மீண்டும் சட்டசபை தீர்மானம் தேவையா?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு…

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தி, மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் அம்மசோதாவை பேரவைத் தலைவருக்கேத் திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், நேற்று ஒரு சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, வரும் 8-ஆம் தேதி சட்டமன்ற சிறப்புக் கூட்டம் ஒன்றை மீண்டும் நடத்தவும், ஏற்கெனவே திருப்பி அனுப்பப்பட்டதையே வலியுறுத்தி மீண்டுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாகவும், இக்கூட்டத்திற்குப் பிறகு அறிவித்திருக்கிறீர்கள். இந்தக் கூட்டத்தில் பாஜகவும் அதிமுகவும் கலந்துகொள்ளவில்லை என்பது வரவேற்க வேண்டிய விசயம்.

பொதுவாக, இதுபோன்ற மிக முக்கியமான விசயங்களில் தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்களையும் அழைத்துப் பேசி, கருத்துகள் கேட்கப்பட வேண்டும்.

ஆனால், நீங்கள் இந்தக் கூட்டங்களை சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் என்று மிகவும் குறுக்கியும் சுருக்கியும் அண்மைக்காலமாக சில முடிவுகளை எடுக்கிறீர்கள்.

அந்த முடிவுகள் ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய நலன் சார்ந்ததாக இல்லாமலும், சமூகநீதியின் வளர்ந்து வருகிற, மாறி வருகிற பரிணாமத்தை கணக்கிலே கொள்ளாமலும், வெறும் அரசியல் உள்நோக்கத்தோடு மட்டுமே எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.

பாரதநாட்டினுடைய – தமிழகத்தினுடைய ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்ற வகையிலும், தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாகவும் சம உரிமை, சமநீதி ஆகிய கருத்துகளை வெறுமனே பேசி வராமல், அவற்றை தமிழ் சமுதாயத்தின் வேர்க்கால்கள் வரைக் கொண்டு சென்றவன் என்ற அடிப்படையிலும் சில முக்கியமான கருத்துகளை ஆலோசனைகளாக எடுத்துவைக்க விரும்புகிறேன்.

2019 -நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பும், 2021 – சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் வெற்றி பெற்றவுடன், ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு இரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்து வாக்குகளை வாங்கினீர்கள்.

நீட் தேர்வு என்பது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுவிட்டது. அதிலிருந்து ஒரு மாநில அரசு விலக்குப் பெறுவது என்பது இயலாத காரியம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

எனினும் உங்களுடைய அரசியல் ரீதியான அணுகுமுறைக்கு தமிழக ஆளுநரையே ஆயுதமாகவும் கேடயமாகவும் பயன்படுத்தவும், அதில் தமிழக மக்களை பலிகடா ஆக்கவும் நினைப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபொழுது தமிழக மாணவர்கள் ஓரிரு ஆண்டுகள் சிரமப்பட்டார்கள் என்பது எதார்த்தம் தான்.

ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக கிராமப்புற, ஏழை, எளிய, பின்தங்கிய மாணவர்களும் அதிகமான இடங்களைப் பெற்று வருகிறார்கள்.  வெறும் 5 அல்லது 6 பேர் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள் என்றிருந்த நிலை மாறி, இப்பொழுது 500-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் இடம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்த பிறகும் அந்த எதார்த்தத்தை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள்? 

மீண்டும் மீண்டும் இதில் ஏன் பிடிவாதம் காட்டுகிறீர்கள் என்று தெரியவில்லை?

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ஒன்றிற்காக மட்டும் தான் தமிழக மக்களிடத்தில் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தீர்களா? தமிழக மக்களுக்கு வேறு எந்த பிரச்சினைகளுமே கிடையாதா?

திடீர் திடீரென்று சட்டமன்ற சிறப்புக் கூட்டமென்று ஏற்பாடு செய்கிறீர்கள். ஏற்கெனவே இதுபோன்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டங்கள் மூலமாக, நாம் கடந்த 30 ஆண்டுகளில் எண்ணற்றத் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோமே. அவைகளுக்கெல்லாம் தீர்வு கிடைத்துவிட்டதா?

கட்சத்தீவை மீட்க தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒன்றா? இரண்டா? அவற்றினுடைய கதி என்ன?

ராஜபக்சேவின் போர் விதிமுறை மீறல்கள் குறித்து விசாரிக்க, அவர் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்க வேண்டுமென்று சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் என்னவாயிற்று?

காவிரி, முல்லைப்பெரியாறு, மேகேதாட்டு போன்ற பிரச்சினைகளுக்கு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களினால் தான் தீர்வு கிடைத்ததா?

இராஜீவ்காந்தி கொலையில் குற்றம் சுமத்தப்பட்ட 7 பேரின் விடுதலை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்னவாயிற்று? 

இவைகளெல்லாம் ஒருபுறமிருக்க, தமிழக இளைஞர்களிடத்தில் வேலையில்லா திண்டாட்டமும் வறுமையும் அதிகரித்து வருகிறதே, அதுகுறித்து சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடத்த முயற்சி செய்ததுண்டா?

