எத்தனை உயர்ந்தது எம் ஹிந்து மதம்

உலகில் வான்வெளி இயக்கத்தை துல்லியமாக அறிந்த இனம் இந்துக்கள், அவர்கள் அறிந்த அளவு இன்னொரு இனம் பண்டைய காலத்தில் வான்வெளி இயக்கத்தை அறிந்ததே இல்லை

இந்துமதம் அண்ட சராசரங்களையும் கோள்களின் இயக்கத்தையும் இதர பிரபஞ்ச ரகசியங்களையும் தெய்வத்தின் பெயரால் அவர்களுக்கு கொடுத்திருந்தது, அந்த அபூர்வ ஞானம் இந்துக்களின் தன்பெரும் சிறப்பாய் இருந்தது

பாரத கண்டம் முழுக்க சூரியனுக்கு ஆலயங்கள் இருந்தன, இன்று பாகிஸ்தானாக ஆகிவிட்ட தேசத்தின் முல்தான் நகரில் ஒரு ஆலயம் இருந்தது, பின்னாளைய அரசியல் குழப்பங்களால் சீரழிந்த காஷ்மீரிலும் ஒரு சூரிய ஆலயம் இருந்தது

ஆம் இருந்தது

அதை தவிர எஞ்சிய ஆலயங்களெல்லாம் கோனார்க் முதல் பல ஆலயங்களாக இந்தியாவில் இன்றும் நிலைத்திருக்கின்றன, அவற்றில் சூரியனின் இயக்கமும் கால நேரமும் இதர நகர்வுகளும் சிற்பமாகவும் இன்னும் பலவுமாகவும் வடிக்கபட்டிருக்கின்றது

அந்த சூரியனை மிக நுணுக்கமாக இந்துமதம் அறிந்திருந்தது, சூரிய ஒளியில் 7 நிறம் உண்டு என இன்றை விஞ்ஞானம் சொல்வதை அன்றே 7 குதிரைகளில் சூரியன் வருவார், அவரின் தேருக்கு 12 சக்கரம் (12 ராசிகள்) என அன்றே சொன்ன மதம் இது.

அது இன்னும் சூரியன் வடக்கு தெற்காக நகரும் என்பதை கணித்திருந்தது, வடக்கு நோக்கி சூரியன் நகரும் காலம் உத்திராயணம் என்றும், தெற்கு நோக்கி நகரும் காலம் தட்சிணாயணம் என்றும் வகுத்தது, தை முதல் ஆனிவரையான காலத்தை உத்திரயாணம் என்றும், ஆடி முதல் பங்குனி வரையான காலத்தை தட்சியாணம் என்றும் வகுத்தது.

இந்த தைமாதம் வளர்பிறை சப்தமியில் மிக சரியாக அந்த சூரியன் மறுபடி வடக்கு நோக்கிவரும் என்பதை மிக நுணுக்கமாக உணர்ந்திருந்த இந்துக்கள், சூரியன் தேர் வடக்கே திரும்பும் நாளை ரசசப்தமி என்றார்கள்.

இன்றைய விஞ்ஞானம் இன்று சொல்வதை அன்றே சொன்னார்கள் இந்துக்கள்
இந்த கால கட்டத்தில் சூரியன் ஒவ்வொரு ராசியிலும் நுழையும் பொழுது ஒரு கிரகம் உச்சம் பெறும் மகர ராசியில் செவ்வாய் உச்சம், மீன ராசியில் சுக்கிரன் உச்சம், மேஷ ராசியில் சூரியன் உச்சம், ரிஷப ராசியில் சந்திரன் உச்சம் என ஒவ்வொரு கிரகமும் உச்சம் பெறும், இது பல பலன்களை கொடுக்கும்.

இன்று அந்த ரதசப்தமி நாள், இந்துக்களுக்கு அது விஷேஷமானது.

இந்நாளில் இருந்துதான் அடுத்த 6 மாதத்துக்கு வெம்மை அதிகரிக்கும், இந்த வெம்மைதான் பூமியின் விளைச்சலுக்கும் இன்னும் பல பருவகாலத்துக்கும் அடிப்படை
அந்த காலத்தை வரவேற்கும் விதமாக இந்நாளை கொண்டாடுவார்கள் இந்துக்கள்,

இந்நாளில் ஏகபட்ட சம்பிரதாயம் உண்டென்றாலும் எருக்க இலை கொண்ட வழிபாடு முக்கியத்துவமானது.

