அன்று பாலியல் பலாத்காரம்! இன்று தலித் தொழிலாளி கொடூர கொலை!!-நடப்பது விவசாயிகள் போராட்டமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், புரோக்கர்கள், ஒப்பந்த நிறுவனங்களிடமிருந்து விவசாயிகளை காப்பாற்றவும் மத்திய அரசு 3 வேளாண் மசோதாக்களை கொண்டு வந்தது. இதற்கு நாடு முழுவதிலும் விவசாயிகள் மத்தியில் வரவேற்பு உள்ள நிலையிலும், ‘விவசாயிகள்’ என்ற பெயரை பயன்படுத்தி மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக மக்களை திசைத்திருப்ப காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் முனைந்து வருகின்றன. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளின் விளைபொருட்கள் மூலம் கொழித்துக் கொண்டிருந்த இடைத்தரகர்கள் டில்லி எல்லையில் கடந்த ஒரு ஆண்டாக போராடி வருகின்றனர். உண்மையான விவசாயி, தன் விளைநிலங்கள், கால்நடைகளை விட்டு ஒரு நாள் கூட வெளியே வர முடியாத நிலையில், ஒரு ஆண்டாக ஒரு கும்பல் ‘விவசாயிகள்’ என்ற பெயரில் போராட்டம் நடத்தி வருவதை அவர்கள் உண்மையிலேயே விவசாயிகள் தானா என்ற சந்தேகத்தை வலுவாக்கியுள்ளது.

இதனிடையே இந்த போராட்டத்தின் பெயரில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கையிலெடுத்துள்ளது அம்பலமாகி வருகிறது. செங்கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது தேசிய கொடி மரத்தில் பிரிவினைவாத கொடியை ஏற்றியது முதல், லக்கம்பூரில் பாஜகவினர் வந்த கார் மீது தாக்குதல் நடத்தி அதன் மூலம் 8 பேர் கொல்லப்பட்டது வரை இந்த கொடூரம் நீடித்து வருகிறது.

விவசாய சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டக்களத்தில் எல்லா அத்துமீறலும், காங்கிரஸ், கம்யூனிச கட்சிகளால் கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது. போராட்டத்தில் கலந்து கொள்ள மேற்கு வங்கத்திலிருந்து டில்லிக்கு கிசான் சோஷியல் ஆர்மி என்ற அமைப்பினுடன் வந்த 25 வயது பெண் திடீரென மர்மமான முறையில் இறந்து போனார். அந்த பெண்ணின் தந்தை, பகதூர்கர் போலீசில் 8.5.2021 அன்று புகார் ஒன்று அளித்தார். அதில் தனது மகளை போராட்டக்களத்தில் வைத்து 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதன்காரணமாகவே மகள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பலியாகியுள்ளதாகவும் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இதில் தொடர்புடைய சிலரை கைது செய்தனர். மிகப்பெரிய கொடூரச்செயலான இது திட்டமிட்ட ரீதியில் மீடியாக்களாலும், எதிர்கட்சிகளாலும் மறைக்கப்பட்டது.

இப்போது அடுத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தலித் தொழிலாளி லக்பீர் சிங் என்பவர் விவசாயிகள் போராட்டக்களத்தில் கொடூரமாக கை துண்டிக்கப்பட்டு, ரத்தம் வடிந்து உயிர் போகும்படி தொங்கவிடப்படடு கொல்லப்பட்டுள்ளார். அவர் கைத்துண்டிக்கப்பட்டு கீழே கிடந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவரை சுற்றி நின்று மிரட்டி விசாரிக்கும் கொடூர வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதற்கு பின்னர் அந்த கும்பல் அந்த தொழிலாளியை போலீஸ் பேரிகார்டை திருப்பிப் போட்டு, அதில் கயிறால் கட்டி தொங்கவிட்டு விலங்கினைப் போல கொடூரமாக ரத்தத்தை இழந்து சாவதை ரசித்துள்ளனர்.

தலித் இளைஞரை கொடூரமாக கொன்ற இந்த படுபாதக செயலை, ராகுல்காந்தி, ஸ்டாலின், மம்தா, அகிலேஷ், திருமாவளவன் உள்ளிட்டோளரால் கண்டுகொள்ளாமல் கடந்து போய்கொண்டுள்ளனர். லக்பீர் சிங்கின் சகோதரி ராஜ்கவுர், தன் தம்பி போதை பொருளுக்கு அடிமையானவன், அவனிடம் 50 ரூபாய் மட்டுமே இருந்தது. அவன் டில்லி போராட்டத்திற்கு தானாக கிளம்பி சென்றிருக்க வாய்ப்பே இல்லை. அவனை அங்கு கொண்டு சென்று கொன்றுள்ளனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

சீக்கிய புனித நூலை அவமதித்தால் கொலை செய்தோம் என்று ஒரு கும்பல், ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது. ஆனால் போதைக்கு அடிமையான ஒருவன் புனித நூலை அவமதித்தான் என்பது நம்பும் படியாக இல்லை. மாறாக விவசாயிகள் பெயரில் நடக்கும் போராட்டக்களத்தில், தொடர் வன்முறையை அரங்கேற்றி, நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த நடக்கும் சதியாகவே இது தெரிகிறது.

போலி விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஆதரவாக உண்மை விவசாயிகள் குரல் கொடுக்கவேண்டும். இல்லையெனில் விவசாயம் என்ற புனித தொழிலின் மீது கறை படிவதை தவிர்க்க முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here