பற்றாக்குறை பரிதாபங்கள்..! கச்சா எண்ணை மட்டுமல்ல, பருப்பும், சமையல் எண்ணையும்தான்

இந்தியாவின் இப்போதை ஹாட் டாபிக் பேச்சு பொருளாக பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை உயர்வுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. சொந்தமாக இரு சக்கர வாகனங்கள் வைத்துள்ள ஒவ்வொருவரையும், இந்த எரிபொருள் விலை உயர்வு கையைக் கடிக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. மக்களின் நிலை உணர்ந்து, எரிபொருள் விலையேற்றத்துக்கு அரசு கடிவாளம் போட வேண்டும் என்பதே, ஒவ்வொரு குடிமகனின் பெரும் எதிர் பார்ப்பாக உள்ளது.

 • கச்சா எண்ணை நிலை இதுதான்

  ஆனால், பையில் இருந்தால்தானே, கையில் எடுத்து செலவு செய்ய முடியும்? உண்மையில் நாம் நுாறு லிட்டர் பெட்ரோலை தினம் பயன்படுத்தினால், இதில் 80 லிட்டர் பெட்ரோல் இறக்குமதியால் மட்டுமே நமக்குக் கிடைக்கிறது. அதாவது, நமது எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியன், பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் சேர்ந்து 20 லிட்டர் அளவுக்குத்தான் உள்நாட்டில் உற்பத்தி செய்கின்றன.
  காரணம், நம்மிடம் சொந்தமாக எண்ணை வயல்கள் இல்லை. பெரும் அளவில் எண்ணை வயல்களைக் கொண்டிருக்கும் ஓபெக் நாடுகள், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நிலைமை வேறாக உள்ளது. என்னதான், ரஷ்யாவும், அமெரிக்காவும் போட்டிபோட்டு கச்சா எண்ணை உற்பத்தி செய்தாலும், அது ஓபெக் எனப்படும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு செய்யும் உற்பத்திக்கு ஈடாகாது. இந்த அமைப்பில் உள்ள வெனிசுலா, அல்ஜீரியா, அங்கோலா, காங்கோ, ஈக்வடார், ஈரான், ஈராக், குவைத், சவுதி, ஐக்கிய அரபு எமிரேட், நைஜரீயா ஆகிய நாடுகள் சர்வதேச கச்சா எண்ணை சந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
  இந்த நாடுகளை நம்பித்தான், நமது கச்சா எண்ணை இறக்குமதி உள்ளது. 2011ல் மூன்றரை லட்சம் கோடி ரூபாயாக இருந்த கச்சா எண்ணை இறக்குமதி, இப்போது ஆண்டுக்கு 8 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில், ஓபெக் உறுப்பு நாடுகளான எமிரேட்டுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே கச்சா எண்ணை உற்பத்தி மற்றும் பங்களிப்பு குறித்த பஞ்சாயத்து இப்போது உச்சத்தில் உள்ளது. ஓபெக் அமைப்பு தன் உற்பத்தியை அதிகரித்து, சர்வதேச சந்தைக்கு வழங்கினால் மட்டுமே, உலக அளவில் கச்சா எண்ணை விலை சிறிதாவது குறையும். அதுவரை விலை குறைப்புக்கு வாய்ப்பே இல்லை. அல்லது நம் சொந்த தயாரிப்புக்காக, நாமே பெரும் அளவில் கச்சா எண்ணையை உற்பத்தி செய்தால் எதுவும் சாத்தியம்.
  சர்வதேச சந்தையில், கந்தகத் தன்மை குறைந்த பிரென்ட் ரக கச்சா எண்ணை ஒரு பேரல் 78 டாலர்களை எட்டிவிட்டது.சிறிது கந்தகத் தன்மை கொண்ட டபிள்யூடிஐ கச்சா எண்ணை விலை76.5 டாலர்களாக உள்ளது. சொந்த சரக்கு இல்லாத நிலையில், உலகின் மிகப் பெரிய வாகன விற்பனை சந்தையான நாம், ஓபெக் உறுப்பு நாடுகளின் கச்சா எண்ணையை நம்பியே காலத்தையும், நம் பொருளாதாரத்தையும் ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.

