மாட்டு மாமிசம் தலித்துகளின் அடையாளமா?

மாட்டு மாமிசம் (செத்த), மலம் அள்ளுவது (மனித கழிவுகள்), செருப்பு தைப்பது தான் தலித்துகளின் அடையாளமா?

உணவு உரிமையா?ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டு மாமிசம் தவிர, பிறவகை மாமிச உணவு வகைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் விடுத்த அறிக்கை சர்ச்சையாக்கப்பட்டதால் பிரியாணி திருவிழா தற்போது ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அம்மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை சரி என்று சில அமைப்புகளும், மாட்டு மாமிசம் பிரியாணி திருவிழாவில் இடம் பெறவில்லை எனில் அதைத் தாங்களே தயாரித்து இலவசமாக வழங்குவோம் என்று சிலரும் அறிவித்திருக்கிறார்கள்.

மாட்டு மாமிசத்தைப் பிரியாணி திருவிழாவில் சேர்க்க வேண்டும் என்பதற்காக அவர்கள் அம்பேத்கர் பெயரைத் துணைக்கு அழைத்துக் கொள்வதையும், மாட்டு மாமிசம் தமிழகத்திலுள்ள மூத்த குடிமக்களின் – தலித் மக்களின் ’உணவு உரிமை’ (Food Rights) என்பதை போல சிலர் சித்தரிக்க முயற்சி செய்வதையும் கண்டிக்க வேண்டியது இம்மண்ணில் தீண்டாமை ஒழிய வேண்டும்; சாதி ஒழிய வேண்டும்; சாதி இழி நிலைகள் போகவேண்டும் என்று கருதக்கூடிய ஒவ்வொருவருடைய கடமையும், கட்டாயமும் ஆகும்.

தனிப்பட்ட எவருடைய உணவு பழக்கவழக்கத்தை நாம் குறை சொல்லவில்லை. உலகத்தின் பல பகுதிகளில் கரப்பான் பூச்சியை, பாம்பை, பல்லியை, நாயைக்கூட உணவாகச் சாப்பிட அனுமதி உண்டு; அதேபோன்று இசுலாமிய நாடுகளில் பன்றி மாமிசம் சாப்பிட தடையுண்டு.

அவை அந்தந்த பகுதிகளில் நடைமுறையிலுள்ள உணவுப் பழக்கவழக்கங்கள். நாம் இந்தியத் தேசத்தில் வாழ்கிறோம். தமிழ் – இந்து சமுதாயத்தில் ’மாட்டு மாமிசம்’ ஒரு பொதுவான அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான பாரம்பரிய ’உணவு வகை’யாக இருந்த வரலாறு இல்லை.

சிலப்பதிகாரத்திலும், திருக்குறளிலும், தொல்காப்பியத்திலும் ’கள்ளும் களவும் காமமும் கொல்லாமையும் புலால் மறுப்பும்’ முக்கியக் கொள்கைகளாக வலியுறுத்தப்பட்டு வந்துள்ளன.தமிழ் சமுதாயம் தொன்று தொட்டு வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட சமுதாயம்.

கால்நடைகள் வேளாண்மையின் அங்கமாகவும், வேளாண்குடி மக்களின் நண்பனாகவும் இருந்திருக்கிறதே தவிர, அது உணவாகப் பயன்படுத்தப்பட்ட வரலாறு இல்லை. தானியங்களும், பருப்பு – பழவகைகளும், காய்கறிகளுமே பிரதான உணவாக இருந்துள்ளன.

முந்தைய காலத்தில் அரச குலத்திலிருந்தவர்களிடையே காடுகளுக்குச் செல்வதும், வேட்டையாடுவதும், புலால் உண்பதும் பழக்கங்களாக இருந்திருக்கிறது. அரச குலத்தவரின் அப்புலால் பழக்கத்தையும் கண்டித்தே புலவர்கள் இலக்கியங்களைப் படைத்துள்ளனர்.

