‘பூசலார்’ நிலையில் நடுத்தர மக்கள் சொந்த வீடு கனவுக்கு வேட்டு?

பதிவுச்சுருக்கம்:

👉என்ன ஆச்சு கட்டுமான பொருட்களுக்கு?

👉ஐகோர்ட்டில் வழக்கு.

👉ஏழை மக்கள் வாயில் மண்போட்ட மணல் குவாரிகள்…

👉எம்.சாண்ட் நிலைமையும் பரிதாபம்தான்

👉எகிறும் கட்டுமான செலவுகள்

இங்கே உள்ள தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பூசலார் பற்றி இன்றைய தலைமுறைக்கு கொஞ்சம் தெரிய வாய்ப்பில்லைதான். ஆனால், கொஞ்சம் இறை பக்தி இருந்தால், இந்த பூசலார், இறைவன் சிவனுக்காக மனதிலேயே கோயில் கட்டி, குடமுழுக்கு நடத்தி, அதில் இறைவனை குடிவைத்தவர் என்பதை புரிந்து கொள்ளமுடியும்.
தமிழகத்தின் புதிய விடியலாக, கட்டுமானப் பொருட்களின் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விண்ணை மூட்டித் துளைத்துப் பாயும் ராக்கெட் போல் பறந்து கொண்டே இருக்கிறது. தடுப்பாரும் இல்லை. தட்டிக் கேட்பாரும் இல்லை. இதனால், சொந்த வீடு கட்டும் கனவில் இருந்த நடுத்தர மக்களின் நிலைமை இப்போது பூசலார் நிலைமை போல் ஆகிவிட்டது.
காரணம், பூசலார் இறைவனுக்காக மனதில் கோயில் கட்டியதுபோல், சொந்த வீடு கட்டும் கனவில் உள்ள மக்களும், தங்கள் மனதிலேயே நிலம் உள்ளதாக கற்பனையாக நினைத்துக் கொள்ள வேண்டும். பூசலார் வாஸ்து செய்து, கோயில் கட்டியதுபோல், மனதிலேயே வாஸ்து செய்து, கற்பனையிலேயே வீடுகட்டி, பால் காய்ச்சிக் கொள்ள வேண்டும். அப்படித்தான் ஆகிவிட்டது இன்றைய நிலைமை.

என்ன ஆச்சு கட்டுமான பொருட்களுக்கு?

தமிழகத்தில் கட்டுமானப் பொருட்கள் விலை, எப்போதும் மற்ற மாநிலங்களைவிட மிகமிக அதிகமாகவே இருக்கும் என்பது உண்மை. இப்போது மட்டுமல்ல, இந்தப் பிரச்னை 15 ஆண்டுகளாகவே நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில், முதல் அடி சிமென்ட்தான். சிமென்ட் தயாரிப்பாளர்கள், அண்டர் வேர்ல்ட் தாதாக்கள்போல்தான். அதாவது வெளியில் தெரியமாட்டார்கள். ஆனால், அவர்கள் ஏற்படுத்தும் விளைவுகள், பொதுமக்களை கடினமாக பாதிக்கும்.
இப்படித்தான், கட்டுமானத்தை ஸ்தம்பிக்கும் வகையில், சிமென்ட் விலைகள் தாருமாறாக உயர்ந்த நேரத்தில், அரசின் அம்மா சிமென்ட் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதாவது, தமிழகத்தில் சிமென்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியின் நிர்ணயிக்கப்பட்ட ஒரு பங்கை அரசுக்கு வழங்கிட வேண்டும். இந்தத் திட்டம் இப்போதும் உள்ளது. ஆனால், அரசு சிமென்ட் வாங்கி வீடுகட்ட நினைத்தால், அது எவ்வளவு பெரிய காலதாமதம், கால விரயத்தை ஏற்படுத்தும் என்பது, அனுபவப்பட்டவர்களுக்கு புரியும். அங்கேயும் ஊழல், அரசியல் உள்ளது.
தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு முன்னர் அரசு சிமென்ட் சில்லறை 380 ரூபாயாக இருந்தது. இதுதான், ஓரளவு விலை குறைவான, பிராண்டட் சிமென்ட். இதன் பின்னர் சிமென்ட் விலையைக் கேட்டால், 460 ரூபாய் வரை பிரபல நிறுவனங்களின் பிராண்டட் சிமென்ட் மூட்டைகள் கிடைத்தன. இப்போது பிராண்டட் சிமென்ட் மூட்டை ஒன்றின் விலை 500 முதல் 520 ரூபாயாகும். சராசரியாக மூட்டைக்கு 60 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.

