இதெல்லாம் ஏற்கனவே தெரிந்ததுதானே…புதுசா வேற ஏதாச்சும் சொல்லுங்க…

தமிழக அமைச்சர்களில் ரொம்பவே பரபரப்பாக இருப்பவர் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். ஒன்றியம், மத்தியம் என்று பரபரப்பாகவே ஓடிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தின் நிதி நிலை குறித்து வௌ்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பதவியேற்ற சில நாட்களில் அதிரடியான அறிவிப்பை கொடுத்தார்.

கடனில் தத்தளிக்கிறது தமிழக அரசு

தமிழகத்தின் பட்ஜெட் எப்போதும் பற்றாக்குறை பட்ஜெட்தான். உபரி பட்ஜெட் என்று கடந்த 20 ஆண்டுகளில் ஏதும் இல்லை. அதேநேரத்தில், தமிழகத்தில் எப்போது இலவசத் திட்டங்களை அறிவித்தார்களோ, அப்போதே கஜனாவை துார்வாரும் பணிகள் தொடங்கிவிட்டது எனலாம். வரும் வருமானம் எல்லாம் அரசு ஊழியர்களின் சம்பளம், நலத்திட்டப் பணிகளுக்கு சரியாகப்போனது. இதனால், திமுக அரசு முதன்முதலாக அறிவித்த இலவச திட்டங்கள், குறிப்பாக இலவச டிவி உட்பட பல திட்டங்களுக்கு மெல்ல மெல்ல கடன் வாங்கும் படலம் தொடங்கியது. அப்படியே இந்தத் திட்டம் அதிமுக ஆட்சியில் மிக்ஸி, கிரைண்டர் என்று சுழத் தொடங்கியது. கூடவே பெண்களுக்கான தாலிக்கு தங்கம், திருமண உதவித் திட்டம் என்று வட்டம் பெரிதானதால், தமிழக அரசின் கடனும் கொஞ்சம் அதிகமாகவே வளர்ந்துவிட்டது எனலாம்.
ஏற்கனவே, 5லட்சம் கோடி ரூபாய் கடனில் இருந்த தமிழக அரசுக்கு, கடந்த மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த அப்போதைய நிதி அமைச்சர், ‘’மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்ற கூடுதலாக 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க வேண்டியிருக்கும்’’ என்றார். இந்தக் கடனால், அரசின் மொத்தக் கடன் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியை எட்டும் என்பதை சொல்லாமல் தெரிந்து கொள்ளலாம்.

தமிழக அரசின் பட்டஜெட் எவ்வளவு?

தமிழக அரசின் பட்ஜெட், எப்போதும் பற்றாக்குறை பட்ஜெட் என்றாலும், எப்போது, எப்படி பற்றாக்குறை ஏற்படுகிறது? என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. உதாரணமாக, 2019 –20ம் நிதியாண்டில் தமிழக அரசின் பட்ஜெட் நிலவரம் இதுதான்:

 • மாநில ஜிஎஸ்டி வருமானம் ரூ. 96 ஆயிரத்து 177 கோடியே 14 லட்சம்
 • டாஸ்மாக் மதுபானங்கள் மீதான எக்சைஸ் வரி: ரூ. 7 ஆயிரத்து 262 கோடியே 33 லட்சம் ரூபாய்.
 • பத்திரப்பதிவு வழியாக கிடைக்கும் வருமானம் ரூ.13 ஆயிரத்து 122 கோடியே 81 லட்சம்
 • வாகன பதிவு வழியாக கிடைக்கும் தொகை ரூ. 6 ஆயிரத்து 510 கோடியே 70 லட்சம் ரூபாயாகும்.
  *மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்கும் பங்கு: ரூ. 30 ஆயிரத்து 638 கோடியே 87 லட்சம்
 • தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களுக்கு மத்திய அரசின் பங்குத் தொகை ரூ. 25 ஆயிரத்து 602 கோடியே 74 லட்சம்.
 • இதுதவிர, பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விற்பனை மீதான மாநில அரசு வரிகளும் சேர்ந்து மொத்தம் 2 லட்சம் கோடி ரூபாயை நெருங்கும்.
  அரசுக்கான முக்கிய செலவுகள்
 • அனைத்து வகையான மானியங்களுக்கும் செலவு செய்யும் தொகை: ரூ. 82 ஆயிரத்து 673 கோடியே 32 லட்சம் ரூபாய். (இலவசம் மற்றும் சமூக நலத் திட்டங்களும் இதில் அடங்கும்)
 • அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பென்ஷன் ரூ. 90 ஆயிரம் கோடி
 • மாநில அரசு கடன்கள் மீதான வட்டியாக செலுத்தும் தொகை 33 ஆயிரத்து 226 கோடி ரூபாய்.
 • அரசு நிறுவனஙகள் பராமரிப்புத் தொகை 11 ஆயிரம் கோடி ரூபாய்.
  சராசரியாக பற்றாக்குறை பட்ஜெட்டின் மதிப்பு 14 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்திருக்கிறது. இந்த மதிப்பீடு ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்குமே தவிர, எப்போதும் குறைந்திட வாய்ப்பே இல்லை. அப்படியானால், இப்போதைய நிலையை யோசித்துப் பாருங்கள்.