இந்திய – தமிழ் சமுதாயத்தின் பன்னெடுங்கால வரலாற்றை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் இப்பொழுது நம்மிடத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய புலால் உணவு பழக்கவழக்கங்கள் இந்த மண்ணை ஆக்கிரமித்த அன்னியர்களிடத்திலிருந்து தொற்றிக் கொண்ட வியாதியே தவிர, அது பூர்வீகமானது அல்ல என்பதை உணர மறுக்கிறார்கள்; சிலர் வலிந்து தமிழ் சமுதாயத்தின் மீது மாட்டு மாமிச அடையாளத்தைத் திணிக்க நினைக்கிறார்கள்.

வேத காலங்களில் யாகம் செய்வதற்காகக் குதிரைகள் பலி இடப்பட்டதாகவும், அந்த மாமிசங்களைச் சாப்பிட்டதாகவும், சோமபானங்கள் அருந்தியதாகவும் செய்திகள் உண்டு. ஆனால், அப்பழக்கவழக்கங்கள் எல்லாம் நீண்ட காலம் நீடிக்கவில்லை.

’கள்ளுண்ணாமை புலால் உண்ணாமை’ ஆகியவற்றை வலியுறுத்தி மிகப் பெரிய இயக்கங்கள் தோன்றி இருக்கின்றன. இந்தியாவில் புத்த மதத்தைத் தோற்றுவித்த புத்தரும் கூட இதுபோன்ற யாகங்களில் குதிரைகளையும் வேறு விலங்குகளையும் பலியிட்டதை எதிர்த்தும், பசுக்களை பாதுகாக்கப்படவும் பாடுபட்டுள்ளார்.பாரத தேசத்தில் ’மாட்டு மாமிச மறுப்பும் – பசு பாதுகாப்பு இயக்கமும்’ அனைத்து மக்கள் மத்தியிலும் வெகுவாக பரவி இருக்கிறது.

ஏறக்குறைய 1000 ஆண்டுக்கால அன்னிய படையெடுப்புகளால் நம்முடைய வழிபாட்டில், உணவுப் பழக்க வழக்கங்களில் கட்டாயப்படுத்தி சிலரிடையே சில மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. எனினும் 800 வருடங்கள் முகமதியர்களும்; அதன்பின் 200 வருடங்கள் ஆங்கிலேயர்கள், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்திருந்தாலும் இந்தியாவில் வாழ்ந்த அனைத்து மக்களையும் ஆக்கிரமிப்பாளர்களுடைய வழிபாட்டு முறைக்கோ அல்லது உணவுப் பழக்க வழக்கத்திற்கோ மாற்ற முடியவில்லை.

800 வருட காலம் ஆட்சியிலிருந்த முகமதியர்களால் 15 முதல் 20 % இந்திய மக்களைத் தான் மதமாற்றம் செய்யவும், உணவு பழக்கவழக்கத்தை மாற்ற முடிந்தது. 200 வருடங்கள் ஆட்சி செய்த ஐரோப்ப கிறிஸ்துவ அரசுகளால் 4% மக்களை மட்டுமே கிறிஸ்தவர்களாகவும், உணவுப் பழக்க வழக்கத்தையும் மாற்ற முடிந்திருக்கிறது.

தமிழகத்தில் 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் முழுக்க முழுக்க தூய சைவ உணவு சாப்பிடக் கூடியவர்களும், 50 சதவிகித மக்கள் ஆடு, கோழி, புறா, முயல் உள்ளிட்ட எளிய வகை பிராணிகளின் உணவு வகைகளைப் பயன்படுத்துகிறவர்களாகவும் உள்ளனர்.

மொத்தத்தில் 75 சதவிகித மக்கள், இந்து – தமிழ் மக்கள் மாட்டு மாமிசத்தை எக்கால கட்டத்திலும் உணவாகப் பயன்படுத்தாதவர்களே.! எஞ்சியிருந்த 25% மக்களையும் முழுமையாக மாட்டு மாமிசம் மட்டுமே சாப்பிடக் கூடியவர்களாக முத்திரை குத்த இயலாது.