ஐகோர்ட்டில் வழக்கு

நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சுண்ணாம்புக் கல் மிகவும் அதீதமாக கிடைக்கின்றன. இதனால், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சிமென்ட் விலை மிகவும் குறைவுதான். இங்கே ஒரு மூட்டை 500 ரூபாய்க்கு விற்கும் சிமென்ட், ஆந்திராவில் 200 ரூபாய் வரை குறைவாகவே விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, தரமான பிராண்டட் மூட்டை சிமென்ட் 320 ரூபாய்க்கு கிடைக்கும். ஆனால், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியைத் தாண்டி, இந்த சிமென்ட் மூட்டைகள் பயணிக்க முடியாது. அவ்வளவு சிமென்ட் லாபி அரசியல் நடக்கிறது.


இதிலென்ன அரசியல் என்று நீங்கள் கேட்கலாம்? அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியை நடத்துவதற்கு எங்கிருந்து நிதி பெறுகின்றன. எல்லாம் இந்த சிமென்ட் தயாரிக்கும் பெரும் முதலாளிகளிடம் இருந்துதான். இதற்கு ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் விதிவிலக்கல்ல. எந்த ஒரு கட்சி புதிதாக ஆட்சிக்கு வந்தாலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிம்மதியாக தொழில் நடத்த வேண்டும் என்பதற்காக, சிமென்ட் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், அரசியல் கட்சிகளுடன் MoU அதாவது, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். இதுசரியாக செட்டிலாகிவிட்டால், 2 தரப்பம் பரஸ்பரம் தங்கள் தொழிலில் கவனமாக இருந்து, மக்களை வதைப்பார்கள்.
இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழகத்தில் சிமென்ட் விலையை கட்டுப்படுத்தக்கோரியும், இதில் உள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தக் கோரியும் ஐகோர்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு ஏப்ரல் 21ல், நீதிபதி பவானி சுப்புராயனால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சிபஐ 3 மாதத்தில் அறிக்கைத் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இது இரும்பு கம்பியின் நிலை?

தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் டிஎம்டி ராடு ஒரு டன் 36 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே. நல்ல பிராண்டட் டிஎம்டி கம்பிகள் கிடைத்தது. ஆனால், இப்போது, ஒரு டன் பிராண்டட் டிஎம்டி விலை 72 ஆயிரம் ரூபாயாகும். இதில், உள்ள அரசியலும், உலக அரசியலும் கொடிகட்டிப் பறக்கிறது.
இன்றைய சூழலில் உலகின் நம்பர் ஒன் இரும்பு உருக்கு உற்பத்தியாளர் சீனாதான். 2019 ஜூன் தொடங்கி, இப்போது வரை உலகில் உள்ள இரும்புத்தாதுக்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான தாதுக்களை சீனா வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா 25 முதல் 30 சதவீதம் தாதுக்களை வாங்கிக் கொண்டிருக்கிறது.
அதேநேரத்தில், இந்தியாவில் தயாரிக்கப்படும் இரும்புத் தளவாடங்களை அதிகம் கொள்முதல் செய்யும் நாடு எது தெரியுமா? சாட்சாத் சீனாதான். ஏற்றுமதியால் அதிக லாபம் கிடைப்பதால், இந்தியாவின் இரும்பு உருக்கு உற்பத்தியாளர்கள் சீனாவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்கின்றனர். இதைத் தடுத்து, உள்ளூர் சந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்தால், இரும்பு தளவாடங்கள், டிஎம்டி கம்பிகள் விலை கணிசமாக குறையும்.
உலக அரசியல் இப்படியென்றால், உள்ளூர் அரசியலின் நிலை வேறு. இந்தியாவில் இரும்புப் பொருட்களின் விலை கடந்த சில மாதங்களாக தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது. இதையுணர்ந்த மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, ‘‘உள்நாட்டில் இரும்பு உருக்குத் தயாரிப்பாளர்கள் விலை குறைப்புக்கு நியாயமான நடவடிக்கையை மேற் கொள்ளாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்’’ என்றார். ஆனால், இந்தப் பூச்சாண்டிக்கு எல்லாம், இரும்பு உற்பத்தியாளர்கள் பயப்படமாட்டார்கள்.
காரணம் என்னவென்றால், ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் ஆளும் கட்சி, எதிர்கட்சி விஐபிக்கள் பக்கபலமாக இருப்பார்கள். சிமென்ட் உற்பத்தியாளர்கள், இவர்களும் லாபி அமைத்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக, அரசியல்வாதிகளுக்கு கப்பம் கட்டுவதுண்டு. இவ்வாறு கப்பம் கட்டப்படும் கூடுதல் தொகையை, வீடுகட்டும் நடுத்தர மக்களிடம் இருந்துதான் வசூலிப்பார்கள்.
அதேநேரத்தில், மத்தியில் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும், அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தத் தொடங்கியது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் தொடங்கி, தென்குமரி வரை பல்வேறு சாலை, தொழிற்சாலை கட்டமைப்புகளுக்கு அதிகளவு இரும்பு தளவாடங்களை மொத்தமாக கொள்முதல் செய்யத் தொடங்கியது. இதனால், அரசின் அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு அதிகளவு விநியோகம் செய்யத் தொடங்கியதால், உள்நாட்டில் பிற கட்டுமானங்களுக்கான இரும்பு, டிஎம்டி ராடுகள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதுவும் விலை உயர்வுக்கு மறைமுக காரணம். இந்த மறைமுக காரணத்தின் மீதான விலையைத்தான் கட்டுப்படுத்த வேண்டும் என்று நிதின்கட்கரி வலியுறுத்தினார்.

ஏழை மக்கள் வாயில் மண்போட்ட மணல் குவாரிகள்…

தமிழகத்தில் ஆற்று மணல் பயன்பாட்டுக்கு ஐகோர்ட் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆறுகளை பாதுகாக்க வேண்டும் என்றால், மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐகோர்ட் மற்றும் ஐகோர்ட் கிளையில் அடுக்கடுக்காக மனுக்கள் தாக்கலானது. இதனால், தமிழகத்தில் பெரும்பாலான மணல் குவாரிகள் மூடுவிழாக்கள் கண்டன.
இப்போது நடைமுறையில் உள்ள மணல் குவாரிகளிலும், அரசுக்கு பல நுாறு கோடிகள் கப்பம் கட்டிய ஒப்பந்ததாரர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழகத்தின் புதிய அரசில் உள்ள அமைச்சரும், அவர் மகனும் மணல் கான்ட்ராக்டர் ஒருவருக்கு சால்வை அணிவித்து, மரியாதை செய்த படம், சமூக வலைத்தளங்களில் ரொம்பவே பகிரப்பட்டது. அதாவது, மணல் குவாரிகளில், சில ஆயிரம் ரூபாயக்கு வாங்கப்படும் 3 யூனிட் மணல், வெளிச்சந்தையில் அதிகபட்சம் 33 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே மணல் நமது மாநிலத்தின் எல்லை கடந்து ஆந்திரா, கேரளாவுக்கு சென்றால் ஒரு லோடு 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. தமிழக மணலுக்கு அங்கே சிவப்பு கம்பள வரவேற்புதான்.
இதனால், உள் மாநிலத்தில் வீடுகட்டும் கனவில் உள்ளவர்களுக்கு அரசு பெப்பே காட்டத் தொடங்கிவிட்டது. இதுற்காகவும் ஐகோர்ட் கிளையில் தஞ்சையைச் சேர்ந்த ஒருவர் மனுதாக்கல் செய்தார். ஏழை மக்களுக்கு வீடு கட்ட மணல் இல்லாவிட்டால், அரசின் மணல் குவாரிகள் எதற்கு? என்று கோர்ட் கேள்வி கேட்டது. ‘‘மைலார்ட், நாங்கள் தினமும் மாலையில் குறிப்பிட்ட நேரம் பொதுமக்களுக்கு மணல் வினியோகம் செய்ய விண்டோ திறக்கிறோம்’’ என்று அரசு வக்கீல் அளந்துவிட்டார். ஆனால், அந்தக் குறுகிய நேரத்திலும், மணல் மாபியாக்களின் ஏஜன்ட்கள் உள்ளே வந்துவிடுகின்றனர் என்பதுதான் பரிதாபத்துக்குரிய உண்மையாகும். அதாவது ஆற்றில் மணல் இருக்கும். மணல் அரசுக்கு சொந்தம். அரசை நிர்வகிக்கும் அரசியல்வாதிகளின் சொந்தங்கங்கள் அல்லது பெரும் அளவில் கப்பம் கட்டுபவர்களுக்கே மணல் நேரடி விநியோகம் செய்யப்படும்.

