ஆயுதபூஜை நம் பண்டிகையா?

இந்து சமுதாயத்திலிருந்து தமிழர்களை பிரித்துவிட வேண்டும் என்று கிருஸ்தவர்கள் இந்த நாட்டை ஆக்கிரமித்த பின்னர் (ஆங்கிலேயர்கள், பிரான்ஸ், டச்சு, போர்த்துகீசிரியர்கள்), ஆரிய, திராவிட கட்டுக்கதை புனையப்பட்டது. சமஸ்கிருதம், பார்ப்பன ஆதிக்கம் என்று இஷ்டத்திற்கு கிருஸ்தவர்கள் புளுகியதை நம்புவதற்கும், அதை வைத்தே ஆட்சியை பிடிப்பதற்கும் தமிழகத்தில் ஒரு கூட்டமே தயாரானது. நாத்திகம் பேசி தமிழர்களின் மத உணர்வை பலவீனப்படுத்துவது, மதஉணர்வற்று, வெறும் கடவுள் நம்பிக்கை மட்டும் உள்ளவர்களை மதமாற்றம் செய்வது இது தான் சதித்திட்டம். இந்த சதிக்கு ஈ.வே.ரா முதல் இன்றைய திருமாவளவன், சீமான், இடது சாரிகள் வரை உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

ப.இந்துவன்

ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தினர் என்ன சொன்னாலும், எதை எழுதினாலும் மக்கள் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவது உண்டு. அதையே சாதகமாக்கி, பொய் வரலாற்றையே தமிழர் வரலாறு என்று நம்ப வைத்து வந்தனர். ஆனால் தற்போது நிலமை மாறிவிட்டது. திராவிட, கம்யூனிசவாதிகளின் பொய்களை ஆதாரத்தோடு பல இளைஞர்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

தமிழ், தமிழர் பண்பாடு, இறை நம்பிக்கை இவை அனைத்தும் இந்து சமயத்திற்கு சொந்தமானது. சமய இலக்கியங்கள் இல்லையென்றால் தமிழ் இல்லை என்பதையெல்லாம் ஆதாரத்தோடு எடுத்து வைக்கின்றனர்.

தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி என்று இந்துக்களின் எந்த பண்டிகைகள் வந்தாலும், அதற்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை என்று திராவிட பொய் கட்டவிழ்த்துவிடப்படும். ஆயுதபூஜை, விஜயதசமி விழாக்களுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை என்றும் கிளம்பிவிடுவது வழக்கம். ஆனால் ஆயுதபூஜை, விஜயதசமி எப்படி தமிழர்களுக்கு சொந்தமானது என்பதை சங்க இலக்கியங்களில் இருந்து ஆதாரங்களுடன் நிரூபித்து கட்டுரை எழுதியிருக்கிறார் ப.இந்துவன் என்ற இளைஞர். அவரது கட்டுரையின் சில பகுதிகள்:

தமிழர்கள் ஆயுதபூஜையை பன்னெடுங்காலமாகவே செய்து வந்திருக்கின்றனர். இவை பல தொன்மையான இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘கொற்றவர் வளவர் தங்கள் குலப்புகழ்ச் சோழ னார்தம் பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்டவர்த் தனமாம் பண்பு பெற்றவெங் களிறு கோலம் பெருகுமா நவமி முன்னாள்-சேக்கிழார்.

நவமிக்கு முந்தய தினத்தில் போரில் ஈடுபடும் யானைக்கு யானைப்பாகன் அலங்காரம் செய்து மரியாதை செய்ததை குறிப்பிடுகிறார். அதன் தொடர்ச்சி தான் நாம் இன்று பயன்படுத்தும் வாகனங்களை சுத்தப்படுத்தி அலங்காரம் செய்து மரியாதை செய்யும் ஆயுத பூஜை.

