பல மாநில கலவரங்கள்… பின்னணி என்ன?

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஆனால் இந்த ஜனநாயகத்திற்கு பல்வேறு வடிவங்களில் அனுதினமும் அச்சுறுத்தல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. வஉசி, பாரதியார், வாஞ்சிநாதன் போன்ற எண்ணற்றோர் தங்கள் வாழ்க்கை, சொத்து, உயிர் என்று விலைமதிப்பில்லாதவற்றை தியாகம் செய்து பெற்று தந்த ஓட்டுரிமையை வெறும் கால்கொலுசுக்கும், ஆயிரம் ரூபாய் பணத்திற்கும் விற்பனை செய்யும் பரிதாப நிலையில் மக்கள் இருக்கின்றனர். விலைமதிப்பில்லா ஓட்டினை சொற்ப செலவில் வாங்கிட அரசியல் கட்சிகள் துடிக்கின்றன. இனி சாமானியர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதோ என்ற துர்பாக்கியமான நிலையை நோக்கி நாடு குறிப்பாக தமிழகம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற அசைக்கமுடியாத தலைவராக நரேந்திரமோடி உருவாகிவிட்டார். கோவிட் போன்ற பெருந்தொற்று காலத்தில் மக்களை காப்பதில் வளர்ந்த நாடுகளே திணறிக் கொண்டிருந்த நிலையில், பாரதத்தில் நிலைமையை திறமையாக சமாளித்தார் மோடி. கோவிட் காலத்திற்கு பின்னரும் நாட்டின் பொருளாதாரத்தை வலுவான நிலையில் வைப்பதில் மோடி வெற்றி பெற்றுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா எடுத்த நிலைபாட்டிற்கு வேறு வழியின்றி அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. இதனால் சர்வதேச அளவில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பிரதமர் மோடியை தோற்கடித்தே ஆக வேண்டும் என்று விரும்புகின்றனர்.

உள்நாட்டிலும் பிரதமர் மோடிக்கு மக்கள் செல்வாக்கு அபரீதமாக உயர்ந்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும், 2024 ம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடித்தே ஆக வேண்டும் என்று நாட்டில் உள்ள எதிர்கட்சிகள் கங்கணம் கட்டி வேலை செய்கின்றனர். அவர்களுக்கு வெளிநாட்டு சக்திகளும் உதவுகின்றன. இதற்காக பல டூல்கிட் சதிகள் அரங்கேறுகின்றன. நரேந்திமோடியின் தொடர் வெற்றிக்கு தடைப்போட வேண்டுமானால், 80 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ள உத்திரபிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் தோற்கடித்தே ஆக வேண்டும் என்று திட்டமிட்ட அவர்கள், கர்நாடக மாநிலத்தில் திடீரென ஹிஜாப் பிரச்சனையை கிளப்பினர். ஆனால் அதையெல்லாம் தாண்டி பாஜக வெற்றி பெற்று மீண்டும் யோகி ஆட்சியில் அமர்ந்துவிட்டார்.

இனி நரேந்திரமோடியை தோற்கடிக்க எதிர்கட்சிகள் வேறு உபாயங்களை தேடத்தொடங்கியுள்ளன. 2014 ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததிலிருந்து சிறுசிறு சம்பவங்களைத் தவிர வேறு எந்த கலவரங்களும் நடக்கவில்லை. இதனால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டது. மக்கள் மத்தியில்,ஊழலற்ற வளர்ச்சித் திட்டங்களால் பாஜகவிற்கு செல்வாக்கு பெருகி வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்றால், நாட்டில் கலவரங்களை தூண்டிவிட வேண்டும் என்று சிலர் திட்டமிட்டு செயல்பட்டுவருகின்றனர்.

அதன் எதிரொலியே தற்போது கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், டில்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் திட்டமிட்ட ரீதியில் இந்துக்களை நோக்கி தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இந்துக்கள் பதிலடி கொடுத்தால் அதை வைத்து பிரச்சனையை பூதகாரமாக்கிவிட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் நிலைமையை திறமையாக கையாண்டு தேசவிரோத சக்திகள் ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.

இன்னும் இரு ஆண்டுகளுக்கு இதுபோன்ற சதி செயல்களை தொடர்ந்து எதிர்பார்க்கலாம். மேற்கு வங்கத் தேர்தலுக்கு முன்பாக மம்தா பானர்ஜி காலில் கட்டுப்போட்டு நாடகமாடினார். இது போன்றும், இதைவிடவும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே தேசத்தின் நலன் நாடுபவர்கள் இதை கண்டு உணர்ச்சிவசப்படாமல் எதிர்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் கருத்துரிமை என்று வாய்கிழிய பேசும் நபர்கள், இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றில் பிரதமர் மோடியை பாராட்டியதற்கே பொறுக்க முடியாமல் அவர் மீது கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டம், முத்ரா கடன் திட்டம், ஸ்வச்பாரத் திட்ட கழிப்பறைகள், செல்வமகள் சேமிப்புத்திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பல்வேறு திட்டங்கள் மூலம் மத்திய அரசு வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மீது ஸ்டிக்கர் ஒட்டி, தாங்கள் செய்ததாக காட்டிக் கொள்ளும் திமுக அரசு, மோடி எதிர்ப்பு என்ற விஷவிதையை தூவிக் கொண்டே இருக்கிறது. அதையும் தாண்டி பாஜகவினர் செய்யும் களப்பணி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

மக்கள் உண்மையை உணர்ந்து வருகிறார்கள். நாடகம், சூட்டிங் போன்ற வேஷங்களுக்கும், டூல் கிட் சதித்திட்டங்களுக்கும் பலியாகமாட்டார்கள். 2024 ம் ஆண்டு மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும். உலகின் குருவாக நாடு உயரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here