PTR படிக்க வேண்டிய முக்கியமான “பாடம்”; ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக வளர்ச்சிக்காக அவர் என்ன பேசியிருக்க வேண்டும்?

  1. ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பேசியது என்ன?
  2. கல்விக்கான வரி, கொரோனா காலத்தைச் சமாளிப்பதற்கான திட்டத்தை விட்டுவிட்டு,
    மாநிலம்- ஒன்றியம் என பற்றியதற்குக் காரணம் என்ன?
  3. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

சில மனிதர் வித்தியாசமாகச் சிந்திப்பதாக நினைத்துக் கொண்டு சித்து வேலைகள் எல்லாம் செய்து பார்த்துக் கொண்டு இருக்கிறார். சமீபத்தில் மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த கூடத்தில் கலந்து கொண்டு மூக்கை உடைத்துக் கொண்டு திரும்பி இருக்கிறார். தமிழக நிதியமைச்சர்

மதுரையை விட மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமான கோவா அரசு தன்னை கேள்வி மேல் கேள்வி கேட்டு நோகடித்து விட்டதாகப் புலம்புகிறார், ஜிஎஸ்டி வரி நிலுவை பாக்கியைத் தரவில்லை என்று புலம்புகிறார், பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி குள்ளாக கொண்டு வரக் கூடாது என்று புலம்புகிறார், இப்படிப் பல அழுசாட்டியங்களை செய்து விட்டு வந்திருக்கிறார் நிதியமைச்சர் பிடி ஆர்.

அவருக்கு இது ஜிஎஸ்டியின் முதல் கூட்டம், இந்த கூட்டத்தில் அவர் எவ்வளவோ ஆக்கப்பூர்வமான கேள்விகளை, விவாதங்களை, சிந்தனைகளை விதைத்து விட்டு வந்திருக்க முடியும். ஆனால் அதுபோன்ற எந்த ஒரு செயலும் காணோம்.

அவர் என்ன பேசியிருக்க வேண்டும்?

வாட், சென்ட்ரல் எக்சைஸ் போல மேலும் சில வரியினங்களை ஜிஎஸ்டி வரி விதிப்பு கீழ் கொண்டு வரக்கூடிய சாத்திய கூறுகள் என்ன?, கல்விக்கான தனி வரி 2.5% வசூலிக்கப் படுகிறது. அதற்கான அந்த ஆண்டு எவ்விதமான பங்களிப்பு அந்த வரிவிதிப்பில் நடந்தது, நடந்திருக்கிறது என்று பேசி இருக்க முடியும். ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் என்று குறைந்த பட்சமாகக் கொண்டாலும் தனி வருவாய் இனம் அது. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் நவோதய பள்ளி ஒன்று கூட நம் தமிழகத்தில் இல்லை என்கிற பட்சத்தில் அந்த வரி வருவாய் வழியாகத் தமிழகத்தில் என்னமாதிரியான செயல்பாடுகளை அது கொண்டு இருக்கிறது என்று கேள்வி கேட்டு இருக்க முடியும். ஆனால் அது பற்றி எல்லாம் அவர் பேசவேயில்லை.

மாநில அரசுகளுக்கு மாத்திரமே நேரடியான ஓட்டு வங்கி இருக்கிறது என்று பேசத் தெரிந்தவருக்கு இது குறித்த சிந்தனை ஏதும் தோன்றவில்லை. நீட் பற்றி காலமெல்லாம் பேசிய அரசில் அங்கம் வகிப்பவர் சித்த மருத்துவம் குறித்தோ அல்லது ஆயுர் வேத மருத்துவம் குறித்தோ எந்த ஒரு பேச்சையும் எங்கும் பேசவில்லை. இத்தனைக்கும் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் முதன்மையான பங்கு இதற்கே உண்டு. தனித்தனி நிர்வாகம் கீழ் இயங்கும் இதனை முன்னெடுக்கவோ வளர்த்தெடுக்கவோ எந்த ஒரு திட்டத்தையும் இதுவரை யாரும் பேசவில்லை.

ஜிஎஸ்டி வரி விதிப்பு கீழ் பெட்ரோலிய பொருட்களைக் கொண்டு வர கடும் ஆட்சேபம் தெரிவிக்கும் இவர்கள் (ஒரு காலத்தில் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என ஸ்டாலின் சொன்னது தனிக் கதை), ஆல்கஹாலை இந்த வரி விதிப்பு கீழ் கொண்டு வர ஏன் பேச வில்லை?

