இந்து தர்மம் எப்போது தோன்றியது?பகுத்தறிவற்ற பகுத்தறிவாளர்கள்!-இந்துவன் பதிலடி!!

இந்து தர்மம் என்று தோன்றியது…? யாராலும் கூற முடியாது. <உலக மக்கள் அனைவரையும் ஒரு குடும்பமாக பார்க்கும் இந்து தர்மத்தை அழிக்கத்துடிக்கும் நாத்திகர்கள், ஆங்கிலேயனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்து மதம் தோற்றுவிக்கப்பட்டதைப்போல(!) ஒரு கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதைக்கண்டுக் கொள்ளாமல் விட்டால், இதையே <உண்மை என்று நம்பும் மூடர்களும் இருப்பார்கள். இதற்கு தகுந்த ஆதாரத்தோடு தகுந்த பதிலடி கொடுக்கிறார் எழுத்தாளர் ப.இந்துவன்… அவரது கட்டுரை…

பெரியாரிய பக்கங்களில்… சமணம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் அந்தந்த மத நிறுவனர்கள் வாழ்ந்த காலங்களிலேயே உருவாக்கப்பட்டது என்றும், ஆனால் இந்து மதம் மட்டும் வில்லியம் ஜோன்ஸால் உருவாக்கப்பட்டது என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

அதாவது சமணம் பௌத்தம் இஸ்லாம் கிறிஸ்தவம் போன்ற மதங்களுக்கு மகாவீரர், கௌதம புத்தர், இயேசு, நபிகளார் போன்றவர்கள் வாழ்ந்த காலத்தை குறிப்பிட்டுள்ள அறிவு ஜீவிகள் இந்து மதத்திற்கு சிவன், திருமால், முருகன், பிரம்மா போன்ற தெய்வங்கள் வாழ்ந்த காலகட்டத்தை குறிப்பிடாமல் இந்து என்ற பெயர் வைத்தாக கூறப்படும் காலத்தை குறிப்பிட்டுள்ளார்கள்…!
(இவர்களின் அறிவைக் கண்டு வியக்கிறேன்)

இதை பகுத்தறிவோடு ஆராய்ந்தால் இந்து மதத்திற்கு அதற்கு பெயர் வந்த காலத்தை குறிப்பிட்ட இவர்கள் சமண மதம், பௌத்த மதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்தவ மதம் போன்ற பெயர்கள் எப்போது வந்ததோ அந்த காலகட்டத்தைதானே இவர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்?

ஏன் இந்து மதத்திற்கு மட்டும் இந்து என்று பெயர் வைத்த காலகட்டத்தையும் மற்ற மதத்திற்கு அந்தந்த மத ஸ்தாபனர்கள் வாழ்ந்த காலகட்டத்தையும் போட்டுள்ளார்கள் என்று சிந்தித்தால் நீங்கள் மதவெறியாளர்களாக பார்க்கப்படுவீர்கள்…!

நமது மதத்திற்கு இந்து என்ற பெயர் வைக்கப்பட்ட காலத்தை வைத்து பார்த்தால் கூட இவர்கள் குறிப்பிட்டிருக்கும் காலத்திற்கு முன்பே இந்து என்ற பெயர் வந்துவிட்டது.

முதலில் பாரத மக்களை இந்துக்கள் என்று அழைக்கும் வழக்கம் இன்றிலிருந்து 2500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது. இதற்கு சான்றாக காலத்தால் முந்தைய கல்வெட்டு 2500 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் டேரிஸ் என்ற அரசனின் காலத்தில் பாரசீக மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது…!

இது இன்று நமக்கு கிடைக்கும் காலத்தால் முந்தைய இந்து என்ற சொல்லாடலுக்கு தொல்லியல் சான்றாகும்.
அடுத்ததாக இஸ்லாமிய மார்க்க அறிஞரான அல்பெரூனி என்பவரால் இந்திய தத்துவ ஞான மரபுகள் பற்றி எழுதப்பட்ட நூலான தாரிக் அல் ஹிந்த் எனும் நூலில் முக்கியமாக இந்நூல் எழுதப்பட்ட காலமான கிபி 1030 களில் இந்தியாவில் இருந்த தத்துவ மரபிற்கு அவர் ஹிந்து என்று பெயரிட்டு எழுதி உள்ளார். அதாகப்பட்டது 1000 ஆண்டுகளுக்கு முன்பே இந்து என்ற பெயர் இருந்துள்ளது என்பதற்கு இது ஆகச்சிறந்த உதாரணம்…!

இன்னும் ஒருபடி மேலாக சொல்லணும்னா இவர்கள் குறிப்பிடும் காலத்திற்கு முன்பானதாக எழுதப்பட்டதாக நம்பப்படும் பைபிள் பழைய ஏற்பாட்டிலேயே இந்து என்ற சொல்லாடல் உண்டு. அதாவது நமது பாரத தேசத்தை இந்துதேசம் என்று அழைத்தார்கள் என்பதற்கு பைபிள் பழைய ஏற்பாடு எஸ்தர் 1:1 ஆம் வசனம் பறைசாற்றும் என்பதை நண்பர்கள் சரிபார்த்துக்கொள்ளலாம்.

இந்த புகைப்படத்தில் சமண மதத்தை முதலில் தோன்றிய மதமாக சித்தரித்துள்ளனர் என்பதால் ஒரு சிறிய தகவலை கூட பார்த்துவிட்டு முடித்துவிடுவோம்…!
சமணமும் பௌத்தமும் அதனதன் நிலப்பரப்பில் உருபெறுவதற்கு முன்பே தமிழக நிலப்பரப்பில் திருமால் வழிபாடு, முருகன் வழிபாடு, இந்திர வழிபாடு, வருண வழிபாடு, கொற்றவை வழிபாடு முதலான வழிபாடுகள் இருந்ததற்கு சான்றாக இன்றிலிருந்து 2700 ஆண்டுகளுக்கு முன்னதாக எழுதப்பட்டதாக பெரும்பான்மையான அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் தொல்காப்பியத்தில்,

‘மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே‘

  • தொல்காப்பியம்.