மாறாக அவர்களும் சில சூழல்களில் மட்டுமே அதைப் பயன்படுத்தக் கூடியவர்களாகவும் உள்ளனர்.முகமதியர்களாலும், ஆங்கிலேயர்களாலும் முயற்சி செய்தும் முடியாததை இப்பொழுது அம்பேத்கர் அவர்களுடைய பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் ஒருசில அமைப்புகள் மாட்டு மாமிசம் தமிழக மக்களுடைய – தலித் மக்களுடைய உணவுப் பழக்க வழக்கங்களில் ஒன்று என்பதை போன்ற ஒரு முத்திரையை குத்திட முயற்சி செய்கிறார்கள்.

அவர்கள் ஆபத்தானவர்கள். பதவிக்காகவும், சில சுகங்களுக்காகவும் இந்த நாட்டையே காட்டிக் கொடுப்பதற்குக் கூட தயங்காதவர்கள் என்று சொன்னால் அது தவறாகாது. அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் எந்த மாமிசத்தை வேண்டுமென்றாலும் சாப்பிடட்டும் நாம் ஒன்றும் குறை சொல்ல வரவில்லை. அது அவர்கள் விருப்பம். ஆனால், கோடான கோடி தமிழ் மக்கள் அல்லது தலித் மக்களுடைய உணவு ’மாட்டு மாமிசம்’ என முத்திரை குத்துவது எவ்விதத்தில் நியாயம்?

இவர்களுடைய அரசியல் பிழைப்புக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களைத் துணைக்கு அழைப்பது தான் வேடிக்கையாக உள்ளது; தமிழக மக்களை மேலும் ஆத்திரமூட்டுகிறது.!

தமிழ்நாட்டில் ‘scheduled caste’ என்று அழைக்கக்கூடிய பட்டியல் பிரிவில் 76 சாதிகள் உண்டு. அதில் 7 பிரிவுகளை உள்ளடக்கிய’தேவேந்திர குல வேளாளர்கள்’ மாட்டு மாமிசத்தை என்றுமே உட்கொண்டதில்லை. அவர்கள் பசுவை வணங்குபவர்கள்.

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் பட்டியல் பிரிவில் இருக்கக்கூடிய எத்தனையோ சமுதாய மக்களில் மாட்டு மாமிசத்தைத் தொட்டுக்கூட பார்க்காதவர்கள் உண்டு. ஆனால், அதை முழுமையாக மறைத்து விட்டு, ஒட்டுமொத்த தலித்துக்களின் உணவு மாட்டிறைச்சி என்பதை போல சிலர் முழங்குகிறார்கள்.

’பட்டியல் பிரிவில் (தலித்) அடங்கி இருக்கக்கூடிய ஒரு சில சமுதாய மக்கள் இன்று கூட மாட்டுக்கறியைப் பயன்படுத்துகிறார்கள்’ என்றால், அது அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்ட உணவு பழக்கம் அல்ல.

அது அவர்கள் மீதான உணவு திணிப்பு. அவர்களில் ஒரு பிரிவினர் செருப்பு தைக்கிறார்கள் என்றால், மனிதக் கழிவை மனிதனே அகற்றுகிறார்களெனில், துப்புரவுத் தொழில் செய்கிறார்களெனில், அவை எல்லாம் அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டது அல்ல, விருப்பத்திற்கு, மாறாக அம்மக்கள் மீது திணிக்கப்பட்டவை.

பாரத மண்ணினுடைய பூர்வீக குடிமக்கள் அன்னிய படையெடுப்புகளாலும், நடோடி / பிண்டாரி கூட்டங்களாலும் கொடுமையான தாக்குதலுக்கு ஆளாகி, அடிமைப்படுத்தப்பட்டார்கள். கடுமையான மற்றும் அசுத்தமான தொழில்கள் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.

