ரஷ்யா-உக்ரைன் போர் இரு தரப்பிற்கு மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும். தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்ட சூழ்நிலையில், ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் நிலையில் தான் நாடுகள் உள்ளன. இதனால் இந்த போர் அமெரிக்காவையும் பாதிக்கும், இந்தியாவையும் பாதிக்கும்.
இந்த நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் நுழைந்தும், அங்கு கல்வி கற்க சென்றிருந்த பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிக்கிக்கொண்டனர். விமான போக்குவரத்து, ரயில்போக்குவரத்து போன்றவை பாதிப்படைந்த நிலையில், மாணவர்களை மீட்பது சவாலான விஷயம். அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகள் இப்போதைக்கு தங்கள் மாணவர்களை மீட்க முடியாது என்று வெளிப்படையாகவே அறிவித்து பொறுமை காக்கும்படி கூறிவிட்டன. பாகிஸ்தான் போன்ற நாடுகளின் நிலையோ இன்னும் மோசம். இது பற்றி அவர்கள் வாய்கூட திறக்கவில்லை.
போர் மூளும் அபாயம் இருப்பதை உணர்ந்த இந்திய அரசு கடந்த இரண்டு மாதங்களில் 5 முறை நம் நாட்டு மாணவர்களுக்கு ஊர் திரும்ப அறிவுறுத்தியது. ஆனாலும் போர் மூளாது என்ற குருட்டு நம்பிக்கையிலும், படிப்பு கெட்டுவிடும் என்ற அச்சத்திலும் மாணவர்கள் வெளியேறவில்லை.
போர் துவங்கியதும், இந்திய அரசு மாணவர்களை மீட்கும் பணியில் இறங்கியது. பிரதமர் மோடி, உக்ரைன் அரசிடமும், ரஷ்ய அதிபர் புடினிடமும் பேசினார். இதில், இந்திய கொடிகள் கட்டிய வாகனங்கள் தாக்கப்படாது. இந்திய மாணவர்கள் போலந்து, ருமேனியா போன்ற அண்டை நாடுகளுக்கு சென்று அங்கிருந்து நாடு திரும்பலாம் என்று இரு அரசுகளும் ஒத்துக் கொண்டன. அந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்திய மாணவர்கள் நுழைய அனுமதி பெறப்பட்டது.
பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இந்திய கொடியை ஏந்தி தப்பி வந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான மாணவர்கள், கிடைத்த வாகனங்களை பயன்படுத்தி அண்டை நாடுகளுக்கு வரத்தொடங்கினர். இதற்கு இந்திய தூதரக அதிகாரிகள் இரவு பகலாக உழைத்தனர். தூதரகங்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே பணியாளர்கள் இருப்பார்கள். பல ஆயிரம் மாணவர்களை வழிநடத்தி அவர்களை நாடு திரும்ப செய்வதில் நடைமுறை சிக்கல் இருந்தது. ஆனாலும் ஹிந்து ஸ்வயம்சேவக் சங்கம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம், இன்டர்நேஷனல் சேவா, குருத்துவாரா அமைப்புகள் இணைந்து பணியாற்றி வருகின்றன.
இதற்கிடையே மாணவர் ஒருவர் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்படவே. அரசு அதிர்ச்சியடைந்தது. மத்திய அமைச்சர்கள் 4 பேரை போலந்து, ருமேனியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு அனுப்பி வைத்து மீட்புபணியை துரிதப்படுத்தியது. எல்லைகளுக்கு வரும் மாணவர்களை, அமைச்சர்கள் வரவேற்று உற்சாகப்படுத்தினர். இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்துடன் ஸ்பைஸ்ஜெட் விமானங்களும் மீட்பு பணியில் இணைந்தது. இதைத்தொடர்ந்து இந்திய ராணுவ விமானங்களும் மாணவர்களை ஏற்றி வர பறந்தன.
இதோ 70 சதவீத மாணவர்கள் மீட்கப்பட்டுவிட்டனர். கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவி தனது வளர்ப்பு நாயுடன் நாடு திரும்பியுள்ளார். பல நாடுகள் தங்கள் மாணவர்களை அம்போ என்று நிர்கதியாகவிட்டுவிட, இந்தியா, ஒவ்வொரு மாணவரையும் மீட்பதில் தனது முழு சக்தியையும் செலவிட்டுவருகிறது.
வெளியுறவுத்துறை அமைச்சகம் 24 மணிநேரமும் இடைவிடாது இயங்குகிறது. பிரதமர் மோடி, பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் என்று ஒட்டுமொத்த நிர்வாகமும் மாணவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ஆனால் தமிழகத்தில் ஸ்டாலின் அரசோ, நாடு திரும்பும் தமிழக மாணவர்களை தங்கள் முயற்சியால் மீட்டதாக அமைச்சரை அனுப்பி ஸ்டிக்கர் ஒட்டுகிறது. துரதிர்ஷ்டவசமாக ஒரு மாணவர் இறந்துவிட்ட சம்பவத்தை ராகுல்காந்தி முதல், நம்ம ஊர் சுந்தரவல்லி வரை அரசியலாக்குகின்றனர்.
ஆனால் நாடு திரும்பும் ஒவ்வொரு மாணவரின் மனதிலும் பிரதமர் நரேந்திரமோடி நிறைந்திருக்கிறார். இந்த சூழ்நிலையிலும் எதிர்கட்சிகள் மீட்பு பணியை அரசியலாக்குவதை கண்டு வெட்கப்படுகின்றனர்.
இரு கம்யூனிச நாடுகள் மோதிக்கொள்வது குறித்து இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள் கள்ள மவுனம் சாதிக்கின்றனர்.
எந்த நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த யார் சிக்கலில் மாட்டினாலும் அவர்களை மீட்பதில் வேறு எப்போதும் இல்லாத வகையில் மோடி தலைமையிலான அரசு செயல்படுகிறது. ஆப்கனில் சிக்கிய பாதிரியாராகட்டும், இலங்கையில் தூக்கு கயிற்றின் முனையில் இருந்து மீட்கப்பட்ட 5 தமிழர்களாகட்டும், சிரியாவில் சிக்கியிருந்த கேரள நர்சுகளாட்டும், இப்போது உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களாட்டும், அவர்கள் என் பாரத அன்னையின் பிள்ளைகள் என்று மட்டுமே மோடி அரசு பார்க்கிறது. இதை புரிந்து கொள்ளதவர்கள், அல்லது புரிந்து கொள்ளாதவர்களைப் போல நடிப்பவர்களை பற்றி நாடு மக்களும் கவலைப்படமாட்டார்கள்.