கொங்குநாடு கோரிக்கை அலறும் போராளீஸ்..!

தமிழகத்தில் தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைத்தும், தனது தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவதை விட, மத்திய அரசை, ‘ஒன்றிய’ அரசு என்று குறிப்பிடுவதில் அதிக ஆர்வம் காட்டியது. தமிழக அரசு வெளியிடும் அறிக்கைகளில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டது. அது குறித்து சட்டசபையில் பாஜ கேள்வி எழுப்பியபோது, அரசியல் சாசனத்தில் யூனியன் என்ற குறிப்பிட்டதையே தமிழில் குறிப்பிடுகிறோம் என்று, இதில் தவறில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது.

அப்படியென்றால் இனி சிஐடியு போன்ற யூனியன்களை தொழிலாளர் ஒன்றியங்கள் என்று அழைக்கலமா என்பதையும் தெளிவுப்படுத்தலாம். அ.தி.மு.க அரசை அடிமை அரசு என்று கூறிவந்த தி.மு.க கூட்டணி கட்சிகள், இப்போது தி.மு.கவின் உத்தரவிற்கு ஏற்ப மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கத் தொடங்கியிருக்கின்றன. அதேபோல தி.மு.க ஆதரவு ஊடகங்களும் ஒன்றிய அரசு என்றே கூறி வருகின்றன. இந்த நிலையில் சட்டசபையில் பேசிய ‘கொங்குநாடு’மக்கள் தேசிய கட்சியின் தலைவரும், திமுகவின் உறுப்பினருமான ஈஸ்வரன், கவர்னர் உரையில் ஜெய்ஹிந்த் வார்த்தை இடம்பெறாதது பெருமைக்குரியது என்ற வகையில் பேசி சர்ச்சையில் சிக்கி புலகாங்கிதம் அடைந்திருக்கிறார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பவே, தான் இந்தியில் இடம்பெற்றதைத் தான் கூறினேன் என்று சமாளிக்க முயலுகிறார்.

இந்த நிலையில், புதிதாக மத்திய அமைச்சரவை பதவியேற்ற போது, தமிழகத்தைச்சேர்ந்த எல்.முருகனைப் பற்றிய விவரக்குறிப்பில், கொங்குநாடு, தமிழ்நாடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது, திமுக மற்றும் அதன் கூட்டணி, ஆதரவு கட்சிகளை அதிர்ச்சியடைச் செய்தது. இதைத்தொடர்ந்து, தமிழக மேற்கு மாவட்டங்களை பிரித்து கொங்குநாடு தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக தினமலர் பத்திரிக்கை, தமிழக மேற்கு மாவட்டங்களை பிரித்து கொங்குநாடு யூனியன் பிரதேசம் அமைக்க மத்திய அரசு திட்டம் என்று தலைப்புச் செய்தி வெளியிட்டது. உடனே ம.தி.மு.க., பெரியார் தி.க உள்ளிட்ட கட்சிகள் தபோ திபோ வென்று குதிக்கத் தொடங்கியுள்ளன. தி.மு.க.வின் ஒன்றிய கோஷத்திற்கு எதிராக பா.ஜ.க. செய்யும் சதிக்கு தினமலர் தூபம் போட்டுள்ளது என்று கூறி தினமலருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். தேசவிரோத கருத்துக்களை வெளியிடும் பத்திரிக்கைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினாலோ, வழக்குப்போட்டாலோ கருத்து சுதந்திரம் இல்லை என்று கூச்சல் போடும் இந்த நபர்கள், தினமலரின் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிராக போராட்டத்தை துவக்கியுள்ளனர். அவர்கள் கருத்துப்படி கருத்து சுதந்திரம், திராவிட, கம்யூனிஸ, முஸ்லீம், கிருஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உரிமையானது. அதனால் இந்த எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுவது வியப்பில்லை.

தனிமாநில கோரிக்கை குறித்து எழுதுவதோ, அல்லது கோரிக்கை வைப்பதோ சட்டப்படி தவறில்லை என்பதால், இந்த அமைப்புகள் லபோ திபோவென குதிக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் தி.மு.க எம்எல்ஏ ஈஸ்வரன் நடத்தும் கட்சியின் பெயர் ‘கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி’ அதன் முக்கிய நோக்கம் கொங்குநாட்டை மலரச் செய்வது… இதை நாம் சொல்லவில்லை. ஜெய்ஹிந்த் பேச்சு சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஈஸ்வரன், தனது விளக்கத்தின் இறுதியில், வெல்க பாரதநாடு, வளர்க தமிழ்நாடு, மலர்க கொங்குநாடு என்று குறிப்பிட்டிருக்கிறார். மலர்க கொங்குநாடு என்றால் என்ன அர்த்தம்? தி.மு.கவும், இப்போது தினமலருக்கு எதிராக பொங்கும் தி.மு.கவின் அடிமை கட்சிகளும் ஈஸ்வரனிடம் கேட்க வேண்டும்… கேட்பார்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here