கோவில்களை இடிக்க வேண்டும் என்றால் அங்குள்ள ஆதீனங்கள் துறவிகளை ஆலோசித்த பின்பு அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்- பேரூர் ஆதினம் சாந்தலிங்க அடிகளார்.
கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் கோவை மாவட்ட இந்து முன்னணி சார்பில் தமிழகத்தில் கோவில்களில் இடிக்கப்படுவது குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பேரூராதீனம் சாந்தலிங்க அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், வாராஹி பீடம் மணிகண்ட சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
இதில் பேசிய அவர்கள் 1993 ல் சுதந்திரத்திற்கு முன் கட்டபட்ட கோவில்களை அப்புறப்படுத்தக் கூடாது என்ற சட்டத்தை இயற்றி உள்ளனர் என்றும் ஆனால் அதற்கு மாறாக 100 ஆண்டு கால பழமை வாய்ந்த கோயில்கள் இடிக்கப்பட்டு உள்ளன என்று தெரிவித்தனர். குளக்கரைகளில் கோவில்கள் இருப்பது குளங்களுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும். இப்படி இருக்க அவற்றை அகற்றி உள்ளார்கள் என்று தெரிவித்தனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் இனிமேலும் ஏதேனும் கோவில்கள் இடிக்கப்படுமேயானால் அப்பகுதிகளில் உள்ள ஆதீனங்கள் மற்றும் துறவிகளை ஆலோசித்து கோவிலை அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.
அதே சமயம் சமாதிகளை எக்காரணம் கொண்டும் இடிக்கக்கூடாது எனவும் தெரிவித்தனர். கோவில்கள் கட்டாயமாக இடிக்கப்பட வேண்டும் என்றால் வேறு ஒரு இடம் அமைத்து அங்கு கோவில் கட்டியதன் பின்பு தான் இந்த கோவிலை இடிக்க வேண்டும் என்ற 2005ல் மதுரை உயர் நீதிமன்ற உத்தரவை அதிகாரகள் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தனர். சில இடங்களில் கோவில் நிலங்களில் அரசு அலுவலகங்கள் கல்லூரிகள் ஆகியவை இயங்கி வருவதாக தெரிவித்த அவர்கள் மதுரை உயர் நீதிமன்றமே குளக்கரையில் தான் உள்ளது என்றும் அதை எடுப்பார்களா? என்றும் கேள்வி எழுப்பினர். கோவில்கள் இடிக்கப்படும் பொழுதும் சாமி சிலைகள் உடையும் பொழுதும் மன வேதனை அளிப்பதாகவும் கூறினர்.
கோவில் நிலங்களை யாருக்கும் பட்டா போட்டு கொடுக்க கூடாது. பிற சமய கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால் அதனை மீட்டு அவர்களுக்கு அளித்து விடுவோம் என்றும் இந்து கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மற்றவர்களுக்கு கொடுத்துவிடுவோம் என்று கூறியதாக தகவல் வருகிறது. இது தவறான அணுகுமுறையாக உள்ளது. இது முதலமைச்சரின் பார்வைக்கு சென்றதா என்று கூட தெரியவில்லை. அவருக்கு சென்றிருந்தால் கூட சிறிது காலம் பொறுங்கள் என்று கூறியிருப்பார். முதலமைச்சர் ஸ்டாலினின் குலதெய்வம் கூட அங்காளம்மன் தான் அதனை இடித்தால் அவர் ஏற்றுக்கொண்டிருப்பாரா என்று கேள்வி எழுப்பினர். கோவில்கள் இடிக்கப்படுவது அரசுக்கும் பொதுமக்களுக்கும் நன்மை பயக்காது என்று நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் கூறினர்.