அப்படியில்லாவிட்டால், உள்ளூரில் ஆளும் கட்சியினர் அல்லது அவர்களது ஆசி பெற்ற மணல் கொள்ளையர்களிடம் ஒரு லோடு மணலை நீங்கள் 25 முதல் 30 ஆயிரம் ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம். இப்போது, மே 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கைக்கு பின்னர், விடியலுக்கு வந்த கட்சிக்காரர்களின் தினசரி பொழுது, அந்தந்த ஊர்களில் உள்ள ஆற்று மணலில்தான் விடிந்து கொண்டிருக்கிறது என்பது வேதனையான உண்மை. இதனால் பொதுமக்களுக்கு பத்து காசு அளவுக்கு கூட நன்மையில்லை.

எம்.சாண்ட் நிலைமையும் பரிதாபம்தான்


தமிழகத்தில் எம்.சாண்ட் பயன்பாடு 6 ஆண்டுகளுக்கு முன்னிர வந்தாலும், இப்போது எம்.சாண்ட் பயன்பாடு உச்சத்தில் உள்ளது. ஆற்று மணல் கிடைக்காதவர்கள் எம்.சாண்ட் பயன்படுத்தி, தங்கள் கட்டுமானங்களை எழுப்பிக் கொள்கின்றனர். தொடக்கத்தில் எம்.சாண்ட் அறிமுகம் செய்யப்பட்டபோது ஒரு யூனிட் 2 ஆயிரம் ரூபாய்க்கு கொடுப்பதாக கெஞ்சியும் வாங்கிடுவார் இல்லை. பின்னர், பயன்பாடு அதிகரித்ததும், தேவையும், விலையும் உயரத் தொடங்கியது. கடந்த மாதம் ஒவரை ஒரு யூனிட் எம்.சாண்ட் 5 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இப்போது ஒரு யூனிட் 6 ஆயிரம் ரூபாயாகிவிட்டது.
உள்ளூரில் எம்.சாண்ட் விநியோகம் செய்யும் வியாபாரிகளிடம் கேட்டபோது, ‘‘புதிதாக பலருக்கும் மாதம் தோறும் நாங்கள் கப்பம் கட்ட வேண்டியுள்ளது. வட்டம், வார்டு, நகரம், ஒன்றியம் தொடங்கி, மேல் நிலையில் உள்ளவர்கள் வரை பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். பகைத்துக் கொண்டால், போலீசை வைத்து மிரட்டுகின்றனர். எனவே, வேறு வழியில்லாமல் அவர்களுக்கான பணத்தை வழங்கிட வேண்டியுள்ளதால், எம்.சாண்ட் விலை உயர்ந்துள்ளது.
அதேபோல், முக்கால் இஞ்ச் ஜல்லி, ஒன்றரை இஞ்ச் ஜல்லி ஆகியவற்றின் விலையும் ஒரு யூனிட்டுக்கு 500 முதல் 600 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. செங்கல் விலையைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு தாலுகாவுக்கும் தகுந்தார் போல் விலை நிர்ணயமாகிறது. சராசரியாக ஒரு கல் 6 முதல் 7 ரூபாய்க்கு விற்பனையானது. இதில், சிறிய அளவில் அளவு மாறுபாடுகள் இருக்கும். ஆனால், இப்போது ஒரு செங்கல் விலை 9 முதல் 11 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அளவு துல்லியமான வயர்கட் செங்கல் 11 ரூபாய்க்கு கொடுக்கிறார்கள்.
