“மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்” : சுந்தரமூர்த்தி நாயனார்
இந்துமதம் ஆண்பெண் பேதமெல்லாம் பார்த்ததில்லை, எல்லா மானிடரும் ஆன்ம ஈடேற்றம் பெற்று ஈஸ்வரனுடன் இணையவேண்டும் என்பதே அது சொல்லும் தத்துவம்.
நாயன்மார்களில் பிரதான இடத்தை 3 பெண்களுக்கு கொடுத்திருந்தாலும், இவர்களும் நாயன்மார்களே என சொல்லபடும் சில பெண்களை அது மவுனமாக அடையாளம் காட்டிற்று
திருநாவுக்கரசர் சகோதரி திலகவதி, மானகஞ்சாற நாயனாரின் மகள், அரிவாட நாயனனார் இயற்பகை நாயனார் போன்றோரின் மனைவியர், சிறுதொண்ட நாயனாரின் உத்தமான பக்திமிக்க மனைவி என மகளாக, மனைவியாக, சகோதரியாக சைவம் தழைக்க பாடுபட்ட பெண்களை அது உயர்வாக குறித்து கொண்டது.
அப்படிபட்ட உன்னதமான பக்திமிக்க பெண்களில் ஒருவரும், 3 நாயன்மார்களில் ஒருவருமானவர் அந்த மங்கையற்கரசியார்.
ஒவ்வொரு இந்துபெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய வாழ்வு அது, இந்துமதத்தில் மனம் கரைந்து வழிபடும் பெண், இந்துமதத்தை முழுக்க ஏற்றுகொண்ட பெண், எந்த கொடும் சூழலிலும் சிவனில் உறுதியாக இருக்கும் பெண் எப்படிபட்ட பெரும் இந்து புரட்சியினை ஏற்படுத்த முடியும் என்பதற்கு மங்கையர்கரசியார் பெரும் உதாரணம்.
இந்துமதம் கொடுத்த மாபெரும் வரலாற்று கல்வெட்டு.
குலச்சிறை நாயனார், மங்கையர்கரசியார், நின்றசீர் நெடுமாறன் என மூவரும் சம காலத்தில் வாழ்ந்து மூவருமே சிவனருளால் சைவம் தழைக்க ஒற்றுமையாக போராடியவர்கள்
இதில் குலச்சிறை நாயனாரையும், நின்றசீர் நெடுமாறனையும் நாம் பார்த்துவிட்டோம், ஆம் மதுரையில் சைவம் தழைத்த அந்த வரலாற்றில் மங்கையர்கரசியாரின் முழு சேவையினையும் இப்பொழுது பார்க்க போகின்றோம்.
மங்கையர்கரசியாரின் வரலாறு சோழ நாட்டில் இருந்து தொடங்குகின்றது, அக்கால சோழர்களின் தலைநகரான பழையாறை அவர் பிறந்து வளர்ந்த இடம், அவர் தந்தையின் பெயர் சேந்தன் செழியன்
இந்த சேந்தன் செழியன் மும்மணி சோழன் என்று அழைக்கபட்ட பெரும் மன்னன், குங்கிலிய கலயனார் வாழ்வில் சாய்ந்த லிங்கத்தை அவர் சிவனருளால் தூக்கி நிறுத்தியபொழுது நாயனார் காலில் விழுந்து வணங்கி ஆதரித்த அந்த சைவ அடியாராய் வாழ்ந்த மன்னன்.
அவன் தன் மகளை மிகபெரும் சிவபக்தியில் வளர்த்திருந்தான், குங்கிலிய கலய நாயனார் அந்த மாபெரும் அற்புததை சிவனருளால் செய்தபொழுது அவரிடம் ஆசிபெற்றவள் அந்த பெண்
சேந்தன் செழியனின் மகளான அவள் பெயர் மானி, மிகபெரும் சிவபக்தையாக அவள் வளர்ந்து பருவ வயதை எட்டியிருந்தாள்.
அந்நேரம் பாண்டிய நாடும் வடக்கே இருந்த சாளுக்கிய தேசங்கங்களும் இணைந்து செழியன் மேல் போர் தொடுத்தன, போரில் தோல்வியினை தவிர்க்க சமரசம் பேசினான் செழியன்.
சமரசம் பேச்சு மண உறவில் முடிந்தது, ஆம் பாண்டிய மன்னனுக்கு மகள் மானியினை திருமணம் செய்துவைக்கும் முடிவில் முடிந்தது.
மானிக்கும் மதுரையினை ஆண்ட பாண்டிய மன்னன் நெடுமாறன் என்பவனுக்கும் திருமணம் முடிந்தது, இந்த நெடுமாறன் அப்பொழுது கூன்பாண்டியன் என அழைக்கபட்டான்.
அவன் முதுகில் சிறிய கூன் இருந்தததால் அப்பெயர் வந்தது, அவன் கூனை விட கொடிய விஷயம் அவன் சமணமதம் தழுவியிருந்தான் அல்லது சமணர் அவன் மனதை அப்படி மாற்றி வைத்திருந்தனர்.
சிவபெருமானால் முடிசூட்டபட்டு வழி வழியாக ஆலவாய் நாதன் எனபட்ட மதுரை சோமநாத பெருமானை வழிபட்டு வந்த பாண்டிய மரபில்தான் அவனும் வந்தான்.
ஆனால் அவன் கொண்டிருந்த சாளுக்கிய உறவுகளும் அப்பொழுது பாரத கண்டம் முழுக்க இருந்த சமண தாக்கமும், தான் கூனன் என அவன் கொண்டிருந்த ஒரு தாழ்வு மனப்பான்மையும் அவனை குழப்பிற்று.
அந்த குழப்பத்தை அழகாக பயன்படுத்தி கொண்டனர் சமணர்கள்.
மெல்ல மெல்ல அவனை வளைத்து முழு சமணராக மாற்றி வைத்திருந்தனர், மன்னன் அவர்களின் கைபாவையாக மாறி இருந்தான்.
மன்னனையே வளைத்துவிட்ட சமணருக்கு பெரு வெற்றி கிட்டியது, மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பது போல் நாடும் சமணத்துக்கு மாறிகொண்டிருந்தது.
எங்கும் தலைமயிறை பிடுங்கிய மொட்டை சமண கூட்டம் குளிக்காமல் அழுக்குடன் ஆடையின்றி கையில் மயிலறகுடன் உற்சாகமாக சுற்றின.
திருநீறு அணிந்தவர்களை கண்டால் அவர்களுக்கு தீட்டு என்பதால் அவர்கள் இருக்கும் மதுரையில் யாரும் அதை அணியவில்லை, சிவ சிவ எனும்வார்த்தையினை கூட உச்சரிக்கவில்லை
மதுரை ஆலய மணி ஒலிக்கவில்லை, ஆறுகால பூஜை நடக்கவில்லை, சைவம் பாழ்பட்டு அழியும் நிலையில் இருந்தது.
சமணர்கள் மிக தந்திரமாக சைவத்தை அழித்து கொண்டிருந்தார்கள், சைவம் அதன் பக்தர்களால் கைவிடபட்டு அழியும் ஒருவித தந்திர நகர்வினை செய்து கொண்டிருந்தார்கள்.
அதாவது “சைவனை கண்டால் கண் தீட்டு, சிவன் பெயரை கேட்டால் காதுக்கு தீட்டு” என சொல்லி ஒரு கொள்கை வைத்திருந்தார்கள், அதை கண்ட முட்டு கேட்ட முட்டு என அழைத்தார்கள்.
திறுநீறு அணிந்த சைவனை கண்டாலோ, ருத்திராட்சம் அணிந்தவனை கண்டாலோ அவர்களுக்கு தீட்டாம் இதனால் ஒரு நாள் முழுக்க உண்ணாமல் இருப்பார்கள்.
அப்படியே சிவாலய மணி ஒலித்தாலோ, சிவ சிவ எனும் குரல் கேட்டாலோ, நமச்சிவாய என யாராவது உச்சரிப்பதை கேட்டாலோ அவர்களுக்கு தீட்டு அப்படியே ஒரு நாள் முழுக்க உண்ணாமல் இருப்பார்கள்.
இப்படிபட்ட கொள்கை உடைய சமணர் பெருகினால் சைவம் எங்கிருந்து வாழும்?
