அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் அம்பலப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி!

தமிழகத்தில் மரணத்திற்கு பின்னர் கூட நீதி கிடைக்க வேண்டும் என்றால், இறந்தவர் என்ன ஜாதி, என்ன மதம், இறப்பிற்கு காரணமான குற்றவாளிகள் என்ன மதம், ஜாதி என்பதை பொறுத்தே அமையும். ஓட்டு வங்கி இல்லாத ஜாதி, மதத்தவர்கள் இறந்துவிட்டால், கேட்க நாதி இருக்காது. யாராவது நியாயம் கேட்க வந்தால், அதற்கு ஆயிரத்தெட்டு காரணம் கூறி, அவர்களை கோமாளிகளாக்க முயற்சிக்கும் கூட்டம் இங்கு அதிகம்.

அரியலூரைச் சேர்ந்த மாணவி தஞ்சையில் உள்ள கிருத்துவப்பள்ளியில் படித்த வந்தார். நன்றாக படிக்கக்கூடிய அந்த மாணவி குடும்பத்துடன் கிருஸ்தவ மதத்திற்கு மாறினால், பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்று ஆசைக்காட்டப்படுகிறது. மாணவியும், அவரது குடும்பத்தினரும் மறுத்ததால் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கொடுமைகளை அந்த மாணவி அனுபவித்து வருகிறார். பெரியவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை அந்த சின்னஞ்சிறுமி செய்ய வைக்கப்படுகிறாள். பண்டிகை காலங்களில் வீட்டிற்கு செல்லக்கூடிய அனுமதியில்லை. இறுதியில் மனம் வெதும்பிய அந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறார்.

இறப்பிற்கு முன்பாக அவர் பேசிய போது எடுக்கப்பட்ட வீடியோவில் தான் கொடுமைப்படுத்தப்பட்டதையும், தன்னை மதம்மாற வேண்டும் என்று வற்புறுத்தியதையும் அந்த மாணவி தெளிவாக கூறுகிறார். வேறு எந்த வழக்குகளிலும் மரணத்திற்குமுன்பு கூறிய ஒரு சிறு வார்த்தையை வைத்தே கடுமையாக நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, இந்த மாணவி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜகவும், இந்து அமைப்புகளும் பிரச்சனையை கையில் எடுத்தப்பின்னரே வார்டன் கைது செய்யப்பட்டார். அதற்கு பின்னர் நடந்தது தான் கொடுமை…

விசாரணையை துவங்குவதற்கு முன்பே, முடிவை எழுதிவிட்டு காவல்துறை விசாரணையை துவங்கியது. இதை தஞ்சை எஸ்பியின் பேட்டி உறுதி செய்தது. கிளிப்பிள்ளைகள் போல அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை மதமாற்ற முயற்சி நடக்கவில்லை என்று விசாரணைக்கு முன்பே தீர்ப்பு எழுதினர். தேசிய குழந்தைகள் நலக்கமிஷனின் விசாரணைக்கு கூட தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்று கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது.

மதமாற்ற முயற்சியோ, அல்லது வேலை வாங்கிய கொடுமையோ, அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டு இறந்துபோனது <உண்மை என்ற நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் கப்சிப் என்று இருந்தன. பாஜக மட்டுமே களத்தில் இறங்கி போராடியது.

திடீரென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் களத்தில் குதித்துள்ளார். இதுவரை ஏழை, எளிய மக்களுக்காக நீதி கேட்டு போராடும் கட்சி என்று வேஷம் போட்டுக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட்டுகளின் உண்மை முகம் வெளியானது.

ஆம்… பாலகிருஷ்ணன் களத்தில் குதித்தது மாணவியின் சாவுக்கு காரணமான பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக. முதலில் அறிக்கை வெளியிட்ட பாலகிருஷ்ணன், பின்னர் நேரடியாகவே சம்மந்தப்பட்ட பள்ளிக்கு சென்று ஆசிரியைகளை பார்த்து ஆறுதல்(!) கூறினார். பின்னர், மாணவி மரண விவகாரத்தில் பாஜக அரசியல் ஆதாயம் தேடுவதாக புகார் பட்டியல் வாசித்தார்.

கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் இரட்டை நிலை எடுப்பவர்கள் என்பது ஊரறிந்த ரகசியம் தான். பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரு சம்பவம் நடந்தால் அதை ஊதி பெரிதாக்கும் அவர்கள், தங்கள் கட்சி ஆளும் கேரள மாநிலத்தில் கொடூரமான சம்பவம் நடந்தால், அதில் மார்க்சிஸ்ட் கட்சியினரே ஈடுபட்டிருந்தாலும் கப்சிப் என்று ஆகிவிடுவார்கள்.

பாலக்காட்டில் தாழ்த்தப்பட்ட சகோதரிகள் இருவர் கம்யூனிச கயவர்கள் இருவரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இதற்கு எதிராக தமிழக மார்க்சிஸ்ட் கட்சியினரோ, அவர்களது மாதர் சங்கங்கங்களோ வாய்திறந்தது இல்லை. மலைவாழ் ஏழை ஒருவர் பசிக்கு சாப்பிட்டபோது, அவரை திருடர் என்று கூறி கட்டி வைத்து அடித்துக் கொன்ற கயவர்கள் குறித்து இந்த மனிதநேய காவலர்கள் வாய் திறந்தது இல்லை.

இப்போது ஒரு மாணவியின் மரணத்திற்கு காரணமான பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள மார்க்சிஸ்ட் கட்சியினர், இப்படி கொதிக்க காரணம் என்ன என்றும் தெளிவுப்படுத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.விடம் 10 கோடி ரூபாய் நிதி வாங்கிய நன்றிக்கடன் இன்றும் தீரவில்லையா என்பதை பாலகிருஷ்ணன் தான் கூற வேண்டும்.

பாஜக ஒரு பிரச்சனையை கையில் எடுத்தால் அதில் நியாயம் இருக்காது என்று கட்டமைக்கும் உங்கள் சதி இனி எடுபடாது. நியாயத்திற்காக போராடுகிறோம் என்ற நாடகம் மக்கள் மத்தியில் அம்பலமாகிக் கொண்டுள்ளதை மார்க்சிஸ்ட்டுகள் உணர்ந்து கொள்ளாவிட்டால் இன்று கிடைக்கும் ஒன்றிரண்டு ஓட்டுக்களும் அம்போவாகிவிடும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here