இதுதான் சமையல் எண்ணையின் உண்மையான நிலை

உலகில் கச்சா எண்ணை இறக்குமதி செய்யும் நாடுகளில், 3ம் இடத்தில் உள்ள இந்தியா, சமையல் எண்ணை இறக்குமதி செய்யும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பதில் இருந்தே பல சிக்கல்களைத் தெரியந்து கொள்ளலாம். ஆமாம், நமது மொத்த நாட்டின் பயன்பாட்டுக்கும் தேவையான சமையல் எண்ணை பயன்பாட்டுக்காக, மூன்றில் 2 பங்கு எண்ணையை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்.
இந்த வகையில் நமது மண்ணின் பாரம்பரிய எண்ணைகளான கடலை எண்ணை, நல்லெண்ணை, தேங்காய் எண்ணை, கடுகு எண்ணை ஆகியவற்றைத்தான் அதிகளவு பயன்படுத்திக் கொண்டிருந்தோம். இப்போது, சமையல் எண்ணை பட்டியலில் பாமாயில், சூரிய காந்தி எண்ணை, சோயா எண்ணை, அரிசித் தவிடு எண்ணை உட்பட பல எண்ணைகள் சேர்ந்துள்ளன.
இந்த வகையில், இந்தியா ஒவ்வொரு ஆண்டும் இரண்டரை கோடிக்கும் அதிகமான மெட்ரிக் டன் அளவிலான சமையல் எண்ணையை நுகர்வுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இந்தியரும் சராசரியாக ஆண்டுக்கு 15 கிலோவுக்கும் அதிகமான சமையல் எண்ணையை நுகர்வுக்கு பயன்படுத்துகிறார். பயன்படுத்தும் அளவுக்கு உற்பத்தி இருக்கிறதா?

 • அதிக சாகுபடி, குறைந்த உற்பத்தி, பெரும் நுகர்வு
  இந்தியாவில் நிலக்கடலை, கடுகு, சோயா, எள் போன்ற எண்ணை வித்துக்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் இரண்டரை கோடி எக்டேர் நிலங்களில் எண்ணை வித்துக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் வழியாக 3 கோடியே 20 லட்சம் டன் எண்ணை வித்துக்கள் அறுவடையாகிறது. ஆனால், உற்பத்தியாகும் எண்ணை என்னவோ 85 லட்சம் டன் எண்ணைதான். இந்த 85 லட்சம் டன் எண்ணையிலும் சோயாபீன், கடுகு, நிலக்கடடலை ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன.
  மிகவும் துல்லியமாக சொல்வது என்றால் 2 கோடியே 60 லட்சம் டன் சமையல் எண்ணை இந்தியாவின் நுகர்வுக்கு பயன்படும் நிலையில், 85 லட்சம் டன் சமையல் எண்ணை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது, நம்மிடம் உள்ள மிகப் பெரிய பற்றாக்குறையை வெளிப்படுத்துகிறது. அதாவது, 68 சதவீத சமையல் எண்ணை பற்றாக்குறையாக உள்ளது. இவற்றை ஈடு செய்வதற்காகவே, பாமாயில், சூரிய காந்தி, சோயா எண்ணை ஆகியவை அதிகளவு இறக்குமதியாகிறது. இதற்காக ஆண்டுக்கு 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை மத்திய அரசின் அன்னிய செலவாணி செலவாகிறது.