இதில் மன்னனே சமணத்தை தழுவினால் என்னாகும்? சைவம் மிக வேகமாய் மறைந்தது, சமணருக்கு அஞ்சி மிக மிக குறைவான சைவர்களே போராடி போராடி மறைந்து மறைந்து சைவம் காத்தார்கள்.
சிவனுக்கு அபிஷேகமுமில்லை அலங்காரமுமில்லை பாடலுமில்லை
ஆம் பாடல் சத்தம் கேட்டால் கூட சமணருக்கு ஆகாது என்பதால் தவிர்க்கபட்டது
அரசன் கொண்டாடாத எதுவும் பொலிவுறாது, அரசன் கைகாட்டும் எதுவும் சிறக்கும் என்பது போல் சமணம் எழுந்து சைவம் மங்கி கொண்டிருந்தது.
ஆலவாய் நாதனின் ஆலயம் பாழ்பாட்டு நின்றது, விழாவோ அபிஷேகமோ எதுவுமே இல்லை,
சம்பிரதாயத்துக்கு ஏதோ செய்து கொண்டிருந்தார்கள் அதுவும் நிறுத்தபடும் நிலையில் இருந்தது
அந்த நேரத்தில்தான் பாண்டிமாதேவியாக மதுரைக்கு மருமகளாக வந்தார் மானி, சுத்த சைவரான அவருக்கு நடந்ததெல்லாம் நடப்பதெல்லாம் மனம் பதற வைத்தது.
மிகபெரிய நெருக்கடியில் தள்ளபட்டார்.
பிறந்ததில் இருந்து சிவசிவ என சிவநாமம் சொல்லியபடியே சிவனருளில் வளர்ந்த அவருக்கு, சிவாலயமும் வழிபாடும் அபிஷேகமுமாய் வளர்ந்த அவருக்கு அதை இனி செய்யமுடியாது எனும் பொழுது இடி தாக்கிற்று.
அப்படியே நெற்றியில் திருநீறு இட கூடாது எனும் பொழுது தன் மூச்சே நின்றது போல் அதிர்ந்து நின்றாள்.
அப்படியே தலைசுற்றி மதுரை பாண்டியன் அரண்மனையில் அமர்ந்திருந்த அவளுக்கு அழவேண்டும் என தோன்றிற்று, ஆலவாய் நாதன் கோவிலுக்கு ஓடினாள், அதை பார்த்ததும் அழுகை இன்னும் கூடிற்று.
சிவனே வந்து திருவிளையாடல் நடத்திய அவ்வாலயம் பாழ்பட்டு கிடந்தது, கவனிப்பாரின்றி இருந்தது விளக்குமில்லை மணியுமில்லை .
நைவேத்தியம் செய்யவும் வழி இல்லை, எல்லாம் சமண தந்திரம்
உச்சமாக வவ்வால்கள் அங்குமிங்கு பறந்து கொண்டிருந்தன.
காலை வரும் ஒரு அர்ச்சகர் சில பூஜைகளை சம்பிரதயாத்துக்கு செய்வார், அவர் வரும் பொழுது சமணருக்கு அஞ்சியபடியே வருவார், ஆலயத்தின் உள்ளேதான் திருநீறு இடுவார், பூஜை செய்வார் ஆலயம் விட்டு செல்லும் பொழுது சைவ அடையாளம் துறந்து செல்வார்.
அந்த ஆலயத்தை கண்டதும் கண்ணீர்விட்டு அழுதார் மானி.
சைவத்துக்கும் சமணத்துக்கும் பெரும் வித்தியாசம் உண்டு, சைவம் கடவுளில் பாதி பெண் என்றது, பெண்ணை சக்தி என்றது, பெண்களை மதிக்க சொல்லி கொண்டாட சொல்லி பெரும் இடத்தில் வைத்திருந்தது.
ஆனால் சமணம் அப்படி அல்ல பெண்களுக்கு ஒரு உரிமையும் கொடுக்காமல் வாய்பேசும் விலங்காக வைத்திருந்தது.
ஆம், பெண்களுக்கு மோட்சம் இல்லை என சொன்ன மதம் சமணம். மறுபிறப்பு கொள்கையில் நம்பிக்கை கொண்ட அவர்கள் பெரும் பாவம் செய்தவனே பெண்ணாய் பிறப்பதாகவும், மறுபிறவி எடுத்து ஆணாக பிறந்தால் தவிர மோட்சமில்லை என அறுதியிட்டு சொன்ன மதம்
அந்த மதத்தை தழுவிய மன்னனும் பாண்டிமாதேவியினை அடக்கி வைத்திருந்தான் அடிமையாக வைத்திருந்தான், அதையும் தாங்கினாள் பாண்டிமாதேவி.
ஆனால் எந்நிலையிலும் சிவனை விடவோ சைவத்தை கைவிடவோ அவள் தயாராக இல்லை அதே நேரம் தன் உன்னதமான பதிபக்தியால் கணவனை விட்டு அகலவும் அவள் தயாராக இல்லை.
சிவன் எப்பொழுதுமே தன் அடியார்களை ஆறுதலின்றி விடுவதில்லை, காரிருளிலும் ஒரு சிறிய விளக்கத்தை கொடுப்பான், கடும் அலையடிக்கும் கடலிலும் ஒரு துடுப்பை கொடுப்பான்.
எல்லா கொடிய கூட்டத்திலும் ஒரு சில நல்லவர்களை அவன் விட்டுவைத்திருப்பான், ஆம் அந்த நல்லவர்களே அந்த கொடிய கூட்டம் அழிய காரணமாகவும் அமைவார்கள்.
பாரதத்தின் விதுரனும், ராமாயணத்தின் அனுமனும் விபீஷ்ணனும் அவ்வகையே
அப்படி இந்த சமண கூட்டத்தில் ஒரு நல்லவர் இருந்தார் அவர் முழு சிவபக்தனாகவும் இருந்தார் அவர் பெயர் குலசிறையார்.
குலசிறையார் கூன்பாண்டியனின் தலமை அமைச்சராக இருந்த மிகபெரும் நிர்வாகி, அவர் இடத்துக்கு இன்னொருவரை நியமிப்பது மகா சிரமம் என்பதால் மன்னன் அவர்மேல் ஒரு பரிவு கொண்டிருந்தான், சமணர் அவர்மேல் ஒரு கண்ணை அல்ல இருகண்ணையும் வைத்து நேரம் வாய்க்கும் பொழுது விரட்ட காத்திருந்தனர்.
பாண்டிமாதேவி சைவத்தை பற்றிய தன் பெருங்கவலையினை அவருடனேதான் பகிர்ந்து கொள்வார், குலச்சிறையாரும் நேரம் வரும்பொழுது இங்கு சைவம் எழும் என ஆறுதல் சொல்லி கொண்டிருந்தார்.
குலசிறையார் சோர்வுறும் பொழுது பாண்டிமாதேவியும் பாண்டிமாதேவி சோர்வுறும் பொழுது குலசிறையாரும் ஆறுதல் சொல்லி தேற்றிகொண்டிருந்தார்கள், தேறி கொண்டிருந்தார்கள்.
பாண்டிமாதேவி முதலில் கலங்கினாலும் அவளின் சிவபக்தி அவளை உறுதிபடுத்தியது
தன் கணவன் சாதாரண கணவனாக இருந்தாலே திருத்தி சைவத்துக்கு திருப்ப வேண்டும் எனும் பொழுது நாட்டிற்கே அரசனை எப்படி விடமுடியும்?
நாடு நலம்பெற ஒவ்வொரு குடிகனாய் சைவத்துக்கு திருப்புவதை விட அரசனை திருத்தினால் நொடியில் மாற்றம் வரும் என்பதை உணர்ந்தாள், ஆம் அவளின் சைவபற்று என்பது நாட்டை பற்றியே சிந்திப்பதாய் இருந்தது.
அனுதினமும் முடிந்தவரை சோமநாதர் கோவிலுக்கு செல்வதும் அவரிடம் சைவ நிலை குறித்து அழுவதுமாக அவர் காலம் கடந்தது.
திருநீறை நெற்றியில் பூசமுடியாத அவர் கழுத்தை ஒட்டி பூசி அதை முத்து மாலையால் அலங்கரித்து கொண்டு மறைத்தார், ஆம் கணவன் திருநீற்றை கண்டுவிட்டால் ஒரு நாள் முழுக்க உண்ணாமல் இருக்கும் சைவன் அல்லவா?
