பேரறிவாளன் விடுதலைக்கு கொடுக்கப்பட்ட விலை…ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களா?

சரிந்து விழுந்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை தூக்கி நிறுத்த ராஜஸ்தான் மாநிலத்தில் அக்கட்சியின் தலைவர்கள் மாநாடு நடந்து முடிந்திருக்கும் வேளையில், அக்கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த ராஜிவ்காந்தியை கொடூரமாக கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட்டால் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ‘கொலை குற்றவாளியை சில சட்டநுணுக்கங்களைக் கொண்டு சுப்ரீம்கோர்ட் விடுதலை செய்துள்ளது. ஆனால் அவர்கள் கொலையாளிகள் தான். இதை கண்டித்து வெள்ளை துணியால் வாயை மூடிக் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் ந டத்துவார்கள்’ என்ற சிறிய முணுமுணுப்புடன் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கடந்து செல்கிறார்.

எந்த ஒரு கட்சியும் நீடித்து நிலைக்க வேண்டுமானால் கொள்கை மீது பிடிப்பு இருக்க வேண்டும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். தன் கட்சியின் கடைமட்ட தொண்டருக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் கூட அதை பொருத்துக் கொள்ளக்கூடாது…

ஆனால் இவை எதுவுமே காங்கிரஸ் கட்சியில் இல்லை என்பது தான் சோகம். காங்கிரஸ் கட்சியின் கொள்கை என்ன என்பது அக்கட்சித் தலைவர்களைக் கேட்டால் கூட திணறிவிடுவார்கள். சேவைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள தொடர்பை கிலோ மீட்டர் கணக்கில் தான் அளக்க வேண்டும்.

கட்சியில் உள்ளவர்களின் மீதாவது பற்று இருக்கிறதா என்ற கேள்விக்கு பேரறிவாளன் விடுதலையையே உதாரணமாக குறிப்பிடலாம்.

ராஜிவ்காந்தி என்ற மனிதர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மட்டுமல்லாமல், இந்நாட்டின் பிரதமராக இரு ந்தவர். அவர் விடுதலைப்புலிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டபோது அவருடன் 18 அப்பாவி தமிழர்களும் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிகட்சிகளும் தான் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தனர். தமிழகத்திலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்துள்ளது.

ஆனால் தங்கள் கட்சித் தலைவரை கொலை செய்த குற்றவாளிகளை தண்டிக்க எந்த முனைப்பும் காங்கிரஸ் காட்டவில்லை என்பது தான் ஆச்சரியம். காங்கிரஸ் கட்சியில் சர்வவல்லமையுடன் இருக்கும் ராஜீவ்காந்தியின் மனைவி சோனியாகாந்தி, அவரது மகன் ராகுல், மகள் பிரியங்கா ஆகியோர் சர்வ வல்லமையுடன் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதும், பிடிபட்ட குற்றவாளிகள் 7 பேர் மீதான வழக்கு விசாரணை, தண்டனை நிறைவேற்றுதல் என்பது ஆமை வேகத்தில் நடந்தது.

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் சில அமைப்புகள் மெல்ல குரல் கொடுக்க துவங்கின. அப்போது தங்களுக்கான பதவியை பிடிப்பதில் தீவிரமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் சிறு எதிர்ப்பு கூட காட்டவில்லை. இந்த கோரிக்கை படிப்படியாக எழுந்து, ஒரு காலத்தில் தீவிர விடுதலைபுலிகள் எதிர்ப்பாளராக இருந்த ஜெயலலிதாவே சட்டசபையில் 7 பேரையும் விடுதலை செய்யும் தீர்மானம் கொண்டுவரும் அளவிற்கு உயர்ந்து நின்றது.

இப்போது பேரறிவாளன் விடுதலைக்கு அதிமுகவும், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுகவும் உரிமை கொண்டாடுவதில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. இதை எதிர்த்து முணுமுணுத்தால் கூட கூட்டணியிலிருந்து தூக்கி எறிந்துவிட்டால், தங்கள் பதவி ஆசைக்கு மண் விழுந்துவிடும் என்பதால் காங்கிரஸ் வட்டாரத்தில் மயான அமைதி.

சொந்த தலைவரின் மரணத்திற்கே நீதியை பெற்றுத்தரமுடியாத கட்சி மீது அதன் தொண்டர்களுக்கு எப்படி மதிப்பு வரும்… அதனால் காங்கிரஸ் கட்சி கரைவதை எத்தனை சிந்தனை கூட்டங்கள் நடத்தினாலும் தடுக்க முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

காங்கிரஸ் கட்சியின் பிற தலைவர்கள் ராஜீவ் கொலை குற்றவாளிகளை தண்டிப்பதில் பெரிய ஆர்வம் காட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவரது குடும்பத்தினர் ஏன் அமைதி காத்தனர் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இக்கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியை திடீரென பிரியங்கா சந்தித்துவிட்டு சென்றார். அப்போது அவர்களுக்குள் என்ன பேச்சு நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் அதற்கு பின்னர் இலங்கையில் நடந்த போரில் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். விடுதலைப்புலித் தலைவர் பிரபாகரன் அவரது குடும்பத்தினரும் அடியோடு அழிக்கப்பட்டனர். இந்த இன அழிப்பிற்கு அப்போது இருந்த திமுக-காங்கிரஸ் கூட்டணி மத்திய அரசு உதவியது என்று வெளிப்படையாகவே ராஜபக்சே கூறினாரே? இந்த அழிப்பில் திருப்தியடைந்த சோனியா குடும்பம், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை தீவிரமாக எதிர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்க முடியாது.

ஆக பேரறிவாளன் விடுதலைக்கு தமிழ் மக்கள் கொடுத்திருக்கும் விலை, குழந்தைகளும், பெண்களும், ஆண்களும் என ஒன்றரை லட்சம் பேர் என்பது உலகில் யாரும் கொடுத்திருக்காதது தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here