பாமாயில் அரசியல் இது
இந்தியா இறக்குமதி செய்யும் சமையல் எண்ணைகளில் அதிகப்படியான பங்களிப்பு செய்வது பாமாயில்தான். உதாரணமாக ஒரு கோடியே 50 லட்சம் டன் சமையல் எண்ணையை இறக்குமதி செய்தால், இதில், 65 சதவீதம் பாமாயில் ஆதிக்கம்தான். பாமாயில் ஒரு வளம் கொழிக்கும் எண்ணை வித்து என்பதால், இந்தோனேஷியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் அதிகளவு உற்பத்தி செய்து, இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கின்றன. இப்போது இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கச்சா பாமாயில் மீது 32 சதவீத வரியும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீது 41 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.
அதேநேரத்தில், இந்தியாவுக்கான தேவை அதிகம் என்றாலும், அதுவும் சர்வதேச நிலவரத்தை சார்ந்தே இருப்பது, நம்மில் பலருக்கும் பிடிபடாத ஒருவிஷயம். கரோனாவின் முதல் மற்றும் 2ம் அலை இந்தியாவை உலுக்கியதைப் போலவே, மலேசியா மற்றும் இந்தோனேஷியாவை உலுக்கின. இதனால் பனை எண்ணைத் தொழில் அங்கு வீழ்ந்தது. அதாவது, பனை மரத்தில் காய்த்து தொங்கும் பாமாயில் எண்ணை விதைகளை அறுவடை செய்வதற்கு ஆட்கள் இல்லை. குறைந்தளவு பணியாளர்களை கொண்டு, சர்வதேச சந்தைக்கு அதிகளவில் எண்ணை உற்பத்தியை அனுப்ப முடியவில்லை. இதனால், ஏற்பட்ட விலைபோட்டி, மற்ற நாடுகளைவிட இந்தியாவை கொஞ்சம் அதிகமாகவே பாதித்தது.
சர்வதேச அளவில் ஏற்பட்ட பற்றாக்குறை உற்பத்தி, சமையல் எண்ணை தட்டுப்பாட்டை உருவாக்கியது. இதனால், இந்தியாவுக்கு போதிய அளவு பாமாயில் கிடைக்காத நிலையில், உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் எண்ணையை அதிகளவு பயன்படுத்தத் தொடங்கினர். இதனால், பாமாயிலுடன் சேர்ந்து, பிற சமையல் எண்ணைகளின் விலையையும் உயர்த்திவிட்டது. இப்போது, பாமாயி்ல் உற்பத்தி செய்யும் நாடுகளில், உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளதால் பாமாயில், சூரிய காந்தி, சோயா எண்ணை விலை ஆகியவை ஒரு டன்னுக்கு 110 டாலர் வரை விலை குறையத் தொடங்கியுள்ளன. இதனால், உள்நாட்டில் இப்போது சமையல் எண்ணை விலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.
பாடாய் படுத்தும் பருப்பு விலை
இந்தியாவில் சமையலுக்கு பயன்படும் பருப்பு விலைகளின் புதிய உச்சம் என்றால், அது 2013–14ம் ஆண்டுகளில்தான் எனலாம். முன் எப்போதும் இல்லாத வகையில் அந்த ஆண்டில் துவரம்பருப்பு கிலோ 200 ரூபாயை எட்டியது. உளுந்து, சிறுபருப்பு, பட்டாணிப் பருப்பு, சுண்டல், தட்டைப் பயிறு ஆகியவற்றின் விலையும் ஏறக்குறைய இதே அளவில் ஓடிக் கொண்டிருந்தது. காரணம், பருப்புகளை பதுக்கி,களளச் சந்தையில் விலையேற்றத்தை கொண்டு வந்த மாபியாக்களின் செயல்கள்தான்.
இதன் பின்னர் ஜிஎஸ்டி வந்ததும், பருப்புகளை விற்பதும், வாங்குவதும் கணக்கில் கொண்டு வரப்பட்டது. இதிலும் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும், பருப்புகளின் விலையில் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்று சொல்லலாம். இந்தியாவில் பருப்பு விளைச்சல் மாநிலங்கள் என்றால், குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் முன்னணியில் வரும். இதன் பின்னர் மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் சிறிய அளவில் பருப்பு விளைகிறது.
