வெற்றி! வெற்றி! வெற்றி!!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இமாலய வெற்றி!!
பரிசுப் பொருட்களுக்கு வெற்றி!
பணப்பட்டுவாடாவுக்கு வெற்றி!
கொலுசுக்கு வெற்றி!
சில்வர் குடங்களுக்கு வெற்றி!
ஹாட் பாக்ஸ்களுக்கு வெற்றி!
பட்டுச் சேலைக்கு வெற்றி!
பிரியாணி பொட்டலங்களுக்கு வெற்றி!
ஆயிரம், ஐயாயிரம் ரூபாய்களுக்கு வெற்றி!
மது பாட்டில்களுக்கு வெற்றி!
மாந்தோப்பு, தென்னந்தோப்பு காடுகளில் கோழிக்கறி, ஆட்டுக்கறி விருந்துகளுக்கு வெற்றி.!
சாதி கட்டுப்பாடுகளுக்கு வெற்றி!
ஊர் கட்டுப்பாடுகளுக்கு வெற்றி!
பதவி ஏலத்திற்கு வெற்றி!
எல்லாவற்றிலும் ஆளும் கட்சி அமோக வெற்றி
வரலாறு காணாத வெற்றி!!
எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்து வெற்றி!!
இந்திய ஜனநாயகத்திற்கு மட்டுமே தோல்வியோ தோல்வி!!!
இந்திய நாடு சுதந்திரத்திற்காகப் போராடிய போது ‘ஜனநாயகம், சமத்துவம், சுதந்திரம், குடியுரிமை இவற்றையெல்லாம் இந்தியர்கள் புரிந்துகொள்ள இன்னும் ஆயிரம் ஆண்டு காலம் ஆகும்! என 1940-களில் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரதமராக இருந்த ’வின்சென்ட் சர்ச்சில்’ ஒரு கருத்தைச் சொன்னதாக செய்திகள் உண்டு. அவருடைய கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லை. எனினும், கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறக்கூடிய தேர்தல்கள் ’நாம் ஜனநாயகத்திற்கு தகுதியானவர்கள் தானா’? என்ற மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறது.
சிறிதும் கூட மனம் கூசாமல் வாக்குகள் சந்தைப் படுத்தப்படுகின்றன. அதில் வாக்குகளை விற்பவர் மற்றும் வாங்குபவர் எவருக்குமே எந்த வெட்கமும் நாணமும் இருப்பதாகத் தெரியவில்லை.
சுயமரியாதை என்பது இவர்களிடத்தில் அணுவளவாவது இருக்குமா? என்பது கேள்விக்குறி. இவர்கள் தான் இந்தியாவிற்கே வழிகாட்டப் போகிறார்களாம். இன்னும் பரம ஏழைகளாக இருக்கக்கூடிய வட இந்திய மக்கள் எவரும் ’காசு கொடுத்தால்தான் வாக்களிப்போம்’ என்று சொல்வதில்லை.
அவர்கள் பஞ்ச பரட்டைகளாகக் கூட இருக்கலாம். ஆனால், அவர்கள் உள்ளங்கள் வெண்மையாக இருக்கின்றன. தங்கள் வாக்குகளின் மதிப்பைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
அதற்கு எடுத்துக்காட்டு ,1975-ஆம் ஆண்டு இந்திரா காந்தி அவர்கள் உள்நாட்டு அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார். ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, 1977-ஆம் ஆண்டு அவசரநிலைப் பிரகடனத்தை விலக்கிக்கொண்டு, தேர்தலை நடத்தினார். அந்தத் தேர்தலில் இந்திராகாந்தியை பலமுறை வெற்றி அடைய வைத்த ’ரேபரேலி’ தொகுதி மக்களே அவரை தோற்கடித்தார்கள்; அவருடைய புதல்வர் சஞ்சீவி காந்தியையும் தோற்கடித்தார்கள்; காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது.
வடக்கு மாநில மக்கள் அரசியல் ரீதியாகச் சிந்தித்து ஆட்சி மாற்றத்தையே நிகழ்த்தினார்கள். அதன்பின் ஜனதா ஆட்சி வந்தது. ஆட்சிக்கு வந்த ஜனதா தலைவர்கள் இடத்திலே ஒற்றுமை இல்லாத காரணத்தினால் இரண்டே வருடத்தில் அந்த ஆட்சி கவிழ்ந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு எந்த ரேபரேலி தொகுதியில் அவரை தோற்கடித்தார்களோ, அதே தொகுதியிலேயே இந்திராகாந்தியை வெற்றி பெற வைத்ததும் மட்டும் அல்ல, காங்கிரஸ் கட்சியை முன்னெப்போதும் இல்லாத பலத்துடன் ஆட்சியில் அமர்த்தினார்கள், இது அரசியல் விழிப்புணர்வு.
