தமிழகத்தில் 2016 ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்று திமுக உறுதியாக நம்பியது. அதற்கு தகுந்தார் போல தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் 8 க்கு 5 ல் திமுக தான் வெற்றி பெறும் என்று கூறின.
ஆனால் தேர்தல் முடிவு திமுகவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிமுக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றது. 2011 தேர்தலில் கிடைத்த இடங்களிலிருந்து எண்ணிக்கை குறைந்தாலும் அறுதி பெரும்பான்மைக்கு தேவையான 117 க்கு மேல் 136 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து சாதனை புரிந்தது.
திமுக 89 இடங்களுடன் மீண்டும் எதிர்கட்சியாக தொடர வேண்டியதாயிற்று. கடந்த தேர்தலைவிட அதிமுகவிற்கு 10.14 சதவீத ஓட்டுக்கள் குறைந்து 41.88 சதவீத ஓட்டுக்கள் தான் பெற்றிருந்தாலும் பெரும்பான்மை இடங்களை பிடித்துவிட்டதற்கு காரணம், அதிமுகவிற்கு எதிரான ஓட்டுக்கள் சிதறியதே. கடந்த தேர்தலைவிட திமுகவிற்கு 39.85 சதவீதம் ஓட்டுக்கள் தான் கிடைத்தது. இது கடந்த தேர்தலை விட 0.35 சதவீதம் மட்டுமே அதிகம். வெறும் 2.3 சதவீத ஓட்டுக்களால் ஆட்சியை பிடிக்க முடியாமல், தற்போதைய தலைவர் ஸ்டாலின் முதல்வர் பதவிக்காக மேலும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று.
இதற்கு முக்கிய காரணம், தேமுதிகவுடன் சேர்ந்து மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழ்மாநில காங்கிரஸ் ஆகியவை உருவாக்கிய மக்கள் நலக்கூட்டணி 6.1 சதவீத அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பிரித்ததே.
இந்ததேர்தலில் படுதோல்வியுடன் ஏறக்குறைய நடிகர் விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. ஜெ.மறைவிற்கு பிறகு பாஜக ஆதரவால் அதிமுக ஆட்சியை 4 ஆண்டுகள் தக்க வைத்துக் கொண்டது. இதனால் வாசனை தவிர மற்றவர்கள் திமுக கூட்டணிக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்கள்.

மக்கள் நலக்கூட்டணி தான் திமுகவை 2016 தேர்தலில் தோற்கடித்தது என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக நம்பினார் என்பது அடுத்தடுத்து அவரது நடவடிக்கையில் தெரியவருகிறது. அதிமுகவை வீழ்த்த கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி தேவை, அதே சமயம், அவர்களின் மக்கள் நலக்கூட்டணி நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்று திமுக கருதியது.
அதில் முதலில் சிக்கியது கம்யூனிஸ்ட் கட்சிகள். தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது, தொகுதிகள் மட்டும் செலவிற்கு பணம் போன்றவை திரைமறைவில் நடப்பது தான். ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ரூ.25 கோடியை திமுக வழங்கியது. அதை வங்கி மூலம் கொடுத்ததுடன், தேர்தல் ஆணையத்திற்கு கணக்கும் காண்பித்தது.
இதுவரை நேர்மை, கொள்கை என்று பேசி வந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் திருடனுக்கு தேள் கொட்டியது போல விழித்தன. இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் திணறின. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் திமுகவிடம் அடகு வைக்கப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் பிரச்சாரத்தை எதிர்கொள்ள இதுவரை கம்யூனிஸ்ட்கள் திணறி வருகின்றனர். அதற்கு அடுத்த சட்டசபை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக அளிக்கும் இடங்களை பெற்றுக் கொள்ள வேண்டிய பரிதாப நிலைக்கு கம்யூனிஸ்ட்கள் வந்துவிட்டனர்.
இதற்கு அடுத்ததாக மக்கள் நலக்கூட்டணியில் திமுகவிற்கு எதிராக போர்முழக்கமிட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. திமுகவிடம் தொகுதிகளை வாங்க பாடாத பாடுபடவேண்டியதாயிற்று. அத்தோடு, வேட்பாளர்கள் திமுக சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை வேறு. விளைவு, இன்று மதிமுகவிற்கு என்று நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இல்லை. போனால் போகிறது என்று வைகோவிற்கு மட்டும் ராஜ்யசபா பதவி அளிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றாலும் அமைச்சரவையில் கூட்டணிக்கட்சியினருக்கு இடம் அளிக்க திமுக முன்வரவில்லை. ஆனால் அதை கேட்கக்கூட அதன் கூட்டணிக்கட்சிகளுக்கு வலிமை இல்லை என்பது தான் சோகம்.
தனது மகனை பட்டத்திற்கு கொண்டு வந்துள்ள வைகோவிற்கு தற்போது கட்சியிலேயே கடும் எதிர்ப்பு. எதிர்ப்பாளர்கள் கூறுவது இது தான்… மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிட வேண்டும்….. எந்த காரணத்திற்காக திமுகவிலிருந்து விலகிச் சென்றாரோ அந்த காரணத்தை (வாரிசு அரசியலை) தன் கட்சியிலேயே கடைப்பிடிக்க முடியவில்லை. பின்னர் ஏன் தனிக்கட்சி நடத்த வேண்டும் என்று பல மாவட்ட செயலாளர்கள் கேட்பது நியாயம் தானே என்கின்றனர் பொதுமக்கள்.. ஆம்… திமுக சொல்லாமல் அடித்து மதிமுகவை கரைத்துக் கொண்டிருக்கிறது.
மக்கள் நலக்கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அனுபவங்களும் சோகம் தான். 50:50 ஒப்பந்தபடி இரு நாடாளுமன்ற இடங்களில் ஒன்றில் திமுக சார்பில் போட்டியிட வேண்டியதாயிற்று. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அக்கட்சியினர் கொடிமரம் நட்டக்கூட காவல்துறை அனுமதிப்பதில்லை. உள்ளாட்சித்தேர்தலில் ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியாக போட்டிபோட்டு வெற்றி பெற்றுவிட்டனர். ஆனாலும் திமுக தலைமை பெயரளவிற்கே நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்முகாமிற்கும் செல்லமுடியாமல், வேறு வழியில்லாம் இந்த கட்சியினர் திமுக கூட்டணியிலேயே நீடிக்க வேண்டிய நிலை. பணம், பதவிக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு, கடைசியில் தங்கள் கட்சியையும் தியாகம் செய்துவிட்டு தொடருகின்றனர் இந்த கட்சியினர்.
ஆனால் திமுகவுடன் எப்போதும் கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு, அவர்கள் பலமிழந்த நிலையிலும் கவுரமாக நடத்துகிறது திமுக. இன்னும் சில ஆண்டுகளில் இந்த கட்சிகள் லெட்டர் பேட் கட்சிகளாக மாறிவிட்டாலும் ஆச்சரியமில்லை. அதற்கு திமுக தான் காரணமாக இருக்கப்போகிறது என்று திமுகவினருக்கும் தெரியும், அதன் கூட்டணிக்கட்சியினருக்கும் தெரியும்.