விஜய் மல்லையா, நிரவ்மோடி, மொஹூல் சோக்சி… அடிக்கடி கேட்டுப் பழக்கப்பட்டுவிட்டப் பெயர். காரணம், பொதுத்துறை வங்கிகளிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு, அதை திரும்பச் செலுத்தாமல் ஓட்டம்பிடித்தவர்கள். இந்த 3 பேருக்கும் ஒரு வகையில் மக்கள் நன்றி சொல்லியாக வேண்டும். காரணம், இந்த வர்த்தகப் புலிகள் செய்த பேங்க் தில்லுமுல்லு, மட்டுமல்ல, ஒட்டு மொத்தமாக நாட்டின் பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்கள் நிகழ்த்திய பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. பொதுத்துறை வங்கிகள், மக்களின் சேமிப்பு மற்றும் வைப்பு நிதியை அடிப்படையாகக் கொண்டே, பெரும் அளவில் வர்த்தகம் செய்து கொண்டிருக்கின்றன.
பெரிய நிறுவனங்களுக்கு மொத்தமாக கடன் கொடுத்தால், பெரிய அளவில், மொத்தமாக வட்டி கிடைக்கும் என்ற நப்பாசை, அரசியல்வாதிகளின் நெருக்கடி உட்பட பல காரணங்களால், பொதுத்துறை வங்கிகளில் பல 10 ஆண்டுகளாக, ஆயிரக் கணக்கான கோடி ரூபாயை, கடனாக அள்ளித்தட்டிக் கொண்டிருந்தன. ஆனால், கொடுத்த கடனை வசூலித்தனவா:? என்றால், அதுதான் இல்லை. எவ்வளவு கடன் கொடுத்தோம், எவ்வளவு நிலுவையில் அல்லது வராக்கடனாக உள்ளது என்று பெரு நிறுவனங்களுக்குத் தெரியவே இல்லை. ஆனால், வராக்கடன் அதிகரிக்கிறது. நடைமுறை செலவினங்களுக்கு நிதிவேண்டும் என்று பொதுத்துறை வங்கிகள் கெஞ்சின. இதனால், காங்கிரஸ் அரசு அவ்வப்போது பல ஆயிரம் கோடி நிதிகளை அள்ளிவிட்டது. இதுவும் பொதுமக்கள் பணம். ஆனால், திரும்ப வராது. இவ்வாறு வங்கிகளுக்கு வழங்கப்பட்ட பணம், மீண்டும் மீண்டும் தொழிற்துறை பண முதலைகள் வசம் சென்றது வருத்தமான விஷயம்.
- திவாலாகும் நிலையில் வங்கிகள்
வங்கிகளின் இந்த கண்ணாமூச்சு ஆட்டம், ஏறக்குறைய 2014 மே மாதம் வரை தொடர்ந்தது என்றே சொல்ல வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் நிதித்துறை பொறுப்பேற்ற, அமைச்சர் அருண்ஜெட்லி, இதுகுறித்து பிரதமர் மோடியுடன் கலந்துரையாடி, இந்தப் பிரச்னையை கையில் எடுக்கவேண்டும் என்றார்.
‘‘நாட்டின் அனைத்துப் பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகிகளும், வங்கிகளின் மொத்த வராக்கடனை பட்டியலிட வேண்டும். பட்டிலிடத் தவறினால், அந்தந்த வங்கிகளின் முன்னாள் / இன்னாள் நிர்வாகிகளே பொறுப்பு. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று மத்திய அரசு ஒரு காட்டமான அறிக்கையை கொடுத்தது. அவ்வளவுதான், நாட்டின் அனைத்து பொதுத்துறை வங்கிகளில் இருந்தும் வராக்கடன் பட்டியல்கள் வதவதவென வந்து குவியத் தொடங்கியது. அரசும், அனைத்து வங்கித்துறை ஊழியர்களும் கொஞ்சம் அதிர்ந்துதான் போனார்கள். - 8 லட்சம் கோடி ரூபாய்…?
காரணம், பொதுத்துறை வங்கிகள் தாக்கல் செய்த வராக்கடன் பட்டியலில் இருந்த பிரமாண்ட தொகையின் அளவுதான். ஒரு லட்சம் 2 லட்சம் அல்ல. மொத்தம் 8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வராக்கடன் உள்ளதாக பொதுத்துறை வங்கிகள் பட்டிலைக் கொடுத்தன. 2014–15 முதல் 2020 –21ம் வரையிலான 7 ஆண்டுகள் காலத்தில் மட்டும் இந்த அளவு பிரமாண்டத் தொகை குவிந்துள்ளது. இதையடுத்து, ஆர்வலர்கள் மற்றும் போராளிகள், ‘‘மோடி அரசு கடன்களை அள்ளி வைத்துவிட்டது. கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது. தாறுமாறு இல்லாமல் கடன் கொடுத்து, கடன் பெற்றவர்கள் வெளிநாடு ஓடிவிட்டனர்’’ என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டனர்.
ஆனால், உண்மையில் இந்தக் கடன்கள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்டு, வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருந்தக் கடன் தொகை என்பதை வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் வசதியாக மறைத்துவிட்டனர். நிர்வாகிகளின் தலைகளுக்கு கத்தி வரும் என்று மிரட்டியதால், பதறிப்போய் பட்டியல்போட்டுவிட்டனர்.
இந்தத் தொகையில்தான் மத்திய அரசு இதுவரை 3 லட்சம் கோடி ரூபாய் வரை மீட்டுள்ளது. இந்த கடன் மீட்பின் சமீபத்திய பட்டியலில் இணைந்திருப்பது விஜய் மல்லையாவின் சாராய நிறுவனம். இதுதவிர, அவரது 9 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை விற்று பணமாக்கவும் அமலாக்கத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த வரிசையில் மற்ற நிறுவனங்களும் உள்ளன. - மீட்புக்கான விலையும் அதிகம்தான்…
வராக்கடன் நிறுவனங்களால் தடுமாறிக் கொண்டிருந்த இந்திய வங்கிகளின் மீட்புக்காக மோடி தலைமையிலான மத்திய அரசு வங்கிகளுக்கு குறிப்பிட்ட 7 ஆண்டுகளில் மொத்தம் 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயை, நடைமுறை மூலதன செலவுகளுக்காக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகையை மத்திய அரசு மட்டும் வழங்காதிருந்தால், வங்கிகளின் செயல்பாடு அடியோடு முடங்கியிருக்கும். அதாவது, நீங்கள் போட்ட டெபாசிட் முதிர்வடையும்போது, அதற்கான முதிர்வுத் தொகை, வட்டித் தொகையை மீட்பதில் பெரிய அளவில் சிக்கல் ஏற்பட்டிருக்கும். இது இந்திய வங்கித்துறை வராக்கடன் மீட்பில் ஒரு புதிய அத்தியாயம் எனலாம். ஆனாலும், இதில் பயணிக்க வேண்டிய துாரம் இன்னும் அதிகம் உள்ளது.