ஆனால், தமிழகத்தில் நடப்பது என்பது என்ன? 2002 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் துவங்கி, 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் பகிரங்கமாகவே அனைத்து வாக்காளர்களுக்கும் பணப்பட்டுவாடா செய்து வெற்றி பெற்றார்கள்; அதையே 2021 சட்டமன்ற தேர்தலிலும் பகிரங்கமாக செய்தார்கள். இந்த அராஜக செயலைக் கண்டித்து ”2021 சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்; வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கக் கூடாது” என்று நாம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். அதை ‘விளம்பரத்திற்கு’ என்று தீர்ப்பளித்த, நீதிபதி ஒருவர் தமிழகத்தை விட்டே சென்றுவிட்டார்.
அப்பொழுது நம்முடைய கருத்தைத் தமிழகத்தின் எந்த அரசியல் கட்சியும் ஆதரிக்க முன்வரவில்லை. இப்பொழுது ஒவ்வொருவருக்கும் பாதிப்பு ஏற்படுகின்ற போது ’குய்யோ முய்யோ’ என்று கூச்சலிடுகிறார்கள். தமிழக அரசியல் எவ்வளவு ஆபத்தானது என்பதை இப்பொழுதாவது அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கொஞ்சம் சந்தோஷம் அடையச் செய்கிறது.
எனினும், இடைத்தேர்தல்கள் துவங்கி, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் வளர்ந்து, கிராம அளவில் நடைபெறக்கூடிய பஞ்சாயத்து வார்டு மெம்பர், ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றியக் கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், பேரூராட்சி கவுன்சிலர் பதவிகளுக்குக் கூட கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்து வாக்குகளைப் பகிரங்கமாக விலைக்கு வாங்கி வெற்றி பெற்று, பதவியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று செயல்படக்கூடிய இந்த சமூக அநீதிக்கு எதிராக தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இதற்கு ஒரு முடிவு கட்டவில்லை என்றால், தமிழகத்தில் ஜனநாயகம் குழி தோண்டி அதளபாதாளத்தில் புதைக்கப்பட்டு விடும்.
சில குடும்பங்கள் மட்டுமே முதலமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற புதிய ‘பிரபுக்கள் வர்க்கங்கள்’ உருவாவதைப் போல உள்ளாட்சிகளிலும் இளைய பிரபுக்கள் உருவாகுகிறார்கள். கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதிலிருந்து பல பேரூராட்சிகளில், நகராட்சி பகுதிகளில் அந்தந்த ஜாதி மக்களால் ஏலம் விடப்பட்டு போட்டியின்றி கவுன்சிலர் தேர்வுகள் நடைபெற்று உள்ளன.
அதில் அதிகம் விலை கொடுத்து வாங்கக் கூடியவர்களே வெற்றி மான்கள்; சில ஊர்களில் ஊர் கட்டுப்பாடு விதித்து அவர்கள் யாரை விரும்புகிறார்களோ, அவர்கள் செலுத்த வேண்டிய பணத்தை செலுத்திவிட்டு வெற்றி பெற்றார்கள்; சில இடங்களில் அரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயந்து யாரும் போட்டியிடாத நிலைகள் உருவாயிற்று.
இதையெல்லாம் தாண்டி தேர்தல் நடைபெறக் கூடிய இடங்களில் தான் இப்பொழுது பரிசுப் பொருட்கள், பணப்பட்டுவாடா, குடி கும்மாளத்துடன் நகர்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நாளை நடைபெற இருக்கின்றன. பல மாநகராட்சிகளில் பல வேட்பாளர்கள் ஒரு வாக்காளருக்கு 1000 முதல் 3000 ரூபாய் வரை கொடுத்து இருக்கிறார்கள்.
ஒரு சாதாரண மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 5 கோடி முதல் 10 கோடி வரை செலவு செய்ததாகச் செய்திகள் வருகின்றன.
அமைச்சர்கள் மேற்பார்வையில் எல்லாவிதமான அதிகாரங்களுடன் இந்த அட்டகாசங்கள் நிறைவேறி இருக்கிறது.
தேர்தல் ஆணையம் ஒன்று இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக அவ்வப்போது ’பறக்கும் படை, பறக்கும் படை’ என்று ஒரு செய்திகளை வெளியிடுகிறார்கள். சாதாரண வியாபாரத்திற்குச் சென்று வரக்கூடிய வியாபாரிகளின் பணத்தைக் கூட பிடித்துக்கொண்டு ’இவ்வளவு லட்சம் கைப்பற்றப்பட்டது; அவ்வளவு லட்சம் கைப்பற்றப்பட்டது’ என்று ஊடகங்களுக்குச் செய்தி கொடுக்கிறார்கள்.
