கேள்வி கேட்கும் பெண்கள்! திணறும் உதயநிதி!

ஜெ.மறைவிற்கு பிறகு இனி அ.தி.மு.க அவ்வளவு தான். நமது கையில் ஆட்சி லட்டு போல வந்துவிடும் என்று ஸ்டாலின் எதிர்பார்த்திருந்தார். ஆனால் நித்ய கண்டம் பூர்ண ஆயுள் என்பதைப் போல எடப்பாடி பழனிச்சாமி முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்தார். இன்னும் 3 மாதம் தான்… இன்னும் 4 மாதம் தான் என்று கூட்டல், கழித்தல், வகுத்தல் கணக்குப் போட்டு அறிவித்துக் கொண்டிருந்த ஸ்டாலின், தேர்தல் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
தேர்தலின் போது மிகபிரமாண்ட கூட்டணி, 350 கோடி செலவில் தனியார் ஆலோசனை நிறுவனம் என்று களத்தில் இறங்கிய தி.மு.க., எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று வாய்க்கு வந்ததையெல்லாம் வாக்குறுதியாக கொடுத்தனர்.
பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய், பெட்ரோல்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு, 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி என்று இஷ்டத்திற்கு வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தனர். ஆட்சிக்கு வந்ததும் இவற்றை நிறைவேற்ற நிதி நிலைமை கை கொடுக்கவில்லை.
போதாக்குறைக்கு 2021 பொங்கல் நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசோடு 2,500 ரூபாய் ரொக்கமும் கொடுத்திருந்தார். அப்போது ஸ்டாலின் ரூ.5000 கொடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார்.
ஆட்சிக்கு வந்ததும் பொங்கல் பரிசில் தரமற்ற பொருட்களை கொடுத்து மிகப்பெரிய அதிருப்தியை சம்பாதித்த தி.மு.க அரசு, ஒரு ரூபாய் கூட பணம் தராதது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வந்தது. எதிர்பார்த்ததைப் போலவே மக்களின் அதிருப்தி குரல் ஆங்காங்கு எழ தொடங்கியுள்ளன. முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரக் களத்திற்கு வராமல் கானொளி காட்சி மூலம் பிரச்சாரம் செய்கிறார்.
அதனால் உதயநிதி ஸ்டாலின் ஊர் ஊராக பிரச்சாரத்திற்கு சென்று வருகிறார். கரூர், கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் பிரச்சாரத்திற்கு செல்லும் போது, எங்களுக்கு எப்போது 1000 ரூபாய் தருவீர்கள்? நகைக்கடன் தள்ளுபடி செய்யலையே… என்றெல்லாம் பெண்கள் எதிர்ப்பு குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். அவர்களை தி.மு.கவினர் மிரட்டி அமைதிப்படுத்துகின்றனர். உதயநிதியோ ஏதாவது காமெடி கூறிவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக நகர்ந்து விடுகிறார்.
ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் சூட்சமம் எங்களிடம் உள்ளது என்று பேசிய உதயநிதி தற்போது கடைசி வரை போராடுவதே சூட்சமம் என்று சமாளிக்க பார்க்கிறார்.
கள நிலவரம் மோசமாக இருப்பதை கண்ட தி.மு.க.மேலிடம் மேலும் சில பல கோடிகளை இறைக்க திட்டமிட்டுள்ளதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here