இவரைத் தான் முதலில் காப்பாற்ற வேண்டும், இவரைத்தான் முதலில் காப்பாற்ற வேண்டும்-ராணுவ வீரர்கள் கதறல்

நாட்டின் முப்படைத்தளபதியாக கடந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி பதவி ஏற்றவர் பிபின் லட்சுமண் சிங் ராவத். 16.3.1958 ல் பிறந்த அவர் இந்தியாவின் முதல் முப்படைத் தளபதியாக (சிடிஎஸ்) பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசால் நியமிக்கப்பட்டவர். சீனாவின் லடாக் அத்துமீறலை வெற்றிகரமாக எதிர்கொண்டதில் இவரது பங்கு மகத்தானது.

இவர் இன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். தனது மனைவி மதுலிகாராவத் உள்ளிட்ட 13 பேருடன் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சூலூர் விமானப்படை விமான நிலையத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சென்ற போது விபத்தில் சிக்கினார்.

சூலூர் விமான நிலையத்திலிருந்து வெலிங்டன் ராணுவ மையம் 87.2 கி.மீ தொலைவில் உள்ளது. கார் மூலம் சென்றால் 2.40 மணிநேரம் பிடிக்கும். ஹெலிகாப்டரில் சென்றால் 34 வான் மைல் தொலைவை 33 நிமிடத்தில் சென்றடைய முடியும்.

பிபின்ராவத் தனது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் 13 பேருடன் பயணம் செய்த ஹெலிகாப்டர் நேற்று காலை 11.40 மணியளவில் சூலூர் விமான நிலையத்திலிருந்து கிளம்பியது. ஹெலிகாப்டரில் 4 பைலட்டுகள் இருந்தனர். ஹெலிகாப்டர் நஞ்சப்பன் சத்திரம் பள்ளத்தாக்கு வழியாக பயணித்தபோது, நிர்ணயிக்கப்பட்டவிட உயரத்தைவிட குறைவாக பறந்துள்ளது. மூடுபனி காரணமாக பைலட்டிற்கு எதிரே உள்ள மலை பகுதி தெரியாததால், 10 கி.மீ தொலைவில் உள்ள ஹெலிபேடில் சில நிமிடங்களில் தரையிறங்க வேண்டிய ஹெலிகாப்டர் நஞ்சப்பன்சத்திரம் என்ற இடத்தில் வனப்பகுதியில் உயர்ந்து வளர்ந்திருந்த பிரமாண்ட மரத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதி தடுமாறியது.

அடுத்த சில வினாடிகளில் ஹெலிகாப்டரின் இறகுகள் மரத்தின் மீது அடுத்தடுத்து மூன்று முறை மோத நிலைதடுமாறி ஹெலிகாப்டர் தீப்பற்றியபடி கீழே விழுந்தது. நிலத்தில் விழுந்ததும் ஹெலிகாப்டரின் எரிபொருள் டேங்க் பயங்கர சத்தத்துடன் வெடித்து ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. இதில் அதில் பயணம் செய்தவர்களின் உடல்கள் சிதறின. அவர்கள் அணிந்திருந்த ராணுவ சீருடை தீயில் கருகியது.

அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தகவல் அளித்ததும், அடுத்த சில நிமிடங்களில் ராணுவ வீரர்கள், போலீசார், தீயணைப்புப்படை வீரர்கள் அங்கு குவிந்தனர். ராணுவ வீரர்கள் படுகாயமடைந்து கிடந்த பிபின்ராவத்தை மீட்டு, பெட்ஷிட் ஒன்றில் தூக்கியபடி, ‘இவரைத் தான் முதலில் காப்பாற்ற வேண்டும், இவரைத்தான் முதலில் காப்பாற்ற வேண்டும்’ என்று கதறியபடி ஓடியது பார்ப்பவர்களின் கண்களை கலங்கச் செய்தது. ஆனால் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு கொண்டு சென்ற போது, அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.

அவருடன் பயணித்த அவர் மனைவி உட்பட 11 பேரும் பலியானார்கள். இதில் பலரது உடல்கள் அடையாளம் காணமுடியாதபடி சிதைந்து போயிருந்தன. அந்த உடல்களை பெட்ஷிட்டில் மூட்டையாக கட்டியே பள்ளத்திலிருந்து எடுத்து வரவேண்டியிருந்தது. குரூப்கேப்டன் வருண்சிங் மட்டும் பலத்தகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார்.

முப்படைத்தளபதியின் மறைவு பிரதமர் மோடியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் சதித்திட்டம் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் ராணுவ உளவுத்துறையினர், ரா போன்ற அமைப்புகள் விசாரித்து வருகின்றன.

இந்திய ராணுவத்தளபதியின் மறைவு உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here