இதற்கு இந்துமதம் ஒரு புராண சம்பவத்தையும் சொல்லிற்று.
மகாபாரத பிதாமகர் பீஷ்மர், அவரை போல் ஒரு வீரதுறவி நைஷ்டிக பிரம்ம்சாரி யாருமிலர், அதைவிட முக்கியம் அவரின் வைராக்கியம்.

ஆனால் அவரின் நல்ல குணம் எதுவும் அஸ்தினாபுரத்து இன்னொரு பங்காளிகளான பாண்டவருக்கு பயன்படவில்லை, நீதி நியாயம் அறிந்தவர் மகா பெரும் ஞானி என்றெல்லாம் அழைக்கபட்ட அந்த பீஷ்மர் துரியோதனின் அநியாயம் எல்லாவற்றையும் அமைதியாக பார்த்து கொண்டிருந்தார்.

ஒருவன் நல்லவானாக இருந்தாலும் அயோக்கினை கண்டிக்க வேண்டிய இடத்தில் அமைதிகாட்டினால் அவனும் குற்றமுள்ளவனே என்ற அடிப்படையில் அவரும் கண்ணனால் குறிவைக்கபடுகின்றார்.

அவரின் பலவீனம் அறிந்து சிகண்டியினை முன்னிறுத்தி அவரை வீழ்த்தினான் கண்ணன், வீழ்த்திவிட்டு ஒன்றுமே அறியாதது போல் அவனும் கூட்டத்தில் நின்றுகொண்டான்.

பீஷ்மர் மண்ணாசையினை வென்றவர் என்பதால் மண்ணை தொடாமல் அம்புபடுக்கை செய்யபட்டு அவர் அதில் கிடத்தபட்டார், அவருக்கு ஒரு வரம் இருந்தது அதாவது அவர் நினைத்த நேரம்தான் உயிரை விடுவார்.

இதனாலே நேரத்தை நீர் முடிவு செய்யும் அதை படுத்திருந்தே முடிவுசெய்யும் என அவரை கிடத்தியிருந்தான் கண்ணன்.

உத்தராண்ய காலத்த்தில் உயிரிவிட வேண்டி அக்காலம் வரை காத்திருந்தால் பீஷ்மர் ஆனால் அக்காலம் வந்தும் உயிர்போகவில்லை, வரம் தப்பாயிற்றோ என கலங்கினார் பீஷ்மர் அப்பொழுது அங்கு வந்தார் வியாசர்…ஒரு ரதசப்தமி நாளில் வந்தார்…

வந்தவர் “பீஷ்மா நீ நல்லவன் ஆனால் துரியோதனன் செய்த கொடுமைகளை கண்டும் அமைதிகாத்தாய் அதனால் அதற்குரிய தண்டனைகளை பெறாமல் அதற்கான பரிகாரங்களை செய்யாமல் உன் உயிர்பிரியாது” என்கின்றார்.

பீஷ்மருக்கு புரிந்தது, “ஆம் துரியன் செய்த கொடுமைகளை கண்ட கண்கள், அவனுக்காய் பேசிய வாய், அவன் பேச்சினை கேட்ட காது, அவனுக்காய் போரிட்ட மேனி, அவன் மூச்சுகாற்று பட்ட நாசி எல்லாமே பாவம் செய்தது, சூரியனிடம் அவற்றை பொசுக்க சொல்லுங்கள்” என்றார்
வியாசர் சொன்னார் “சூரியனின் ஆற்றலை தன்னுள் கொண்டது எருக்கு, இதனாலே சிவன் பிள்ளையார் முதல் எல்லோரும் அதை அணிவர்
உன் தலை கண், தோள், வாய் என எல்லா இடத்திலும் அந்த எருக்க இலையினை வைத்தால் பரிகாரமாகும்” என சொல்லி அப்பரிகாரத்தை செய்யவைத்து பீஷ்மரை நிம்மதியாக அனுப்புகின்றார் வியாசர்.

இது புராணம் சொல்லும் விஷயம், இது புராணம் என்றாலும் இந்துக்களின் செய்தியெல்லாம் தத்துவம், மருத்துவம், வானியல் என எல்லாம் கலந்து சொல்லும் ரகசியங்கள் என்பதால் இதனை கொஞ்சம் ஆழமாக காணலாம்.

