வரிசையில் கடைசியில் நிற்கும் தொண்டர் துணைமுதல்வர் ஆகிறார்?

Yellow question mark glowing amid black question marks on black background. Horizontal composition with copy space. Q and A concept.

அகில இந்திய அளவில் அரசியலில் மிகப்பெரிய முன்னுதாரணங்களை தமிழகத்தின் ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க ஏற்படுத்தி சாதனை புரிந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தொண்டர்களின் வரிசையில் கடைசியில் நின்று கொண்டிருந்த ‘கடைக்கோடி’ தொண்டரை தமிழகத்தின் துணை முதல்வராக நியமிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பல்வேறு சந்தர்பங்களில் இவர்களின் கருத்துக்கள் சரியாகவே இருந்துள்ளன என்பதால், இப்போதும் சரியாகவே இருக்கும் என்று தெரிகிறது.
2011 ம் ஆண்டு ஆதவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி குறுகிய காலத்தில் கதாநாயகன், தயாரிப்பாளர், வினியோகஸ்தர் என்று கிடுகிடுவென உயர்ந்த தமிழகத்தின் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் அவர்.
அதற்கு முன்பே அவரது திறமையை உணர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி அழைத்து, தனது கட்சி பத்திரிக்கையான முரசொலியின் நிர்வாகத்தை 2007 ம் ஆண்டு கொடுத்து வரவிருக்கும் திறமையை அங்கீகரித்தார்.
அவர் தான் உதயநிதி ஸ்டாலின்!
தனது குடும்பத்திலிருந்து இனி யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று சன்டிவி நிகழ்ச்சி ஒன்றில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்ததால், சினிமாவில் உதயநிதி தீவிரமாக நடிக்கத் தொடங்கினார். (சினிமாவில் நடிக்க அவரது அப்பா தடைபோடாததால்).
பின்னர் 14.7.2018 அன்று சென்னையில் தி.மு.க மாற்றுத்திறனாளிகள் அணி சார்பில் நடிகர் உதயநிதி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதிலிருந்து உங்கள் பார்வைக்கு சில…
‘கதாநாயகன், முரசொலியின் நிர்வாகி, கருணாநிதியின் பேரன், மு.க.ஸ்டாலினின் மகன் என்பது பெருமை தான். ஆனால் அதனைவிடவும் மிகப்பெரிய பெருமையாக நான் கருதுவது தி.மு.க.வின் கடைக்கோடி தொண்டன் என்பதைத்தான்….’
இப்படி கடைக்கோடி தொண்டர்களில் ஒருவராகமட்டுமே அவர் 2018 ல் அரசியலில் இருந்தார். பொள்ளாச்சியில் நடந்த ஒரு கூட்டத்தில், ‘எனக்கு கட்சி பதவி கொடுக்க வேண்டும் என்று சிலர் பேசுகிறார்கள்…அதில் எனக்கு விருப்பம் இல்லை. தி.மு.க தொண்டர்களின் வரிசையில் நான் கடைசியாக நிற்பவன்’ என்றார்.
இவ்வளவு எளிமையான, பதவி ஆசையற்ற ஒருவரை தி.மு.க.வினர் விடுவார்களா? அவருக்கு கட்சி பதவி வழங்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களும், இளைஞரணி நிர்வாகிகளும் தனது குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று ஸ்டாலினின் முடிவிற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்பி வைத்தனர்.

அதனால் வேறுவழியில்லாமல் வெள்ளக்கோயில் சாமிநாதனிடமிருந்த இளைஞரணி செயலாளர் பதவியை 4.7.2019 ல், ஒரு ஆண்டு காலம் கடைசி வரிசையில் காத்திருந்து எந்த பதவியிலும் விருப்பமில்லாமல் இருந்த உதயநிதிக்கு ஸ்டாலின் அளித்தார்.

அதற்கு பின்னர் எம்எல்ஏ பதவியின் மீது விருப்பமில்லாத அவருக்கு சேப்பாக்கம் தொகுதியை கொடுத்து எம்எல்ஏவாக்கி பொதுமக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை கட்சி தலைமை கொடுத்தது.

இந்த சூழ்நிலையில், அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி துவங்கி கட்சியின் சீனியர் அமைச்சர் பலரும் தற்போது கடைக்கோடி தொண்டர் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். ஏற்கனவே தமிழக அமைச்சரவையில் உச்சவரம்பான 34 அமைச்சர்கள் இருப்பதால், உதயநிதிக்கு வழிவிட்டு பல அமைச்சர்கள் ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கின்றனர்.

ஆனால் உதயநிதிக்கு அமைச்சர், துணை முதல்வர் பதவிகள் மீது விருப்பமில்லை என்று அவரே கோவையில் இன்று பேசியிருக்கிறார். கோவை காளப்பட்டியில் நடந்த உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில், ‘இங்கு எனக்கு முன்பாக பேசிய சொத்துக்குழு உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி, அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் எனக்கு அமைச்சர் பதவி வழங்க வேணடும் என்று பேசினார்கள். ஒரு சிலர் நேரடியாக துணைமுதல்வராக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். பத்திரிக்கைகளும் எழுதி வருகின்றன. நான் என்றும் அதுபோன்ற எந்த பொறுப்புகளுக்கும் ஆசைப்படாதவன். மக்கள் பணியில் உங்களோடு இருக்கவே ஆசைப்படுகிறேன்’ என்று பேசியுள்ளார். வழக்கம்போல அவருக்கு பொறுப்புகள் மீது ஆசையில்லாததை தெரிவித்துள்ளதால், தமிழக மக்களின் நலனுக்காகவும், மூத்த அமைச்சர்களின் விருப்பத்தின் பேரிலும் விரைவில் தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க வாய்ப்புள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அனேகமாக அது விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here