ஆம்பூர் பிரியாணித் திருவிழா வைத்ததுதான் வைத்தார்கள் அவர்களுடன் சேர்ந்து சில திடீர் தமிழர்களும் அவரவர் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு ஆரம்பித்து விட்டார்கள்.
இதன் காரணமாக சங்க இலக்கியங்களில் தமிழர்கள் மாட்டுக்கறி உண்டுள்ளனர் என்றும் மாட்டுக்கறி தின்பவர்கள் மட்டும்தான் தமிழர்கள் என்றும் நண்பர் ஒருவர் கூறியதாக விளக்கம் கேட்டிருந்தார் எனது நெருங்கிய நண்பர்.
இதற்கு எனது தரப்பு விளக்கத்தை எழுதி விடுகிறேன்…!சங்க இலக்கியங்களை எடுத்துக்கொண்டால் “ஆட்டுப்பிரியாணி” (சங்க இலக்கியங்களில் பிரியாணியா என்று ஆச்சரியப்பட வேண்டாம். சங்க இலக்கியங்களில் பிரியாணி என்ற பெயர் இல்லை எனினும் அதற்கான அனைத்து முகாந்திரங்களும் உண்டு) முதற்கொண்டு, கோழி, காடை, முயல், நண்டு, ஆமை, பன்றி, மாடு என்று சங்கத்தமிழன் உண்ணாத அசைவ உணவுகளே இல்லை.
ஆம் சங்க இலக்கியங்களில் மாட்டுக்கறி மற்றும் பன்றி இறைச்சியை உணவாக உட்கொண்ட தகவலும் உண்டு. ஆனால் போரின்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் பசுக்களையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வது அறம் என்றும், மாட்டுக்காக உயிர் தியாகம் செய்தல் மற்றும் சொந்த மகனையே மாட்டைக் கொன்றதற்காக பலி கொடுத்தல் போன்ற நிகழ்வுகள் அரங்கேறிய இந்த ஆன்மீக பூமியில் மாட்டுக்கறி உண்டுள்ளனர் எனில் அக்கூற்றில் புதைந்துள்ள உள்ளார்ந்த கருத்துகளை சற்று ஆழமாக சிந்தித்து நோக்கத்தான் வேண்டும்.
அதாவது சங்க இலக்கியங்களில் மாட்டுக்கறி உண்டதாக கிடைக்கும் அனைத்து சான்றுகளும் ஐவகை நிலங்களில் பாலை நிலத்தை சார்ந்த மக்கள் உண்டதாகத்தான் உள்ளது.
பாலை நிலத்தை சேர்ந்த “மழவர்கள்” தான் மாடுகளைத் திருடியதோடு அதை பலியிட்டு உணவாகவும் உட்கொண்டுள்ளனர்…!
பாலை நில மக்களின் தொழில் என்னவென்று பார்த்தால் வழிப்பறி செய்தல், சூறையாடல், ஆறலைத்தல் தான் என்பதை நாம் சிறுவயது முதலே படித்து வருகிறோம். அதாவது பாலை நிலத்தில் வாழ்ந்த பல பிரிவு மக்களில் மழவர்கள் எனும் ஒரே ஒரு பிரிவினர்கள் மட்டும் மாடுகளைத் திருடி, அதன் உரிமையாளர்களோடு போரிட்டு, அவர்களை வென்று மாடுகளை படையலிட்டதோடு அவற்றை உண்டுள்ளனர் என்பது சங்க இலக்கியங்கள் மூலமாக நமக்கு கிடைக்கும் செய்தியாகும்.
ஒருவேளை மாட்டுக்கறி உண்பவர்கள் மட்டும்தான் தமிழர்கள் என்ற ரீதியில் இச்செய்தியை எடுத்துச்சென்றால் வழிப்பறி செய்து திருட்டை தொழிலாக கொண்டவர்கள் மட்டுமே தமிழர்களாக இருக்க முடியும் என்ற கூற்றையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும்…!- பா இந்துவன்.