எழுத்தாளர் மாரிதாஸ் கைது! தமிழகத்தில் கேள்விக்குறியாகும் கருத்துரிமை!!

எதிர்பார்த்ததைப் போலவே எழுத்தாளர் மாரிதாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முப்படைத்தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்ததை தமிழகத்தைச் சேர்ந்த சிலர் சமூக ஊடகங்களில் கொண்டாடியவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா என்று கேள்வி எழுப்பி மாரிதாஸ் பதிவிட்டிருந்த டுவீட்டர் பதிவுக்காக, மதரீதியான பிரிவினை கருத்துக்களை பரப்புதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சமூக வலைதளங்கள் மூலம் அரசை மிரட்டுதல், அரசின் மீது வெறுப்புடன் அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுதல் என்ற பிரிவுகளின் கீழ் கைது செய்து தமிழக போலீஸ் அவரை சிறையில் அடைத்துள்ளது.

இதே மதுரையில் பேராசிரியை ஒருவர் கைது தொடர்பாக செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிக்கை, அப்போதைய தமிழக கவர்னர் மீது மிக மோசமான அவதூறை வெளியிட்டிருந்தது.

இதற்காக கவர்னர் அலுவலகம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நக்கீரன் ஆசிரியர் கோபால் போலீசாரால் கைது செய்யப்பட்ட போது, திஹிந்து ராம் முதல் பல பத்திரிக்கையாளர்கள் நேரடியாக நீதிமன்றத்திற்கு சென்று முறையிட்டனர். உடனே கோபாலை ஜாமீனில் விடுதலை செய்தது நீதிமன்றம்.
பின்னர் இந்த கவர்னர் குறித்து வெளியிட்ட செய்தி தவறானது என்று கோபால் வருத்தம் தெரிவித்து செய்தி வெளியிட்டது தனிக்கதை.

ஆனால், தமிழகத்தின் நிலை குறித்து மாரிதாஸ் வெளியிட்ட கருத்துக்காக அதிரடியாக வீடு புகுந்து கைது செய்யும் அளவிற்கு தமிழக போலீசாருக்கு நிர்பந்தம் என்ன என்று அரசியல் தலைவர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மாரிதாஸ் தொடர்ந்து திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார். அதற்கு பல ஆதாரங்களையும் யூடியூபில் வெளியிட்டு வருகின்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சி எம்.பி உள்ளிட்டோர் விரைவில் மாரிதாஸ் சிறை செல்வார் என்று பகிரங்கமாக மிரட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்ததும் அனைவரும் அறிந்ததே.

நடுநிலை ஊடகங்களில் நடுநிலையாளர்கள் என்று கூறிக்கொண்டு இந்த நாட்டிற்கு விரோதமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தவர்களையும் மாரிதாஸ் அம்பலப்படுத்தியிருந்தார்.

இதனால் வெளியேற்றப்பட்ட பலர் திமுக குடும்பம் நடத்தும் சேனல்களில் ஐக்கியமாகியுள்ளனர். இவர்களால் ஆட்சியாளர்களுக்கு அழுத்தத்தை தர முடியும். அல்லது கோரிக்கையாவது வைக்க முடியும்.

எழுத்தாளர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதை, யூடியூபர் கைது என்று செய்தி வெளியிட்டு தங்கள் நீண்ட நாள் பகையை தீர்த்துக் கொண்டவர்களும் உண்டு. ஒரு சில ஊடகங்கள், பிபின்ராவத் மறைவு குறித்து மத்திய அரசுக்கு எதிராகவும், ராணுவத்திற்கு எதிராகவும் மாரிதாஸ் கருத்து தெரிவித்ததால் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் செய்தி வெளியிட்டு புளகாங்கிதம் அடைந்து கொண்டார்கள்.

தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பவர்கள் மத்தியில், நாட்டில் நடக்கும் ஊழல், லஞ்சம் உள்ளிட்ட அவலங்களுக்கு எதிராக களம் இறங்கி போராடுபவர்கள் சிறைக்கு செல்லப்பயப்படுவது கிடையாது. அவ்வாறு அவர்கள் அஞ்சினால் அவர்கள் போராளிகள் கிடையாது. எனவே தமிழக அரசின் கைது நடவடிக்கைகள் மாரிதாஸை முடக்கிவிடாது.

அவர் சட்டரீதியாக அவற்றை எதிர்கொண்டு வெளிவருவார். இன்னும் வேகமாக செயல்படுவார். கொலை, கொள்ளை, பாலியல்பலாத்காரம், தேசதுரோகம் போன்ற செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்பவர்கள் தான் வெட்கப்படவேண்டும். தேசத்தின் வளர்ச்சிக்காக, இளைஞர்களின் நலனுக்காக குரல் கொடுத்த மாரிதாஸ் இந்த சிறைக்கெல்லாம் அஞ்சமாட்டார்.

இந்த நிகழ்வில், மாரிதாஸ் கைது குறித்து கருத்து வெளியிடும் ஒருசிலர், இதை ஏன் நரேந்திரமோடி தடுக்கவில்லை என்று ஆவேசமாக பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம் மாரிதாஸ் கைதுக்கு எதிராக ஒரு நூறு பேரை திரட்டி ரோட்டுக்கு வர இவர்கள் தயாராக இல்லை.

ஆனால் நாட்டில் நடக்கும் எல்லா விஷயங்களையும் பிரதமர் மோடி தடுக்க வேண்டும் என்ற சிந்தனையை உடையவர்களாக உள்ளனர். பிரதமர் மோடி அவர் பங்கிற்கு தேசப்பணியாற்றுகிறார். மற்றவர்கள் அவரவர் பங்கிற்கு செயல்பட்டால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

ஆட்சியால் மட்டும் நாடுயராது….ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி போராடுவதே விடியலைக் கொடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here