காங்கிரஸ் கட்சி நாளுக்குநாள் தேய்ந்து கொண்டே வரும் நிலையில், நாட்டில் உள்ள மாநில கட்சிகளின் தலைவர்கள் பலரும் பிரதமர் கனவில் ஆழ்ந்து வருகின்றனர். கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்,மார்க்சிஸ்ட் கட்சிகள் தங்கள் கட்சி ஓட்டுக்களை மாற்றிப்போட்டு தாங்கள் ஜீரோவானாலும் பரவாயில்லை பாஜக வெற்றிப்பெற்றுவிடக்கூடாது என்று செயல்பட்டதன் விளைவாக மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வர் ஆனார். மேற்கு வங்கத்தை 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஆனால் பாஜக 70 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது.
தான் மீண்டும் வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓட்டை மாற்றிப்போட்டது தான் காரணம் என்பதை அறிந்தாலும், தேசிய அளவில் பிரதமர் நரேந்திரமோடிக்கு போட்டியாக உள்ள ஒரே தலைவர் தான் தான் என்ற எண்ணம் மம்தா பானர்ஜி மனதில் உதித்துவிட்டது. இதனால் 2024 தேர்தலில் பிரதமர் ஆகிவிட வேண்டும் என்று கனவு காணும் அவர், டில்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு பறந்து சென்று எதிர்கட்சியினரை ஒருங்கிணைக்க முயற்சித்து வருகிறார்.
பாஜகவிற்கு எதிராக தேசிய முற்போக்கு கூட்டணி உள்ளதே என்று நிருபர்களின் கேள்விக்கு, அப்படி ஏதும் இல்லை.. காங்கிரஸ் கட்சியால் இனி ஆட்சி அமைக்க முடியாது என்று தெனாவட்டாக கூறி, 2024 தேர்தலில் வெற்றி பெற கூட்டணி அமைத்து வருவதாகவும் கூறினார்.
எல்லாம் சரி தான். பிரதமர் பதவிக்கு ஆசைப்படலாம், ஆனால் தேசிய சின்னங்களை மதிக்க மம்தா கற்றுக் கொள்ள வேண்டமா?
மும்பையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மம்தா, மேடையில் அமர்ந்தவாறு மைக்கில் திடீரென தேசிய கீதம் பாட துவங்கினார். சில வினாடிகளுக்கு பின்னர் மம்தா எழுந்து நின்றதைப் பார்த்து மற்றவர்களும் எழுந்து நின்றனர். 5 வரிகள் மட்டுமே பாடிய மம்தா அதற்கு மேல் பாடத்தெரியாமல், ஜெய்மகாராஷ்ட்ரா, ஜெய்பெங்கால் என்று கூறிவிட்டு, நிகழ்ச்சியை முடித்தார்.
தேசிய கீதம் இசைக்கும் போது அல்லது பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்பது விதிமுறை. நாட்டின் தேசிய கீதத்திற்கு அதுவும் அவர் தாய்மொழியான வங்கள மொழியில் இருக்கும் பாடலை அவமதிக்கும், அவர் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவது சரியா என்று விவாதங்கள் எழுந்துள்ளது. இதனிடையே மம்தா மீது தேசிய கீதத்தை அவமதித்திற்காக மகராஷ்ட்ரா மாநிலத்தில் பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. சிவசேனா கூட்டணி அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.