என்ற வரிகளை மேற்கோளிடலாம். அன்றைய தமிழகத்தின் தென்பகுதியில் பொ.மு மூன்றாம் நூற்றாண்டுவாக்கில் குடிமல்லம் சிவன்கோவில், சாளுவன்குப்பம் முருகன்கோவில் முதலான தொல்லியல் துறையினரால் நிரூபணம் செய்யப்பட்ட கோவில்கள் இருந்ததோடு இதே காலகட்டத்தில் சிவன், முருகன், திருமால், பலராமன் போன்ற நாற்பெரும் தெய்வங்களின் வழிபாடு பரவலாக இருந்தது என்பதற்கு சான்றாக புறநானூற்றில் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் எழுதிய பாடலை மேற்கோளிடலாம்…!

‘ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும், கடல்வளர் புரிவளை புரையும் மேனி அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடி யோனும்,
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும் மணிமயில் உயரிய மாறா வென்றிப் பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்என ஞாலம் காக்கும் கால முன்பின் தோலா நல்இசை நால்வர் உள்ளும் கூற்றுஒத் தீயே மாற்றருஞ் சீற்றம்; வலிஒத் தீயே வாலி யோனைப்; புகழ்ஒத் தீயே இகழுநர் அடுநனை; முருகுஒத் தீயே முன்னியது முடித்தலின்‘

  • புறநானூறு.

பொருள் : காளைக்கொடியை வெற்றியின் அடையாளமாக உயர்த்திப் பிடித்து, நெருப்புப் போல் ஒளிவிடும் சடையோடும், ஒப்பற்ற கணிச்சி என்னும் ஆயுதத்தோடும்,
நீலநிறக் கழுத்தோடும் காட்சி அளிப்பவன் சிவபெருமான். கடலில் வளரும் முறுக்கிய சங்கு போன்ற வெண்ணிற மேனியும், கொல்லுதலை விரும்பும் கலப்பையும், பனைக்கொடியும் உடையவன் பலராமன். கழுவப்பட்ட அழகிய நீலமணி போன்ற உடலும், வானளாவ உயர்ந்த கருடக் கொடியும் கொண்டு வெற்றியை விரும்புபவன் திருமால்.
நீலமணி போன்ற நிறத்தையுடைய மயிற்கொடியும், உறுதியான வெற்றியும், மயிலை ஊர்தியாகவும் (வாகனமாகவும்) கொண்ட ஓளிபொருந்தியவன் முருகன்.

இந்நான்கு கடவுளரும் உலகம் காக்கும் வலிமையும் அழியாத புகழும் உடையவர்கள். இந்த நால்வருள்ளும், உன்னுடைய நீங்காத சினத்தால் நீ அழிக்கும் கடவுளாகிய சிவனுக்கு ஒப்பானவன்; வலிமையில் பலராமனுக்கு ஒப்பானவன்; புகழில் பகைவரைக் கொல்லும் திருமாலுக்கு ஒப்பானவன்; நினைப்பதை முடிப்பதில் முருகனுக்கு ஒப்பானவன்.

இவ்வாறு ஆங்காங்கு அந்த அந்தக் கடவுளை ஒத்தவனாக இருப்பதால், உன்னால் செய்ய முடியாத செயலும் உண்டோ? என்று பாண்டியனைப்பார்த்து மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் கேட்பதாக அமைகிறது இந்த பாடல். இது பொ.மு மூன்றாம் நூற்றாண்டுப் பாடல்…!

வரலாறு இவ்வாறு இருக்க இவர்கள் எதன் அடிப்படையில் இந்து மதத்திற்கு முன்பாக சமணம் பௌத்தத்தை முன்னிறுத்துகிறார்கள்? குறைந்தபட்சம் தமிழக நிலப்பரப்பில் விநாயகர் சிற்பங்கள் கிடைக்கும் காலத்திலாவது புத்தர் சிற்பமோ, அருகதேவரின் சிற்பங்களோ கிடைத்ததுண்டா? என்றால் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கும் நிலையில் சமணமும் பௌத்தமும் செழித்து வளர்ந்திருந்தது என்பதற்கு இவர்களிடம் என்னென்ன சான்றுகள் உள்ளன?

ஒருவேளை அவர்கள் எதாவது தொடர்புக்கதைகளுடன் வந்தாலும் அதே காலகட்டத்தில் பொமு 2700 வரை தமிழகத்தில் திருமால், முருகன், கொற்றவை போன்ற இறை வழிபாடுகள் இருந்ததற்கு தகுந்த ஆவணங்கள் இருக்கும்போது எப்படி இந்து மதத்திற்கு முன்பாக சமணம் பௌத்தத்தை எடுத்துச்செல்ல முடியும் என்பதே பெரும்பான்மை தமிழர்களின் கேள்வியாக உள்ளது. இந்து என்ற பெயரின் அடிப்படையில் தொல்லியல் ரீதியாகவும், தெய்வங்களின் பெயர்களின் அடிப்படையில் 2700 ஆண்டுகளுக்கு முன்பு இலக்கிய ரீதியாகவும் சான்றுகள் கொடுத்துவிட்டோம் என்பதை கூறிக்கொண்டு இந்த அட்டவணையில் இருப்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here