பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலின் கீழ் உள்ள பெரியசாமி கோயிலில் 5.10.2021 அன்று இரவு 14 சாமி திருவுருங்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன.
அதன்பின் சில தினங்களிலேயே பெரியாண்டவர் கோயிலில் உள்ள 13 கடவுள் திருவுருவங்கள், முருகன் கோவிலில், குதிரை மற்றும் மயில் சிலைகளும் சேதப்படுத்தப்பட்டிருந்தன. புகாரின் பேரில் நாதன்(37) என்பவரை கைது செய்து அவர் மனநலம் தவறியவர் என்றும், சாமி சிலைகளுக்கு கீழே உள்ள காசுகளை திருட சிலைகளை உடைத்தார் என்றெல்லாம் கூறி, போலீசார் வழக்கை முடித்தனர்.
ஆனால் இப்பகுதியில் நடந்து வரும் மதமாற்றத்தின் வெளிப்பாடு என்றும், ஒரு குறிப்பிட்ட மதத்தவர்களின் சதி செயலே என்றும் இந்து அமைப்புகள் குற்றம்சாட்டின. தேசியவாதியும், யூடியூபருமான கார்த்திக் கோபிநாத், அக்கோயில்களுக்கு நேரில் சென்று நடந்ததை பதிவு செய்து வெளியிட்டார். அத்தோடு ஏழை எளிய மக்களால் கட்டி சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட கோயில்களில் திருப்பணிகளை அவர்கள் மீண்டும் செய்ய முடியாது என்பதால், மிலாப் இணையம் மூலம் அதற்கு நிதி திரட்டினார்.
கோயில் நிர்வாகிகளுடன் இணைந்து இந்த திருப்பணியை மேற்கொண்ட கார்த்திக் கோபிநாத் மீது இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் பேரில் இரவோடு இரவாக கைது செய்து தமிழக போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழகத்தில் மட்டுமே சிலரால் அறியப்பட்டு வந்த கார்த்திக் கோபிநாத் தற்போது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்படும் நபராக மாறிவிட்டார். ரிபப்ளிக் டிவி, டைம்ஸ்நவ், இந்தியாடுடே, நியூஸ்18 உள்ளிட்ட பல்வேறு தேசிய ஊடகங்கள் கார்த்திக் கோபிநாத்தை திமுக அரசு கைது செய்தது குறித்து செய்திகள் ஒளிபரப்பி வருகின்றன. தேசிய அளவில் சமூக வலைதளங்களிலும் பேசப்படும் பொருளானார். ஒரே நாளில் ஒருவரை தலைவராக்குவது இப்படித்தானோ என்று அரசியல்விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது….
- இந்துக்களின் தெய்வமான நடராஜர் குறித்து மிக ஆபாசமாக வீடியோ வெளியிட்ட நபரை எதிர்த்து ஆயிரக்கணக்கான இந்துக்கள் போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை அவரை கைது செய்ய எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. ஆனால் பாஜக ஆதரவாளர்களை இம் என்றால் சிறைவாசம் என்ற வகையில் திமுக அரசு கைது செய்து வருகிறது.
- பல நூறு கோடி மோசடி செய்தவர்கள் எல்லாம், பகலில் பல நாள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அதற்கு பின்னர் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் மட்டுமே அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் கைது நடவடிக்கைகளில் இறங்குகின்றன. ஆனால் விசாரணையின் போது, கார்த்திக் கோபிநாத், கணக்குகளை தெளிவாக காட்டிய போதும் அவரை அவசர அவரசமாக சிறையில் அடைக்க வேண்டிய நிர்பந்தம் என்ன? மோசடி நடந்திருந்திருந்தாலுமே முழுக்க முழுக்க ஆவணங்கள் அடிப்படையிலான வழக்கு இது. அவர் சாட்சிகளை கலைக்க முடியாது என்ற போது எதற்கு கைது?
- உடைக்கப்பட்ட திருக்கோயில்களை சீரமைக்க இந்து சமய அறநிலைத்துறை இதுவரை ஒரு பைசா கூட நிதி ஒதுக்காத போது, திருப்பணி செய்ய வருபவர்களை மிரட்டுவது எதற்காக? வேறு யாரும் இந்து கோயில்களை புனரமைத்துவிடக்கூடாது என்ற எண்ணமா?
- திமுக வெற்றி பெற ஒரு குறிப்பிட்ட மதத்தவர்கள் போட்ட பிச்சை என்று அம்மதத்தை சேர்ந்தவர் பேசினார். அதற்கு பின்னர் தொடர்ந்து அந்த மதத்தவர்களுக்கு சாதகமாகவே அரசு நடவடிக்கைகள் இருப்பதாக லாவண்யா தற்கொலை உள்ளிட்ட விவகாரங்களை மேற்கோள்காட்டி இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. கோயில் இடிப்பை அமைதியாக வேடிக்கை பார்க்கும் இந்துசமய அறநிலைத்துறை, உடைக்கப்பட்ட கோயிலை சீரமைக்க வந்தவர் மீது புகார் கொடுத்து கைது செய்ய வைத்திருப்பது யாருக்காக? யார் உத்தரவின் பேரில்…
- தேசிய சிந்தனை உள்ளவர்களை, ஹிந்து அமைப்பினரை தொடர்ந்து கைது செய்வதன் மூலம் அவர்களை முடக்கிவிடலாம் என்று திமுக அரசு நினைத்தால் அது பகல்கனவாகிவிடும், 1975 ல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இந்திரா காந்தி தடை செய்தார். தடைக்கு நீக்கியபோது அந்த அமைப்பு இரு மடங்கு வளர்ந்திருந்தது. அதேபோல தான் தமிழகத்தில் பாஜக உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு பல ஆயிரம் மக்கள் திரண்டு வருவது திமுக அரசின் நடவடிக்கையால் தான் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.
தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களை கைது செய்வதன் மூலம் அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்திவிடலாம் என்று திமுக போன்ற அனுபவம் வாய்ந்த அரசியல்கட்சியினர் புரிந்து கொள்ளாதது அவர்களின் துரதிர்ஷ்டம் தான்.