் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஒரு சில தொழிலாளர் நலன் என்ற பெயரில் நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வரிப்பணத்தையும் அதில் கொட்ட வேண்டுமா என்ற நியாயமான கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை.
ஏர்இந்தியா மட்டுமல்ல, பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை விழுங்கிக் கொண்டு, நஷ்டத்தில் இயங்கும் பல நிறுவனங்கள் விவகாரத்திலும் இதேபோன்ற அணுகுமுறையை அரசு கடைப்பிடிக்க வேண்டும்.
தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை கொடுக்கும் நிலையில், பழுதடைந்த தொலைபேசியை சரி செய்வதற்காக ஒரு போன் செய்தால் அதை கூட எடுக்க மறுக்கும் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களும் இதில் அடக்கம். அரசு நிர்வாகத்தை மட்டும் பார்க்க வேண்டும். அரசு வியாபாரத்தில் ஈடுபட்டால் மக்கள் பிச்சை எடுப்பார்கள் என்ற மகாத்மா காந்தியின் வரியை நினைவில் கொள்ள வேண்டும்.