நுழைவு தேர்வு இல்லாத படிப்பிற்கும் இடஒதுக்கீடு அரசு பள்ளிகளின் தரமில்லை என்பதை அரசே ஒப்புக்கொள்கிறதா?

தமிழக அமைச்சரவை கூட்டத்தில், பொறியியல், வேளாண்மை, சட்டம், கால்நடை, மீன்வளம் போன்ற படிப்புகளுக்கு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவை வரவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் பொறியியல், வேளாண்மை, சட்டம் போன்ற படிப்புகளுக்கு நுழைவு தேர்வு ஏதும் இல்லை. ஆனால் கடந்த ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் இந்த படிப்புகளில் சேர்க்கை விகிதம் குறைவாக இருப்பதற்கான காரணம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையிலான கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு அமல்படுத்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முடிவு செய்துள்ளது.

மருத்துவப்படிகளுக்கான நுழைவுத்தேர்வை சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி மத்திய அரசு அமல்படுத்திய போது, நீட் தேர்வால், தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய, கிராமப்புற, அரசுபள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பறிபோகிறது என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தின. அப்போது ஆட்சி செய்த அ.தி.மு.கவும் நீட்டிற்கு எதிராகவே நிலைப்பாடு எடுத்தது. நீட் தேர்வுக்கு முன் அரசு பள்ளி மாணவர்கள் எத்தனைப் பேர், மருத்துவக்கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பு பெற்றனர் என்றும், மருத்துவக்கல்லூரிகளில் நடந்த கட்டணக் கொள்ளை குறித்தும் நடுநிலையாளர்களின் கேள்விகளுக்கு பதில் ஏதும் இல்லை. ஆனால் எதிர்ப்பை சமாளிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளித்து நிலைமை அ.தி.மு.க. அரசு சமாளித்தது. மாறாக நீட்டை ஒழித்தே தீருவோம் என்று ஆட்சிக்கு வந்த தி.மு.க. தற்போது நுழைவுத்தேர்வே இல்லாத படிப்புகளுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இது அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தரமான கல்வி கற்றுக் கொடுக்க முடிவதில்லை என்பதை அரசே ஒப்புக்கொண்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.

தனியார் பள்ளிகளை ஒப்பிடுகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு செலவிடும் தொகை மிக அதிகம். தமிழக அரசின் பள்ளி கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டிற்கு 35,000ம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் 37,459 அரசுப் பள்ளிகளும், 8,386 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 12,918 தனியார்ப் பள்ளிகளும் உள்ளன. அரசுப் பள்ளியில், 2019-20ம் கல்வி ஆண்டில் 45,83,000 மாணவர்களும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 28,44,693 மாணவர்கள் படித்து வந்தனர். மொத்தம் 74,27.693 பேர் அரசு செலவில், அதாவது மக்களின் வரிப்பணத்தில் படித்து வருகின்றனர். அரசு ஒதுக்கீடு செய்யும் 35000 கோடி ரூபாயை இந்த எண்ணிக்கையில் வகுத்தால் ஒரு மாணவனுக்கு சராசரியாக தமிழக அரசு ஆண்டிற்கு 47,120 ரூபாய் செலவிடுகிறது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் செலுத்தும் கட்டணத்தைவிட இது அதிகம். ஆனால் தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் கூறிவிட்டு, அவற்றைவிட அதிக கட்டணத்தை அரசு பள்ளிகளுக்கு செலவிட்டும் மாணவர்களுக்கு தரமான கல்வியை கற்றுத்தராதது யார் குற்றம்?

தனியார் பள்ளி ஆசிரியர்களை ஒப்பிடுகையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் வாங்கும் சம்பளம் மூன்று மடங்கு வரை அதிகம். ஆனால் தனியார் பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை ஒப்பிடும் போது அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளித்து தான் உயர்கல்வியில் இடம் அளிக்க வேண்டிய அவலமான சூழ்நிலையில் தமிழகம் உள்ளது. அடிப்படையிலிருந்தே தரமற்ற கல்வியை கற்று வரும் அரசு பள்ளி மாணவர், இடஒதுக்கீட்டில் உயர்கல்வி வாய்ப்பு பெற்று செல்லும் போது, அங்கு அவரது தேர்ச்சி திறன் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்திருப்பது இந்த ஆண்டு 3.5 லட்சத்தை கடந்துவிடும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் முழு சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் வீடுகளில் இருந்த நிலையில், அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்துவிட்டதாக கருதி, தனியார் பள்ளிகளில் இருந்து பெற்றோர் யாரும் அரசு பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை சேர்த்திருக்க வாய்ப்பில்லை. மாறாக அரசு பள்ளிகளில் தரமான கல்வி கிடைப்பதில்லை, தங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வியை தர வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு அடைந்த பெற்றோர், தங்களின் சொற்ப வருமானத்திலும், பெரும்பகுதியை ஒதுக்கி தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக அந்த சொற்ப வருமானத்திற்கும் துண்டு விழுந்துவிட்டதால், வேறு வழியே இல்லாமல் அரசு பள்ளிகளை நாடி வருகின்றனர் என்பது தான் உண்மை.

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தாமல், தற்போது பொறியியல், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட நுழைவு தேர்வு இல்லாத படிப்புகளுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கென தனி இடஒதுக்கீடு அளிக்க முடிவு செய்திருப்பது, அரசு பள்ளிகளில் தரம் இல்லை என்பதை அரசே ஒத்துகொண்டுள்ளதைத் தான் காட்டுகிறது. தனியார் பள்ளி ஆசிரியர்களை விட அதிக சம்பளம் பெறும், அரசு பள்ளி ஆசிரியர்களால் ஏன் தரமான கல்வியை மாணவர்களுக்கு கற்றுத்தரமுடியவில்லை என்பதை ஆராய்ந்து அதற்கு முடிவு தேட வேண்டிய அரசு, மாணவர்கள் மத்தியில் அரசு பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் என்று பிரிவினையை ஏற்படுத்தி, கடினமாக உழைத்து படிக்கும் மாணவர்களின் இடத்தை தட்டிப்பறிப்பது எந்த வகையில் சமூகநீதியாகும் என்பதை அரசும், அரசியல் கட்சிகளும் விளக்க வேண்டும். தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை தங்கள் குழந்தைகளின் படிப்பிற்கு செலவிடும் பெற்றோர்களும் தமிழகத்தின் குடிமக்கள் தானே? அவர்களது ஓட்டுக்களையும் பெற்று தானே ஆட்சி கட்டிலில் அரசியல் கட்சியினர் அமருகின்றனர். அனைத்து தரப்பினரின் நலனையும் பார்க்க வேண்டியது அரசின் கடமை இல்லையா?

இட ஒதுக்கீட்டின் மூலம், அரசு பள்ளிகளில் தரமான கல்வியை கொடுக்க இயலவில்லை என்று பகிரங்கமாக ஒத்துக்கொள்ளும் அரசு, ஏழை மாணவர் ஒவ்வொருவருக்கும் ஆண்டிற்கு ஒரு குறிப்பிட்டத்தொகையை கல்விக்கட்டணமாக வங்கி கணக்கில் செலுத்திவிட்டால், அவர்கள் விரும்பும் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் படித்துக் கொள்ள முடியுமே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here