மாரிதாஸ் வழக்கும்… சாயம் வெளுத்த போலி நடுநிலையாளர்களும்…

கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதில் தி.மு.க அரசுக்கு இணையான அரசு இல்லை என்ற தோற்றம் எப்போதும் ஏற்படுத்தப்படுவது உண்டு. இதற்கு நடுநிலை வேஷம் போடும் சில தி.மு.க ஊடகத்தினர் முன்களத்தில் இருப்பர். இதற்கு தகுந்தார்போல ஆட்சிக்கு வந்ததும் அ.தி.மு.க அரசு ஊடகத்தினர் மீது போடப்பட்டிருந்த வழக்குகளை தி.மு.க அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. தி.மு.க. ஆதரவு பத்திரிக்கையாளர்கள், யூடியூபர்கள் என்று பலரை முதல்வர் நேரம் ஒதுக்கி பார்த்தார். படமும் எடுத்துக் கொண்டார். கருத்து சுதந்திரம் என்றாலே அது தி.மு.க ஆட்சி தான் என்று அவர்களும் கருத்துக்களை வெளியிட்டனர்.
ஆனால், கருத்து சுதந்திரம் என்பது கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க. ஆதரவாளர்களுக்கு மட்டும் தான் உரித்தானது. அ.தி.மு.க., பா.ஜ.க போன்ற எதிர்கட்சியினருக்கு கருத்து சுதந்தரம் ஏதும் கிடையாது என்பது போன்று தி.மு.க ஆட்சியின் நடவடிக்கைகள் உள்ளது. அ.தி.மு.க ஐடி விங் உறுப்பினர்கள் முதலில் வேட்டையாடப்பட்டனர். இதைத்தொடர்ந்து பா.ஜ.க. மற்றும் பா.ஜ.க ஆதரவாளர்கள் மீது தி.மு.கவினரின் பார்வை திரும்பியது. கல்யாணராமன், கிஷோர் கே சாமி ஆகியோரை முதலில் கைது செய்து அவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்ததில் திருப்தியடையாத தி.மு.க. ஐடி விங் நிர்வாகிகள், ஆதாரப்பூர்வமான கருத்துக்களை ஆணித்தரமாக வைக்கும் மாரிதாஸ் மீது தன் பார்வையை திருப்பியது. 10.35 போடப்பட்ட டீவிட்டிற்கு 11.15 க்கு புகார் அளித்து 12.30 மணிக்கு கைது செய்யும் அளவிற்கு அவர்களின் வேகம் இருந்தது.
ஆனால் பா.ஜ.க களத்தில் குதித்து சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுத்தது.
தன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, மதுரை உயர்நீதிமன்றத்தில் மாரிதாஸ் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இந்த வழக்கில் போடப்பட்ட பிரிவுகளுக்கும், மாரிதாஸின் பதிவும் எந்த நிலையிலும் பொருந்தாது என்று கூறி, மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மாரிதாஸ் மீதான வழக்கு அரசியல் காரணங்களுக்காக போடப்பட்ட வழக்கு என்பது சிறுவனுக்கு கூட தெரியும். ஆனால் பல போலி நடுநிலையாளர்களும், தி.மு.க. ஆதரவாளர்களும், வழக்க விசாரணைக்கு முன்பே, வழக்கை விசாரிக்கும் நீதிபதி மீது விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர். தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் குறித்து பேசத் துணிவில்லாமல், நீதிபதியின் ஜாதி, அவர் வழக்கறிஞராக இருந்த போது பங்கேற்ற நிகழ்ச்சிகள் குறித்தெல்லாம் பதிவிட்டனர். இதே நீதிபதி தான் கொரோனா பரவலுக்கு காரணம் என்று குற்றம்சாட்டி தப்லிக் ஜமாத்தினர் கைது செய்யப்பட்டபோது, அவர்களை விடுதலை செய்து தாய்நாடு அனுப்பி வைத்தவர் என்பதை இவர்கள் வசதியாக மறந்துவிட்டனர்.
அத்தோடு தன்னை கம்யூனிஸ்ட் என்று வெளிப்படையாகவே கூறிக்கொண்ட முன்னாள் நீதிபதி சந்துருவை இவர்கள் கொண்டாட கூச்சப்பட்டதில்லை.
நடுநிலை சேனல்களில் ஊடுறுவி, அங்கிருந்து தேசத்திற்கு விரோதமான பணிகளை செய்து கொண்டிருந்த பல பத்திரிக்கையாளர்களை மாரிதாஸ் ஆதாரத்துடன் தோலுரித்துக் காட்டினார். வாய்ப்புக்காக காத்திருந்த இடது சாரி பத்திரிக்கையாளர்கள், தங்கள் சங்கங்களின் மூலம் மாரிதாஸ் கைதுக்கு வரவேற்பு தெரிவித்து கொண்டாடினர். சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் அதில் முன்னணியில் இருந்தது.
மாரிதாஸ் மீதான வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது குறித்து இந்த மன்றங்கள் தற்போது கப்சிப்….
மாரிதாஸை விட்டுவிட்டு தற்போது, நீதிபதி மீது தங்கள் கோபத்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர் இந்த போலி நடுநிலையாளர்கள். நக்கீரன் கோபால் சிறைக்கு செல்லாமலேயே விடுவிக்கப்பட்ட கதை நாடறியும். அப்போது யாரும் நீதிபதிகளை விமர்ச்சிக்கவில்லை. ஆனால், இவர்கள் இப்போது நீதிபதியை விமர்சிக்கிறார்கள். தங்கள் நினைத்தது நடக்கவில்லை என்றால் எந்த எல்லைக்கும் இவர்கள் செல்வார்கள்… மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here