பிறந்ததில் இருந்தே தான் வாயார சொல்லும் சிவநாமத்தை அவளால் சொல்லமுடியவில்லை, அவளின் வழக்கத்தில் இருந்து கஷ்டபட்டு மாறினாள், சிவநாமத்தை மனதில் இருத்தி வாயில் சிரமபட்டு மறைத்தாள்.
காலையும் மதியமும் மாலையும் சிவலிங்கத்துக்கு மலர் தொடுத்து போட்டு அபிஷேகம் செய்து மகிழ்ந்த அவளுக்கு அதை செய்யமுடியவில்லை என்றாலும் மனதால் அனுதினமும் தொழுதாள்
நெய்விளக்கிட்டு வணங்கிய அவள் வழிபாட்டுக்கும் தடை விழுந்தது, ஆம் சைவர்கள் விளக்கினை வைப்பதில்லை தீபத்தில் விழுந்து பூச்சிகள் செத்துவிடுமாம்.
சைவத்துக்கு நேர் எதிரான சமண கூட்டத்தின் நடுவில் மனதால் சுத்த சைவ அடியாராக வாழ்ந்து வந்தாள் மானி.
அவள் கணவனுடன் சண்டையிடவில்லை, அந்த பொல்லா சமண கூட்டத்திடம் ஏதும் பேசவுமில்லை காரணம் இது பேசி தீர்க்கமுடியாது என்பது அவளுக்கு தெரியும்.
ஆம் சைவம் அழியவேண்டும் என கங்கணம் கட்டி திரியும் கூட்டத்திடம் அதுவும் கணவனையே ஆட்டி வைக்கும் கூட்டத்திடம் என்ன நியாயம் எடுபடும்?
இதனால் சிவனை நோக்கி தவமிருந்து அழுது தன் வலியினை யாருக்கும் தெரியாமல் சிவனிடம் மட்டுமே சொல்லி கொண்டிருந்தாள் மானி.
அவருக்கு வேறு எந்த ஆசையுமில்லை, பெரும் நகைகள் வேண்டுமென்றோ தன் கணவன் பாரத சக்ரவர்த்தியாக வேண்டுமென்றோ, பாண்டிய நாட்டில் செல்வம் கொழித்து மக்களெல்லாம் செல்வத்தில் திரள வேண்டும் என்றோ ஆசையில்லை.
தன் கணவனின் சாம்ராஜ்யம் பெருகி அவனும் தன் மகன்களும் அதை ஆண்டு தன் பேரபிள்ளைகள் நாடுகளெல்லாம் கொடிகட்டி ஆளவேண்டும் என அவள் விரும்பவில்லை.
அவள் விரும்பியதெல்லாம் சைவம் அங்கு தழைக்க வேண்டும், சமணர் அட்டகாசம் ஒழிய வேண்டும், ஆலவாய் ஆலயம் சீர் பெற வேண்டும், தன் கணவனும் நாட்டின் அரசனும் சைவநெறிக்கு வரவேண்டும்.
ஆம், சிவபூமியான மதுரையில் சிவனே ஆளவேண்டும். இதுதான் அவளின் வேண்டுதலாய் இருந்தது
வெண்டுதல் வைராக்கியமாயிற்று, வைராக்கியம் தவமாயிற்று, தவம் சிவனை ஈர்த்தது
தூரத்தில் ஒரு விடிவெள்ளி தெரிந்தது, சைவம் அந்த வெளிச்சத்தால் தென்னகத்தில் எழுந்து கொண்டிருந்தது, அந்த விடிவெள்ளியினை உற்று பார்த்தால் அங்கொரு ஞானசூரியன் ஜொலித்து கொண்டிருந்தது.
ஆம், மாபெரும் அவதாரமான திருஞானசம்பந்தர் சோழ்நாட்டில் வலம் வந்து கொண்டிருந்தார், சைவம் அவரால் மீண்டு செழித்து கொண்டிருந்தது.
சமணர்களை அவர் வாதில் வெல்வதும் அவரிடம் தோற்ற சமணர்கள் நாட்டை விட்டு ஓடுவதுமாக காட்சிகள் நடந்தன, அவரை மனமார சிந்தித்து பாண்டி நாட்டுக்கு அழைக்க சித்தம் கொண்டார் மானி
ஆணாதிக்கம் நிறைந்த சமணரிடை பாண்டியநாட்டில் வாழ்ந்த பெண் அவள், அவளால் வேறு எதையும் செய்துவிட முடியா காலமது, அவளின் கண்ணீரெல்லாம் சிவன் முன் அவள் மனதை சொல்லிகொண்டிருந்தது.
அவர் அப்பொழுது பாண்டிய நாட்டை அடுத்த திருமறைக்காடு என அழைக்கபட்ட இன்றைய வேதாரண்யம் பகுதிக்கு சம்பந்தர் வந்திருக்கும் செய்தி பாண்டிமாதேவியினை எட்டிற்று
அவரை அழைத்து வரலாமா என அவள் மனம் சிந்தித்தது, அக்காலத்தில் பாரத கண்டம் முழுக்க ஒரு நல்ல விஷயம் இருந்தது அது மத துறவிகள் எப்பொழுதும் எந்த நாட்டுக்கும் செல்லலாம் என்பது, அப்படி சம்பந்தர் மதுரை வர தடையேதுமில்லை ஆனால் அழைப்பவர் எவருமில்லை.
அவரை மதுரைக்கு வரும்படி குலச்சிறையார் மூலம் அழைப்பு விடுத்தார் பாண்டிமாதேவியார்.
அப்பொழுது சம்பந்தருக்கு 10 வயதுக்கும் கீழான வயது, அவரின் ஞானதந்தையான திருநாவுக்கரசர் அவர் சமணரிடை செல்வதை தடுத்தார் , சமணரின் பொல்லா தீயகுணம் தெரிந்து தடுத்தார், அதை கிரக நிலை சரியில்லை என சொல்லி அனுமதி மறுத்தார்.
ஆயினும் சிவனடியாருக்கு கிரகபாதிப்பில்லை என சொல்லி “கோளறு பதிகம்” பாடிவிட்டு பாண்டிநாடு நோக்கி வந்தார் சம்பந்தர்.
சம்பந்தர் வருகின்றார் என்றவுடன் சிவனே தன்னை நோக்கி வருவதாக மனம் மகிழ்ந்தார் பாண்டிமா தேவி, சிவனுக்கு நன்றி சொல்லி சொல்லி அவர் மகிழ்ந்தபொழுது நல்ல சகுனங்கள் அவருக்கு தோன்றின, பசுக்களும் விளக்குகளும் ஆலயத்தில் நிரம்பியிருப்பது போல் நல்ல கனவெல்லாம் வந்தது.
சம்பந்தர் பயணத்தை தொடங்கி பாண்டிய நாட்டின் எல்லையினை வந்தடைந்தார், அவரை குலச்சிறையார் வரவேற்றார், பாண்டிய நாட்டின் மதுரையம்பதி எனும் ஆலவாயினை நோக்கி அந்த கோபுரத்தை நோக்கியபடி சம்பந்தர் பாடிய பதிகம் இதுதான்
“மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மடமானி
பங்கயச் செல்வி பாண்டிமாதேவி
பணி செய்து நாள்தோறும் பரவப்
பொங்கழலுருவன் பூத நாயகன் நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவாயாவதும் இதுவே”
ஆம் மானி எனும் பாண்டிமாதேவியினை “மங்கையர்கரசி” என அவர் நாட்டுக்கு மட்டுமல்ல பெண்குலத்துக்கே அரசி என புகழ்ந்து , அந்த மண் மங்கையர்கரசி வாழும் மண் என மனமார பாடினார் சம்பந்தர்.
சம்பந்தர் என்றால் சிவன் என்று பொருள், அவதாரங்களின் பேச்சும் மூச்சும் சிவனின் குரலே
பாண்டிய நாட்டில் சைவம் தழைக்க, தன் ஆலயம் ஜொலிக்க தன் வாழ்வினையே அர்பணித்து ஓநாய் கூட்டத்திடம் மான் போல் தவித்த அந்த அடியவளை சிவன் அப்படி வாழ்த்தினார்.
பின் மதுரையம்பதியில் ஊர்வலமாய் வந்து ஆலவாய் நாதனை நோக்கி சென்றார் சம்பந்தர், நெடுநாளைக்கு பின் “நமச்சிவாய” எனும் குரல் மதுரையில் ஒலித்தது.