காரணம் இந்த இரண்டும் தான் பல மாநில அரசுகளுக்கு அட்சய பாத்திரங்கள்.
பெட்ரோலிய பொருட்கள் மீதான வருவாய்க்கு அடுத்து ஆல்கஹால் தான் அதிகம் வருவாய் ஈட்டி தருகிறது. 90ஆயிரம் கோடி ரூபாய் இது குறைந்த பட்சம் மட்டுமே. அப்படி என்றால் பெட்ரோலிய வருவாய் என்ன …. எவ்வளவு… என்று நீங்களே கணக்கு பண்ணிக் கொள்ளுங்கள்.

வாகனங்கள் வாங்கும் போது சாலை வரி வசூல் செய்யப்படுகிறது. அதே வாகனம் சாலையில் பயணிக்க எரிபொருள் வழியாக வசூல் செய்யப் படுகிறது. பிறகு எதற்குத் தனியாக வரிவசூல் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்டிருந்தால் அது படித்தவருக்கு அழகு. அதனை விடுத்து எண்ணிக்கை காட்டி குறைந்த அளவு மக்கள் தொகை கொண்ட மாநிலத்தின் நிதி அமைச்சர் கேள்வி கேட்டு தலையில் குட்டி விட்டார் என்று புலம்புவது எல்லாம் எதில் சேர்த்தி என்று தெரியவில்லை.

இந்திரா காந்தி அரசின் இதே போன்றதொரு கூட்டத்தில் மாநில அரசுகளின் சார்பாகக் கலந்து கொண்ட என் டி ராமராவ் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். கேள்விகளால் திணற அடித்து இருக்கிறார். பல நல்ல திட்டங்களை மாநில நலன்களை முன்வைத்து விவாதித்து இருக்கிறார். தன் மாநிலத்தை முன் மாதிரியாக மாற்றிக் காட்டி இருக்கிறார்.
எதிரும் புதிருமாக நிற்கும் அரசியல் கட்சிகள் வாதப் பிரதி வாதங்கள் அந்த வகையிலிருந்திருக்க வேண்டும், அதனை விடுத்து கூட்டத்தில் வாயே திறக்காமல் பம்மி இருந்து விட்டு வெளியே வந்து மாநிலத்தில் வைத்து உதார் விடுவது எல்லாம் எதில் சேர்த்தி?

மாநிலங்களின் ஒன்றியம் என்கிற ரீதியிலான அழிச்சாட்டியம் இவர்கள் செய்தால்… மாவட்டத்தின் ஒன்றியம் என்று பேச்சு எழுந்து இவர்களை உடனுக்குடன் பதம் பார்க்கிறது. தமிழகத்தில் நாளை பல மாநகராட்சியின் வரியினங்களை வருவாய்களை ஏன் மாநில அரசு எடுத்துக்கொள்கிறது என்கிற ரீதியிலான கேள்வி வரும். அப்போது இதே அமைச்சர் என்ன சால்ஜாப்பு சொல்லப்போகிறார் என்று பார்க்கத்தானே போகிறோம்.

அந்த அளவுக்கு மாநகராட்சி வருவாய் இனங்களைக் காலங்காலமாக இந்த மாநில அரசு எடுத்துக் கொண்டு வருகிறது. நகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளின் வருவாய் பலவற்றை மடை மாற்றி மாநில அரசு தன் கஜானாவில் வைத்துக் கொள்வதை இனி தோண்டி துருவப் போகிறார்கள். பல நகராட்சி நிர்வாகத்திற்கு வர வேண்டிய நிலுவைத் தொகை மட்டுமே சில ஆயிரம் கோடி அளவுக்கு உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் கேட்கவே வேண்டாம். தலையைப் பிய்த்துக் கொண்டு ஓடத்தான் வேண்டும் நிதி அமைச்சர்.

இந்த லட்சணத்தில் இவர் கோயில் வருவாய் பற்றி வேறு பேசி வைத்து இருக்கிறார். வேண்டுமானால் சுலபமாக எடுத்துக் கொண்டு விடலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார். இம்முறை நம் தமிழகத்தில் அதற்கு மிகப்பெரிய எதிர்வினை இருக்கப் போகிறது

இவர் சொன்ன படித்த திமிர் என்ன செய்யப் போகிறது என்று பார்க்கத் தானே போகிறோம்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக என்கிற சால்ஜாப்பு இனி எடுபடப் போவதில்லை. பலரும் சொல்வது போல மாண்புமிகு பிடி ஆர் இரண்டு கைகளிலும் இரண்டு கட்டி என்ன பிரயோஜனம்? வாயைக் கட்ட தெரியவில்லையே? பார்க்கலாம் என்ன பாடம் படிக்கிறார் என்று

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here