சிலப்பதிகாரத்தில்,

‘கலையமர் செல்வி கடனுணின் அல்லது சிலையமர்

வென்றி கொடுப்போ ளல்லள் மட்டுண் வாழ்க்கை வேண்டுதி

ராயின் கட்டுண் மாக்கள் கடந்தரும் எனவாங்கு

இட்டுத் தலையெண்ணும் எயின ரல்லது’

கொற்றவைக்குச் செய்யவேண்டிய வழிபாட்டு முறைகளை செய்யவில்லையெனில் அவள் உங்கள் வில்லுக்கு வெற்றியைத்தரமாட்டள் என்று கூறும் இளங்கோவடிகள் போருக்கு எடுத்துச்செல்லும் ஆயுதங்களை கொற்றவை முன்பு வைத்து வழிபட்டு எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்.

சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில்,

‘தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின் தார் புரிந்து அன்ன வாள்உடைவிழவின் போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப
என்று வாளுக்கு விழா எடுத்த செய்தியை கபிலர் நேரடியாக குறிப்பிடுகிறார்.

இதுமட்டுமல்ல தமிழ் இலக்கண நூல்களில் ஒன்றான புறப்பொருள் வெண்பாமாலையின் வாள் மங்கலப்பாடலில்,

‘நால் திசையும் புகழ் பெருக
வீற்று இருந்தான் குடை புகழ்ந்தன்று. கயக்கு அருங்கடல் தானை
வயக் களிற்றான் வாள் புகழ்ந்தன்று’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்ல, தமிழின் மிகப்பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில்,

‘பிறந்த நாள்வயின் பெருமங் கலமும்
சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமும்
நடைமிகுத்து ஏத்திய குடைநிழல் மரபும் மாணார்ச்சுட்டியவாள்

மங்சுகலமும் மன்எயில் அழித்த மண்ணுமங் கலமும்

பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் பெற்ற பின்னரும்

பெருவளன் ஏத்தி நடைவயின் தோன்றிய இருவகை விடையும்’

என்ற வரிகளில் மாணார் என்ற சொல்லுக்கு போர் பயிற்சி பெறும் மாணவர், வெற்றி பெற்றவர் என்றும் அதில் குறிப்பாக நச்சினார்க்கினியர் பகைவரை வெற்றி கொண்ட வாளை வாழ்த்தி செய்யப்படும் சிறப்பு செயல்முறைகளை அதாவது ஆயுத பூஜையையே குறிப்பிடுகிறார்.

மகாபாரத போருக்கு முன்பு பாண்டவர்கள் தரப்பு நியாயத்தைக் கூறவும், பாண்டவர்களின் படை வலிமையைப் பற்றி எடுத்துக்கூறவும், இப்போர் நடைபெற்றால் ஏற்படும் இழப்புகளைப் பற்றி முன்மொழிந்தாலாவது இப்போரை கைவிடுவார்களோ என்ற அமைதித்தூதின் அடிப்படையில் கிருஷ்ணன் அஸ்தினாபுரம் நோக்கிச் செல்கிறான். இதை காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுகையில்,

‘நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்தா ரணமுழங்கப்

பஞ்சவர்க்கு தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே’

அதாவது நான்கு திசைகளிலும் உள்ளோர் யாவரும் போற்றுமளவிற்கு பின்னே தொடர்ந்து வந்து வேதங்கள் முழங்கவும் பாண்டவர்கள் சார்பாக அஸ்தினாபுர அரண்மனைக்கு தூதாக நடந்து சென்றவனாகிய எம்பெருமான் கிருஷ்ணனை ஏத்தாத நா என்ன நாவே, நாராயணா என்று கூறாத நாக்கு இருந்தும் அதற்கு பயன் என்ன என்று இளங்கோவடிகள் கேட்கிறார்…!