மழைகண்ட விவசாயி போல, நீர் கண்ட மானை போல கண்ணீருடன் ஆலயம் விரைந்தார் பாண்டிமாதேவி, ஆனால் சமணரின் கண்கள் ஆங்காங்கே இருந்ததால் அவரால் சம்பந்த பிள்ளையினை நேரடியாக பார்க்க முடியவில்லை.
இனம் பிரிந்த மான் போல ஒரு தூணின் மறைவில் நின்று பிள்ளையினை நோக்கி ஆனந்த கண்ணீர் வடித்தார் பாண்டிமாதேவி, ஆம் அந்த பிள்ளைதான் இனி மதுரையில் சைவம் தளிர்க்க கடைசி நம்பிக்கை.
தன் அடியாரை அங்கு சிவன் அடையாளம் காட்டாமல் விடுவாரா?
பாண்டிய எல்லையிலே மங்கையர்கரசி என அந்த தாயினை தேடிய சம்பந்தர் குலச்சிறையாரிடம் எங்கே பாண்டிமாதேவி என ஒன்றுமரியாதவர் போல் கேட்க, தூணின் பின்னால் இருந்த மானியாரை அழைத்து வந்தார் குலசிறையார்.
அந்த பாலகன் காலில் “நீர் இங்குவர நானும் இந்த ஆலயமும் செய்த பாக்கியம் என்ன?” என சொல்லியபடி விழுந்தார் பாண்டிமாதேவி, ஆம் நாடாளும் அரசி அந்த பாலகனின் காலில் தயக்கமின்றி விழுந்தாள்.
அவரை தூக்கி எழுப்பிய சம்பந்தர் சொன்ன வார்த்தை அசாதாரணமானது “சமணரிடையே சைவமாய் வாழும் உம்மை காணவே நாம் வந்தோம்”.
ஆம், பாண்டிமாதேவி எனும் மங்கையர்கரசி ஒருவருக்காகவே நான் வந்தேன் என சம்பந்தர் சொன்னது அதுவும் ஆலயத்தில் சொன்னது சாட்சாத் சிவனின் மொழி.
சம்பந்த பிள்ளையினை மடத்தில் தங்க வைத்து அவருக்கு வேண்டிய எல்லா வசதியும் குலசிறையார் மூலம் செய்து கொடுத்தார் மங்கையர்கரசி.
சம்பந்தபிள்ளை மதுரைக்கு வந்ததும் அவர் தங்கியிருப்பதும் சமணருக்கு தெரிந்தது, அவர்கள் ஓடி சென்று மன்னனிடம் வாதிட்டார்கள்.
சைவ சிறுவன் வந்தான் என நாம் கேட்டதே கேட்ட தீட்டு ஆயிற்றே,இதோ நீங்களும் கேட்டு பாவியாகிவிட்டீர்களே மன்னா , அவனை முதலில் நாட்டை விட்டு விரட்டுங்கள் என மல்லுக்கு நின்றனர்.
வாதிட வந்தவரை விரட்டுதல் அரச தர்மமல்ல என மன்னன் தயங்கினாலும் பொல்லா சமண கூட்டம் விடுவதாக இல்லை, மன்னா அவனை மெல்லிதாக மிரட்டினால் ஓடிவிடுவான் அதை செய்கின்றோம் என சொல்லிவிட்டு வெளியேறினார்கள்.
மன்னன் முகம் வாடியிருந்ததை கண்ட மங்கையர்கரசியார் விஷயதை கேட்க சம்பந்தர் வருகையினையும் அவனை பற்றி சமணர் சொன்ன விஷயங்களையும் சொன்னான் மன்னன்
சமணரும் வாதிடட்டும், சம்பந்தரும் வாதிடட்டும் யார் வெல்கின்றார்கள் என்பதை பார்த்துவிட்டு அடுத்தகட்டத்தை முடிவு செய்யலாம் என்றார் மங்கையர்கரசியார்.
மன்னனுக்கும் அது சரியாகபட்டது.
அந்த இரவில் சமணர்கள் வஞ்சக வேலையில் இறங்கினர், சமணர்களிடம் சில மந்திரங்களும் தாந்ரீகங்களும் இருந்தன அதை கொண்டு சைவர்கள் வீட்டை கொளுத்திவிட்டு ஒன்றும் தெரியாதவர்கள் போல் இருக்கும் ஆயுதம் ஒன்று அவர்களிடம் இருந்தது.
அதை கொண்டு சம்பந்தர் தங்கி இருந்த மடத்தை கொளுத்த முயன்றனர், இந்த மந்திரங்களும் பில்லி சூனியங்களும் ஏவலும் சிவனடியார்களிடம் பலிக்காது என்பதால் தீ மடத்தில் பற்றவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த சமணர்கள் நேரடியாக மடத்துக்கு தீவைத்தனர், ஆலவாய் அன்னலை போற்றி பாடியபடி அமர்ந்திருந்த சம்பந்தரை தீ தாக்கவில்லை மாறாக “பையவே சென்று பாண்டியர்க்காகவே” என அவர் பாட அந்த வெப்பம் பாண்டிய அரண்மனைக்கு சென்றது
சம்பந்தர் மடம் நெருப்பில் சிக்கியது என்றதும் அந்த இரவிலே ஓடிவந்தார் மங்கையர்கரசி, ஆம் சம்பந்தரை மதுரைக்கு அழைத்தது அவரே எனும் வகையில் பாலகனுக்கு ஆபத்து என்றால் முழு பாவமும் தன்னையே சாரும் என கதறி ஓடிவந்தார்.
சிவனே..என் சிவனே என அவர் ஓடிவந்து சம்பந்தரை பார்த்தபின்பே அமைதி கொண்டார், அவரை நோக்கி புன்னகைத்த சம்பந்தர் தனக்கொன்றும் இல்லை எனவும் அரண்மனை சென்று ஓய்வெடுக்கும்படியும் கேட்டு கொண்டார்.
ஆம்,சம்பந்தர் மதுரை வந்த நாடகத்தின் அடுத்தடுத்டுத்த காட்சிகளை அவரே அறிந்திருந்தார்.
சம்பந்தருக்கு வைத்த நெருப்பு மன்னனை வெப்ப நோயாக வாட்டிற்று, கடும் வெப்பம் அவரை தாக்கிற்று சமணரின் மந்திரங்களும் மருந்தும் மயிலறகு மருத்துவமும் கொஞ்சமும் பலனில்லாமல் போயிற்று.
குளிர்ந்த சந்தணத்தை பூசினாலும் உடனே கருகிவிழும்படி கடும் வெப்பம் உடலில் ஏற மன்னன் சமணரிடம் நம்பிக்கை இழந்தான், அப்பொழுதுதான் மங்கையர்கரசியார் திருஞானசம்பந்தர் பற்றி சொன்னார்.
அவரின் பெயரை கேட்ட மாத்திரத்திலே ஒரு ஆறுதலை உணர்ந்த மன்னன் அவரை அழைத்துவரும்படி உத்தரவிட சமணர் கூட்டம் ஒரு சைவன் இங்கே வரகூடாது என மறியல் செய்தது.
மங்கையர்கரசியார் பேச தொடங்கினார், நாடாளும் மன்னன், சமண அரசன் என்பதை தாண்டி அவர் என் கணவன் அவர் உயிரை காக்க எல்லா வகையினையும் கையாள எனக்கு உரிமை உண்டு என அவர் சீறியபொழுது சமணரால் தடுக்க முடியவில்லை.
மடத்துக்கு விரைந்தோடி சம்பந்தரிடம் மங்கையர்கரசியார் உருகி நின்றார், தன் கணவனை காக்கும்படியும் அவருக்கு ஒன்று என்றால் தானும் சாக இருப்பதால் தன்னையும் காக்கும்படியும் மன்றாடினார்.
ஆம் காக்க வேண்டியது தன் வாழ்வினை என மடிபிச்சை ஏந்தி நின்றார் அந்த உத்தமி.
மங்கையர்கரசியின் சிவபக்தியினை உணர்ந்திருந்த சம்பந்தர் பதிபக்தியினையும் அறிந்தவராய் அழைப்புக்கு நன்றி சொல்லி அரண்மனை புகுந்தார்.
அந்த ஞான சிறுவனின் வருகை சமணரை அலற வைத்தது, சம்பந்தரோ வந்து மன்னன் அருகில் நின்றார்.
