நீட் தேர்வால் கட்டணக் கொள்ளை தடுக்கப்பட்டுள்ளது-வானதி சீனிவாசன்

தமிழக அரசு நீட்தேர்வுக்கு எதிராக நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் நீட் குறித்த விரிவான அறிக்கை:

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வினால் ‘சமூக நீதி’ பாதிக்கப்படுவதாக ஆளும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், இதில் துளியும் உண்மை இல்லை. சமூக நீதி என்பது இட ஒதுக்கீடு சரியான முறையில் அமல்படுத்தப் படுவதுதான். நீட் தேர்வினால் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகும் 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. அவர்களுக்குரிய மருத்துவ இடங்களை அவர்களே பெற்று வருகின்றனர்.

அகில இந்திய தொகுப்பு மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை கடந்த 2021 ஜூலை 29 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த 27 சதவீத OBC இட ஒதிக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் நேற்று (ஜனவரி 7) தீர்ப்பளித்துள்ளது. எனவே நீட் தேர்வினால் சமூக நீதிக்கு எள் முனையளவும் பாதிப்பு இல்லை.

தமிழ் மொழியிலும் நீட் தேர்வு எழுதலாம்:

நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட புதிதில் ஒரு சில ஆண்டுகள் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது உண்மைதான். ஆங்கிலம், இந்தி மட்டுமே தேர்வு மொழியாக இருந்தது, 12 ஆண்டுகளாக தமிழகத்தில் பாடத்திட்டங்கள் மாற்றப்படாதது உள்ளிட்ட காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்பட்டது. இதனை உணர்ந்த மத்திய பாஜக அரசு, நீட் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் எழுதலாம் என்று வாய்ப்பு வழங்கியது. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. அதன்பிறகு கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வில் தேசிய சராசரி விகிதத்தைவிட தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

நீட் தேர்வால் பயன்பெற்ற கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள்

நீட் தேர்வினால் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் மிக கடுமையாக பாதிக்கப்படுவதாக நீட்தேர்வு எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், இந்த குற்றச்சாட்டிலும் துளியும் உண்மை இல்லை. 2006 முதல் 2016 வரை 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நுழைவுத்தேர்வு இல்லாமல் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அப்போது ஆண்டுக்கு சராசரியாக 30 முதல் 40 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தனர். நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு இதனை உணர்ந்த கடந்த அதிமுக அரசு, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது இதன் மூலம் கடந்த ஆண்டில் மட்டும் 220 க்கும் அதிகமான அரசுப் பள்ளி மாணவர்கள் அதாவது கிராமப்புற, ஏழை மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர். எனவே, நீட் தேர்வால் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.

புதிய மருத்துவக் கல்லூரிகள்:

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் ஓராண்டில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கான மொத்த நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசு வழங்குகிறது. மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசு ஏற்கிறது. இந்த 11 புதிய மருத்துவ கல்லூரிகளைதான் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார். இது தவிர 6 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த 17 புதிய மருத்துவ கல்லூரிகள் மூலம் அகில இந்திய அளவில் 12 சதவீத மருத்துவ இடங்களை தமிழகம் பெறுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு இருப்பதால் கூடுதல் மருத்துவ இடங்கள் மூலம் மருத்துவ படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்.

நீட் தேவை கொண்டு வந்த காங்கிரஸ் -திமுக கூட்டணி அரசு

கடந்த 2013-ம் ஆண்டு மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான், நீட் தேர்வை கொண்டு வந்தது. உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் மேல்முறையீடு செய்து நீட் தேர்வை உறுதிப்படுத்தியது திமுக அங்கம் வகித்த மத்திய அரசுதான். ஆனால் இதற்கான தார்மீக பொறுப்பை ஏற்க என்று காங்கிரசும் திமுகவும் மறுக்கின்றன. இந்த உண்மைகளை மக்கள் நன்கறிவார்கள்.

