பயங்கரவாதிகளை முடிவுக்கு கொண்டு வர எந்த எல்லைக்கும் பாரதம் செல்லும்!-பலியானவரின் மகள் எச்சரிக்கை!!

சுதந்திரமடைந்த நாளில் இருந்து நாட்டிற்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பது ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகள் பிரச்சனை. நேருவின் தவறான கொள்கையால் சட்டபிரிவு 370 மூலம் ஏராளமான சலுகைகள் அள்ளிக் கொடுத்தபோதும், பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரமுடியவில்லை. பூர்வ குடிமக்களான இந்துக்கள் காஷ்மீரிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். முப்தி முகமது சையது, பரூக் அப்துல்லா வகையறாக்கள் பல நூறு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, இந்திய அரசு ஒதுக்கும் நிதியை அனுபவித்துக் கொண்டு சுக வாழ்க்கையை வாழ்ந்தனர்.

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் காஷ்மீரில் மட்டுமே அரசு பணம் கொட்டப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு எல்லாவித உதவிகளும் கிடைத்தன. பாதுகாப்பிற்காக சென்ற ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாத ஆதரவாளர்கள் கல் எறி தாக்குதல் நடத்தினர். (கல் எறிந்து தாக்கியவர்கள் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டபோது கை கொடுத்து காப்பாற்றியவர்கள் நம் ராணுவ வீரர்களே) ஜம்மு, லடாக் பகுதிகளில் உள்ள மக்களுக்கு எந்த விதமான வளர்ச்சிப்பணிகளும் கிடைக்கவில்லை.

மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த நரேந்திரமோடி அரசு, ஒரேநாளில் அதிரடியாக காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வந்த விசேஷ சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியதோடு, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதன் மூலம் லடாக் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். லடாக் மக்களுக்கு மத்திய பல்கலைக்கழகம் துவங்கப்பட்டுள்ளது. பல வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜம்மு பகுதிகளிலும் பல வளர்ச்சிப்பணிகள் துவங்கப்பட்டது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்த மக்களும் காஷ்மீர் மாநிலத்தில் நிலங்களை வாங்கத் தொடங்கினர். பல ஆண்டுகளாக டில்லி வீதிகளில் அகதிகளாக கிடந்த காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ராணுவம் அடக்கி வருகிறது. பல பயங்கரவாத குழுக்களின் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல இளைஞர்கள் மனம் திருந்தி வாழ முற்பட்டு வருகின்றனர்.

கோயில்களில் பூஜைகள் நடக்கின்றன. இந்துக்கள் சமஉரிமையுடன் வாழத் தொடங்கியுள்ளனர். ஆனால் ஜம்மு காஷ்மீரில் கோலோச்சிக் கொண்டிருந்த தேசிய மாநாட்டுக்கட்சியின் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, பிடிபி கட்சியின் மெகபூபா போன்றவர்கள் 370 பிரிவு மீண்டும் வேண்டும், 370 பிரிவை எடுத்ததால் எந்த பலனும் இல்லை என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் நம்பிக்கையுடன் ஜனநாயக பாதையில் வாழத் தொடங்கியிருக்கும் சமயத்தில், பயங்கரவாதிகள், மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பெரும்பாலான இடங்களில் ராணுவம் தீவிர காவல் பணியில் இருக்கும் நிலையில், அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொல்லும் கொடூரச் செயலில் பயங்கரவாதிகள் இறங்கியுள்ளனர். 2021 ம் ஆண்டில் மட்டும் இதுவரை 28 அப்பாவிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். கடந்த இரு தினங்களில் இரு பள்ளி ஆசிரியர்கள் உட்பட 5 பேர் பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர். அரசு பள்ளி ஒன்றில் 5 ஆசிரியர்கள் பணியில் இருந்தபோது 3 முஸ்லீம் ஆசிரியர்களை வெளியேற்றிவிட்டு, பள்ளி தலைமை ஆசிரியையான சுபீந்தர் கவுர் என்ற சீக்கிய பெண்மணியையும், தீபக் சந்த் என்ற ஆசிரியரையும் இரக்கமற்ற வகையில் கொன்றுவிட்டு கோழைகள் தப்பி சென்றுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க, ராகுல்காந்தியோ, அவரது சகோதாரி பிரியங்காவோ செல்லமாட்டர்கள், நம்ம ஊர் ஸ்டாலின், திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியினர் யாரும் கண்டனம் கூட தெரிவிக்கமாட்டார்கள். ஏன் எனில் பாதிக்கப்பட்டது அப்பாவி மக்கள், சுட்டுக் கொன்றது பயங்கரவாதிகள்.

ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இது தொடர்பாக சிறப்பு கூட்டம் நடந்துள்ளது. இதன் எதிரொலியாக பயங்கரவாதிகளை வேட்டையாட ராணுவமும், காவல்துறையும் களம் இறங்கி வீடுவீடாக தேடி வருகின்றனர்.

நாட்டில் அமைதி நிலவ, மக்கள் அனைவரும் நலமுடன் வாழ மத்திய மோடி அரசு பல துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதற்கு எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அதை திறமையாக சமாளித்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் நாட்டின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இதோ பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலுக்கும் இந்த அரசு முடிவு கட்டும். அதை காஷ்மீர் மக்கள் பூரணமாக நம்புகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்ட மருந்துக்கடை உரிமையாளர் மக்கன்லாலின் மகள் டாக்டர். ஷிரத்தா பிந்த்ரூ கூறுகிறார்:

அப்பாவி மக்களை கொல்வதன் மூலம் தங்களது கோழைத்தனத்தை பயங்கரவாதிகள் வெளிப்படுத்துகின்றனர். என் தந்தை காஷ்மீர் பண்டிட். அவர் எப்போதும் சாக மாட்டார். ஆன்மாவாகவும், மக்கள் மனதிலும் எப்போதும் நிறைந்திருப்பார்.
அவருடைய உடலைத்தான் பயங்கரவாதிகளால் கொல்ல முடியும். ஆன்மாவை அல்ல. பயங்கரவாதிகளுக்கு துணிவிருந்தால் என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த வரட்டும். அதன்பிறகு அவர்களுக்கு என்ன தேவை என்பதை முடிவு செய்யட்டும்.

இந்தத் பயங்கரவாதிகள் அப்பாவி பொது மக்களைத்தான் கொல்ல முடியும். அவர்களால் அது மட்டும்தான் செய்ய முடியும். நேருக்கு நேர் விவாதம் நடத்த அவர்களுக்கு துணிச்சல் கிடையாது. என் தந்தை போர் வீரனைப் போல வாழ்ந்தவர். அதனால் நான் அழ மாட்டேன். சிரித்த முகத்துடன் இருப்பேன்.

என் தந்தை பயமின்றி வாழ்ந்தார். காஷ்மீரில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் அதிகமாக இருந்த போதும் (கடந்த 1990-களில்) ஸ்ரீநகரில் உள்ள மருந்துக் கடையை மூட மறுத்துவிட்டார். அவர் வெற்றியாளராக வாழ்ந்து சென்றுள்ளார். அதனால் நான் அழப்போவதில்லை. அதுதான் அவருக்கு நான் செலுத்தும் மரியாதை.

பயமின்றி வாழ வேண்டும் என்பதைதான் என் தந்தை எனக்கு கற்றுத் தந்தார். ‘உங்களுக்கு பயம் இல்லையா?’ என்று என் தந்தையை அடிக்கடி கேட்பேன். அதற்கு அவர், “பயத்தில் வாழ்ந்தால், ஒவ்வொரு நாளும் நான் வாழ்வது மிகவும் கடினம். நான் இறந்தால், அது ஒரு முறைதான்” என்று கூறுவார். எதற்காக நாம் பயப்பட வேண்டும். பயம் இல்லாமல் இருப்பதுதான் வாழ்க்கை. பயம்தான் மரணம்.

பயங்கரவாதிகளை மத்திய அரசு சும்மாவிட்டுவிடாது. பயங்கரவாதிகளை அழிக்க அரசு எந்த எல்லைக்கும் செல்லும்…
இது அந்த வீரமகளின் வார்த்தைகள்… பாஜக கவுன்சிலரும் காஷ்மீர் பண்டிட்டுமான ராகேஷ் பண்டிட்டை 4 மாதங்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அவரை கொன்ற பயங்கரவாதியை காஷ்மீர் பாதுகாப்புப் படையினர் சமீபத்தில் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here