சமணரோ தாங்கள் ஒரு பக்கம் நின்று மந்திரம் சொல்வதாகவும் சம்பந்தர் இன்னொரு பக்கம் நிற்கட்டும் என்றும் வாதம் செய்தன, ஆம் சம்பந்திரிடம் மன்னனை தனியாக விட அவர்கள் தயாரில்லை.
இதயம் இருக்கும் இடப்புறம் அவர்களும் வலப்புறம் சம்பந்தரும் நின்றனர்
சம்பந்தர் “மந்திரமாவது நீறு” பாடலை பாடி திருநீற்றை பூச மன்னனின் இடபாகம் குளிர்ந்தது ஆனால் சமணன் நின்ற இடபாகம் எரிந்தது.
சமணர் மருத்துவமெல்லாம் பொய்த்த நிலையில் அவர்களை விரட்டிவிட்டு சம்பந்தரை இடபக்கமும் நீறு பூச செய்தான் மன்னன் வெப்ப நோய் நொடியில் அகன்றது.
கணவன் குணமடைந்ததும் மங்கையர்கரசி தன் கணவனோடு சேர்ந்து சம்பந்தர் காலில் விழுந்தார், அவனின் கூன் முதுகை கண்ட சம்பந்தர் “மன்னனும் ஓங்குக” என சொல்ல அவனின் கூன் முதுகு சரியானது.
மன்னன் அந்த பொழுதே திருநீற்றை பூசி சைவமானான், மங்கையர்கரசியார் அளவில்லா ஆனந்தம் அடைந்து சிவனே என கதறி மகிழ்ந்து கொண்டிருந்தாள்.
ஆம் அவள் தவத்துக்கான வரம் அது.
தனக்கு கணவன் சைவனாக கிடைத்துவிட்டான், பாண்டி நாட்டு அரசன் சைவனாக நிமிர்ந்துவிட்டான் ஆனால் இந்த பொல்லா சமண கூட்டத்தை எப்படி விரட்டுவது என்ற பார்வையினை சம்பந்தரை நோக்கி திருப்பினார் மங்கையர்கரசியார்.
அவரின் குறிப்பறிந்து புன்னகைத்தார் சம்பந்தர், அதற்கான பதில் சமண கூட்டத்திடம் இருந்தே வந்தது, ஆம் மன்னனிடம் இவன் செய்வதெல்லாம் பொல்லா தந்திரமான வேலை, எங்களிடம் வாதிட வரசொல்லுங்கள் அதன் பின் சைவம் பெரிதா, சமணம் பெரிதா என பார்க்கலாம் என வம்புக்கு இழுத்தார்கள்.
இம்முறை மன்னனின் காவலில் இருந்தார் சம்பந்தர், சில நாட்களில் வாதம் தொடங்கிற்று அதில் சமணர் தோற்று கொண்டே இருந்தாலும் நாட்களை இழுத்தனர்.
குலச்சிறையார் தலையிட்டு இதை முடிவுக்கு கொண்டுவர கடைசியில் அணலிடை வாதம், புணலிடை வாதம் என முடிவாயிற்று.
அதாவது பதிகம் எழுதி தீயில் இட்டால் எந்த ஓலை எரியவில்லையோ அது சரியான வாதம், ஓலையினை நீரில் இட்டால் நீர் அடித்து செல்லாவிட்டால் அது ஏற்றுகொள்ள கூடிய வாதம்
இந்த இரண்டிலுமே சம்பந்தர் வென்றார், அக்னி அவர் ஓலையினை ஏற்கவில்லை, வைகையிலே இட்ட ஏடு எதிர்திசை நீந்தி சென்று கரையேறிற்று, அந்த இடமே இன்றைய திரிஏடகம்
இப்படி இரு கடைசி வாதிலும் தோற்ற சைவர்கள் கழு ஏற தயாரானார்கள்.
கழு என்பது கூர்மையான மரத்தில் சொருகி சாகும் தண்டனை என்றாலும் இந்த கழுவேற்றல் என்பது வேறு.
அதாவது கூண்டில் ஏற்றினான் என்றால் குற்றவாளி கூண்டையும் குறிப்பது போல கழுவில் ஏறுதல் என்பது வாதம் நடக்கும் மன்றத்தில் தோற்றதற்கு அறிகுறியாக தன் மேல் துண்டை ஒரு கழுமேல் போட்டுவிட்டு தோற்று செல்லுதல் என பொருள்.
அப்படித்தான் ஏகபட்ட சமணர்கள் சம்பந்தரிடம் தோற்று கழுவில் தங்கள் மேலாடையினை ஏற்றிவிட்டு பாண்டிய நாட்டை விட்டு கிளம்பினார்கள்.
பாண்டிய நாடு முழு சைவமானது, மன்னனும் சைவமாகி மிகபெரிய திருபணிகளை முன்னெடுத்தான்.
ஆலவாய் நாதர் கோவில் ஒரே நாளில் புத்துயிர்பெற்றது, ஆலய மணி கம்பீரமாக ஒலிக்க ஆறுகால பூஜை நடக்க ஆரம்பித்தது.
இதற்கெல்லாம் காரணமான சம்பந்தரை பெரும் நன்றியோடும் மகிழ்வோடும் அனுப்பிவைத்தார் மங்கையர்கரசியார்.
உண்மையில் இந்த மாபெரும் சைவபுரட்சிக்கு பெரும் காரணம் மங்கையர்கரசியே, அவளின் தவ வாழ்வே அந்த மாபெரும் அற்புதத்தை மதுரையில் அரங்கேற்றிற்று.
இத்தோடு விஷயம் முடிந்ததா என்றால் இல்லை, மதுரையில் தோற்றோடிய சமணர்கள் சேரர்களோடு சேர்ந்து பாண்டியனுக்கு எதிராக அவனை தூண்டிவிட்டனர்.
மன்னன் சமணத்தில் சிக்கி அஹிம்சை,உயிர்கொலை என காருண்யம் பேசிகொண்டிருந்த காலங்களில் பாண்டிய படை வலுவிழந்தது.
அவைகளின் ஆயுதங்கள் பலவீனமாயின, வீரர்களுக்கும் சண்டைக்கும் வெகுதூரம் இருந்தது, பயிற்சிகளுமில்லை.
இந்த பலவீனத்தை கொண்டு படையெடுத்தன சேரமன்னன், அவனின் படை மிக பலமாய் இருந்தது
மங்கையர்கரசியார் தளரவில்லை கணவனுக்கு துணையாய் தன் தந்தை படைகளை சேர்த்து பலம் கொடுத்தார் எல்லாவற்றுக்கும் மேல் சிவன் அருளும் அவர் பக்கம் இருந்தது.
நெல்வேலி போர் எனும் அந்த வரலாற்று சிறப்புமிக்க தாமிரபரணி கரையில் திருநெல்வேலியில் போர் தொடங்கிற்று.
கடுமையான யுத்ததில் பாண்டியன் சேரர்களை முறியடித்தான், அத்தோடு அவர்களின் கோட்டைகள் இருந்த தென் பாண்டி சீமையினை முழுக்க கைபற்றினான்.
செங்கோட்டை களக்காடு வள்ளியூர் என பல பாண்டிய இடங்கள் மீளபெறபட்டன, தென் எல்லை மிக மிக வலுவாயிற்று, சேரர்கள் மலைக்கு அப்பக்கம் விரட்டி அடிக்கபட்டனர்.
அதன் பின்பே நெல்லையப்பர் ஆலயம், குற்றாலம் ஆலயம் போன்ற மிகபெரிய சிவாலயங்களெல்லாம் பாண்டியனால் அமைக்கபட்டன, மங்கையர்கரசியும் அவனும் சேர்ந்து அமைத்தார்கள்.
ஆம் மதுரை ஆலயம் புதுபொலிவு பெற்றதும் நெல்லை ஆலயம் அமையபெற்றதும் அந்த மங்கையர்கரசியாலே, அவளில்லையேல் இந்த ஆலயங்களில்லை.
சமணம் நிறைந்த நாட்டில் தனி ஒரு சைவ மகளாக வந்து தன் பக்தி ஒன்றாலே சைவத்தை மீட்டு அந்த நாட்டை சிவபூமியாக மாற்றி நின்ற மங்கையர்கரசி பாண்டியநாட்டில் ஏகபட்ட சிவாலயங்களை அமைத்து திருப்பணி செய்தார்.