கடந்த 20, 30 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் மதுக்கடைகள் மூலமாக தமிழக இளைஞர்களுடைய உடல்நலம் சீரழிக்கப்படுகிறதே, தமிழக மக்களுடைய பொருளாதாரம் அரசின் மதுபானக் கடைகளாலேயே கொள்ளையடிக்கப்படுகிறதே;

அதுமட்டுமல்ல, சட்டவிரோதமாக மதுபானக் கடைகளுக்கு அருகாமையிலேயே பல்லாயிரக்கணக்கான மதுபான பார்களை நடத்த அனுமதி கொடுத்து, அதிலும் கொள்ளையடிப்பதைக் கண்டறிந்து, நீதிமன்றமே ஆறு மாதங்களுக்குள்ளாக அனைத்து மதுபான பார்களையும் மூட வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறதே;

ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி ஆறுமாத காலம் அவகாசம் இல்லை அடுத்த நாள் முதல் அனைத்து மதுபான பார்களும், மதுபானக் கடைகளும் மூடப்படும் என்று தீர்மானம் நிறைவேற்ற ஏன் யோசிக்கவில்லை?

கடந்த 9 மாதங்களாக அனைத்துக் கட்டுமானப் பொருட்களின் விலைகளும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறதே, அதைத் தடுப்பதற்கு எடுத்த முயற்சிகள் என்ன? அதற்கு ஒரு சிறப்பு சட்டமன்றக் கூட்டம் கூட்டப்படாதது ஏன்?

17 இலட்சம் என்றிருந்த அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைக்கப்பட்டு, இப்பொழுது வெறும் 8 இலட்சம் என்று குறைந்துள்ளதாகத் தெரிகிறதே; இளைஞர்களுக்கு எதிர்கால நம்பிக்கையூட்டக் கூடியவகையில், வேலைவாய்ப்பை அதிகரிக்க சிறப்புக் கூட்டம் கூட்டாதது ஏன்?

தமிழ்நாட்டில் கடந்த 9 மாதங்களில் தற்கொலைகளும், கொலைகளும் மதமாற்ற நிகழ்வுகளும் அதிகரித்து, சமூகச் சீரற்ற நிலை உருவாகியிருக்கிறதே, அதைத் தடுப்பதற்கு சட்டமன்ற சிறப்புக் கூட்டங்களை நடத்தாதது ஏன்?

இவைபோன்ற எண்ணற்றப் பிரச்சினைகள் தமிழக மக்கள் முன்னால் இருக்க, அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, நீட் தேர்வை மட்டும் வைத்து தொடர்ந்து அரசியல் செய்வது எந்தவிதத்தில் நியாயம்?

எத்தனை முறை தீர்மானம் நிறைவேற்றினாலும், அதனுடைய பதில் ஒன்றாகத் தான் இருக்கப் போகிறது என்பது தெரிந்தபிறகும், மீண்டும் மீண்டும் இதே பல்லவியைப் பாடுவது பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நியாயமாகுமா?

அரசியல், சமூக எதார்த்தத்தை தயவு கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள். எந்தவொரு கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்களும் நீட் தேர்வால் பின்தங்கி விடவில்லை.

ஒப்பீட்டளவில் ஒருவேளை அவர்கள் சிலசில சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்றால், தமிழகத்தில் ஏற்கெனவே வலுப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை மேலும் வலுவாக்கிடவும், தமிழக மாணவர்களின் பங்களிப்பை அகில இந்திய அளவிலும் அதிகரிக்க, மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளை அளிக்கவும் முயற்சி செய்யுங்கள்.

மீண்டும் 8-ஆம் தேதி ஒரு சட்டமன்றக் கூட்டம், தீர்மானம், ஆளுநர் மீது பாய்ச்சல் என்பதெல்லாம் பொதுமக்கள் மத்தியில் அலுப்பையும், சலிப்பையுமே உருவாக்கும்;

உங்களை அரசியல் ரீதியாக அந்நியப்படவும் வைக்கும்; அது உங்களுடைய அரசியல் தோல்விகளை மறைக்க ஆளுநரையே ஆயுதமாகவும் கேடயமாகவும் பயன்படுத்தும் யுக்தி என்பதையே வெட்டவெளிச்சமாக்கும். எனவே அந்த பொறுப்பற்ற நடவடிக்கையை கைவிடுங்கள்.

சில நேரங்களில் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போகலாம். அந்த விதத்தில், திமுகவும் அதனுடைய தோழமைக் கட்சிகளும் நீட் தேர்வு குறித்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாத தோல்வியை ஒப்புக் கொண்டு அடுத்தகட்டத்திற்கு நகருங்கள்.

தமிழக மக்களுடைய எத்தனையோ வாழ்வாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள். தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் உள்ள தங்களுக்கும் தங்களது தோழமைக் கட்சியினர் அனைவருக்கும் இதை ஒரு பொது வேண்டுகோளாகவே முன்வைக்கிறேன்.

அரசியலுக்கு ஆளுநரை ஆயுதமாகவும் கேடயமாகவும் பயன்படுத்தாதீர்கள்!

நீட் தேர்வு குறித்து மீண்டுமொரு சட்டமன்றத் தீர்மானம் தேவையற்றது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here