காரணம், இந்தியாவில் பருப்பு விளைச்சலுக்கும், நுகர்வுக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடுதான். ஆண்டுக்கு 2 கோடியே 25 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகளை இந்தியா பயன்படுத்துகிறது. இத்தனைக்கும் உலகின் மிகப் பெரிய பருப்பு உற்பத்தியாளர் நாம்தான். உலக பருப்பு உற்பத்தியில் 27 சதவீதம் நம்மிடம் உள்ளது. உலகின் மிகப் பெரிய பருப்பு நுகர்வோரும் நாமதான். 27 முதல் 30 சதவீதம் பருப்புகளை நுகர்ந்து கொண்டிருக்கிறோம். பற்றாக்குறையை சரி கட்டுவதற்காக, நம் பயன்பாட்டுக்கு 15 சதவீதம் பருப்புகளை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்.
மியான்மர், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா மற்றும் ரஸ்யா உட்பட பல நாடுகளும் இந்தியாவுக்கு மிகப் பெரிய அளவில் பருப்பு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கின்றன. இந்த வகையில், உளுந்து, துவரம்பருப்பு, சோயா, பட்டாணிப்பருப்பு உட்பட 30 லட்சம் டன்னுக்கும் அதிகமான பருப்புகளை கடந்த ஆண்டில் நாம் இறக்குமதி செய்துள்ளோம். இந்த வகையில் ஆண்டுக்கு 10 ஆயிரத்து 500 கோடி ரூபாயை செலவிட்டக் கொண்டிருக்கிறோம்.
அதேநேரத்தில், நமக்கு பருப்பு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சந்தை விலை, அந்நாட்டு அரசுகளின் வரிவிதிப்பு, சர்வதேச போக்குவரத்து செலவினங்கள் ஆகியவற்றைப் பொருத்தே, நமக்கான இறக்குமதி விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த இறக்குமதி விலையும், உள்நாட்டில் பருப்பு விளைச்சல் செய்யும் விவசாயிகளின் உற்பத்தி விலைகளை பாதிக்கக் கூடாது என்ற கண்காணிப்பையும் மேற் கொள்ள வேண்டியுள்ளது.
கரோனா முதல் மற்றும் 2ம் அலையின்போது, நம் நாட்டில் பருப்பு வினியோம் பாதிக்கப்பட்டதுடன், பிற நாடுகளில் இருந்து நமக்கு வர வேண்டிய இறக்குமதி பருப்புகளும் வரவில்லை என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். இதனால், உள்நாட்டில் பருப்பு வகைகள் விலை சில்லறை விற்பனை விலையில் கிலோவுக்கு 140 ரூபாய் வரைச் சென்றது. கரோனா காலத்தில் இந்த விலை உயர்வு அனைவரையும் பாதித்தது என்பதே உண்மை.
அதேநேரத்தில் பருப்பு உற்பத்தி, இறக்குமதியாளர்கள், மில்லர்கள், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு மத்திய அரசு கடிவாளம் போட்டதால், இப்போது, பருப்பு வகைகள் விலை தலைநகர் டில்லியில் கிலோ 110 ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய இதே விலைதான், நாட்டின் பல பகுதிகளிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. புதிய பருப்பு வரத்துகள் வரத் தொடங்கினால், விலை இன்னும் குறையும் என்கின்றனர் பருப்பு மொத்த விற்பனையாளர்கள்.

பருப்பு இறக்குமதிக்கு பிற நாடுகளை நம்பிக் கொண்டிருக்கக் கூடாது என்று மோடி தலைமையிலான அரசு விரும்புகிறது. இதனால் உள்நாட்டில் பருப்பு சாகுபடி செய்யும் பரப்பளவை மெல்ல மெல்ல விரிவாக்கிக் கொண்டிருக்கிறது. மேலும், பருப்பு விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் உளுந்து, துவரை உட்பட பல பருப்புகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இதனால், 2016ம் ஆண்டில் 25 ஆயிரத்து 600 கோடி ரூபாயாக இருந்த பருப்பு இறக்குமதியின் மதிப்பு, இப்போது 8 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. சுயசார்பு முறையில் பருப்பு விளைச்சல் அதிகரிக்கும்போது, பருப்பு இறக்குமதிக்கான கதவுகள் மூடப்படும். உள்நாட்டில் நியாயமான விலையில், பருப்பு விற்பனைக்கு வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here