எருக்கை மிக சிறந்த மருத்துவ குணம் கொண்டது, முன்பெல்லாம் கிராமங்களில் காலில் முள்குத்தினால் கூட எருக்கம்பாலை சில சொட்டுக்கள் விடுவார்கள், இது முள்குத்திய இடம் சீழகட்டாமல் வழி எடுக்காமல் பார்த்து கொள்ளும், முள்ளால் காலுக்கு சேதம் வராது.

இன்று காலில் முள் குத்திற்று என்றால் சில லட்சம் வரை கட்டணம் வாங்கி பலநாள் சிகிச்சையில் முள் எடுக்கும் அளவு மருத்துவமனைகளும் பெருகிவிட்டன, அதற்கு துணையாக இன்சூரன்ஸ் காப்புறுதி திட்டங்களும் வருவதெல்லாம் வேறுவிஷயம்.

எருக்கையின் மருத்துவம் இன்னும் ஏராளம் உண்டு, சித்தர்கள் கொண்டாடிய செடி அது. அதில் சுமார் 9 வகை உண்டு.

சூரியனை நம்பி வாழும் இந்த எருக்கை சூரியனின் பல சக்திகளை உள்வாங்கும் தன்மை கொண்டது சில தீய கதிர்களை தடுத்து நல்ல கதிர்களை கிரகிக்கும் ஆற்றல் கொண்டது.

மனிதன் சிந்தனைமிக்கவனே தவிர பல விஷயங்களில் பலவீனமானவன்
ஒரு வவ்வால் கேட்கும் ஒலியினை மானிட காது கேட்க முடியாது, ஒரு ஆந்தையின் பார்வை அவனுக்கு கிடையாது.

ஒரு நாய்க்கு இருக்கும் மோப்பசக்தி அவனுக்கில்லை, இப்படி மிக பலவீனமானவன் மனிதன்
அவனுக்கு பல விஷயங்களை நேரடியாக காணும் வாய்ப்பினை இறைவன் தரவில்லை ஆனால் சில மறைமுக பலன்களை பெற யோகியரையும் ஞானியரையும் அவன் அனுப்பினான்.

அவர்கள் பல சூட்சும சக்திகளை பெற வழி சொன்னார்கள், அதில் ஒன்றுதான் ரதசப்தமி அன்று எருக்கையினை உடலில் வைத்து வழிபடும் முறை.

அந்நாளில் சூரியனிடமிருந்து விஷேஷித்த கதிர்கள் வரும் அக்கதிரில் நன்மை செய்யும் விஷயம் உண்டு சக்தி அதிகரிக்கும் விஷயம் உண்டு அதே நேரம் தீய கதிர்களும் வரும்
சூரிய கதிரில் இருந்து நல்ல சக்திகளை உடல் பெறும் பொருட்டு எருக்கை இலையினை சில உடல்பாகங்களில் வைத்து நற்பலன் பெற சொன்னார்கள், இது ஆரோக்கியம் மற்றும் சிந்தனையினை கூட்டும்.

அதன் மருத்துவ ரகசியம், விஞ்ஞான ரகசியம் இதுதான்

பீஷ்மருக்கும் எருக்க இலைக்கும் என்ன தொடர்பு?

சிவனுக்கும் பிள்ளையாருக்கும் எருக்க இலைக்கும் என்ன தொடர்பு?

பீஷ்மர் மண்ணாசையினை வென்றவர், மண்ணாசை என்பது சாதாரணம் அல்ல வாழும் காலம் தொடங்கி செத்தாலும் 6அடி மண் வேண்டும் என கோரும் ஆசை அது, ஆசைகளில் பேராசை அது, எல்லா போருக்கும் அழுகைக்கும் கண்ணீருக்கும் காரணமே அதுதான், எக்காலமும் இந்த உலகில் உள்ள ஆசை அது.

அதை வென்றவர் பீஷமர், அதை துறந்த பெரும் குணம் அவருக்கு இருந்தது இதனாலே மண்ணில் விழாமல் அம்பு படுக்கைமேல் கடைசியில் வீழ்ந்தார்.