ஆனால் தமிழகத்தில் ஏறக்குறைய 21 மாநகராட்சிகள், 150 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் பட்டவர்த்தனமாக எல்லாவிதமான முறைகேடுகளும் நடைபெற்ற வண்ணமே உள்ளது. அதைப் பார்த்தும், ஒரு இடத்தில் கூட அதைத் தடுக்க தமிழக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததா? என்றால் இல்லை. தேர்தல் ஆணையத்தின் கை, கால்களைக் கட்டிப் போட்டுத்தானே இவர்கள் தேர்தலையே சந்திக்கிறார்கள். தேர்தல் ஆணையம் உயிர் வாழ்வதற்காக அவ்வப்போது மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது.
இத்தனை அட்டூழியங்கள் – அராஜகங்கள் எதுவும் எந்த ஊடகத்திலும் வெளி வரப்போவது கிடையாது. அனைத்து மாநகராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளிலும் ’ஆளுங்கட்சி வெற்றி! வெற்றி! வெற்றி!! பத்து மாத ஆட்சி இன்னும் நூறு ஆண்டு காலம் தொடர மக்கள் பேராதரவு’ என்று பெரிய கொட்டை எழுத்துக்களில் டிவிகளில் ’பிளாஷ் நியூஸ்’ போட செல்வன்களும் சேகர்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதன்பிறகு மேயர், நகர்மன்றத் தலைவர் தேர்தல்கள் நடைபெறும். அப்பதவிகளும் கைப்பற்றப்பட்டு விடும். அதற்குப் பிறகும் வெற்றி! வெற்றி! என்று கொட்டை எழுத்துக்களில் கரன், பூந்தி பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவரும். இவற்றையெல்லாம் நாட்டு மக்கள் உணர வேண்டும். தமிழகம் தழுவி இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் கொட்டை எழுத்துக்களில் இந்த வெற்றி குறித்து இந்தி உட்பட அனைத்து மொழிகளிலும் விளம்பரங்கள் பக்கம் பக்கமாக வரும்.
ருமேனியா, பல்கேரியா, அல்மேனியாவிலிருந்து வாக்கு கேட்டு வந்ததைப் போல பல நாட்டுத் தலைவர்களும் இந்த மகத்தான வெற்றிக்கு புகழ்மாலை சூடுவார்கள். ஆம், தமிழகத்தில் நடைபெறக்கூடிய தேர்தல்களில் வெற்றி பெறுவது ஜனநாயகம் அல்ல. மிதமிஞ்சிய ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும், பொய்யும், புரட்டும், பித்தலாட்டமும் தான் வெற்றி பெறும். ஜனநாயகம் மீண்டும் மீண்டும் தோற்கும்.
இந்த அப்பாவி – ஏமாளி தமிழ் மக்கள் அந்த ஓட்டை உடைசல்களுக்கு ஆசைப்பட்டு ஆயிரத்திற்கும் இரண்டாயிரத்திற்கும் தங்களது ஓட்டுகளை விற்றதைப் பற்றி சிறிதும் கூட வருந்தாமல் தங்கள் வாழ்க்கையைக் கடந்து சென்று விடுவார்கள். அவர்களுக்கு நாளை பற்றியோ, நாட்டைப் பற்றியோ எவ்வித கவலையும் இல்லை. வாக்குகளை வாங்குபவருக்கும் இதைப் பற்றி கவலை இல்லை; விற்போருக்கும் இதைப்பற்றி மனசாட்சி இல்லை.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து 38 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்று வருடங்கள் முடிந்த பின்பும், நீட்டை ஒழித்து தரவில்லை;
2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிக்க வாக்குறுதிக் கொடுத்து, ஆட்சிக்கு வந்து 10 மாதங்களாகியும் நீட்டை ஒழிக்க ஒரு கையெழுத்துப் போட முடியவில்லை.
ஆனால் பேரூராட்சி, மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களில் கவுன்சிலராக வெற்றிபெற்று நீட்டை ஒழிக்கப் போகிறார்களாம்! அப்பாவும், மகனும் மீண்டும் இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அதே புராணம். இதையும் தமிழக மக்கள் நம்புகிறார்களே என்ன செய்வது?
’இந்தியர்கள் ஜனநாயகத்தின் விளிம்பைக் கூட புரிந்துகொள்ள ஆயிரம் ஆண்டு காலம் ஆகும்’ என்பதை சர்ச்சில் சொன்னதை ஏற்றுக்கொள்வதற்கு மனமில்லை. ஆனால், அதுதானோ உண்மை? என்று மிகவும் கனத்த இதயத்தோடு அந்த வார்த்தையை அசைபோட வேண்டியிருக்கிறது.
தமிழகத்தில் ஜனநாயகம் மீண்டும் மீளுமா? வாழுமா?
அதை மீட்டெடுக்க இன்னொரு சுதந்திரப் போராட்டம் நடத்தத் தேவை இருக்குமா?
பொறுத்திருந்து பார்ப்போம்!