தாமிரபரணி கரையோரம் நிர்மானிக்கபட்ட பல சிவாலயங்கள் அவரால் தொடங்கபட்டதே
தன் வாழ்வெல்லாம் சிவபணி செய்து சிவாலயங்களை எழுப்பிய அந்த மங்கையர்கரசி வாழ்வாங்கு வாழ்ந்து கயிலாயம் அடைந்தார், சிவன் அவரை கயிலாயத்தில் சேர்த்துகொண்டார், நாயன்மார் எனும் பட்டமும் அவருக்கு கிடைத்தது.
மங்கையர்கரசியாரின் சிவவாழ்வும் அவர் செய்த அளப்பறிய மாபெரும் சைவ புரட்சியும் இதுதான்
பாண்டிமாதேவியின் இந்து பெண்கள் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய வாழ்வு.
ஆம், பெண்களே ஒரு வீட்டின் கண்கள், ஒரு வீட்டின் ஆதார அடையாளம், அவர்கள் எவ்வளவு பக்தியாய் சமய பற்றோடு இருப்பார்களோ அவ்வளவுக்கு இந்துமதம் வலுக்கும்
இந்த மானி எனும் சோழ இளவரசி அப்படித்தான் அவர் அன்னையாலும் தந்தையாலும் சைவத்தில் வளர்கபட்டாள், குங்கிலிய கலய நாயனார் போன்ற உன்னத அடியார்களை எப்படி போற்றி காக்க வேண்டும் என வளர்க்கபட்டாள், அந்த வளர்புத்தான் அவளை மதுரையில் வைராக்கியமாக நிறுத்தியது.
ஒவ்வொரு இந்து பெண்ணும் தன் குழந்தைக்கு செய்ய வேண்டிய கடமை அது, அந்த கடமையில் அப்பழுக்கற்ற அர்பணிப்பான பக்தர்கள் உருவாவார்கள், உருவாகி சைவம் காப்பார்கள்
இந்து பெண்கள் செய்யவேண்டிய முதல் கடமை நல்ல இந்து குழந்தைகளை இளமையில் இருந்தே சைவத்தில் வளர்ப்பது, அதை ஒவ்வொரு பெண்ணும் செய்தல் வேண்டும்.
மங்கையர்கரசியாரின் கனவு அவளை பற்றியது அல்ல, அவளின் அரியாசனை பற்றியதோ பெருகும் செல்வம் பற்றியதோ அல்ல, அவளின் ஆசையெல்லாம் சைவம் தழைக்க வேண்டும் என்பதில்தான் இருந்தது, ஆம் தன்னலமற்றா சிவபக்தி அவளிடம் இருந்தது.
தன்னலமற்ற பொதுநலமான வேண்டுதலுக்கு இறைசக்தி எப்பொழுதும் துணை நிற்கும், அப்படித்தான் மங்கைகரசிக்கும் நின்றது, ஒவ்வொரு இந்துவும் படிக்க வேண்டிய பாடம் அது
மங்கையர்கரசியார் வாழ்வு நுணுக்கமாக சொல்லும் தத்துவம் ஒன்று உண்டு, ஆம் அவள் துயரத்தை தன் பிரார்த்தனையினை தன் தந்தையிடம் சொல்லவில்லை உடன் பிறந்தோரிடம் சொல்லவில்லை மாறாக சிவனிடம் மட்டுமே சொல்லி அழுதாள்.
அவளின் சுயநலமில்லா கண்ணீருக்கு இரங்கிய சிவன் சம்பந்தமே இல்லாத சம்பந்தர் மூலம் மாபெரும் அற்புதத்தை செய்தார்.
ஆம், இறைசக்தி உங்களை கண்காணித்து கொண்டே இருக்கின்றது, உங்களின் ஒவ்வொர் கோரிக்கையினையும் அது கேட்டுகொண்டே இருக்கின்றது, உரிய நேரத்தில் யார்மூலம் எப்படி செயலாற்ற முடியுமோ அப்படி மிக சரியாக அது பதிலளிக்கின்றது.
மானிடரிடம் கவலையினை வேண்டிதலை சொல்வது பலனற்றது, இறைவனிடம் மட்டுமே பிரார்த்திப்பது சரியானது.
மங்கையர்கரசி காட்டிய மிகபெரும் வழி அவளின் பதிபக்தி, கணவன் பொல்லா சமணன் என்றாலும் அந்நாடு தன் இயல்புக்கு முற்றிலும் மாறான சமண ஆதிக்க நாடு என்றாலும் அவள் தாய்வீடு திரும்பவில்லை, தந்தையிடம் சென்று கண்ணை கசக்கவில்லை.
மாறாக தன் கணவனை உயிர்போல் கருதினாள், எந்நிலையிலும் அவனை விட்டு அகல அவள் சிந்தையாலும் நினைக்கவில்லை. கணவன் தனக்கானவன் மட்டுமல்ல நாட்டுக்கே வழிகாட்டி எனும் வகையில் அவன் சைவம் திரும்ப பிரார்த்தித்தாள், அந்த பிரார்த்தனை பலன் கொடுத்தது
ஆம் அவளின் வலுவான பிரார்த்தனை ஒன்றுக்கே இறைசக்தி சம்பந்தர் வடிவில் வந்தது, வந்து பேசிற்று
என்ன பேசிற்று?
மங்கையர்கரசி என்பருக்காக மட்டுமே அது பாண்டிநாடு வந்ததாகவும், புறசமயத்தார் நடுவில் சைவம் வளர்க்கும் அந்த மிக பெரிய பக்திக்காகவுமே வந்ததை சொல்லிற்று.
ஆம், கடவுளையே ஈர்க்கும் சக்தி பதிபக்திக்கும் உண்டு, சிவபக்திக்கும் உண்டு
கணவன் மேல் கொண்ட அன்பினால் பெரும் முனிகளையே குழந்தைகளாக்கிய அனுசுயை போல், தன்னை அறியாமல் தான் செய்த தவத்தின் பலனாய் சிவனையே சம்பந்தர் வடிவில் குழந்தையாய் கண்டார் மங்கையர்கரசி.
பெண்களுக்கு பக்தி எவ்வளவு முக்கியம் என்பதை மங்கையகரசி வரலாறு தெளிவாக சொல்கின்றது, ஒரு பெண் கொள்ளும் மகா வைராக்கியமான பக்தி எவ்வளவு பெரும் ஆச்சரியங்களை செய்யும் என்பதை சொல்கின்றது.
இந்துமதம் பெண்களை தர்மத்தின் அடையாளமாக கண்டது, எங்கெல்லாம் அதர்மம் ஆடுமோ அதை அழிக்க எண்ணும் பெரும் சக்தி பெண்களையே அங்கு கருவியாய் பயன்படுத்தி அதர்மத்தை அழித்தது.
மகாபாரதம் , ராமாயணம் என பல இடங்களில் காணபடும் அந்த வரலாறுதான் மங்கையர்கரசி மூலமாக மதுரையிலும் இறைசக்தியால் செய்யபட்டது.
மிக தீர்க்கமாக உணரபட வேண்டிய உண்மை இதுதான்…
இந்த பிரபஞ்சத்தில் எங்கெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடுமோ அங்கெல்லாம் ஒரு குரல் தன்னை அழைக்காதா என இறைசக்தி ஏங்கி நிற்கின்றது, அப்படி அழைக்கும் குரல் உறுதியானதா இல்லையா என்பதை சோதித்தபடி நிற்கின்றது.
அக்குரலில் உண்மையும் ஏக்கமும் தர்மம் மீளவேண்டும் அதர்மம் அழியவேண்டும் என்ற ஒரு வைராக்கியம் இருந்ததால் உனக்காகவே வந்தோம் என வந்து அந்த நாடகத்தில் அதர்மத்தை அழிக்கின்றது.
பாரத, ராமாயண காட்சியின் இன்னொரு வடிவமே மதுரையில் நடந்த மங்கையர்கரசியாரின் வாழ்வு
இச்சூழலில் அதாவது தமிழகம் இந்துமதம் நலிவுற்று , இந்து ஆலயங்கள் பாழ்பட்டு, இந்து எதிர்ப்பு சக்திகளெல்லாம் “மதசார்பற்ற” என சவால்விடும் இந்த கொடும் காலத்தில் மங்கையர்கரசி நாயனாரின் வாழ்வு ஒவ்வொரு தாய்மாரும் இந்து பெண்களும் படிக்க வேண்டிய பாடம்
இந்து தாய்மார்கள் பிள்ளைகளை இந்துகொள்கையில் மங்கையர்கரசியினை போல் உறுதியாக வளர்க்க வேண்டும், அப்படி வளர்த்தால் அந்த பெண்கள் பின்னாளில் சிவனருளால் ஆயிரமாயிரம் அற்புதங்களை செய்வார்கள்.
