அடுத்தடுத்து அடி! திருந்துமா திமுக அரசு?

தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சி கட்டிலில் ஏறியதும், சில அதிகாரிகள் மற்றும் திராவிட, கம்யூனிச பிரிவினைவாத சக்திகளின் பிடியில் முதல்வர் ஸ்டாலின் சிக்கிக் கொண்டுவிட்டாரோ என்ற சந்தேகிக்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடந்தேறின.

திமுக துவங்கி 71 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென கடந்த ஆண்டு முதல் மத்திய அரசை, ‘ஒன்றிய அரசு’ என்று திமுக அழைக்கத்தொடங்கியது. திமுகவிடம் கட்சியை அடகு வைத்துவிட்ட கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளும் திடீர் ஞானோதயம் பெற்று ஒன்றிய அரசு என்று துதி பாட துவங்கிவிட்டன.

அமெரிக்கா போன்ற நாடுகள் பல மாநிலங்கள் சேர்ந்து உருவாகி ஒப்பந்த அடிப்படையிலான நாடுகள் ஆகும். ஆனால் பாரதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒரே நாடாக இருந்தது. இவர்கள் கூறும் 15.8.1947 ல் நாடு சுதந்திரம் பெற்ற போது ‘இந்தியா’ உருவானபோது, இப்போதுள்ள மாநிலங்கள் இல்லை. தமிழ்நாடு இல்லை, கேரளா இல்லை, ஆந்திரா இல்லை… இல்லாத இந்த மாநிலங்கள் சேர்ந்து எப்படி நாட்டை உருவாக்கியிருக்க முடியும் என்ற கேள்விக்கு பதில் இல்லை.

இதற்கு பின்னர் தொடர்ந்து இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் துவங்கின. கரோனா ஊரடங்கு சமயத்தில் இந்துக்களின் கோயில்களுக்கு தடைகள் போடப்பட்டன. ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இந்து கோயில்கள் மட்டும் இடித்து தள்ளப்பட்டன.

எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய இனிகோ இருதயராஜ் என்ற திமுக எம்எல்ஏ, தனது தொகுதி பிரச்சனை குறித்து சட்டசபையில் பேசாமல், தமிழகம் முழுவதும் வீடுகளில் ஜெபக்கூட்டங்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு ஊரிலும் 5 ஏக்கர் நிலத்தை கிருஸ்தவர்களின் சவ அடக்கத்திற்கு அளிக்க வேண்டும் என்றும் பேசினார்.

‘நான் ஓட்டுப்போட்டவர்களுக்கும், ஓட்டுப்போடாதவர்களுக்கும் பொதுவான முதல்வராக இருப்பேன்’ என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், கிருஸ்தவ, முஸ்லீம் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வார். ஆனால் இந்து பண்டிகைகளுக்கு மறந்தும் வாழ்த்து சொல்வதில்லை. இப்பிரச்னை சட்டசபைவரை எதிரொலித்தது.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ‘திமுக அரசை ஆன்மீகத்திற்கு எதிரான அரசாக சித்தரிக்க முயற்சிகள் நடக்கிறது. இந்த சதி நிறைவேறாது. இது திராவிடமாடல் ஆட்சி’ என்று முழங்கியிருக்கிறார். அதாவது ஆன்மீகம் என்றாலே இந்து மதம் தான் என்று ஒத்துக் கொள்ள வேண்டிய நிலை முதல்வருக்கு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் அயோத்தியா மண்டபத்தை கைப்பற்ற முயற்சித்து கோர்ட்டில் வாங்கிக்கட்டிக் கொண்ட திமுக அரசு, தற்போது தருமபுர ஆதினத்தின் பாரம்பரிய பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு வீரமணி வகையறாவின் தூண்டுதலால் தடை விதித்துள்ளது.

இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பவே தற்போது மெல்ல பின்வாங்கத் தொடங்கியுள்ளது.

திமுக அரசை, தங்கள் மதமாற்றப்பணிக்காகவும், தேசப்பிரிவினை விஷக்கருத்திற்கு ஒத்துப்போகச் செய்யவும் முயற்சித்து வருகின்றனர். அடுத்த தேர்தலுக்கு அதிக நாளில்லை. ஹாட்பாக்ஸ், கொலுசு எப்போதும் கைகொடுத்துவிடாது என்பதை திமுக தலைமை உணர்ந்து கொள்வது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here