கொரோனா மக்களின் உயிர்களை மட்டுமல்ல எதிர்காலத்தையே பறிக்கும் கோரமான யுத்தம்

கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளை விட ஊரடங்கினால் ஏற்படும் பாதிப்புகள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிக அதிகமாக இருக்கும். ஒரு சில ஆயிரங்கள் அல்லது சில மாதங்களுக்கு ரேஷன் பொருட்களை அரசுகள் வழங்கினாலும், கல்வி, சமூக, பொருளாதார ரீதியாக கோடிக்கணக்கான எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஊரடங்கின் காரணமாக உற்பத்தி, வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறு வணிக நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் பல மூடப்படும் நிலை உருவாகி வருகிறது. வீட்டிலிருந்தே வேலை என்பதை பெருநிறுவனங்கள் மற்றும் மென் பொருள் நிறுவனங்கள் தொடர இருக்கும் நிலையில், அதை சார்ந்து இயங்கும் பல்வேறு தொழில் மற்றும் வர்த்தகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு அக்குடும்பங்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். பெரும் மென் பொருள் நிறுவனங்கள் சிலவற்றிற்கு வீட்டிலிருந்தே வேலை என்பது செலவுகளை குறைக்கும் என்றாலும், நீண்ட நாட்களுக்கு அதை தொடரமுடியாத சூழ்நிலை உருவாகும். ஆனால், அதற்குள் கட்டமைப்பை அந்நிறுவனங்கள் இழக்க கூடிய சூழ்நிலை ஏற்படும். மேலும், வேலைவாய்ப்பின்மை அதிகரித்து, வருமானம் இழந்தோ அல்லது குறைந்தோ, பல குடும்பங்கள் இது நாள் வாழ்ந்து வரும் நிலையிலிருந்து தடுமாறி வறுமைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகலாம்.

தினந்தோறும் வருவாயை நம்பி பிழைக்கும் மக்கள் மிக பெரிய இடர்பாடுகளை சந்தித்து வருகிறார்கள். உண்ண உணவு இருந்தாலும், தன்னம்பிக்கையை இழந்து விட்டால், அதை மீட்பது மிக கடினம். தினம் அல்லது மாத வருவாயை மட்டுமே நம்பி உள்ள நடுத்தர வர்க்கத்தினர், வீட்டு வாடகை, மின் கட்டணம், எரிவாயு கட்டணம், மளிகை மற்றும் காய்கறி, மருத்துவ செலவுகள் ஆகிய அடிப்படை செலவுகளை குறைத்து கொள்ள முடியாது . அப்படி குறைகிற நிலையில், தங்களின் நம்பிக்கையோடு, குடும்பத்தின் நம்பிக்கையையும் இழக்க நேரும் அபாயம் உள்ளது. உண்மையில், வருமானம் இல்லாத ஊரடங்கு காலத்தில் அடிப்படை வீட்டு செலவினங்கள் அதிகரித்தே வருகின்றன. இனியும் இந்நிலை தொடர்ந்தால் கந்து வட்டிக்கு கடன் வாங்கும் கொடுமையை சந்திக்க நேரிடும் அவலம் உருவாகும். குடும்பம் இது நாள் வரை அனுபவித்து வந்த அடிப்படை வசதிகளை இழப்பதற்கு யாரும் தயாராக இருக்க மாட்டார்கள். அதனால் எப்படியாவது பணமீட்ட வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலை சமுதாய சீர்கேட்டை உருவாக்கும்.

கடந்த ஒரு மாத காலமாக தானே ஊரடங்கு என்று சிலர் நினைக்கலாம். ஆனால், இந்த நாட்களினால் உருவான கொடுமையை வருங்காலம் உணர்த்தும். மத்திய மாநில அரசுகள் இயன்ற அளவு மக்களுக்கு ஆவண செய்தாலும், பாதிப்பின் முழுமையையும் சீர் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியே? ஏனெனில், இது உலகம் முழுதும் ஏற்பட்டிருக்கிற மிக கொடூரமான நோய் தொற்று. எந்த நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், இந்தியாவின் அதிக மக்கள் தொகை தான் அதிக பாதிப்புகளை உருவாக்குகிறது. சில நாடுகளில் குறைவான மக்கள் தொகையால் நோய் தொற்று அதிகம் பரவாமல் தடுத்திருக்கலாம். சில நாடுகளில், அரசின் வழிகாட்டுதல்களை ஏற்று முக கவசம் அணிவது, சமூக விலகலை கடைபிடிப்பது மற்றும் பல்வேறு விதிகளை மதித்து நடந்ததால், நடப்பதால் பாதிப்புகள் குறைந்திருக்கலாம். ஆனால் இவை இரண்டுமே இந்தியாவிற்கு பொருந்தாமல் போனது என்பதே உண்மை.

மேலை நாடுகளோடு ஒப்பிடும் போது, கல்வியில் தொழில்நுட்பம் என்பது நமது நாட்டில் குறைவே. அதனால், முறையான, தேவையான கல்வி நம் நாட்டை மற்ற வளரும் நாடுகளை விட பின்னுக்கு தள்ளிவிட அதிக வாய்ப்புகள் உள்ளது. திறன் கல்வி, விளையாட்டு, தொழிற்கல்வி போன்றவைகள் இயல்பாக கற்றுக்கொள்ள முடியாத நிலையில், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். ஏற்கனவே ஒரு முழு வருடம் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லாத நிலையில், இனி மேலும் இந்நிலை நீடிப்பது அச்சுறுத்தலே.

