ஜெய்பீம் சினிமாவும், கற்றுத்தரும் பாடமும்!!

ஆன்மீகவாதியாகவும், ஒழுக்கசீலராகவும் அடையாளம் காணப்பட்ட நடிகர் சிவக்குமாரின் மகன் சூர்யா, துவக்க காலத்தில் நல்ல பொழுது போக்கு அம்சங்களும், தேசப்பற்றும் மிகுந்த படங்களில் நடித்து அனைத்து தரப்பு மக்களின் அன்பையும் பெற்றார். விஜய் ரசிகர்கள் அஜித் படத்தை வெறுப்பார்கள், அஜித் ரசிகர்கள் விஜய் படத்தை வெறுப்பார்கள் என்ற சூழ்நிலை நிலவும் போது, சூர்யா நடித்த பல படங்கள் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றன.

ஆனால் சமீப காலங்களில் தமிழ் சினிமா உலகை, மதமாற்ற கும்பல்களும், பிரிவினைவாதிகளும், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும் கையகப்படுத்தி, தங்கள் கொள்கைகளை சினிமாவில் திணிப்பதோடு, இந்த தேசத்திற்கு எதிராகவும், இந்து மதத்திற்கு எதிராகவும், பெரும்பான்மை மக்கள் நம்பும் கடவுள் நம்பிக்கை, ஆன்மீகவாதிகளுக்கு எதிராகவும் பழத்தில் ஏற்றும் ஊசி போல காட்சிகளை வைக்கத் தொடங்கினர்.

சினிமா தயாரிப்பதற்கு நிதி உதவி அளிப்பதில் தொடங்கி, இயக்குனர், தயாரிப்பாளர், தயாரிக்கப்படும் சினிமாவை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க பத்திரிக்கைகள், ஊடகங்கள் என்று இந்த நெட்வர்க் தமிழ் சினிமா உலகை கண்ணுக்குத் தெரியாமல் இயக்கிக் கொண்டிருக்கிறது.

2014 ம் ஆண்டு மத்தியில் பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்றதும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், மோடிக்கு எதிராக வெறுப்பு பிம்பத்தை கட்டமைக்கத் தொடங்கின. (இதை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனே ஒரு பேட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.)

அந்த வெறுப்பு பிம்பத்தை கட்டமைக்க பல நடிகர்கள் உள்ளிட்ட சினிமா பிரபலங்களை இந்த சக்திகள் பயன்படுத்திக் கொண்டன. அதில் சிக்கிக் கொண்டவர்களில் நடிகர் சூர்யாவும் ஒருவர்.

மத்திய அரசுக்கு எதிராக, அவ்வப்பொது கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த நடிகர் சூர்யா, தற்போது ஜெய்பீம் படத்திலும், சினிமாவைத் தாண்டி, தனது வெறுப்பு அரசியலை வெளிப்படுத்தியுள்ளதாக சினிமா பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் ஐகோர்ட் நீதிபதி சந்துரு, வழக்கறிஞராக இருந்த போது, காவல்துறையின் கொடுமைக்கு ஆளான இருளர் சமுதாயத்திற்காக நீதிமன்றங்களில் வாதாடி நீதி பெற்று தந்த கதை தான் இது என்றும், அந்த உண்மைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள், வழக்கறிஞர் சந்துருவின் பெயர் வரை அதே பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் புழகாங்கிதத்தோடு தெரிவிக்கின்றனர்.

ஆனால் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவரை உண்மையில் அடித்துக் கொலை செய்த காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர், ஆனால் படத்தில் அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் போலவும், அவர் குறிப்பிட்ட ஜாதியை போலவும் காட்டப்பட்டுள்ளது ஏன் என்று சமூகவலைதளங்களில் கேள்விகளை எழுப்பி பலரும் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக ருத்ரதாண்டவம் படத்திற்கு ஆதரவாக இருந்த ஜாதியை குறிப்பது போல காட்சிகள் அமைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

இதைத்தவிர திறமையற்ற ஒரு வழக்குரைஞர், ஓம்நமச்சிவாயா மந்திரத்தை உச்சரதித்துக் கொண்டிருப்பதைப் போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது ஏன் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

இவையெல்லாம் அப்பட்டமான இந்து மத எதிர்ப்பு என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

