இந்தியாவின் இப்போதைய மிகப் பெரிய விவாதப்பொருள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான விலை உயர்வுதான். பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைக் கடந்த நிலையில், டீசல் விலை லிட்டருக்கு 94 ரூபாயைக் கடந்து கொண்டிருக்கிறது. பெட்ரோல் விற்பனையைவிட, டீசல் விற்பனை மீதுதான் மத்திய, மாநில அரசுகளுக்கு வரி வருமானம் கிடைக்கிறது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணையின் விலைக்குத் தகுந்தார்போல், உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான விற்பனை விலை, தினமும் மாற்றி அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 2013ம் ஆண்டு முதல், இந்த நடைமுறைகள் இருந்தாலும், மிகச் சமீபத்திய நாட்களில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி, மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்போம் என்று சொன்ன திமுக, ‘‘இதெல்லாம் எப்போது இருந்து அமல்படுத்துவோம்னு தேதி போட்டு கொடுத்திருக்கோமா?’’ என்று கதையளக்கத் தொடங்கிவிட்டது. கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை மரியாதைக் குறைவாக பேசுவதும் அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில், மத்திய அரசு தான் வசூலிக்கும் பெட்ரோல், டீசல் விற்பனை மீதான வரித் தொகையில், மாநில அரசுகளுக்கு மிகச் சிறிய அளவில் பங்கு கொடுத்துவிட்டு, பெரும் அளவில் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. இந்தப் பணத்தில்தான் மோடி புதிய வீடு கட்டிக் கொண்டிருக்கிறார் என்று கூறினார், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். டில்லியில் புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டும் பணியைத்தான் நிதி அமைச்சர் இப்படி கூறினார் என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
இந்த உண்மை உங்களுக்காக…
நாட்டுக்கு வரி கொடுக்கும் குடி மகன் ஒவ்வொருவருக்கும், தாங்கள் கொடுக்கும் பணம் எப்படியெல்லாம் செலவாகிறது என்பீதைத் தெரிந்து கொள்ளும் உரிமை உண்டு. அரிசி, பருப்பில் இருந்து தினமும், உங்கள் வண்டிக்கு போடும் பெட்ரோல் வரை, உண்மைகளைத் தெரிந்து கொள்வது உங்கள் உரிமை. இதோ இந்த உங்கள் வரிப்பணத்தின் செலவிடு, உண்மை…. உங்களுக்காக நியூஸ்குரு, பிரத்யேகமாக வாங்கிய தகவல்கள் இவை.
ஜூன் 28ம் தேதி, தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் 12 காசாக உயர்ந்தது. அன்றைய நாளில்,வரி நிலவரங்கள் வருமாறு:
பெட்ரோல் :
- அடிப்படை விலை ரூ.39.45
- அடிப்படை எக்ஸ்சை வரி : ரூ.1.40
- கூடுதல் எக்சைஸ் வரி : ரூ.11.00
- வேளாண் கட்டமைப்பு வரி : ரூ.2.50
- சாலை கட்டமைப்பு (எக்சைஸ் வரி) : ரூ.18.00
- மத்திய அரசின் மொத்த வரி : ரூ.32.90
- தமிழக அரசின் வாட் வரி இல்லாமல் விலை : ரூ.72.35
- டிலே சார்ஜ் : ரூ. 0.37
- தமிழக அரசின் வாட் வரி : ரூ. 23.93
- இன்வாய்ஸ் வேறுபாடு மற்றும் விலை : ரூ.3.46
- எல்எப்ஆர் : ரூ. 0.44
- டீலர் மார்ஜின் : ரூ. 3.02
- கடைசி விற்பனை விலை : ரூ.100.12
டீசல் மீதான விற்பனை விலை
டீசல் :
- அடிப்படை விலை ரூ.41.92
- அடிப்படை எக்ஸ்சை வரி : ரூ.1.80
- கூடுதல் எக்சைஸ் வரி : ரூ.8.00
- வேளாண் கட்டமைப்பு வரி : ரூ.4.00
- சாலை கட்டமைப்பு (எக்சைஸ் வரி) : ரூ.18.00
- மத்திய அரசின் மொத்த வரி : ரூ.31.80
- தமிழக அரசின் வாட் வரி இல்லாமல் விலை : ரூ.73.72
- டிலே சார்ஜ் : ரூ. 0.37
- தமிழக அரசின் வாட் வரி : ரூ. 17.78
- இன்வாய்ஸ் வேறுபாடு மற்றும் விலை : ரூ.2.23
- எல்எப்ஆர் : ரூ. 0.36
- டீலர் மார்ஜின் : ரூ. 1.87
- கடைசி விற்பனை விலை : ரூ.94.10
முடிஞ்சதுங்களா? இதுதானுங்க நீங்க போடும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அடிப்படை விலையாகும். இந்த வகையில் மத்திய அரசு தான் வாங்கும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விபரங்களை பளிச் சென்று கூறிவிட்டது. ஆனால், தமிழக அரசு தான் வாங்கும் வாட் மீதான வரிக்கான விளக்கம் கொடுக்குமா? அல்லது வழக்கம் போல் வாயால் வடை சுட்டு, கல்லாக் கட்டிக் கொண்டிருக்குமா?
உங்கள் பணம் உங்களுக்கே!
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விற்பனை வழியாக மத்திய அரசு ஈட்டும் வருமானம்தான் ஆண்டுக்கு 72 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சிறு விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் 3 தவணைகளில் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 4 வழிச் சாலைக் கட்டமைப்பு, சாலை விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு உட்பட அனைத்து விதங்களிலும் செலவாகிக் கொண்டிருக்கிறது. தமிழகம் மட்டுமல்ல, நாடு முழுவதம் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் அத்தனை பணிகளுக்கும், உங்களைப்போல், என்னைப் போல் உள்ளவர்கள் கொடுக்கும் வரியும் ஒரு காரணம். இந்த வகையில் மத்திய அரசு தான் பெறும் வரிக்கு கணக்குத்தாக்கல் செய்து, தன் நிலைமையை உறுதிப்படுத்திவிட்டது.
மாநில அரசு?
தகவல் உதவி: மாநில பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பு