அதாவது நம் முன்னோர்கள் இந்த பாரத தேசத்தில் தோன்றிய இரு இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தை பின்பற்றி அதன் நடைமுறைகளை தனது வாழ்வியலின் ஓர் அங்கமாக்கியுள்ளனர் என்பதற்கு சான்றாக புறநானூற்றிலிருந்து முத்தமிழ் மூதாட்டி ஔவையார் அதியமானுக்காக தொண்டைமானின் அவைக்கு தூது சென்ற நிகழ்வானது இம்மகாபாரத நிகழ்வின் நீட்சியாக இருக்குமா என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்…!

நூல் : புறநானூறு
காலம் : பொ.மு 300
பாடியவர் : ஔவையார்…

‘இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து கடியுடை வியன்நக ரவ்வே;

அவ்வே பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து கொல்துறைக் குற்றில மாதோ;

என்றும் உண்டாயின் பதம் கொடுத்து இல்லாயின் உடன் உண்ணும் இல்லோர் ஒக்கல்

தலைவன் அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே‘

அதாவது மகாபாரதப்போரில் ஏற்படவிருக்கும் இழப்புகளை எண்ணி கிருஷ்ணனை தூது செல்லுமாறு அனுப்பிய யுதிஷ்ட்டிரனைப்போல தன்மீது பகை கொண்ட தொண்டைமானின் செருக்கை அடக்க முத்தமிழ் மூதாட்டியான ஔவையாரை தொண்டைமானின் அவைக்கு அனுப்புகிறான் அதியமான். அங்கு மகாபாரதத்தில் கிருஷ்ணன் நிகழ்த்திய உரைக்கு ஒப்பாக இங்கு முத்தமிழ் மூதாட்டியோ தொண்டைமானை வஞ்சப்புகழ்ச்சி அணியால் புகழ்வதுபோல பழித்தும் அதியமானை பழிப்பதுபோல புகழ்ந்தும் பாடிய பாடல்தான் இது. இப்பாடலில் அக்காலங்களில் ஆயுதங்களுக்கு பூஜை செய்யும் நிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளதை காண்க. சரி மேற்கூறிய பாடலின் பொருள் என்ன என்பதை காண்போம்…!

பொருள் : செல்வம் இருந்தால் மற்றவர்களுக்கு உணவளித்துப் பிறகு தான் உண்ணுவதும், செல்வம் இல்லையெனால் தன் உணவைப் பிறரோடு பகிர்ந்து உண்ணும் பண்புடைய, வறிய சுற்றத்தார்களின் தலைவனாகிய பெருமைக்குரிய என் வேந்தனான அதியமானின் கூர்மையான வேல்கள், பகைவரைக் குத்தியதால் பக்கமும் நுனியும் முரிந்து கொல்லர்களின் சிறிய உலைக்களத்தில் எந்நாளும் உள்ளன. ஆனால், உன் படைக்கருவிகளான இவை, மயில் தோகை அணிவிக்கப்பட்டு, மாலை சூட்டப்பட்டு, வலிய திரண்ட பிடிகளை உடையதாய் நெய் பூசப்பட்டு, அழகு செய்யபட்டு காவல் மிக்க பெரிய இடத்தில் உள்ளன…!

இங்கே நாம் கவனிக்கவேண்டியது தொண்டைமானின் போர்க்கருவிகளுக்கு மாலை சூட்டப்பட்டு, மயில்தோகை போர்த்தி நெய்யினால் அபிஷேகம் செய்து அழகுபடுத்தப்பட்டிருந்ததை முத்தமிழ் மூதாட்டியான ஔவையார் அழகாக எடுத்துரைப்பதன் மூலம் அக்காலங்களிலேயே ஆயுதங்களுக்கு செய்ய வேண்டிய சடங்கு முறைகள் இருந்துள்ளது என்பதையும் இதுதான் இன்று ஆயுத பூஜையாக உருமாற்றம் அடைந்திருக்க வேண்டும் என்று ஆதாரத்துடன் குறிப்பிடுகிறாரார் எழுத்தாளர் இந்துவன்.

இனி திராவிட கட்டுகதையாளர்கள் காற்றில் கம்பு சுத்த முடியாது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here