அம்மக்கள் தங்களுடைய சொந்த நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக வைக்கப்பட்டு அவர்கள் மீண்டும் எழுந்து வந்துவிடக் கூடாது என்பதற்காக ’செத்த மாட்டைத் தூக்க வைத்தும், அதையே உணவாகப் உண்ண வைத்தும், ’அடித்தும் துன்புறுத்தியும் அடிமைப்படுத்தியும்’ மனித கழிவுகளை அகற்ற அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

இதைத்தானே அண்ணல் அம்பேத்கர் தன் வாழ்நாள் எல்லாம் சொல்லி வந்தார். இம்மண்ணின் பூர்வீக குடிமக்கள் மீது எந்தெந்த இழிவான அடையாளங்கள் எல்லாம் வலிந்து திணிக்கப்பட்டதோ, அதை போக்குவதற்காகத் தானே ’தீண்டாமை ஒழிப்பு இயக்கம்’ காணச் சொன்னார்?

மலம் அள்ளுவதும், செத்த மாட்டுக்கறியை உண்ணுவதும், செருப்பு தைப்பதும் தங்களுடைய பூர்விக அடையாளங்கள் என்று மார்தட்டிச் சொல்வதற்காகவா அம்பேத்கர் அவர்கள் இயக்கம் நடத்தச் சொன்னார்? அண்ணல் அம்பேத்கர் எதற்காக பாடுபட்டாரோ அதற்கு எதிராக இப்பொழுது ஒரு கும்பல் கிளம்பி இருக்கிறது.

’நல்ல கல்வி, நல்ல உணவு, உடை மூலம் தங்களுடைய கடந்த கால அடையாளங்கள் அனைத்தையும் ஒழித்துவிட்டு, புதிய அடையாளங்களை இந்த மக்களுக்கு அளிப்பதே’ அண்ணல் அம்பேத்கரின் விருப்பம். அதற்காகத் தான் அவர் மதமாற்றத்தைக் கூட விரும்பினார் என்பது வேறு விஷயம்.

எந்த உணவு, எந்த உடை ஒரு சமுதாயத்திற்கு அவமானத்தை உருவாக்கியதோ, அதைத் துறந்து அந்த சமுதாயத்திற்கு சுயமரியாதையும், மதிப்பையும் வென்றெடுப்பதா? இல்லை! அவர்களுடைய அடையாளமே அந்த இழிவுதான் என்று, அம்மக்களை மீண்டும் மலம் அள்ள வைப்பதா? மாட்டுக்கறி தின்றிட ஊக்குவிப்பதா?திருமாவளவன் மற்றும் அவரது அமைப்பைச் சார்ந்தவர்கள் தெரிந்து செய்கிறார்களா? அல்லது திட்டமிட்டுச் செய்கிறார்களா? என தெரியவில்லை.

ஆனால், மாட்டு மாமிசம் ’தலித்’ மக்களுக்கான உணவு என்று சொல்வதன் மூலம் அவர்கள் பிறந்த சமுதாயத்திற்கு மிகப் பெரிய துரோகம் செய்கிறார்கள். அந்த சமுதாய மக்களை ஆயிரம் ஆண்டுக் காலத்திற்கு மீண்டும் பின் நோக்கித் தள்ள முயற்சி செய்கிறார்கள்.

இது கடைந்தெடுத்த பிற்போக்குத்தனம் மட்டுமல்ல, இதுவே திராவிடத் தனமாகும். ’ஒருபக்கம் ஜாதி ஒழிய வேண்டும்’ என்று சொல்லுவது; இன்னொரு பக்கம் ஜாதி இழிவை நியாயப் படுத்துவதும், ஆதரிப்பதும், அவற்றைக் கொள்கையாகக் கொண்டு செயல்படுவதுமே ’திருமாவளவன் மற்றும் விடுதலை சிறுத்தைகளின்’ நோக்கமாக இருக்கிறது.

ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி கிருத்தவ நாடுகளிலிருந்து பணம் பெற வேண்டும் என்பதற்காக ’திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் ’என்று சாயம் பூச நினைக்கும் கூட்டத்திற்குச் சென்று, ’திருவள்ளுவர் இயேசுவிடம் ஞானஸ்தானம் பெற்றவர்’ என்ற கருத்தை வலிந்து சொல்வது; சனாதனம் என்றால் என்ன? என்ற அடிப்படையே தெரியாமல் அடிக்கடி அதைப் பற்றிப் பேசுவது; மதம் மாறியவர்களில் ஒருவர் ஒரு வணிக வளாகம் கட்டி விட்டால் அந்த ஊரில் உள்ள அனைவரும் வணிக வளாகம் கட்டி விட்டதை போல புரட்டிப் பேசுவது போன்றவையே இவர்களின் புதிய புராணமாக உள்ளது.

’தேவேந்திரகுல வேளாளர்கள்’ பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற வேண்டும் என்று சொன்னபோது தமிழ் தேசியவாதிகளும், திராவிட சிந்தனையாளர்களும், முற்போக்கு சிந்தனையாளர்களும்கூட இது பார்ப்பன சிந்தனை, ஆர்எஸ்எஸ் சிந்தனை, அதற்குள் ஐக்கியமாகி விட்டோம் என்றெல்லாம் எங்களை நாக்கூசாமல் பேசியவர்கள்; பேசக்கூடியவர்கள் இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டும்.

மாட்டு மாமிசம் சாப்பிடும் ஒரு சிலரின் பழக்கத்தை பொதுவாக்கி, ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் ‘இழிவைச் சுமத்தினால்’ அதை எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியுமா? அனைவரும் ஒரு பொதுவான பெயரின் கீழ் இயங்க முடியுமா? அதனால்தான் ’தேவேந்திரகுல வேளாளர்கள்’ தங்களது பூர்வீக அடையாளத்தை மீட்டெடுக்க ’தேவேந்திரகுல வேளாளர்’ பெயர் மாற்றம் மட்டும் போதாது; பட்டியல் வெளியேற்றமும் வேண்டும் என போர்க்குரல் எழுப்பினார்கள்.

திருமாவளவன் கூற்றுப்படி, வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர்களும், இந்தியாவில் உள்ள தலித்துக்கள் அனைவருமே மாட்டு மாமிசத்தைச் சாப்பிடக் கூடியவர்கள் அல்ல; அம்மக்களின் உணவு உரிமையும் அல்ல.

இஸ்லாமியர்களிலும் மாட்டு மாமிசத்தைச் சாப்பிடாத பலர் இருக்கிறார்கள். முற்போக்கு பேசிக்கொண்டு, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு பலரும் இந்த நாட்டினுடைய மூத்த குடிமக்களுக்கு பல வழிகளிலும் நிரந்தரமான ஒரு அவமானகரமான முத்திரையைக் குத்த விரும்புகிறார்கள்.

தலித் மக்களே.! ஆதிதிராவிட மக்களே.! போலி அம்பேத்கரிய வாதிகளிடம் எச்சரிக்கையாயிருங்கள்.! மாட்டுக்கறி சாப்பிடுவதும், துப்புரவுத் தொழிலில் ஈடுபடுவதும், மனிதக்கழிவுகளை எடுப்பதும் தலித் மக்களின் அடையாளமும் அல்ல; உரிமையும் அல்ல.

எனவே, அவற்றை அறவே ஒழித்து, காலத்தால் இழந்த மண்ணுரிமை – மனித உரிமை – வாழ்வுரிமையை மீட்டெடுப்பதே அண்ணல் அம்பேத்கர் வழி.!இன்று ஆம்பூரில் மாட்டு மாமிசத்திற்குத் தடை.!என்றாவது அகில பாரதம் முழுவதும், அனைத்து இந்திய மக்களும் மனமுகந்து மாட்டு மாமிசத்தை வெறுத்தொதுக்கும் நாள் வரும்.!

மாட்டிறைச்சியை மறப்போம்.! மனிதநேயம் காப்போம்.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here