எல்லா துறைகளிலும் ஓட்டைதான்
தமிழக அரசின் நிதி நிலை குறித்து வௌ்ளை அறிக்கை வெளியிட உள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிக் கொண்டிருக்கிறார். நிதித்துறை செயலகத்தில் உள்ள கோப்புகளை, அதன் அதிகாரிகள் துாசி தட்டினால், ஒரு வாரத்தில் வௌ்ளை அறிக்கை தயாராகிவிடும். இதெல்லாம் மிக அதிகபட்ச காலகட்டம் ஆகும். துல்லியமாக செயல்பட்டால், 2 நாட்களில் தமிழகத்தின் வரவு, செலவு, நிதி மூலகங்கள் குறித்த தகவல்களை மக்களுக்கு கொடுக்கலாம். காரணம், என்னவென்றால், எல்லாம் ஒவ்வொரு நாளும் அப்டேட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தகவல்தான். சின்ன உதாரணம் சொல்லட்டுமா? தமிழகத்தில் கரோனா ஊரடங்குக்குப் பின்னர், டாஸ்மாக் திறக்கப்பட்ட 2 நாட்களில் 300 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானதாக செய்திகள் வந்தது. எப்படி இது சாத்தியம், முதல்நாள் விற்பனை அப்டேட். அவ்வளவுதான். இதைத்தான், தமிழகத்தின் நிதித்துறையில் உள்ள கீழ்நிலை அதிகாரிகள் தொடங்கி, இணை செயலர்கள் வரை அப்டேட் செய்து கொண்டிருக்கின்றனர். இந்தத் தகவல்களைப் பெறுவதில் பெரிய சிக்கல் ஏதும் இருக்காது என்பதே உண்மை.

தமிழக அரசின் பிரதான துறைகளாக இருக்கும் மின்துறை, போக்குவரத்துத்துறை, ஆவின், கூட்டுறவு (வலுவானா நிதி ஆதாரம் உள்ளதாக கூறுகிறார் மாஜி அமைச்சர் செல்லுார் ராஜூ) என்று ஒவ்வொரு துறையிலும் நிறையவே வருமானச் சிக்கல்கள் உள்ளன. இவை எல்லாம் செலவினத் துறைகள். அதனால், அரசால் இவற்றுக்கு செலவினங்களை பற்றி மட்டுமே பேச முடியும்.

இதில், போக்குவரத்து, கூட்டுறவு என்று 2 துறைகள் தனி அமைப்பாக, அரசு கட்டுப்பாட்டில் இயங்கினாலும், கடும் நஷ்டத்தில்தான் உள்ளன. ஏற்கனவே, திமுக ஆட்சியில் கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடியானபோது அசல் மற்றும் வட்டி மட்டும் கொடுத்தனர். அபராதவட்டியை கணணில் காண்பிக்கவில்லை. ஆனால், கூட்டுறவுத்துறையின் முக்கிய வருமானமே அபராத வட்டியால் கிடைக்கும் தொகைதான். இதனால் விழுந்த அடியில் இருந்து, கூட்டுறவு எழுந்து நிற்க பல ஆண்டுகளானது. போக்குவரத்துத்துறையில், மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் திட்டம் அறிவித்தபோது, இதற்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆனால், நிலுவைத் தொகை அதிகரித்ததே தவிர, குறையவில்லை. இப்போதைய நிலையில், வண்டியோடி வசூலானால்தான் சம்பளம், டீசல் செலவு என்ற நிலைமை உள்ளது.

கை கொடுக்கும் டாஸ்மாக், பெட்ரோல் விற்பனை

இப்படி அரசின் முக்கியமான துறைகள் எல்லாம் செலவினங்களாக இருக்க, அரசின் கை செலவுக்கு கை கொடுக்கும் 2 விஷயங்கள் கொஞ்சம் உறுத்திக் கொண்டே இருந்தது. இதில், முக்கியமானது டாஸ்மாக். ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான விற்பனையால், அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. அதேநேரத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீதான அன்றாட விற்பனையால் கிடைக்கும் தொகையும் அரசின் கஜானாவுக்கு நேரடியாகவே செல்கிறது. இந்த வகையில், இந்த 2 விற்பனையும் அரசின் தினசரி பாக்கெட் மணிக்கான செலவுகள் போன்றது. பாக்கெட் மணியை பாதிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் அரசு விட்டுக் கொடுக்குமா என்ன? அதனால்தான் டாஸ்மாக்கை திறந்து, விற்பனையை ஜோராக தொடங்கிவிட்டனர். இதுதான் உண்மையும் கூட.

அதேநேரத்தில் தேர்தல் நேரத்தில் திமுகவின் அதிரடியான வாக்குறுதியாக இருந்தது. பெட்ரோல் மீதான விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறைப்போம். டீசல் மீதான விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை குறைப்போம் என்று அறிவித்தனர். ஆனால், சமீபத்திய பேட்டியில் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். ‘‘பெட்ரோல், டீசல் மீதான வரியை இப்போதைக்கு குறைக்கும் வாய்ப்பில்லை’’ என்று பதிவு செய்துள்ளார்.
இதை அமைச்சர் சொல்வார் என்று மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம். காரணம், அரசின் நிதி நிலைமை என்னவென்று, கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியும். ஆனாலும், இதுபோன்ற சாத்தியங்கள் உடனடியாக அமலுக்கு வர வாய்ப்பில்லை என்று பலருக்கும் தெரியும். தெரிந்தும், திமுகவை ஆட்சியில் அமர்த்தியது, மக்கள் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான். ஆனால், அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் ஏதும் நிர்ணயம் செய்யவில்லை என்பது அவர்களது சாமர்த்தியம்.
வாயால் வடை சுட்டே வளர்ந்த இயக்கத்துக்கு, வார்த்தை ஜாலங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here