கொங்குநாட்டு முதல்வராக திமுக எம்எல்ஏ!

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை பிரித்து கொங்குநாடு தனி யூனியன் பிரதேசம் அமைக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு திமுகவும், அதன் கூட்டணிக்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கொங்குநாடு என்பது சாத்தியமே இல்லை என்று ஒரு தரப்பினரும், அதிக வருவாயை அளிக்கும் கொங்குநாடு தனி மாநிலமானால் மேற்கு மாவட்டங்கள் வளர்ச்சி பெரும் என்றும் தங்கள் தரப்பின் சாதக பாதகங்களை சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டை பிரிப்பது பிரிவினை வாதம் என்று திமுக தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க, தனிநாடு கேட்பது தான் பிரிவினைவாதம், சட்டவிரோதம், தனிமாநிலம் கேட்பது சட்டப்பூர்வ உரிமை என்று இதற்கு முன் பலமாநிலங்கள் பிரிக்கப்பட்டதை கொங்குநாடு தரப்பினர் எடுத்துக் காட்டுகின்றனர். மொழி வாரி அமைந்த மாநிலத்தை பிரிக்க விடமாட்டோம் என்று ஒரு தரப்பினர் கூற, தமிழ் பேசும் பாண்டிச்சேரி தனிமாநிலமாக இருக்கிறது, தெலுங்கு பேசும் ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டதே என்று மறு தரப்பினர் எதிர் கேள்வி கேட்கின்றனர். இதையெல்லாம் விட முத்தாய்ப்பாக திமுக கூட்டணியில் உள்ள கொ ம தேகவும் கொங்கநாடு மலர வேண்டும் என்று விரும்புகிறது.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, திமுக எம்எல்ஏவாக இருக்கும் ஈஸ்வரன், தனது பேஸ்புக் பதிவில் மலர்க கொங்குநாடு என்று பதிவிட்டதை ஏற்கனவே நியூஸ்குரு சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியத்தில் உள்ள போடிபாளையம் கொமதேகவினர், திமுக எம்எல்ஏவும், தங்கள் கட்சி பொதுச்செயலாளருமான ஈஸ்வரனை ‘கொங்குநாட்டு முதல்வர்’ என்று குறிப்பிட்டு சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர்.

இது தி.மு.கவினரை கடுப்படுத்தியுள்ளது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என்று கட்சி பெயரிலேயே கொங்குநாடு வைத்திருக்கும் ஈஸ்வரன் கட்சி தொண்டர்கள் பலரும் கடந்த பல ஆண்டுகளாகவே கொங்குநாடு தனி மாநிலமாக வேண்டும், அதில் ஈஸ்வரன் முதல்வர் ஆக வேண்டும்(!) மேடைகளில் பேசி வந்துள்ளனர். தற்போது தி.மு.க கூட்டணிக்கு வந்த பின்னரும் அந்த மனநிலையிலிருந்து விடுபட முடியவில்லை என்பதையே விளம்பரம் காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here