ஒவ்வொரு இந்துபெண்ணும் குழந்தையில் இருந்து மங்கையர்கரசியின் வாழ்வினை படித்து அதன்படி நடந்துவந்தால் அவள் வாழ்வும் செழிக்கும், இல்லறமும் செழிக்கும் , சைவமும் வாழும்
அந்த நல்ல பெண் மாபெரும் எடுத்துகாட்டாய் வாழ்ந்து ஆயிரம் விளக்குகளை இங்கு ஏற்றிவைப்பாள் சைவம் தழைத்தோங்கும்.
அதே நேரம் மங்கையர்கரசி நாயனார் வாழ்வினை படிக்கும் ஒவ்வொரு இந்து பெண்ணும் சைவம் தழைக்க தன்னாலான ஒவ்வொரு செயலையும் செய்தல் வேண்டும்.
பாண்டிமாதேவி பிரார்த்தனை செய்தாள் கண்ணீர்விட்டாள் எப்பொழுது ஆறுதல் வரும் என தவித்திருந்தாள், உரிய காலத்தில் சம்பந்தரை மதுரைக்கு அழைக்கவும் அவள் தவறவில்லை
வாய்ப்பினை சரியாக பயன்படுத்த சிவன் அருள் புரிந்திருந்தார்.
அப்படி ஒரு வாய்ப்பு தேர்தல் என தமிழக பெண்களுக்கும் வழங்கபட்டிருக்கின்றது, அது இந்துமதம் இங்கு வளர மிகபெரும் வாய்ப்பு.
இந்து மதத்துக்கு இங்கு எக்காலமும் எதிர்ப்புகள் உண்டு, அதை அழிக்க பெரும் சக்திகள் முயன்றுகொண்டே இருப்பதும் உண்டு.
காலத்துக்கு ஏற்ப அதன் பெயர்கள் மாறுமே தவிர எதிர்ப்பு குறையாது, இந்துமதம் அவைகளை அடக்கி மீண்டெழுவதற்கும் குறைவிருக்காது.
அன்று அதற்கு புத்தம், சமணம் என பல பெயர்கள் இருந்தாலும் இன்று தமிழகத்தில் அதன் பெயர் போலி நாத்திகமும், போலி மதசார்பற்ற ஊழல் அரசியலுமாகும்.
இந்த போலி நாத்திகத்தால் தமிழகத்தில் இந்துமதம் தவிர மற்ற மதம் வளர்ந்தது, இந்து ஆலயம் தவிர மற்றவவை செழித்தன.
சிறுபான்மை இனம் பெரும்பான்மை இந்து சமூகத்தை மிரட்டிவைக்கும் பெரும் அக்கிரமங்களெல்லாம் அரங்கேறின.
இந்து ஆலயங்கள் பாழ்பட்டன, இந்து கொள்கைகள் கேலி செய்யபட்டன, இந்து என்ற தத்துவமே சிறுமைபடுத்தபட்டு அது தீண்டதகாத விஷயம் எனும் அளவு வன்மம் விதைக்கபட்டது.
இன்று இந்துமதம் மாபெரும் இக்கட்டிலும் ஆபத்திலும் இங்கு நிற்கின்றது.
மங்கையர்கரசியார் காலத்தில் எப்படி சமணம் இந்துமதத்துக்கு மிகபெரிய நெருக்கடி கொடுத்ததோ அதே நெருக்கடியினை இன்று பல சக்திகள் இந்துமதத்துக்கு கொடுக்கின்றன.
அதை கருவறுக்க ஒவ்வொரு இந்து பெண்ணும் மங்கையர்கரசியார் போல் மாற வேண்டும், என் நாட்டில் இந்து எதிர்ப்பு சமணத்துக்கு இடமில்லை என எவ்வளவு வைராக்கியமாய் நின்றாரோ அதே வைராக்கியம் ஒவ்வொரு இந்து பெண்ணுக்கும் வரவேண்டும்.
ஆலவாய் நாதனின் திருவாலயம் சமணரின் கொடும் சதியால் பாழ்பட்ட பொழுது அவள் எப்படி துடித்தாளோ அதே வலி ஒவ்வொரு இந்து பெண்ணுக்கும் வரவேண்டும்.
அப்படி ஒரு உணர்வு வந்து வைராக்கியம் வந்து சிவபக்தி பெருகி இந்துவிரோதிகளுக்கு அன்னை மங்கையர்கரசி வழியில் என் வாக்குமில்லை என் குடும்பத்து வாக்குமில்லை என உறுதியாக நின்றால் இங்கு சைவம் வாழும், வாழ்வாங்கு வாழும்.
மங்கையர்கரசி காலத்தில் வாதம் எனும் மோதல் பெரும் ஆயுதமாய் இருந்தது, சிவனருள் பெற்ற அவதாரங்களால் மட்டுமே அவர்களை வாதத்திலும் , மந்திர தந்திரங்களிலும் வீழ்த்தும் வழி இருந்தது.
இதனால் மங்கையர்கரசி சிவனிடம் கதறி அழுது கொண்டிருந்தாள்.
ஆனால் இன்று அப்படி அல்ல, வாதங்களும் அற்புதங்களும் தேவையில்லை, வாக்கு எனும் பெரும் ஆயுதம் ஒவ்வொருவரிடமும் உண்டு.
அதை இந்துமதத்துக்கு எதிரான சக்திகளை வீழ்த்த அதை தயங்காமல் பயன்படுத்துங்கள், அது திருதொண்டு. மிக முக்கியமான திருதொண்டு
அதை மிக சரியாக செய்வதே தர்மம், திருதொண்டு..
ஆம் சமணம் வீழ மங்கையர்கரசி செய்ததை போல் இங்கு இந்து எதிர்ப்பு சக்திகளை வீழ்த்த எதையெல்லாம் செய்ய முடியுமோ அதெல்லாம் திருதொண்டே
அதில் மிக எளிதான விஷயம் வாக்கு செலுத்துவது, செலுத்தும் வாக்கினை சிவனுக்காக செலுத்துதல் என்பது திருதொண்டே.
மங்கையகரசியார் எப்படி நாயன்மார் என்றானார்? அவர் மந்திரம் சொன்னாரா? யாகம் நடத்தினாரா? இல்லை மாபெரும் யுத்தம் செய்தாரா? யாரையாவது வெட்டி வீழ்த்தினாரா?
இல்லை அவர் பக்திக்கு இறங்கி சிவன் காட்சி அருளி சாட்சி சொன்னாரா?
இல்லை, பின் எப்படி நாயன்மார் என்றானார்?
மாபெரும் காரியத்தை அவர் தொடங்கிவைத்து அது அசைக்க முடியா சமண ஆதிக்கத்தையே வீழ்த்திய பின் என்ன சாட்சி வேண்டி இருக்கின்றது?
ஆம், யாரெல்லாம் சைவம் தழைக்க பாடுகின்றார்களோ அவர்களெல்லாம் நாயன்மார்களே, அதில் அன்று சமணம் மிகுந்த இடத்தில் இரு சைவர்கள் குலசிறையார் மங்கையர்கரசியார் என பாடுபாட்டார்கள் நாயன்மார்களானார்கள்.
இன்றும் யாரெல்லாம் அதற்கு பாடுபடுகின்றார்களோ அவர்களெல்லாம் இறையருளை பெற்றவர்களே, அந்த தொண்டுக்கு கயிலாயமும் கிடைக்கும் அவர்கள் இல்லறமும் நல்லறமாகும்
ஆம், வாக்குசாவடிக்கு செல்லும் முன் மங்கையர்கரசியினை மனதால் வேண்டிகொண்டு செல்லுங்கள், அந்த வாக்கு அன்று சமணத்தை வீழ்த்திய சம்பந்தரின் பதிகம் போல் இன்று இந்துமதம் வாழ வழிவகுக்கும்.