எருக்க இலை மண்ணில் இருந்தாலும் மண்ணினை நம்பி அது பெரிதும் வாழாது, அது மழையே இல்லை என்றால் கூட சூரிய வெளிச்சத்தில் தனக்கு தேவையான சக்திபெற்றுவாழும் சக்தி கொண்டது அதுவும் ஆண்டுகணக்கில் வாழும் சக்தி கொண்டது.

மண்ணில் நின்றாலும் மண்ணை எதிர்பாரா தன்மை கொண்டது எருக்கை, அந்த ஞான அடையாளத்தைத்தான் பீஷ்மருக்கு ஒரு அடையாளமாக சூட்ட செய்தார் வியாசர்.

மண்ணில் வாழும் உயிர் மண்ணை விரும்பாமல் வாழமுடியாதுதான் ஆனால் மானிட ஆன்மா அந்த சுகத்திலே சிக்கி சீரழிய கூடாது, எருக்கை சூரியனிடம் இருந்து சக்திபெறுவது போல் மானிடன் வானுறை இறையிடம் இருந்து வழிபெற்று வாழவேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்தியது அந்த புராண கதை.

அதே எருக்குத்தான் சிவனுக்கும் விநாயகருக்கும் சூட்டபட்டது.

ஆம் சிவன் தவயோகி உலக இன்பங்களுக்கு அப்பாற்பட்டவர், விநாயகர் முழு ஞானவடிவம். ஞானவான்களும் யோகிகளும் மண்ணில் கிடைக்கும் பொருளின்றி உதவியின்றி இறைவனால் வாழகூடியவர்கள் என்பதை சொல்லத்தான் எருக்கை அவர்களுக்கு சூட்டபடும் அடையாளமாயிற்று
எருக்கையினை சூட்டும் ஆன்ம தத்துவம் இதுதான்.

ஒவ்வொரு மனிதனும் கண்ணால், காதுகளால், வாயால், உடலால் , சிந்தனையால் (தலையால்) பாவங்கள் செய்கின்றான், அந்த பாவங்களெல்லாம் அவன் நினைவுகூர்ந்து களையவேண்டும், இந்த பாவங்களை மறுபடி செய்யாமல் அந்த புலன்களால் தர்மகாரியம் அறகாரியமும் செய்யவேண்டும் அந்த சக்தியினை எருக்கைக்கு சூரியன் கொடுப்பது போல் மானிடருக்கு பிரபஞ்சம் தரட்டும் என்பதே இதன் தத்துவம்.

உத்தராண்ய காலம் உலகம் இயங்க அடிப்படையான காலம், அந்த காலத்தில் சூரியன் மிகபெரிய பலன்களை பூமிக்கும் அதன் ஒவ்வொரு உயிருக்கும் வழங்குகின்றது, அதன் தொடக்க நாளிலே அதை வரவேற்று எருக்கை இலையோடு பல பலன்களை பெற வழி சொன்னது இந்துமதம்.

அந்த பலன்களோடே சூரியனை நம்பி மண்ணில் உயிர்கள் வாழும் உலகிது, அந்த மண்ணின் மேல் பெரும் பற்றும் ஆசையும் கொள்ளாதே, இந்த மண் சூரியன் இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை, இது நிரந்தரமுமில்லை இந்த மண்ணில் பற்றுவைத்து வாழ்வினை தொலைக்காதே, எருக்கம்செடி மண்ணில் நீரில்லை என்றாலும் சூரியனிடமிருந்து சக்திபெற்று வாழ்வது போல உலக இன்பங்களில் வாழாமல் இறைவனிடம் பற்றுவைத்து அவன் பலனின் வாழ்வாயாக என போதிக்கின்றது அந்த ஞானமதம்.

இந்துக்களின் வழிபாடும் கொண்டாட்டமும் விரதமும் ஆயிரமாயிரம் தத்துவங்களையும் ஆச்சரியமான ஏற்பாடுகளையும் கொண்டது, அதில் ஒன்றான ரதசப்தமியினை இந்துக்கள் உலகெல்லாம் சிறப்பித்து வருகின்றார்கள்.

சூரியதேரில் கட்டபட்ட குதிரைகளுக்கு ஓய்வே இல்லை அந்த ஓட்டம் இல்லையென்றால் உலகே இல்லை எனும் வரியின்படி சூரியனை வரவேற்றுகொண்டிருக்கின்றது இந்துக்களின் ஞான உலகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here