மூவேந்தர்களில் முன்னவர்களான பாண்டியர்கள் மகாபாரதப் போரில் பங்கு கொண்டார்களா? சேர அரசர்கள், 18 நாட்கள் நடந்த பாரதப்போரில் பங்குகொண்ட இரு படைகளின் வீரர்களுக்கும் உணவளித்தனரா?, யுதிஷ்டிரனின் இந்திர பிரஸ்த பதவியேற்பின்போது சோழர்கள் நன்கொடைகளை வழங்கினார்களா? என்பதையும் மகாபாரதத்தின் மூலமாக அறிந்திருந்தாலும் மகாபாரதப் போரில் எதாவது ஒரு தரப்பினருடனாவது பாண்டிய அரசர்கள் போரிட்டனரா? என்பதை பார்க்கலாம்…!
மகாபாரதத்தில் பாண்டு மகாராஜாவின் மூத்த மகனான வில்லுக்கு விஜயன் என்று இளங்கோவடிகளால் புகழப்படும் அர்ச்சுணனுக்கு முன்னவனான யுதிஷ்டிரன் இந்திர பிரஸ்தத்திற்கு அரசனாக பதவியேற்க நடந்த ராஜசூய வேள்வியின்போது அவமதிக்கப்பட்ட துரியோதனன் பாண்டவர்களுடன் சூதாட வேண்டும் என்று தனது விருப்பத்தை தனது தந்தையான திருதராஷ்டிரனிடம் கூறியதும், திருதராஷ்டிரன் விதுரனின் அறிவுரையாக சூதாட்டம் வேண்டாம் என்று எடுத்துக்கூறியதும், யுதிஷ்டிரன் இந்திர பிரஸ்தத்திற்கு மன்னனாக பதவியேற்கும் போது சோழ மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் , கேரள மன்னர்களும் யுதிஷ்டிரனுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி யுதிஷ்டிரனை செழுமையடையச் செய்ததை தனது தந்தையிடம் விவரமாக கூறும் செய்தி மகாபாரதத்தில் உள்ளது.
பாண்டிய, சோழ, சேர அரசர்கள் என்ன கொடுத்தனர் என்பதை சபா பர்வத்தின் கும்பகோணம் பதிப்பில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, “பாண்டியராஜன் தர்ததுர மலையிலுண்டான தொண்ணாற்றாறு பாரம் நிறையுள்ள முதல் தரமான சந்தனக் கட்டளைகளையும், தொண்ணூற்றாறு சங்கங்களையும் தர்மராஜாவுக்கு விரைந்து கொடுத்தான்.
சோழ ராஜன், கேரளராஜன் இருவரும் கணக்கில்லாத சந்தனங்களையும், அகில்களையும், பலவகையான முத்துக்களையும், வைடூரியங்களையும் பாண்டுபுத்ரனுக்குக் கொடுத்தனர்” என்ற செய்தி உள்ளது….!
அடுத்ததாக பாண்டிய மன்னர்கள் மகாபாரதப் போரில் பங்குகொண்டனர் என்பதை மகாபாரதத்தின் உத்யோக பர்வத்தில் 172 ஆவது பகுதியில் பீஷ்மர் பாண்டியனை ஒரு மகாரதன் என்கிறார்.
அதோடு மகாபரதத்தின் துரோண பர்வத்தில் பாண்டியன் சாரங்கத்வஜன் பற்றிய குறிப்புகள் உள்ளது.
இதன் அடிப்படையில் மகாபாரதப் போரில் பாண்டியர்களும் பங்கு கொண்டனர் என்பது தெளிவு.
தமிழ் இலக்கியங்கள் மற்றும், பிற்கால மூவேந்தர்களும் தங்கள் ஆட்சிகாலத்தில் மகாபாரதத்திற்கு அளித்த முக்கியத்துவத்தின் வாயிலாகவும், மகாபாரதத்தில் மூவேந்தர்களுமே பங்கு கொண்டுள்ளனர் என்பதை நிறுவலாம் எனினும் இவையெல்லாம் வடமொழி நூல்களில் தானே உள்ளது? தமிழ் நூல்கள் மற்றும் கல்வெட்டு செப்பேடுகளில் இச்செய்திகள் உண்டா என்ற கேள்வியை சில அறிவு கொழுந்துகள் வைக்கிறார்கள்…!
“பஞ்சவனென்னும் பெயர்நிறீயும் வளமதுரை நகர்கண்டும் மற்றதற்கு மதில் வகுத்தும் உளமிக்க மதியதனால் ஒண் தமிழும் வடமொழியும் பழுதறத்தான் ஆராய்ந்து பண்டிதரில் மேந்தோன்றியும்
மாரதர் மலை களத்தவியப் பாரதத்திற் படகோட்டியும் விசயனை வசுசாபம் நீக்கியும் வேந்தழிச்சுரம் போக்கியும்”
- தளவாய்புரச் செப்பேடு
பொருள் : பாண்டவர்க்குரிய பஞ்சவனெனும் பெயரை பெற்றவனும்,மதுரை மாநகர் கண்டு,அதற்கு மதிலமைத்த பெருமை பெற்றவனும் ஆவான். தமிழையும், வடமொழியையும் ஒருங்கே கற்று ஆராய்ந்து அதில் பண்டிதர்களை விட மேலே நின்றான். பாரதப் போரில் தன் யானைப்படையை செலுத்தி மகாசேனாதிபதிகளை அழித்ததோடு, அர்ஜூனனின் வசுசாபத்தை நீக்கினான் பாண்டியன் என்கிறது அச்சாசனம்…!
ஆக பாண்டியர்களுக்கும் மகாபாரதத்திற்கும் உடனான தொடர்பு வடமொழி இதிகாசங்களில் மட்டுமல்லாது பாண்டியர்களின் செப்பேடுகளிலும் இருப்பதை இப்பதிவு உறுதி செய்கிறது. இதன் காரணமாகவே சின்னமனூர் செப்பேட்டில் மகாபாரதத்தை தமிழ்படுத்தவே மதுராபுரியில் சங்கம் அமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மகாபாரதமும் இராமாயணமும் இந்த பாரத தேசத்தின் இரு கண்களைப் போன்றதாகும்…!
- பா இந்துவன்.