இதில், செம்மண் உற்பத்தி செய்யப்படும் நிலங்களுக்கு அருகாமையில் உள்ள செங்கல் சூளைகளில் இருந்து கிடைத்தால் ஒரு கல் 8 முதல் 9 ரூபாய்க்குள் கிடைக்கும். மாறாக, செம்மண் இல்லாமல், நீண்ட துாரத்தில் வரும் செங்கல் என்றால், ஒரு கல் 10 முதல் 11 ரூபாய்க்குள் கிடைக்கிறது.
இதுகுறித்து செங்கல் உற்பத்தியாளர்கள் கூறும்போது, ‘‘நல்ல சீசன் நேரங்களில் எல்லா அரசியல் கட்சியினரும் எங்களிடம் பணம் கேட்டு வருவார்கள். நாங்களும் எங்களால் முடிந்த அளவு பணம் கொடுப்போம். இதில், எல்லா கட்சிகளும் உண்டு. ஆனால், புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள கட்சியினர், மாதம் தோறும் தங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை, நிர்ணயம் செய்து கொண்டு, அதை கொடுக்கும்படி வற்புறுத்துகின்றனர். தராவிட்டால் லாரிகள் ஓடாது. வேலையும் நடக்காது. அதனால், செங்கல் விலையை உயர்த்திவிட்டோம்’’ என்கின்றனர்.

எகிறும் கட்டுமான செலவுகள்

சராசரியாக 500 சதுர அடி கொண்ட ஒரு வீட்டைக் கட்டுவதற்கு ஒப்பந்த தாரர்கள் சரதுர அடிக்கு 2 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கின்றனர். இதில் போர்வெல், மோட்டார் செலவுகள் அடங்காது. இன்னும் சில ஒப்பந்ததாரர்கள் சதுர அடிக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் விலை நிர்ணயம் செய்கின்றனர். குறிப்பிட்ட அளவு ஆழத்திலான போர்வெல் மற்றும் மோட்டார் செலவுகள் இதில் அடங்கிவிடும். ஆனால், இப்போது கட்டுமான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் குறைந்தபட்ச ஒப்பந்த தொகையாக சதுர அடிக்கு 2 ஆயிரத்து 300 ரூபாயும் அதிகபட்சமாக சதுர அடிக்கு 2 ஆயிரத்து 800 ரூபாயும் வாங்க வேண்டிய நிலையில் உள்ளதாக ஒப்பந்தாரர்கள் புலம்புகின்றனர். 600 சதுர அடியில் வீடுகட்ட விரும்பினால், உங்கள் கைவசம் குறைந்த பட்சம் 15 லட்சம் ரூபாய் இருக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமானத் தொழிலில் உள்ளவர்கள். அப்படி முடியாவிட்டால், கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட, ‘பூசலார்’ நாயன்மார்போல், மனதிலேயே விருப்பம்போல் வீடுகட்டிக் கொள்ளலாம்.


கட்டுமான செலவுகள் தாறுமாறாக உயர்ந்து கொண்டிருப்பதால், வீடுகட்டும் ஆசையைவிட்ட பலர், ஓரளவு நல்ல வசதியான வீடுகளை நோக்கி, வாடகை குடிபெயர்வுகளை தொடங்கியுள்ளனர். இதனால், மாநிலத்தின் பெரிய, சிறிய நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளின் வீட்டு வாடகையும் கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here