சரியான தரவுகளை முன்வைக்காத நீதிபதி ஏ.கே. ராஜன் கமிட்டி அறிக்கை:

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் நீட் தேர்வு பற்றி அறிக்கை அளிக்க ஒரு கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி நடுநிலையோடு தரவுகளை ஆய்வு செய்தும், நீட் தேர்வின் சாதக, பாதகங்களை சரியான முறையில் ஆய்வு செய்தும் அறிக்கை அளிக்கவில்லை. நீட் தேர்வு வேண்டாம் என்ற திமுக அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக, அதற்கேற்ற தரவுகளை மட்டும் வைத்துக் கொண்டு இந்த கமிட்டி அறிக்கை அளித்துள்ளது. உதாரணமாக தமிழகத்தில் 99 சதவீத மாணவர்கள் பயிற்சி மையங்களில் படித்துதான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று இந்த கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கான தரவுகள் என்ன என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பிய போது, அதற்கு எந்த தரவுகளும் இல்லை என்று நீதிபதி ஏ.கே. ராஜன் கமிட்டி பதிலளித்துள்ளது. இதன் மூலம் இந்த கமிட்டி, திமுக அரசின் விருப்பத்தை மட்டுமே நிறைவேற்றி இருப்பது தெளிவாகிறது.

வெள்ளை அறிக்கை வேண்டும்

தமிழகத்தில் அரசியல் பின்புலம் கொண்டவர்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகள் எத்தனை? நீட் தேர்வுக்கு முன்பாக 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றபோது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எவ்வளவு கட்டணம், எவ்வளவு நன்கொடை வசூலிக்கப்பட்டது? நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு எவ்வளவு கட்டணம் வசூலிக்க படுகிறது? 2006 முதல் 2016 வரை 10 ஆண்டுகளில் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றபோது மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? 7.5 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த பிறகு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்பது போன்ற விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் வெள்ளை அறிக்கை வெளியிட திமுக அரசு மறுத்து வருகிறது. உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உண்மை என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை உடனே தொடங்க வேண்டும்:

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே நாடு முழுதும் நீட்தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வு என்பது மத்திய பாஜக அரசின் செயல் திட்டம் அல்ல. இது திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் திட்டம். நீட் தேர்வால் முதல் இரண்டு ஆண்டுகள் பிரச்சினைகளை சந்தித்த தமிழக மாணவர்கள், இப்போது தேசிய சராசரியை விட அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். எந்தவித பயிற்சி வகுப்புக்கும் செல்லாமலேயே பழங்குடியின மாணவர்கள் கூட நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அதாவது கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்ற பாதுகாப்பு உள்ளது.

நீட் தேர்வால் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.அவர்களால் தங்கள் விருப்பத்திற்கு முன்புபோல கட்டணக் கொள்ளை அடிக்க முடியவில்லை. தனியார் மருத்துவ கல்லூரி நடத்துபவர்களில் பலர் அரசியல்வாதிகளாக இருப்பதால் அவர்கள் தங்களது பலத்தை நீட் தேர்வு எதிர்ப்புப் பிரச்சாரத்தில் காட்டி வருகின்றனர். இதனால், மாணவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நீட் தேர்வு வேண்டாம் என்ற முடிவையும், நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சாரத்தையும் கைவிட்டு, வரும் ஆண்டில் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற தமிழக அரசு உடனடியாக நீட் பயிற்சி வகுப்புகளை தொடங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் கட்டமைப்புகளை வலுப்படுத்தி, ஆசிரியர்களுக்கும் உரிய பயிற்சிகளை அளிக்க வேண்டும். அப்போதுதான் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கையும், தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் இன்னும் அதிகரிக்கும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அரசியல் ஆதாயங்களுக்காக மாணவர்களை தூண்டி விட வேண்டாம் என்று நீட் தேர்வை ஆதரிக்கும் அனைத்து கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here