தமிழ் இலக்கியங்களில் திரௌபதி

இந்திரசேனை, கிருஷ்ணை, பாஞ்சாலி. என்ற பெயர்களில் அழைக்கப்படும் “திரௌபதியை” அக்கினியில் பிறந்தவள் என்றும் முற்பிறவியில் “நளாயினி” என்ற பெயரோடு புகழுடன் வாழ்ந்தவள் என்றும் வில்லிபாரதம் திரௌபதியின் பிறப்பு பற்றி கூறுகிறது..!

“மூளா ரழலுற் பவித்தாளிவண் முற்ப வத்தில் தளா யனியென் றுரைசால்பெரு நாம மிக்காள்” – வில்லிபாரதம்.ஆனால் திரௌபதியைப் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் இல்லை என்றும், மகாபாரதத்தில் மட்டுமே அது வடமொழியில் உள்ளதென்றும் ஆங்காங்கே சிலர் பேசுவதைக் கேட்டுள்ளேன்.

ஆனால் திரௌபதியை “அழகிய சீரான நடையழகி” என்றும் திரௌபதி தொடர்பான சில மகாபாரத நிகழ்வுகளையும் சங்க இலக்கியங்களில் ஒன்றான கலித்தொகை குறிப்பிடுகிறது. அதுபற்றி விளக்கமாக இப்பதிவில் காண்போம்..!

சூது மண்டபத்தில் திரௌபதியைத் தன் தொடைமீது அமர்வாய் என்று கூறிய துரியனை நோக்கி உன் “தொடைகளை நொறுக்குவேன்” என்று சூளுரைத்தான் பீமன். சூதாட்ட மண்டபத்தில் நிகழ்ந்த இந்த சூளுரையை மகாபாரதப்போரின் இறுதியில் “வஞ்சகனை வஞ்சகத்தால்தான்” வீழ்த்த வேண்டும் என்று பீமன் மற்றும் துரியோதனின் கதாயுத்தத்தின்போது பீமனின் சபதத்தை நிறைவேற்றச்சொல்லி அர்சுணனுக்கு அறிவுறுத்துவார் கிருஷ்ணன்.

இதைக்கேட்ட அர்ச்சுணன் தனது சைகையால் துரியனின் தொடைபிழக்க கூறியதைப் பார்த்த பீமசேனன் துரியனின் தொடையைப் பிளந்து கொல்வான்.

இந்நிகழ்வு சங்க இலக்கியங்களில் ஒன்றான கலித்தொகையில் கபிலரால் விளக்கப்படுகிறது. அதாவது யானை ஒன்று புலியைக் கொன்ற நிகழ்வை துரியனின் தொடையைப் பிழந்த பீமனின் வீரத்தை அந்த யானையின் வீரத்தோடு ஒப்பிடுவார் கபிலர்..!

“முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செற்று,

மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக் குறங்கு அறுத்திடுவான் போல்,

கூர் நுதி மடுத்து, அதன் நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை,

மல்லரை மறம் சாய்த்த மால் போல், தன் கிளை நாப்பண்,

கல் உயர் நனஞ் சாரல், கலந்து இயலும் நாட! கேள்”

– கலித்தொகை பொருள் :

முறம் போன்ற காதுகளையுடைய ஆண்யானை ஒன்று முரண் கொண்டு தன்மீது பாய வந்த புலியைக் கொன்றது. இந்நிகழ்வானது துரியோதனின் தொடையை பீமன் கிழித்தெறிந்தது போன்று யானை தன் கூர்மையான கொம்புகளால் புலியைக் குத்தித் கிழித்தெரிந்தது.

கண்ணன் மல்லர்களைப் போரில் வென்றான். அந்த யானை புலியைக் கொன்ற பின்னர் கண்ணன் போல் தன் இனக் கூட்டத்தோடு சேர்ந்துகொண்டது என்று யானையின் வீரத்துடன் துரியனைக் கொன்ற பீமனின் வீரம் எடுத்தாளப்படுகிறது.!

மேலும் சூதாட்ட சபைக்கு திரௌபதியின் கூந்தலைப் பிடித்து இழுத்து வந்த துச்சாதனனைப் பார்த்து “உன் மார்பைப் பிழந்து இரத்தம் குடிப்பேன்” என்று சூளுரைத்தான்.

இந்நிகழ்வை முல்லைக்கலியில் புலவர் நல்லுருத்திரனார் அழகாக உவமையாக்கியிருப்பார்.

அதாவது ஜல்லிக்கட்டின்போது தன்னை பிடிக்க வந்த ஒருவனை தன் கொம்பால் தூக்கி வீசிய காளையின் கர்ஜனையானது திரௌபதியின் கூந்தலைப் பிடித்த துச்சாதனனின் மார்பைப்பிழந்து இரத்தம் குடிப்பேன் என்ற சூளுரைக்கு சமமாக இருந்ததாம்..!

“மேற் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும்

புன்குருக் கண் நோக்கு அஞ்சான் பாய்ந்த

பொதுவனைச் சாக்குத்தி, கோட்டிடைக் கொண்டு,

குலைப்பதன் தோற்றம் காண்”

அம் சீர் அசைஇயல் கூந்தற்” கை நீட்டியான்நெஞ்சம் பிளந்து இட்டு,

நேரார் நடுவண், தன் வஞ்சினம் வாய்த்தானும் போன்ம் என ஆங்கு”

– கலித்தொகை.

அதாவது நூல்கண்டு நிறத்தில் உடம்பும் சிறிய சிவந்த கண்ணும் கொண்ட காளை ஒன்று தன்னை நோக்கி அஞ்சாமல் பாய்ந்த ஒருவனை சாகும் அளவுக்குக் குத்தித் தன் கொம்பில் வைத்துக்கொண்டு சுழற்றும் நிகழ்வானது அழகிய சீரான நடையழகி திரௌபதியின் கூந்தலைப் பிடித்து இழுத்த துச்சாதனனின் நெஞ்சைப் பிளப்பேன் என்று பகைவர்களுக்கு இடையே சினம் கொண்டு சூளுரைத்த பீமனின் கர்ஜனையைப்போன்று உள்ளதாக கூறுகிறார் நல்லுருத்திரனார்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here