இருளர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ள சூர்யா, படத்தில் பல இடங்களில் காரல் மார்க்ஸ் உள்ளிட்ட கம்யூனிச தலைவர்களின் படங்களை பெருமையுடன் காட்டி, தான் முதலாளித்துவம், கார்ப்பரேட்டுகளுக்கு எதிரானவர் என்று காட்டிக் கொள்கிறார். ஆனால் படத்தை வெளியிட்டதோ சர்வதேச கார்ப்பரேட் நிறுவனமான அமேசான் பிரைமில்… சூர்யாவை நடிகர் என்ற அந்தஸ்த்தில் ஏற்றிவிட்ட, தமிழ்நாட்டு சினிமா தியேட்டர்கள், கொரோனா பெருந்தொற்றில் பெரும் நலிவை சந்தித்து, அதை நம்பியிருந்த உரிமையாளர்கள், தொழிலாளர்கள் படும் சிரமத்தில் இருக்கும் போது, சூர்யா அமேசான் பிரைமை வாழ வைத்துக் கொண்டிருப்பது ஏன் என்ற கேள்விக்கு பதில் இல்லை.

இவையனைத்தையும் விட, இருளர் சமூகத்திற்கு நடந்த இந்த பெரும்கொடுமையின் போது ஆட்சியில் இருந்தது திராவிட கட்சிகள் என்பதையும், காவல்துறையை அந்த கட்சிகளின் முதல்வர்கள் கையில் வைத்திருந்தார்கள், காவல்துறையின் தவறுக்கு அந்த துறையை வைத்திருந்தவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறும் துணிச்சல் ஏனோ சூர்யா வகையறாவிற்கு வரவில்லை.

நீதிபதி என்பவர், தான் எந்த கட்சி, கொள்கை, ஜாதி, மதம் பின்னணியில் இருந்து வந்தாலும், பதவியேற்றதும் பொதுவானவராகவும், விருப்பு< வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி தீர்ப்பு வழங்கக்கூடியவராக இருக்க வேண்டும். ஆனால் ஜெய்பீம் சந்துரு, தான் எஸ்எப்ஐ உறுப்பினர் என்பதையும், தான், சட்டத்தை மட்டும் பார்க்காமல் அம்பேத்கரின் ஒளியில் தீர்ப்பு வழங்கியதாகவும் புத்தகம் எழுதியுள்ளார்.

பொதுவாகவே கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊடகத்துடன் இணக்கமாக பழகி காரியத்தை சாதித்துக் கொள்ளக்கூடியவர்கள்… அந்த வகையில் ஊடகங்களுடன் நெருக்கமாக இருந்த நீதியரசர் சந்துரு, தான் பணி ஓய்வுக்குபிறகு விகடன் குழுமத்தில் தொடர்ந்து நெருக்கமான தொடர்பில் இருந்தார்.

பத்திரிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்திற்கான பச்சாவத் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில், அந்த நிறுவனம் காட்டிய ஆர்வம், அதற்காக நீதியரசர் சந்துரு கூறிய ஆலோசனைகளையெல்லாம் அப்போது விகடனில் பணியாற்றிய ஊழியர்களை கேட்டால் பக்கம் பக்கமாக சொல்வார்கள் அதைப்பற்றியும், நாட்டின் நிதி அமைச்சரை பெண் என்ற ஒரே காரணத்திற்காக நீதிபதி சந்துரு, விமர்சனம் செய்த விவகாரத்தையும் சேர்த்து படம் எடுத்தால் இன்னும் புகழ் ஓங்கச் செய்ய முடியும்.

ஜெய்பீம் வெளியானவுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின், அந்த படத்தை பார்த்து, பாராட்டி, மார்க்கெட்டிங்கிற்கு உதவியது, விளிம்பு நிலை பெண் ஒருவர், அன்னதானத்தில் அவமானப்படுத்தப்பட்டது, அந்த பெண்ணை அமைச்சர் சேகர்பாபு அழைத்து சமபோஜனம் நடத்தியது, பின்னர் அதே பெண்ணின் வீட்டிற்கு சென்று முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, அந்த பெண்ணை சார்ந்தவர்களுக்கு மத்திய அரசின் முத்ரா மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கு அளிக்கப்படும் வங்கி கடன்களை அளித்தது போன்ற அனைத்தும் ஒன்றையொன்று சாராத சம்பவங்கள் என்றே நம்புவோம்.

தமிழன் வாழ்க என்று கூறிவிட்டு, தமிழனின் பண்பாடு, குடும்பம், கலாச்சாரம், முன்னோர்கள், ஆன்மீகம், பழக்க வழக்கங்கள் என்று அனைத்தையும் கேவலப்படுத்தினால் சிரித்துக் கொண்டு ஏற்கும் சமுதாயமாக இருக்கும் வரை, பொழுது போக்கிற்காக வரும் சினிமாக்களில், தேவையே இல்லாவிட்டாலும் கூட அவமானப்படுத்துதல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

இதுவே ஜெய்பீம் நமக்கு உணர்த்தும் பாடம்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here