ஒவ்வொரு இந்து பெண்களும் மனமார உணரவேண்டிய விஷயம் இது
மங்கையர்கரசியாரின் குருபூஜை சித்திரைமாதம் ரோகினி நட்சத்திரத்தில் கொண்டாடபடும், அன்று சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அவர் அவதரித்த பழையாறை ஊரில் உள்ள சிவாலயத்தில் அவருக்கென சன்னதி உண்டு, அங்கு குருபூஜை மிக விஷேசமாக கொண்டாடபடும்.
மதுரையில் முன்பு அவருக்கொரு சிலை இருந்தது, இப்பொழுது அவர் நினைவாக மங்கையர்கரசியார் மண்டபம் நிலைகொண்டுள்ளது.
நெல்லை ஆலயத்திலும் அவருக்கு தனி சிலையும் நினைவு வழிபாடும் உண்டு, ஆம் அவர் இல்ல்லாவிடில் அந்த ஆலயம் சாத்தியமில்லை.
மதுரை ஆலயத்திலும் அன்னையாரின் குருபூஜை மிக பிரசித்தியாக நடைபெறும், மதுரை ஆலயத்துக்கு செல்லும் பொழுது அன்னையாரினை நினைந்து போற்ற மறவாதீர்கள்
அவரை நினைந்து செய்யும் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம், இந்துமதம் மீண்டெழவேண்டும் என உள்ளார்ந்த ஏக்கம் இருக்குமானால் அவர் நினைவில் மதுரை ஆலயத்தில் பிரார்த்தியுங்கள், பெரும் பலம் உங்களை வந்தடையும்.
அந்நாளில் ஒவ்வொரு இந்துவும் தங்கள் சனாதன தர்மம் காக்க உறுதிமொழி எடுப்பார்கள், அந்த வழக்கம் நெடுங்காலம் இருந்தது அதை மீட்டெடுத்தல் வேண்டும்.
மங்கையர்கரசியரை யாரெல்லாம் நினைந்து போற்றுவார்களோ அவர்கள் காலில் நான் விழுந்து வணங்குகின்றேன் என்கின்றார் சேக்கிழார்,இதை விட என்ன சொல்ல முடியும்?
ஆம் மங்கையர்கரசியாரை அடைந்த புண்ணியமே கூன் பாண்டியன் கயிலாயம் அடைய வழி செய்தது, நல்ல பக்திமிக்க மனைவியினை அடைதலின் பலன் அது
கூன்பாண்டியன் நாயன்மாராக மாறியது அவராலே, சமணனான அவன் சம்பந்தரால் தொடபட்டு நாயன்மாரானது அப்படியே.
கணவனுக்கே குருவாகி வழிகாட்டி நின்ற காரிகை அவள், அந்த மாதரசியினை மனமார நினைக்கும் ஒவ்வொருவருக்கும் சிவனுக்கு திருதொண்டு செய்வனே செய்து கயிலாயம் அடையும் வாய்ப்பும் உறுதி.
ஆண்நாயன்மாரில் திருநாவுக்கரசரும், பெண் நாயன்மாரில் மங்கையர்கரசியும் குருவாகி நிற்பவர்கள்
மங்கையர்கரசி நாயனார் இங்கு பல வகை உதாரணங்களுக்கு முன் நிறுத்தபட்டு எக்காலமும் அவர் நினைவு இந்துக்களுக்கு தேவை என்பதை சொல்லும்படி வாழ்ந்து சென்றவர்
ஆம், ஒரு நல்ல இந்துகுடும்பம் உருவாக பெண்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கு அவரே உதாரணம்.
நல்ல மனைவி கணவனை நல்வழிபடுத்த எப்படி போராடவேண்டும் என்பதற்கு அவரே எடுத்துகாட்டு
நல்ல பக்தை எச்சூழலிலும் கலங்காமல் பொதுநலத்தில் சிந்தித்து இந்து ஜோதியினை ஏற்றிவைக்க எப்படி போராட வேண்டும் என்பதற்கும் அவரே எடுத்துகாட்டு.
பக்திமிக்க பெண் எப்படி இறைசக்தியினை இழுத்து வருவாள் என்பதற்கும் அவரே பெரும் உதாரணம்
ஆம் அவராலே பாண்டிநாடு சைவத்தில் மீண்டது, அவராலே தாமிரபரணி கரையில் பெரும் ஆலயங்களெல்லாம் எழும்பின, அவராலே சைவம் வெகு பல இடங்களில் பரவி நிலைத்தது
மங்கையர்கரசி கணவனுக்கே குருவானவர் எனும் வகையில் ஒவ்வொரு பெண்ணும் அவர் வாழ்வினை அறிந்து அவர் ஆசியினை பெறுதல் வேண்டும்.
மானி எனும் பெயரை மாற்றி அவரை “மங்கையர்கரசி” என அழைத்தவர் சிவபெருமானே, ஆம் சம்பந்தர் வாயால் அந்த பெருமையினை சொல்லவைத்தார்.
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கபட்ட பெரும் புண்ணியவதியே என சிவனே வாழ்த்திய வாழ்த்தை தன் பக்தியால் பெற்றார் அன்னையார்.
அவரினை வாழ்த்தி சம்பந்தர் பாடிய பதிகம் ஒவ்வொரு வீட்டிலும், பக்திமிக்க குலப்பெண்கள் வாழும் ஒவ்வொரு வீட்டிலும் பாடவேண்டிய பதிகமாகும்.
அதை பாட பாட இல்லறம் நல்லறமாகும், இல்லம் செழிக்கும் அவ்வகையில் நாடே புத்தொளி பெறும், ஆம் இந்த பதிகம் ஓவ்வொரு குலமகளாலும் ஒவ்வொரு மங்கையாலும் மங்கையர்கரசியினை நினைந்து பாட வேன்டிய பாடல்…
“மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மடமானி
பங்கயச் செல்வி பாண்டிமாதேவி
பணி செய்து நாள்தோறும் பரவப்
பொங்கழலுருவன் பூத நாயகன் நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவாயாவதும் இதுவே”
இந்த பதிகம் ஒவ்வொரு மங்கையரின் வாயிலும் ஒலிக்கட்டும், அவர்கள் உளமெல்லாம் நிரம்பட்டும், அதில் இந்து நெறி பரவட்டும்.
ஒவ்வொரு குடும்பமும் இந்துமதம் எனும் இந்த பெரும் கோபுரத்தினை கட்டும் கல் , அந்த கல்லில்தான் அந்த மாபெரும் தத்துவம் நிமிர்ந்து நிற்க முடியும்.
அந்த குடும்பத்தை உருவாக்கும் பெரும் பொறுப்பு பெண்களிடமே இருக்கின்றது, ஒரு பெண் பக்தி நெறியில் நின்றால் அந்த குடும்பமே மாபெரும் உறுதியான கல்லாய் இந்துக்களின் பேராலயத்துக்கு பலமாய் அமையும்.
அன்னையார் காலத்தில் சமணம் ஒழிந்து சைவம் தளைத்தது போல் ஒவ்வொரு இந்து பெண்ணும் தன் குடும்பத்தின் வாக்குகளை இந்து எதிர்களுக்கு எதிராக செலுத்தி, இந்து விரோதிகளை ஒழிக்கும் வண்ணம் செலுத்தி திருதொண்டு செய்யட்டும்.
பகீரதன் கங்கையினை கொண்டுவந்த தவத்துக்கு சற்றும் குறைந்ததல்ல மங்கையர்கரசியார் சைவத்தை மதுரைக்கு கொண்டுவந்த நிகழ்வு.
மதுரை என்றாலே மங்கையர்கரசியார் பெருமை அது அவர் மண் எனும் பெயர் 19ம் நூற்றாண்டு வரை இருந்தது, பின்னாளைய திராவிட இந்து எதிர்ப்பு திர்ப்பு புரட்டுகளில் இந்துமதம் காத்த மங்கையர்கரசி பெயர் மறைக்கபட்டு கண்ணகி முன்னிறுத்தபட்டார்.
ஆம், மங்கையர்கரசியார் பெருமை பாட பாட இந்துமதம் எழுச்சி பெறும், அதை ஒவ்வொரு இந்துவும் குறிப்பாக பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
சிவபக்தியில் தன் கணவனையும் நாட்டையும் காத்த மங்கையர்கரசிபோல் பக்தி நிறைந்த ஒவ்வொரு இந்து பெண்ணும் ஆச்சரியங்களை நிகழ்த்த முடியும்.