மருத்துவ கட்டமைப்புகளை பெருக்கி கொள்வதே சென்ற வருட முதல் ஊரடங்கின் முக்கிய நோக்கம். அதை திறம்பட மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட நிலையில், இரண்டாவது ஊரடங்குக்கு மக்கள் மத்தியில் ஒத்துழைப்பு இல்லாததற்கு காரணம் மக்கள் மத்தியில் கொரோனாவை தாண்டிய வாழ்வாதாரம் குறித்த அச்சமே. குறிப்பாக நகரமயமான, முன்னேறிய மாநிலமான தமிழகத்தை சார்ந்த மக்கள் தங்களின் பொருளாதார பின்னடைவை சற்றும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க மாட்டார்கள். கடன் சிலந்திக்குள் சிக்கி கொள்வதை விரும்ப மாட்டார்கள். அடிப்படை தேவைகளை இழக்க விரும்ப மாட்டார்கள். மேலும், சென்ற வருடம் ஊரடங்கின் போது சமூக பணியாற்ற முன்வந்தவர்களில் பலரும் தற்போது அமைதி காப்பது வியப்பளிக்கவில்லை. ஏனெனில், தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குரியதாகி விடுமோ என்ற சிந்தனை சுற்றிக்கொண்டேயிருக்கையில் மற்றவர்களின் வாழ்வாதாரம் குறித்து சிந்திக்க மாட்டார்கள் என்பது இயற்கையே.

இதற்கிடையில், தடுப்பூசி விவகாரத்தில் எதிர்கட்சிகளின் அரசியல், தேர்தல், ஆட்சி மாற்றம் ஆகியவைகளும் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்ததோடு, மக்களின் கவனத்தை திசை திருப்பியது என்பதை மறுக்க முடியாது. மத்திய மாநில அரசுகள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான போதிய நிதியை அளிக்க முடியுமா என்பது சாமான்யர்களுக்கே புரியும். ஒட்டுமொத்தமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தொழில், உற்பத்தி, சேவை என அனைத்து துறைகளும் முடங்கி கிடக்கிற நிலையில், வருவாய் இல்லாது எப்படி செலவுகளை மேற்கொள்ள முடியும்? மத்திய, மாநில அரசுகள் இரண்டிற்கும் இது பொருந்தும். மக்கள் தங்கள் பணிக்கு முழுமையாக திரும்பினாலேயன்றி பொருளாதாரம் முழுவேகத்தை அடையாது. ஆனால். கஷ்ட காலத்திலும் ஒரு நல்ல காலம் என்பது விவசாயத்துறையின் வளர்ச்சி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிறப்பாக உள்ளது.

தமிழகத்தில் புதிய அரசு அமைத்தும், கொரோனாவை தவிர்த்து வேறு எந்த பணியையும் செய்யமுடியவில்லை என்பதை உணரமுடிகிறது. முதலமைச்சர் உட்பட ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் கொரோனாவை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் குறித்து பதட்டமடைந்து வருகிறார்கள் என்பதை மாநில அரசு உணர வேண்டும். கொரோனா தொற்று தடுப்பு பணி ஒருபுறம் இருந்தாலும், மாநிலத்தினுடைய அன்றாட நடவடிக்கைகளை முடுக்கி விடும் பணியில் முதல்வர் கவனத்தை செலுத்த வேண்டும். மத்திய அரசினுடைய ஒத்துழைப்போடு தான் இது சாத்தியம் என்பது உண்மை. தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் கொரோனா தடுப்பு குறித்த பல்வேறு மருத்துவ உபகரணங்களை அளிப்பதில் தீவிரமாக உதவும் மத்திய அரசு, தொழில்நிறுவனங்களுக்கான வங்கிக்கடன்களில் பல்வேறு சலுகைகள் மற்றும் திருப்பி செலுத்துதலில் போதிய நீட்டிப்பு அளித்துள்ள நிலையில், தொழில் முன்னேற்றத்தை அதிகரித்து, வேலை வாய்ப்பை உறுதி செய்து, வருமானத்தை உறுதி செய்யும் நிலையை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.புதிய அரசு துடிப்போடு செயல்பட இதை விட நல்ல தருணம் இல்லை.

ஒரு பக்கம் கொரோனா தொற்று நம் உயிரை அச்சறுத்தி கொண்டேயிருந்தாலும், மறு பக்கம் நம் வாழ்வாதாரம் என்ற அபாயமணி அடித்து கொண்டே, நம்மை கடுமையாக அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. ஊரடங்கு கொரோனாவை எதிர்க்க தவிர்க்க முடியாதது என்றால், ஊரடங்கு தளர்வுகள் என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்திற்கு தவிர்க்க முடியாதது என்ற நிலையை எட்டியிருக்கிறது. உண்மையில், ‘வாழ்வா, சாவா’ என்ற சூழ்நிலையில் தான் சாதாரண மக்கள் தங்கள் வாழ்க்கையை அச்சத்தோடு நகர்த்தி கொண்டிருக்கிறார்கள். வேலை நீடிக்குமா? வருமானம் கிடைக்குமா? குடும்பத்தினரை காப்பாற்ற முடியுமா?குழந்தைகளின் கல்வியை உறுதி செய்ய முடியுமா? என்பது போன்ற கேள்விகளை கவலையோடு சுமந்து கொண்டு வேதனையோடு இருக்கிறார்கள் மக்கள்.

மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு உத்வேகத்தை அளித்தால் மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பை அளிப்பார்கள். கொரோனா மக்களின் உயிர்களை மட்டுமல்ல எதிர்காலத்தையே பறிக்கும் கோரமான யுத்தம். இந்த யுத்தத்தில் அரசுகளோடு மக்களும் இணைந்து போராட வேண்டியது மிக அவசியம்.

உறுதியாக வெல்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here